நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >



அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்!

ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி!

எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார்.

புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு.

புது வண்ணத்தில் கோயில் சுவர்.

தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது கடை விரிக்க இடங்களை தயார் செய்தபடி இருக்கின்றனர். தின்பண்டங்கள், பெண் குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள், அவல் பொரி கடலை தள்ளுவண்டிகள், பலவகைக் காய்கறிக் கடைகள், பூசை பொருட்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,   வண்ணக் கோலப் பொடிப் பொதிகள், என ஒரு தற்காலிக அங்காடி உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

அரை ஆண்டு விடுமுறையில் உடனிருக்கும் அவர்களின் பொடிசுகள் அங்குமிங்கும் ஓட்டம். ஒரு குட்டிப் பையன் பலூன்களை ஊதிக் கட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் வேண்டிப் பெற்ற ஒரு மஞ்சள் நிற பலூனை  நீளமானதொரு நூலில் பிணைத்து விளையாடுகிறான். காற்றின் ஓட்டத்தில் பலூனை கீழே விடாமல் தட்டி விளையாடுவதில் இருக்கிறது அவனது கவனம்.

அருகில் ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். காவலுக்கு இன்னொரு பொடியன். இரு பொடியன்களுக்கும் ஆனதொரு இனிய ஒப்பந்தப் படி சிப்ஸ் கடைப் பையனுக்கு  பலூன் விளையாட்டுக்கு வாய்ப்பு வருகிறது . (இவனது அப்பா சிப்ஸ் பொரிக்கத் தொடங்கியதும் தனக்குத் தின்னத் தரும்  சிப்ஸில் பலூன் பையனுக்கும் ஒரு பங்கு)

பலூன் பையன் தள்ளு வண்டியிடம் நின்றாலும் கண்களும் மனசும் தன் பலூன் மேல் தான்.

சிப்ஸ் காரர் பையன் விளையாடும் ஆர்வத்தில் பலூனை ஓங்கித் தட்ட உயர எழும்பிய பலூனை காற்றும் தன்பங்குக்கு அடித்து ஆடுகிறது. பின் தொடர்கிறான் சிறுவன். இரு பொடியன்களையும் திகைப்பூட்டி அருகாமை வேலி மேல் செல்கிறது பலூன். பதறி ஓடும் இருவரையும் ஆசுவாசப் படுத்தும்படி  வேலியினருகில் இருந்த குத்துச் செடியில் தவ்வியது முட்களுக்கு தப்பிய பலூன்.

தாவிப் பிடித்தவன் சொல்கிறான், 'செடி காப்பாத்திடுச்சு டா... செடி காப்பாத்திடுச்சு!'

நம்மையும் காப்பாற்ற இந்த பூமித் தாய் தன் மடி வளர்க்கும் தாவர இனங்கள் பலவற்றைப் பொதித்து  வர இருக்கின்றன இனிவரும் சில பதிவுகள். அவற்றின் தாத்பர்யம் உணவே மருந்தாக. மருந்தே உணவாக.

நலம் பெருக வருக புத்தாண்டே!




Share on:
சமீபத்தில் ஊருக்குப் போயிருந்தேன். ஊரென்றால் பிறந்த ஊர். குறியாமங்கலம்.

அரசர்கள் காலத்தில் அந்தணர்களுக்கு தானமளிக்கப்பட்ட வகையில் (சதுர்வேதி மங்கலம்) 'குறிக்கப் படாமலே விடப்பட்ட ஊர்' என்ற பொருள் பொதிந்ததோ பெயர்க்காரணம்.... தெரியவில்லை.

புவனகிரியிலிருந்து ஐயப்பன் கோயிலை வளைந்து நெளிந்து சென்றால் இடைப்படும் பெரிய வாய்க்காலைப் பிடித்துக் கொண்டே செல்ல வேண்டியது தான்.  வலப் பக்கம் வாய்க்கால். இடப் பக்கம் வயல்வெளி. கரை புரளும் நீரோட்டமும் பச்சைப் பசேல் நெல் வயல்களும் பயணத்தை சுகமாக்கும்.
Share on:



ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு.

இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை விற்குமட்டும் நாலு தெரு சுற்றியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

கடைத்தெருவுக்கு சென்றாலும் நெற்பொரியும், அவல்பொரியும், வெல்லமும், வாழையிலையும், விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகளும், வாழைத் தார்களும் தப்படிக்கு ஒன்றாக குவித்து வைக்கப் பட்டு மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சரஸ்வதி பூஜையில் முன்னணியில் நின்ற அரிசிப் பொரி இன்று கேட்பாரற்று பட்டாணிக் கடைகளில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. வருடமெல்லாம் தேவைப்படும் பூக்காரர்களுக்கும் தனிக் கொண்டாட்டம் தான்.

கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

அந்தப் பொரியுடன்  வெல்லப்பாகு, தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய், எள் எனப் பலவற்றையும் சேர்த்து சுவைகூட்டியபிறகே இறைவனுக்கு படைக்கிறோம். இத்தனையும் சேர்த்து உருண்டையாக்கி அதன் மதிப்பை கூட்டவும் முடிகிற நமக்கு ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும். மனிதனும் சக உயிர்கள் மேல் அன்பு, கருணை, இரக்கம், ஈகை போன்றவற்றைக் கைக் கொண்டு உன்னத நிலையடைய முனைய வேண்டுமல்லவா!

தீப ஒளி பரவட்டும் உலகெங்கும் தீமையழித்து...!
தீப ஒளி பரவட்டும் மனசெங்கும் மேன்மையளித்து...!!


Share on:

புரியாததை புரிந்து கொள்ளவும் தெரியாததை தெரிந்து கொள்ளவும் கேள்வி கேட்பது வாடிக்கை.

முதலில் நம் ஐயத்தை தெளிவாக கேட்கத் தெரிய வேண்டும்.

யாரிடம் கேட்கிறோம் என்பது முக்கியம்.
Share on:
'கிரகச்சாரம்' தொடர்ச்சி....

        இரவு வீடு வந்ததே இரண்டு மணிக்கு மேல். எஞ்சிய பொழுது எளிதாக இல்லை. கடத்தினேன் கடத்தினேன்... ஒவ்வொரு வலிக்குமான இடைவெளியை கண்களை மூடி, வலிக்குமிடத்தில் மனதை நிறுத்தி, வலி பரவுவதை வேடிக்கை பார்த்து...

