பெயர் பிறந்த கதை


எங்கள் குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்கப்படாமல்
ஆதார் அடையாளம் தேவையற்று
குட்டிப்பூனை
வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம்

கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா
என்றான் சிபி.
‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக
அரை மனசாய் ஏற்றான்

மறுநாள் இவரிடம்
‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன்
‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா? என்றார்.

கும்பகோணத்தை ‘கும்மோணம்' என்றும்
விருத்தாசலத்தை ‘விருத்தாலம்' என்றும்
சிதம்பரத்தை ‘சேம்பரம்' என்றும்
புவனகிரியை ‘போனேரி' என்றும்
வாய் வசதிக்கு மாற்றியதுபோல்
செல்ல விளிப்பில் அதை புஜ்ஜி ஆக்கினேன்.

ஏகமனதாய் எல்லோரும் ஏற்க
பாட்டி மட்டும் ‘குட்டி' என்பார்.
புஜ்ஜி என்றழைத்தால் ‘ம்ம்ம்...' எனவும்
புஜ்ஜி... புஜ்ஜி... என்று கூவினால்
எங்கிருந்தாலும் வந்து நிற்கவும்
புரிந்தது அதற்கு.

வீட்டுக்கு விருந்தினருடன் வந்த சிறுபையன்
பூனைக்குட்டியின் பெயர் புஜ்ஜி என்றறிந்ததும்
‘டோரா புஜ்ஜி!' என்றான்.

மனிதப் பெயர்களோடு
செல்லப் பிராணிகள் திரியும் காலத்தில்
ஒரு குரங்குக் கதாபாத்திரத்தின் பெயர்
எங்க பூனைக்குட்டிக்கு இருக்கட்டுமே...!



0 கருத்துரைகள்