இறைக்கொடை

     பொறுமை என்னும் அருங்குணம் ஓர் இறைநம்பிக்கையாளன் வாழ்வில் அடித்தளம் எனலாம்.  இதுவே  ஒவ்வொரு நம்பிக்கையாளனின் இம்மை, மறுமை எனப்படும் ஈருலக வாழ்விலும் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. அதனால், இறைநம்பிக்கையாளர்கள் தனது வாழ்வை முன்னெடுத்துச் செல்ல உதவும் நம்பிக்கை விளக்காக பொறுமையை எடுத்துக் கொள்ள வேண்டும். 
      வாழ்வின் கணம்தோறும் எதிர்ப்படும் பிரச்சினைகளில் சில நேரம் வெல்லலாம். பல நேரம் தோல்வியுறலாம். அந்தத் தோல்விகளை வெற்றிகளாக்க பொறுமை எனும் அருங்குணத்தால் தான் அவற்றை எதிர்கொள்ள வேண்டும். அதனால், எல்லா விதமான கஷ்டங்களையும் இழப்புகளையும் சகித்துக் கொள்ள இறை நம்பிக்கையாளர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒருக்காலும் பொறுமையை இழந்து அவரவர் மரணக்குழியை அவரவர் கரங்களாலேயே பறித்துக் கொள்ளக் கூ டாது. 
      பொறுப்புகளை எதிர்கொண்டு அவற்றை நிறைவேற்றுவதில் தயக்கம்,
     வாழ்வியல் யதார்த்தங்களை உள்வாங்குவதில்  ஏற்படும் குழப்பம்,
     தோல்வியைக் கண்டு மனதில் ஏற்படும் அச்சம்...
இவை எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்கச் செய்து ஓர் இறைநம்பிக்கையாளனை வன்முறைப் பக்கம் திசை திருப்பக்  கூடாது. 
     பொறுமை எனப்படும் பெரும்பண்பு, சோதனைகள் மற்றும்  இறைநம்பிக்கையின் ஆழமான வெளிப்பாடு என்னும் இரண்டு தூண்கள் மீது நிலை கொண்டுள்ளது.
     இந்தஉலகியல் அமைப்பு வெறும் ஆனந்தமும் நிம்மதியும் கொண்டதாக மட்டும் படைக்கப் படவில்லை. சோதனைகள் நிரம்பிய களமாகவே  உள்ளது.
     எவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறானோ அவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான். எவன் நன்றி மறக்கிறானோ அவன் தனக்கே தீங்கு தேடிக் கொள்கிறான்.
     வாழ்வியல் சோதனைகள் என்னும் முதல் தூண்  நிலைகொள்ள இறைதொடர்புகள் எனும் இரண்டாவது தூண்  மிகவும் இன்றியமையாதது. 
     பொறுமையை முறைப்படுத்திக் கொள்பவனுக்கு இறைவன் பொறுமையை வழங்குகிறான். இந்தப் பொறுமை வழங்கப் பெற்றவரைவிட ஆகச் சிறந்த வெகுமானம் பெற்றவர் வேறு யாருமில்லை!

நன்றி: இக்வான் அமீர்,   'தி இந்து ' தமிழ் நாளிதழ்  

4 கருத்துரைகள்
  1. மிக அருமை!
    பல சாதனைகள் பொறுமையில் தான் விளைந்திருக்கின்றன!

    ReplyDelete
  2. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  3. சிறப்பான பகிர்வு.

    பொறுமை மட்டும் இருந்துவிட்டால், இந்த உலகையே வெல்லலாம்!

    ReplyDelete