       எல்லோருக்கும் விழிப்பு வரும் ஐந்து ஐந்தரைக்கு உறக்கம் வந்தது எனக்கு அரைகுறையாய்... அதுவரை மணி என்ன இருக்கும் என தெரிந்து கொள்ளும் ஆவல் தலை தூக்கும் போதெல்லாம் கண் திறந்து தலைதூக்கி கடிகாரமிருக்கும் திசை பார்ப்பேன். விரும்பிக் களிக்கும் பொழுதுகளில் ஓட்டமாய் ஓடும் வினாடி முள், நகர்ந்தது நத்தைக்குப் போட்டியாய்.

குளிக்கும் போது ‘நமக்கு ஏன் இப்படியான சோதனை?' என்ற வேதனையில் நீருடன் கலந்தது கண்ணீர். பெருகிய கண்ணீர் மூக்கிலும் சேர, ஒரு மூக்கு மூடி மறு மூக்கை சிந்தியபோது காதுக்குள் வண்டு ஆழத்திலிருந்து மேற்புறம் வருவது போல் உணர்வு. சற்று நேரம் வலியும் வேதனையும் குறைந்தது. பிறகு மறுபடியும் வலி. மறுபடி சிந்தினால் மீண்டும் சற்று வலியில்லை. காது துவாரத்தை  மேலாக துணியால் துடைத்தால் வண்டின் கால்கள்! ‘ஆகா'வென பரவசத்தோடு இவரிடம் ஓடிவந்து, ‘வண்டு மேலாக வந்து விட்டது; பாருங்களேன்' என்றால், டார்ச் அடித்துப் பார்த்து, ‘தெரியவில்லையே' என்றவர், சோதனை முயற்சி ஏதும் வேண்டாம். மருத்துவரிடமே காட்டிக் கொள்ளலாம் என்கிறார். இடைவெளி விட்டு திரும்பவும் வலி தான்.

வடலூர் ஈ.என்.டி. டாக்டரிடம் முதல் ஆளாய் போயாச்சு. அப்போதுதான் கதவைத் திறந்திருப்பார்கள் போல. இயல்பு நிலைக்கு வந்து எங்களை அழைக்க அரை மணி ஆனது. வலியின் அளவும் வரும் கால இடைவெளியும் பழகிப் போனதால் பொறுத்திருப்பது சிரமமில்லை. மருத்துவரின் உதவியாளர் இரத்த அழுத்தத்தை பரிசோதித்தார். கருவி சரிவர வேலை செய்யவில்லை. 24 மணி நேர மருத்துவரின் இரவுக் குறிப்பையே மறுபதிவு செய்து கொண்டார்.
Share on:
        கடந்த வாரம் ஒருநாள்  இரவு மணி 11.30. படிக்கும் போது படுத்துக் கொள்வதும் (ஒய்வு+வாசிப்பு ) படுக்கும்  போது படிப்பதும் எனக்கிருக்கும் கெட்ட பழக்கங்களில் ஒன்று.

         மழைக் காலங்களில் இரவில் விளக்கொளிக்கு சிறு பூச்சி வகைகள் சுற்றுவதுண்டு. ஈசல் வந்தால் விளக்கணைப்பது; அசுவினிப்  பூச்சி மேலே விழுந்தால் நசுக்கி விட்டு வருந்துவோம். அதன் நாற்றத்துக்காக. சிறிய எலுமிச்சை அளவில் தென்னைமரக் கருப்பு வண்டுகள் (அதன் பெயர் காண்டாமிருக வண்டாம். கூகுலார் சொல்கிறார்) கூட  சாளரம் வழியே முன்னிரவுகளில் வரும். அவற்றின் 'கிர்ர்' ஒலியில் சுதாரித்து அடித்து வெளியேற்றுவோம். முழுத் துவரை அளவில் கண்ணங்கருப்பாக  ஒன்று வரும். பறந்து பறந்து மேலே விழுந்தால் ஊர்ந்து கொண்டே இருக்கும் நம் மேல். இரு விரலால் பிடித்து ஒரே  அழுத்தத்தில் உயிரெடுத்து கையெட்டும் தூரத்தில் கிடாசுவோம்.

           முசுடு எனப்படும் சிவப்பு எறும்புகள் (அரிசி போன்று முட்டை இடுவன) ஏராளமாக இரவு நேரத்தில் வீட்டுக்குள் வந்து விரும்பிய இடத்தில் அடைந்து இனப்பெருக்கம் செய்யும். நம் மேல் ஏறி தாவிக் குதித்து அனாயசமாகச் செல்லும். பெரும்பாலும் கடிக்காது என்பதால் நாங்களும் பயமின்றி ரொம்பக் கூசினால் விரலால் நசுக்காமல் பிடித்துப் போடுவோம். புதிதாக வரும் விருந்தினர் தரையில் படுக்க நேர்ந்தால் அவர்களுக்கும் தைரியம் சொல்வோம். நாய் வளர்ப்பவர்கள் சொல்வதுபோல்...



           சம்பவ நாளன்று சின்னக் கருப்பு வண்டு (துவரையத்தினி) ஒன்று ஒருக்களித்துப் படுத்திருந்ததால் மேல் பக்கமிருந்த வலக்காது மடலினுள் தொப் என விழுந்தது.எழுந்து பறக்க எத்தனமாய் குட்டிச் சிறகுகளை விரித்து கிர் கிர் என்றது. சுதாரித்து பிடித்தேன்... அதன் 'மொழுக்' என்ற மேற்பரப்பில் விரல் வழுக்க  தடக்' என்று காது துவாரத்துக்குள் விழுந்தது.

      'படக்' என எழுந்து பட்ஸ் எடுத்துக் குடைந்தேன். அதுவோ இன்னும் ஆழமாய் போகவும் பயந்து தண்ணீர் எடுத்து காதில் ஊற்றினேன். அதற்குள் 'வெடுக் வெடுக்' எனக் கடிக்கத் தொடங்கி விட்டது வண்டு.
Share on:
வாகனக் கொட்டகை கதவை விரித்து வைத்து
ஒதுங்கி நின்றேன்
பின்னோட்டமாக நகரத் தொடங்கியது வண்டி
ஒன்றின் மேல் ஒன்றாக ஒட்டிக் கொண்டு
விறுவிறுவென வந்த
மழைக் காலக் கருப்பு மரவட்டைகளை
கண்ட கணநேரத்தில் காலால் தள்ளியேனும் இருக்கலாம்.
சரேலென நசுக்கிக் கடந்தது வண்டிச் சக்கரம்
இறுக மூடிக் கொண்டன என்னிரு கண்கள்.
உரு எதுவானால் என்ன? உயிர் தானே...
இரட்டைக் கொலைக்கான தண்டனை யாருக்கு?

