கடந்த இரு நாட்களாக சிபியிடம் அடைக்கலமாகி இருக்கிறது பிறந்து ஒருவாரம் கூட ஆகாத பூனைக்குட்டி ஒன்று.
அதற்கும் இரு நாட்கள் முன்பிருந்தே கொல்லைப்புற சன் ஷேடில் விடாமல் கத்திக் கொண்டிருந்த குட்டிக்கு இரக்கப்பட எல்லோராலும் முடிந்தது. அம்மா பூனை வந்து தூக்கிச் சென்று விடுமென்று அலட்சியமாக இருந்தோம்.
இவன் வந்ததிலிருந்து பாவம் அம்மா, பசி போலிருக்கு... கீழே எடுத்து பால் தரலாம் என்றபடியே இருந்தான். நடைமுறை சிக்கல்கள் தானே தடுக்கிறது...
பத்து நாட்கள் கழித்து நாத்தனார் வீட்டு திருமணத்துக்கு சென்றால் வர மூன்று நான்கு நாட்களாகும்.
இதெல்லாம் நாளடைவில் உபத்திரவமாகி விடும்.
பொதுவாகவே எனக்கு பூனை பிடிக்காது.
இரக்கப்பட்டு இவர்கள் ஸ்தாபிதம் செய்து விட்டு அவரவர் வேலைக்குப் போன பின் பராமரிக்க வேண்டிய பொறுப்பு எனதாகிவிடுமே...
நீண்ட நாட்களாகவே சிபிக்கு நாய் அல்லது பூனை வளர்க்கப் பேராவல். நான் தான் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன். இணைகுருவிகள் வளர்த்து அவற்றை இழந்த சோகம் போல் இன்னொரு தடவை எதிர்கொள்ள இடம் கொடாத மனசோடு.
நான் குளிக்கச் சென்றிருந்த சிறுபொழுதில் யார் வீட்டு செல்லப் பிராணிகளையும் வெகு சுலபமாக வசப்படுத்திவிடும் அப்பாவும் பிள்ளையுமாக பூனைக் குட்டியை இறக்கியாயிற்று.
அதன் உருட்டி விழிக்கும் பளிங்கு கண்களோடு குட்டி குட்டி கைகளும் கால்களும் வாலும் பட்டு உடம்பும் விடாத சத்தமுமாக வசீகரமாகத்தான் இருக்கிறது. அப்பாவும் பிள்ளையும் தான் அவ்வப்போது பால் எடுத்து வைப்பது, தூக்கி கொஞ்சுவது, கதகதப்புக்கு துண்டு விரிப்பது, வெளியே அழைத்துச் சென்று வருவது என ஒரே கோலாகலம் தான் போங்கள்!
வெளியில் போனால் கூட போன் செய்து அதற்கு பால் வைத்தீர்களா என்று கேட்கிறான் சிபி.
டப்பாவில் ஊற்றும் பாலில் அது நிறைவடைவதில்லை. கூரிய பற்களால் கிடைப்பதையெல்லாம் கடித்துப் பார்க்கிறது. இவர்களின் கால்களைப் பிறாண்டுவதோடு பாதத்துக்கு பக்கமாக படுத்து பரபரவென அடிப்பாதத்தில் தன் அம்மாவைத் தேடுகிறது. பார்க்கும் நமக்கு உணர முடிகிறது அதன் தேவையை.
கடவுளே, இந்தக் குட்டி தன் அம்மாவோடு சேர கொஞ்சம் கருணை காட்டேன் என இறைஞ்சுகிறது மனசு. இரை தேடச் சென்ற அதன் அம்மா, விரைவில் திரும்பி வந்து தன் குட்டிக்கு பாலூட்டும் அழகைப் பார்க்கத் தவிக்கிறது பாழ்மனசு.