|
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html
|
விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.
கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்
ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...
எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...
அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??
பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!