Share on:


நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் காரணம் என்ன?

குறித்த கால கட்டத்தில் தானாக முளைத்து தானாக விழும்படி படைப்பின் சூட்சுமம் அமைந்திருந்ததெல்லாம் ஒருகாலம். காலத்தின் வேகமும் அறிவியல் கண்டுபிடிப்புகளின் தீவிரமும், மருத்துவத்தின் மேம்பாடும் பெருகிவிட்ட இக்காலத்தில் கடைவாய்ப் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர், முன் பல்லுக்கொரு சிறப்பு மருத்துவர் என்றும் வந்துவிட சாத்தியங்கள் தெரிகிறது.

இருந்தும் பற்களைக் கிருமிகள் தாக்குவதாயிருக்கட்டும், ஈறுகள் வீங்கி ‘விண் விண்' என்று வலி கொடுப்பதாயிருக்கட்டும், இவையெல்லாம் இரவிலும் குளிர்காலத்திலுமே அதிகமாக துன்புறுத்துவதாய் இருக்கட்டும்... மாறவேயில்லை.

முளைக்காத பல்லை முளைக்கச் செய்யவும், ஏறுமாறாய் முளைத்தவற்றை சீராக்கவும், பெரிதை சிறிதாக்கவும், பற்களுக்கிடையே இடைவெளி அதிகமென்றால் சரிசெய்யவும் தேர்ந்த வல்லுநர்களை அணுக சாவகாசமாய் நமக்கும் நேரம் ஒத்துவரும் போது பார்த்துக் கொள்ளலாம்.

ஆனால், திடுதிப்பென வந்து படுக்கையில் தலைசாய்க்க விடாமல் நரம்பு மண்டலம் முழுக்க வலி தெறிக்க, தடுமாறும் போது கைகொடுக்கத் தான் எத்தனையெத்தனை கைவைத்தியங்கள்!

சேகரித்தவற்றைப் பகிர்கிறேன்...

பல்வலியென்பது பல் சம்பந்தமான பிரச்சனை மட்டுமல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்று, பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம்!

Periodontitis எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்குகிறதாம். குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு. மேலும், அஜீரணம், நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள் கூடக் காரணமாகலாமாம். ஸ்டெம் செல் உதவியுடன் டைடானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது என்று படிக்கும் போது வியப்பால் பிளக்கிறது நம் வாய்.

குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம் வாய்ப்பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்குமாம். அதிகபட்ச ஃப்ளூரைடு பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்குமாம்!

கிருமிகள் நீங்க, உடற்சூடு தணிய, வாய்ப்புண்களைத் தடுக்க செக்கில் ஆட்டிய நல்லெண்ணைய் ஒரு கரண்டி எடுத்து காலை பல் துலக்கியபின் வாயிலிட்டு கொப்பளித்து நுரைத்தபின் உமிழ்தல் சிறந்த பலன் தருவதாய் உள்ளதாம்.



ஆலும் வேலும் பல்லுக்குறுதி என அந்தக்கால மனிதர்கள் பற்களை பராமரித்திருக்க, பலவித பற்பொடிகளும் பற்பசைகளும் சூழ்ந்திருக்க நாமெல்லாம் தான் நடுத்தர வயதுக்குள் பல் பிரச்சினைகளுக்காக வைத்தியம் தேடி அலைகிறோம்.

ஆலங்குச்சியால் பல் துலக்கினால் குளிர்ச்சியாம். இலந்தைக் குச்சியால் பல் விளக்க இனிய குரல்வளம் வருமாம். இத்தி மரக்குச்சி விருத்தி தருமாம். இலுப்பைக் குச்சி திடமான செவித்திறன் தருமாம். நாயுருவிச் செடியின் வேரால் பல்துலக்க புத்தி கூர்மை மற்றும் தைரியம் மிகுமாம். மருதமரக் குச்சியால் பல் துலக்க நரை குறைவதோடு ஆயுள் நீடிக்குமாம். உகா மரம் என்கிற குன்னி மரக்குச்சி தான் (மெஸ்வாக்) திருக்குர் ஆனில் சொல்லப் பட்ட பல்துலக்கியாம். கருப்பு பூலா கொடி வேரினால் பல் துலக்க ஆண்மை பெருகுமாம்.

போகட்டும். இவையெல்லாம் நம்மில் பலருக்கு அடையாளம் கூடத் தெரிய வாய்ப்பில்லை.

நினைவு தெரிந்த நாள் முதல் பல் வலிக்கு முதல் வைத்தியம் கல் உப்பு போட்ட வெந்நீரால் கொப்பளிப்பது. அடுத்து, லவங்கத் தைலம் பஞ்சில் தொட்டு வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்துவது. பிறகு சில கொய்யா இலைகளை நீரில் போட்டு கொதிக்க விட்டு வெதுவெதுப்பாகக் கொப்பளிப்பது. கற்பூரம் வைப்பது. ஈறுகளில் வீக்கம் வலியென்றால், அருநெல்லிக்காயளவு புளியுடன் கல் உப்பு சிறிது சேர்த்துப் பிசைந்து வீக்கம் உள்ள இடத்தில் வைத்து வரும் உமிழ்நீரை துப்புவது. சமீபத்தில் மனோ அக்கா சொன்னது போல் ஒரு துண்டு உப்பு நாரத்தையை வலியுள்ள பக்கம் அடக்கிக் கொள்வது.

சமீபத்தில் வந்த பல்வலியால் கிடைத்த அனுபவங்களாக கேட்டதும் படித்ததும் ஆன பட்டியல் இதோ:

* மிளகுத் தூளுடன் உப்பு சேர்த்துப் பல் விளக்கி வர சொத்தைப் பல், பல்வலி, ஈறு வலி, வாய் துர்நாற்றம் போகும்.

* ஈறுகளில் வீக்கம் மற்றும்  வலிக்கு பப்பாளிப் பாலை வீக்கத்தில் தடவி, இலேசாகத் தேய்க்க உள்ளிருந்த கெட்டநீர் வெளியேறி வலியும் வீக்கமும் போகும்.

* பல் வலி உள்ள போது பல் துலக்கியபின், ஒரு நெல்லிக்காயை நன்கு மென்று திண்ணவும்.

* சுத்தமான தேனை விரலால் ஈறுகளில் தினம் தடவ, வீக்கம் குறையும்.

* 2 வெங்காயம் நறுக்கி 2 ஸ்பூன் சர்க்கரையுடன் உண்க.

* மாந்தளிர் இலைச் சாறு ஒரு பங்குக்கு இரண்டு பங்கு தண்ணீர் சேர்த்து வாய் கொப்பளிக்கவும்.

* பிரம்ம தண்டு இலையை எரித்து சாம்பலாக்கி பல் தேய்க்க, பல் ஆட்டம், பல் சொத்தை, பல் கறை, பல்லில் இரத்தம் வடிதல் எல்லாமே தீரும்.

* ஆலமரப் பாலை பற்கள் மீது தடவினால் பல் ஆட்டம் நிற்கும்.

* ஆயில் புல்லிங் தினம் செய்ய பல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் வைரஸ், பாக்டீரியா தொறற்¢லிருந்து விடுபடலாம்.

* கோவைப்பழம் அடிக்கடி சாப்பிட பல் பலப்படும்.

* நந்தியாவட்டை வேரை வாயிலிட்டு மென்று துப்பவும்.

*ஓமத்தை நீர்விட்டு அரைத்து களி போல் கிளறி இளஞ்சூட்டில் பற்றுப்போடவும்.

*ஒரு பல் பூண்டை நசுக்கி, வலி உள்ள இடத்தில் வைக்கலாம். இதுபோல் கிராம்பை நசுக்கியும் வைக்கலாம்.

* கோதுமைப்புல் சாறு அருந்திவர பல்வலி குறையும்.

* நெல்லிக்காய், பால், வெண்ணெய் போன்ற கால்ஷியம் மிகுந்த உணவு வகைகளை மிகுதியும் சேர்த்துக் கொள்ளவும்.

*இஞ்சிச்சாறை இலேசாக சூடாக்கி வாய் கொப்பளிக்கவும்.

* தான்றிக்காயைச் சுட்டு அதன் மேல் தோலைப் பொடித்து அதன் எடைக்குச் சமமாக சர்க்கரை கலந்து தினசரி காலை வெந்நீருடன் சாப்பிட பல் வலி, ஈறு நோய்கள் குணமாகும்.

* நெல்லிக்காய் கடுக்காய் தான்றிக்காய் சேர்ந்த திரிபலா பொடியைக் கொண்டு பல்விளக்கலாம்.

* பனங்கிழங்கை குப்பைமேனிச் சாற்றில் அரைத்து ந.எண்ணெயில் காய்ச்சி உபயோகிக்க பல்வலி குறையும்.

* கொள்ளுக்காய் வேரை கொதிக்க வைத்துக் கொப்பளிக்கவும்.

* சுக்கான் கீரையின் வேரை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பல் துலக்கவும்.

*மகிழ மரப் பட்டையைப் பொடியாக்கி விளக்கலாம்.

*வாகை மரப் பட்டையை எரித்துப் பொடித்து பல் துலக்க ஈறு நோய் மற்றும் பல் வலி குணமாகும்.

* கருவேலம் பட்டைப் பொடியால் பல் துலக்கவும்.

* மாசிக்காயைத் தூளாக்கி, நீரில் கொதிக்க வைத்து கொப்பளிக்க ஈறு பலமடையும்.

* அசோக மரப் பட்டைப் பொடியுடன் உப்பு சேர்த்து விளக்கவும்.

* கடுகை பொடி செய்து வலிக்கும் இடத்தில் பற்று போடவும்.

* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவவும்.

* ஆலம்பூ மொட்டினை வாயில் அடக்க பல்வலி போகும்.

* அருகம் புல்லை நன்கு மென்று வலி உள்ள பக்கம் அடக்கி வைக்கவும்.

* கடுகு எண்ணெயுடன் ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஈறில் தடவவும்.

* துத்தி இலை மற்றும் வேர்க் கசாயம் வாய் கொப்பளிக்கவும்.

* மாம்பூக்களை வாயிலிட்டு மெல்லவும்.
* கருஞ்சீரகத்தை வினிகரில் வேக வைத்துக் கொப்பளித்தால் பல்வலி தீரும்.

* கண்டங்கத்திரி விதையை நெருப்பில் சுட்டு வரும் புகையை பற்கள் மேல் படும்படி செய்ய வலி தீரும். பழத்தை உலர்த்திப் பொடித்து நெருப்பில் போட வரும் புகை, பல்வலி, பல் கிருமிகளைப் போக்கும்.

* பாகல் இலையை நன்றாக மென்று தின்றால் பல்வலி குணமாகும்.

* வலிக்கும் பக்கம் வாயினுள் சிறிது அச்சு வெல்லம் அடக்கிக் கொண்டு, ஒரு ஸ்பூன் மிளகுத் தூளை (18 மிளகு) கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில்  வலிக்கும் பக்கம் கன்னப் பகுதியில் தேய்க்க வலி மறையும்.

* உப்பை நன்கு வறுத்து அதை சிறு துணியில் மூட்டை போல் கட்டி சூட்டுடன் வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

இவ்வளவு குறிப்புகளில் ஒன்று கூட பலனில்லை என்றால் இருக்கவே இருக்கிறார் பல் வைத்தியர்! பணக்கட்டுடன் கிளம்பலாம். ஆனால் இவ்வளவு குறிப்புகளும் தேய்க்கவோ உள்ளுக்கு சாப்பிடவோ சொல்ல, கீழ்க்கண்ட குறிப்பைப் படித்த போது நான் எப்படியாகியிருப்பேன் என நீங்கள் படிக்கும் போது உணரலாம்.

  பல் வலித்தால் அன்று காலை கீழாநெல்லிச் செடியொன்றை வேருடன் பிடுங்கி தலைகீழாக (வேர் மேலும், இலைப்பகுதி கீழுமாக) நட்டு வைத்து மாலை அதை மீண்டும் நேராக (வேர் மண்ணிலும், இலைப்பகுதி மேலுமாக) நட பல்வலி குணமாகும். இது ‘மூலிகை ஜால ரத்தினம்' என்ற நூலில் காணப்படும் குறிப்பாம்!


நல்ல ஜாலக்கு தான்!!




Share on:
Harry Potter and the Sorcerors Stone        

    குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில மாதங்கள் வயிறு நிறைந்தால் கண் செருகி தூங்கிவிடுகின்றன. சமயங்களில் தாலாட்டைக் கேட்டபடி. 
       கால் முளைத்து வீட்டைத் தாண்டி வெளியுலகம் தெரியவரும் பருவம் தொடங்கி அவர்கள் பார்த்த கேட்ட அனுபவித்த பலவற்றின் தொடர்ச்சியாகவும், அவற்றிலிருந்து மாறுபட்ட வியப்பூட்டும் கதைகளாகவும் சொல்லி அவர்களின் உறக்கத்தை வரவழைக்க வேண்டியதாகிறது.  
        தாம் கேட்டு வளர்ந்த கதைகளும் படித்து அறிந்த கதைகளும் போதாத போது புதிது புதிதாக புனைந்துகொள்ள தாய்மனம் ஒவ்வொரு நாளும் எல்லா தருணங்களிலும் விழிப்போடே இருக்க வேண்டியுள்ளது. இங்கிலாந்திலிருக்கும் அம்மாவுக்கும் இதே நிலைமை தான்.
     இங்கிலாந்தில் ஜே.கே.ரோலிங் எனும் தாயின் கற்பனையில் உதித்த கதைகள் தான் ‘ஹாரிபாட்டர் கதைகள்'! அந்த இல்லத்தரசி, இக்கதைகள் எழுதியதன் மூலம் தன் நாட்டு ராணியின் சொத்து மதிப்பை விட அதிகமாக சம்பாதித்து விட்டாராம்!! மேலும் பல பிரபல பல்கலைக் கழகங்களின் கெளரவ டாக்டர் பட்டங்கள் வேறு!! 
       தன் கணவரோடும் தன் மூன்று குழந்தைகளோடும் எடின்பர்க் நகரில்
Share on:
      நேற்று (23.09.2014) கடலூர் அரசு காதுகேளாதோர்  வாய்பேசாதோர்  பள்ளி சென்றோம்.
(Cuddalore deaf and dumb school) தொடர்பு எண் : 04142-221744

ஆசிரியர் மாணவர்களுடன் என் மகளும் (தலைமை ஆசிரியை அருகில்)

மதியம் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு உண்டு, பேசி மகிழ்ந்து கழிந்த பொழுது நினைவில் நெடுநாள் நிற்கும்.

பாருங்க... இந்தப் பெண் வளர்ந்து நிற்கும் அழகை...!

அன்று

இன்று .

தத்தம் உடற்குறையை பொருட்படுத்தாது சத்தம் அவசியமற்ற உடல்மொழியால் அவர்கள் சம்பாஷிக்கும் உற்சாகம், சதா சர்வகாலமும் பேசவும் கேட்கவுமாயிருக்கும் நம்மையும் சட்டென பற்றிக் கொள்கிறது. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...

அங்கிருக்கும் ஆசிரியர்களும் உணவு மற்றும் பராமரிப்புப் பணியிலிருப்பவர்களும் போற்றத் தக்கவர்கள். வேலையை வேலையாக மட்டும் செய்யாமல் காருண்யத்தோடும் செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.

Share on:
     
        சில நாட்களுக்கு முன் மனோ மேம் எனது பதிவிடுதலின் மந்தத் தன்மையை நீக்கும் விதமாக ஒரு தொடர்  பதிவுக்கு அழைத்தாங்க. ஓட முடியாதவன் ஊக்க மருந்து சாப்பிட்ட கதையா நானும் முயற்சி செய்தேன். இதில் கேள்வியும் நானே; பதிலும் நானே. தோழமைப் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் பெரியமனசு பண்ணி மன்னிச்சுடுங்க.

தோழமையின் உன்னதம்?

முறையாய் வரும் உறவினைக் காட்டிலும் இயல்பாய் வளரும் தோழமையின் நிலைப்பாடு மிகுதி.

தோழமையின் உன்மத்தம்?

வளரிளம் பருவத்தில் மனசை நிறைக்கும் நட்பின் மீதான அபரிமித நம்பிக்கை; பிரேமை; குதூகலம்.

நட்பின் உரிமைக்கு எல்லை எது?
Share on:



இரண்டு நாட்களுக்கு முன் நண்பரின் மகள், செய்யுள் இலக்கணத்தில் அசைபிரித்து அலகிடுதல் பற்றி சொல்லித் தரச் சொன்னாள். பத்தாம் வகுப்பு பாடத்தில் மட்டுமே இன்னும் இருக்கக் கூடிய ஒரு பகுதி அது.

'நேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா ; .' என மனதில் அதற்கான வாய்ப்பாடுகள் எழும்பின. கூடவே அதைக் கற்பித்த ஆசிரியரும் நினைவில் பிரகாசித்தார்.

பத்தாம் வகுப்புத்  தமிழாசிரியர் கிருஷ்ண மூர்த்தி  சார்  ...

நாங்க பத்தாவது வந்தபோது பள்ளிக்கு புதிதாக மாற்றலில் வந்தவர். கண்ணியமான வேட்டி சட்டையில் கருத்த நெடிய உருவம். (தமிழாசிரியர்கள் வேட்டி  தான்  அணிந்தனர்.இன்றும்  எங்கள் குழந்தைகள் படித்த பள்ளியிலும்!) முகத்தில் எப்போதும் சிறு கண்டிப்பு தெரியும். கம்பீரமான விடுவிடுவென்ற நடை. (பின்னாளில் ஒரு சாலை விபத்தில் கால் அடிபட்டு  சாய்ந்த நிதான நடையில் அவரைப் பார்த்து கலங்கிப் போனோம்.)

தமிழ் மேல் சுவை கூட்டியவர்  அவர் தான். மனப்பாட செய்யுள் தவிர பிற பாடங்களை நாங்கள்  புரிந்து படிக்கவும் நினைவில் நிறுத்தவும் அவர் வெகுவாக பிரயாசைப் படுவார். எங்களின் தமிழ் மன்றத் தேர்வுச் சான்றிதழ்களெல்லாம்  அவரின் ஊக்குவிப்பே.

எங்கிருந்தாலும் நல்லாயிருப்பீங்க சார்... எங்க பிரார்த்தனைகளும் அதுதான்! உங்கள் நல்லாசியில் எங்கள் அறிவு துலங்கட்டும்!!

விரல் பிடித்து எழுதப் பழக்கிய முதல் ஆசிரியரிலிருந்து படிப்படியாக வாழ்வின் பாதையில் கற்பித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் அன்பும் நன்றியும்! 
Share on:
        (பதினைந்து நாட்களுக்கு முந்தைய தமிழ்ப் பதிப்பு 'தி இந்து' நாளிதழில் பெப்சி இந்திராநூயி பற்றி தாமரை ஒரு பத்தி எழுதி இருந்தார். அதுபற்றிய வாசகர்களின் கருத்துக்களை வரவேற்றது 'தி இந்து'.
       நானும் பங்கேற்றேன். இன்றைய 'தி இந்து'வில் அக்கருத்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. எனக்குத் தோன்றியதை பகிர்ந்தேன். என் மின்னஞ்சலில் அவர்கள் வெட்டியதை  வண்ண எழுத்துக்களாய் நான் ஒட்டி இருக்கிறேன் இப்பதிவில். )

“உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே” - சில வார்த்தைகள்
(தி இந்து-தமிழ்ப்பதிப்பு-ஞாயிறு, ஜுலை-27, 2014, முன்வைத்து )

காலம்காலமாய் ‘வினையே ஆடவர்க்கு உயிர்' என்று கற்பிக்கப்பட்டு வந்ததொரு சமுதாயத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப் படுமளவு ஒரு பெண் முன்னேற்றம் சாத்தியப்பட்டிருக்கிறது என்பதை பெருமையுடன் பார்க்கும் அதே சமயம், ஒரு ஆணின் பரிபூரண சுதந்திரத்தை அடைய இன்னும் பல படிகள் கடக்க வேண்டியிருக்கிறது என்பதையும் ஆமோதிக்கவே வேண்டியிருக்கிறது.


  இச்சம்பவத்தில் இந்திராவின் அம்மா கூறுவது போல், எந்தவொரு பெண்ணும்  தனது இல்லறக் கடமைகளுக்கும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் குறைக்காமல் தான் இன்னபிற செயல்களில் ஈடுபட வேண்டியதும் அவசியமாகிறது.
இந்திராவின் அம்மாவுக்கு மருமகனிடம் வேலை சொல்வதை விட மகளிடம் உரிமையோடு கேட்க சவுகர்யமாய் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்.
9.30 வரை அலுவலகப் பணியாற்றும் பெண், ஒருநிமிடம் வாகனத்தில் சென்று வீட்டுக்கான தேவையை செய்ய மலைக்க மாட்டார். அவரின் ஆதங்கமெல்லாம் தன் பதவி உயர்வுக்கான மகிழ்வை வீட்டினரிடம் கண்டவுடனே பகிர்ந்து குதூகலிக்க முடியாமல் போனதாகவே இருக்கும்.

       இரவுப்பணிக்கு சென்று காலை ஏழு மணிக்கு மேல் பத்து கிலோமீட்டர் பயணித்து வீடு வரும் எனது கணவரை நான் பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வரும்போது ஒரு பாக்கெட் பால் வாங்கி வரப் பணித்திருக்கிறேன். தன் பதவியையோ அந்தஸ்தையோ கெளரவத்தையோ மனதில் கொள்ளாமல் அவரும் வாங்கி வருவது சர்வசாதாரணமாகவே நடப்பது.
ஒரு பெண்ணானவள் எந்நிலையிலும் அகந்தையோ கர்வமோ கொள்வது அவளது இயல்பு வாழ்வைப் பாதிப்புக்குள்ளாக்கும் என்ற கண்ணோட்டத்தில் ஒரு தாயாக மகளுக்கு கொடுக்கும் உபதேசமே ‘உன் கிரீடத்தை வீட்டுக்குள் கொண்டு வராதே'.

         எழுத்தாளர் அ.வெண்ணிலா சிலமாதங்களுக்கு முன் ‘தோழி' பத்திரிகையில் எழுதியதொரு கட்டுரையில் தன் வீட்டுக்கடமைகள் பெரும்பாலானவற்றை தன் தாயார் ஏற்றுக் கொள்வதால் தான் நினைத்த நேரங்களை எழுதுவதற்கும் இன்னபிற ஆக்கங்களுக்கும் உபயோகிக்க  முடிவதாக எழுதியதை வாசித்தேன். பெண்ணுக்கான குடும்பப் பொறுப்புகளின் விடுதலையும் இன்னொரு பெண்ணின் சுமையாகவே இருந்தாக வேண்டியிருக்கிறது என்பதையும் அதில் சுட்டியிருப்பார்.  நானும் நினைத்தேன், அது அவளின் அம்மாவாக இருக்கலாம்; பணிப்பெண்ணாக இருக்கலாம்; மாமியாராகக் கூட இருக்கலாம்!

         எத்தனை அறிவியல் முன்னேற்றங்கள் வந்தும் இதயத்தின் வேலையை இதயமும், நுரையீரலின் வேலையை நுரையீரலுமே செய்துகொண்டிருக்கிறது! குடும்பம் உயிர்ப்போடிருக்க வேண்டும் என்றால் ஆணை விட பெண் அதிக பளு தூக்கத் தான் வேண்டும். அதற்கான வலுவும் பெற்றவள் தான் பெண்.

நன்றி: 10.08.2014 'தி இந்து' - பெண் இன்று .

Share on:

       ‘சந்தால்' பழங்குடியினப் பெண் எழுதிய கவிதையொன்றை அம்பை மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வாசித்தேன். திருமண வயதை எட்டிய அப்பெண் தன் தந்தையிடம் எப்படிப்பட்ட மணமகனை தனக்காக தேட வேண்டும் என்று சொல்வதாக அமைந்திருக்கும் அந்தக் கவிதை. அம்பையின் வார்த்தைகளில் இதோ அந்தக் கவிதை...

அப்பா,
உன் ஆடுகளை விற்றுத்தான்
நீ என்னைப் பார்க்க வரமுடியும்
என்ற தொலைதூரத்தில்
என்னைக் கட்டிவைக்காதே!

மனிதர்கள் வாழாமல்
கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில்
மணம் ஏற்பாடு செய்யாதே!

காடுகள், ஆறுகள், மலைகள் இல்லா ஊரில்
என் திருமணத்தை செய்யாதே!

நிச்சயமாக,  எண்ணங்களை விட வேகமாய்
கார்கள் பறக்கும் இடத்தில்...
உயர்கட்டடங்களும், பெரிய கடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்!

கோழி கூவி பொழுது புலராத,
முற்றமில்லாத வீட்டில்,
சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதை
கொல்லைப்புறத்திலிருந்து பார்க்க முடியாத வீட்டில்
மாப்பிள்ளை பார்க்காதே!

இதுவரை ஒரு மரம்கூட நடாத
ஒரு பயிர்கூட ஊன்றாத,
மற்றவர்களின் சுமைகளைத் தூக்காத,
‘கை' என்ற வார்த்தையைக் கூட எழுதத் தெரியாதவன்
கைகளில் என்னை ஒப்படைக்காதே!

எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்,
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில்
நடந்தே திரும்பக் கூடிய இடத்தில் செய்துவை!

இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் கேட்டு
நீ வர வேண்டும்!
________________

என்ன அழகான வீரியமான சிந்தனைகள் அப் பழங்குடியினப் பெண்ணுக்குள்!

(நண்பரின் மகள் வந்திருந்தாள் வீட்டுக்கு. நல்ல படிப்பு; கைநிறைய சம்பளம் வரும் வேலை. 24 வயது.
“அடுத்து, அப்பாவோட  வேலை உனக்கு வரன் பார்க்க வேண்டியது தானா?” என்றேன்.
“இல்ல, ரெண்டு மாசத்தில் வரப்போகும் இண்டர்வியூவில் செலக்ட் ஆகிடுவேன். ஒரு மூணு வருடமாவது அமெரிக்கா போய் சம்பாதித்து வீடு வாங்கிய பிறகுதான் கல்யாணமெல்லாம்...” என்கிறாள்! )
Share on:





என் சுவாசக் காற்றிலும்

நான் பருகும் நீரிலும்

உலகை தினந்தினம்
ஒளியூட்டும் பகலவனிலும்

கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்

பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்

அணுத்தொகுப்பாய்

அடிமனசில் அருவுருவாய்

உயிர்த்திருக்கிறாய் அம்மா...

என்னுயிர் உள்ள மட்டும்
உயிர்த்திருப்பாய்!

பிறகும் என் வாரிசுகளுள்!!
***************************

படக் கலவைக்கு நன்றி:    S .சிபிக்குமார்


சிபியிடமிருந்து எனக்கு வந்த வாழ்த்துச் செய்தி இது!
மின்னஞ்சல் வாழ்த்துக்கு நன்றி மகனே...
 
Share on:
*மிகப் பெரியதாக வாய் திறக்கும் உயிரினம் நீர் யானை தான் என்கிறேன் நான். ஒப்புக் கொள்கிறீர்களா?

        இல்லீங்க! தவளை மீன் (Frog Fish) என்றொரு வகை உண்டு. தன் வாயைப் பன்னிரண்டு மடங்கு அளவுக்குப் பெரிதாக்கிக் கொள்ளும். உயிரினங்களில் உலக ரெக்கார்ட் என்று சொல்லலாம்! வாயை மூட அது எடுத்துக்கொள்ளும் நேரமும் ஆச்சர்யமானது. ஒரு வினாடியில் ஆறாயிரத்தில் ஒரு பகுதி! சின்னக் கூட்டமாக மீன்கள் போகும் போது  கண் மூடித் திறப்பதற்குள் பல மீன்கள்  தவளை மீன் வாய்க்குள் காணாமல் போய், மற்ற மீன்கள் 'எங்கேடா அத்தனை பேரும்?!' என்று திகைக்கும். அதே போல், 'காமெர்சன்' என்று அழைக்கப் படும் இன்னொரு தவளை மீன், தன்னைவிட இருமடங்கு பெரிய நீளமான இரையை விழுங்கக் கூடியது. அதற்கேற்றார் போல் அதன் உடல் எலாஸ்டிக் போல் நீண்டு கொள்ளும்! நாம் சாப்பிட சாப்பிட வயிறும் பெரிதாகிக் கொண்டே போனால் எப்படி இருக்கும்! இதையெல்லாம் விட பெரியதாக வாயைத் திறந்து விழுங்கும் உயிரினம் ஒன்று உண்டு.
        அது அரசியல்வாதி!

** டார்ச் லைட்டின் உண்மையான பெயர் சர்ச் லைட் என்பது சரியா ? தவறா ?

      எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம். இரண்டும் ஒன்றே. 'டார்ச்'சை விட 'சர்ச் லைட்'டுக்கு  வீச்சு அதிகம். டார்ச் லைட் வட்டச் செயலாளர் என்றால், சர்ச் லைட் பெரிசு. எம்.எல்.ஏ. மாதிரி! (லைட் ஹவுஸ் தான் சி.எம்.! தொண்டர்- ட்யுப் லைட்!)


நன்றி:
    'ஹாய் மதன்' தொகுதி- 2,
    கிழக்குப் பதிப்பகம்,
    முதல் பதிப்பு: நவ.2006.
 
Share on:
"சின்னசாமியின் கதை" (புதினம்)

ஆசிரியர்: வளவ.துரையன்
வெளியீடு: அனன்யா, தஞ்சாவூர்
பக்கம்: 234
விலை: ரூ.200/-

      சாமானிய மனிதனொருவனின் கதையிலும் அசாதாரண செயல்களும், எதிர்பாரா திருப்பங்களும், வாழ்வியல் கோட்பாடுகளை விளக்கும் தத்துவ நெறிகளும் பரிபூரண அன்பும் நட்பும் உறவும் அமைந்திட சாத்தியங்கள் உண்டென்பதை ‘சின்னசாமியின் கதை' காட்டுகிறது.

       நம் ஒவ்வொருவர் வாழ்வும் ஒரு சிறந்த சுயசரிதை எழுதுமளவில் இருப்பினும்,
Share on:
தோலுரித்துத் தொங்கும்
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்

கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...

திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...

வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...

சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை

குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.

Share on:
Health Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி.
Share on:
ஒரு ஊரில் ஒரு அம்மாவாம். ரெண்டாவது மூணாவது படிக்கிற தன் மகனையும் மகளையும் தினசரி பள்ளிக்கு கிளம்பி செல்லுமுன் பிரார்த்தனை செய்யச் சொல்வாங்க .

மகன் சொல்வான்...

அம்மா நல்லாயிருக்கணும்  அப்பா நல்லா இருக்கணும். அக்கா நல்லா இருக்கணும். தாத்தா நல்லா இருக்கணும். ஆத்தா நல்லா இருக்கணும். எல்லாரும் நல்லா இருக்கணும். நானும் நல்லா இருக்கணும். நல்ல புத்தியை கொடு. உடம்பு பலம் கொடு....

அவன் முடிக்கும் வரை கண் மூடி மெளனமாக நிற்கும் மகள் வாய் திறப்பாள் ...
"நானும்... எனக்கும் !"

இன்றைய சிறப்பு தினத்துக்கு பதிவு போட நேரமற்று ஊர்ப் பயணத்தில் பறக்கும் நானும் சொல்கிறேன்...
"வாங்க... நாம எல்லோரும் 'தஞ்சை கவிதை' வலைப்பூவுக்கு செல்வோம்.

 http://krishnapriyakavithai.blogspot.in/

Share on:

உயிர்ச் சிறைக் கூடமாய்
மனித உடம்பிருக்க
கருவறை வெளிபோந்தும்
மற்றுமொரு சிறைவாசம்
சந்தர்ப்ப சூழலால்...

வெகு தாமதமாகவேனும்
கட்டறுத்தது காலக் கத்திரி
வயிறு குளிர மனம் நெகிழ
மறுபிரசவித்தாய் உன் மகனை.

வாழிய!




Share on:

இணையுடனான
காதல் கனிமொழியா?

துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?

பகிர்ந்து மாளாத
நட்பின் குதூகலமா?

பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?
Share on:
நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-

        “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
        நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
         மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
        கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?
Share on:


           “எம்மாம் நேரம் குந்தி கெடந்தாலும் இந்தாளு மனசு கசியப் போறதில்ல” ஜாங்கிரி உட்கார்ந்திருந்த மணல் திட்டிலிருந்து எட்டி காரி உமிழ்ந்தாள். சின்ன வயசில் கூட்டாளிகளால் வைத்த பட்டப் பெயர் இது. கொண்டவன் வீட்டிலும் நிலைத்து, இப்போது பஞ்சம் பிழைக்க வந்த இடத்திலும் முதலாளியிலிருந்து சக தொழிலாளி வரை ஜானகி என்று கூப்பிடுவார் யாருமின்றி ஜாங்கிரியாகவே இருப்பவள்.
                இத்தனைக்கும் காரணமான அவள் தலைமுடி எண்ணெய் காணாமல் வறண்டு சுருண்டு மேலேறியிருந்தது. எடுத்து ஒரு ரப்பர்பேண்டில் அடக்கி வைத்திருந்தாலும் அந்த அத்துவானத்தின் அந்திக்காற்றில் திமிறிப் பறந்து கொண்டிருக்க, முடிக்கற்றைகளை அடிக்கொரு தரம் இடதுகையால் இழுத்து இழுத்துக் காதோரம் செருகி  மாளவில்லை அவளுக்கு.
                அவள் காலருகே பரட்டை தலையும் ஒழுகும் மூக்குமாய் நிமிர்ந்து பார்த்து சிரிக்கும் ஒன்றரை வயது மகள் செல்லியை இழுத்து முந்தானையை உதறி மூக்கை நோகாமல் துடைத்து விட்டாள். அவளிடமிருந்து திமிறி இறங்கிய அது மண்டியிட்டு ‘விசுக் விசுக்' என நகர்ந்து அடுத்ததாக குவித்திருந்த கருங்கல் ஜல்லி முட்டில் சட்டமாக உட்கார்ந்து கொண்டது. ரெண்டு நாளாகப் பெய்த மழையில் தேங்கிக் கிடந்த ரோட்டுப் பள்ளத்தில் ஒவ்வொரு ஜல்லியாக விட்டெறிந்து விளையாடத் துவங்கியது.
                அரை கிலோ மீட்டர் தூரத்தில் வந்த தொழிற்பேட்டையால் இந்த இடத்துக்கு பவிசு வந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைத்த அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் பெரும்பாலும் கட்டிக் காசுபார்த்துக் கைதேர்ந்த அவள் முதலாளி, அடுத்த  கட்டடத்துக்கான அஸ்திவாரம் போடுவது பற்றி மேஸ்திரிகளிடம் விவாதித்துக் கொண்டிருந்தார்.
Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ▼  2014 (24)
    • ▼  December (3)
      • செடி காப்பாத்திடுச்சு...!!
      • 'விளையும் பயிர்'
      • பொரி
    • ►  November (5)
      • வினவு
      • அப்புறம் என்னாச்சு?
      • கிரகச்சாரம்
      • இரட்டைக் கொலை
      • பல் வலியா ?
    • ►  October (1)
      • சாகசங்கள் மீதான பேராவல்
    • ►  September (3)
      • ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....
      • தோழமைக்காக ஒரு தொடர்பதிவு...
      • வாழ்த்துங்கள்; வளர்கிறோம்!
    • ►  August (2)
      • சாதனைப் பெண்களின் கிரீடம் எதுவரை?
      • இன்றைய நிம்மதி எதில்?
    • ►  May (1)
      • உயிரின் உயிரே...
    • ►  April (2)
      • அன்றும் இன்றும் என்றும் ...
      • ஒரு மின்னஞ்சல் அச்சேறியது ...
    • ►  March (3)
      • வன்மம் தவிர்
      • Health Is Wealth: ஆழ் மனதில் அற்புத சக்தி.
      • மகிழம் பூ ... மத்தாப்பு!
    • ►  February (2)
      • அற்புதம் அம்மா!!
      • செவிப்'பறை'
    • ►  January (2)
      • ஒரு தூரிகையின் சிலிர்ப்பில் தெறித்த சில கவிதைகள்
      • வீழ்ந்தவன்!
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    3 weeks ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    4 weeks ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates