வேம்பு:
சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை, உட்பாகம், பிசின், இலை, பூ, காய், பழம், ஈர்க்கு, விதை, எண்ணெய் என அனைத்து பகுதிகளும் பயன் தர வல்லவை. வேப்பமரக் காற்று தொற்று நோய்வராமல் தடுக்கும் வல்லமை பெற்றது.
*குழந்தைகளுக்கு சில சமயம் உடல் முழுதும் வீங்கிவிடும். வயிற்றில் இரையும் சப்தம் கேட்கும். வயிற்றுப் போக்கும் சிலநேரம் வாந்தியுமிருக்கும். இதை ‘ஊதுமாந்தம்' என்பர்.
இதற்கு ஐந்தாறு வேப்பிலை ஈர்க்கு(இலைகளை உருவினால் கிடைக்கும் மெல்லிய குச்சி), அதேயளவு பொடுதலை ஈர்க்கு, மாவிலை ஈர்க்கு, புளிய இலை ஈர்க்கு, நெல்லியிலை ஈர்க்கு, நுணாயிலை ஈர்க்கு ஆகியவற்றை சேகரித்து ஒரு மண் சட்டியில் இரண்டாகக் கிள்ளிப் போட்டு தண்ணீர் ஊற்றி பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து வடிகட்டி, நான்கு மணிக்கு ஒரு முறை ஒரு தேக்கரண்டி உள்ளுக்குக் கொடுக்க விரைவில் குணமாகும்.
*குழந்தைகளின் தீராத வயிற்றுப் போக்குக்கு வேப்ப இலையையும், வசம்பையும் அரைத்து உள்ளுக்குக் கொடுக்க சட்டென நிற்கும்.
*எந்த வித அம்மை நோய்க்கும் வேப்பிலை கைப்பிடியெடுத்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து பாலில் கலக்கி குடிக்க விரைவில் அம்மை தணியும்,
*புட்டாளம்மை எனும் பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்) குளிர்காலத்தில் வந்தால், காதின் அடிப்பாகம் வீங்கி காய்ச்சல் இருக்கும். தொண்டைவலியும் விழுங்க சிரமமும் இருக்கும். வேப்பிலையையும் மஞ்சளையும் அரைத்து வீக்கத்தில் பத்துப் போடவும். தினம் அதன் மேல் மேலும் மேலும் பத்து அரைத்து போட விரைவில் குணமாகும்.
*உடலில் எங்கேனும் கட்டி போல் வந்து பழுத்து உடையாமல் விண்விண் எனத் தெறிக்கும் வலியோடிருந்தால், வேப்பிலை, மஞ்சள், கற்பூரம் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டரைத்து கட்டி மேல் தடவ சீக்கிரமே பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.
*புண் மற்றும் காயங்களை வேப்பிலை போட்டுக் கொதிக்க வைத்து ஆறிய நீரில் கழுவ நல்லதொரு கிருமிநாசினியாக செயல்படும்.
*காலையில் எழுந்ததும் பித்த மயக்கம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் பிடியளவு வேப்பங்கொழுந்தை மென்று விழுங்கி வர நாளடைவில் குணம் தெரியும்.
*கண்பார்வை குறையத் தொடங்கினால் வேப்பங்கொழுந்தை கசக்கிப் பிழிந்து இரு கண்ணுக்கும் ஒவ்வொரு சொட்டு காலையில் விட்டு வர மூன்றே நாளில் பளிச் என்றாகும் கண்கள். (முதலில் சாறு பட்டதும் சற்று எரியும். பின் பழகிவிடும்)
*நாய்க்கடித்தால் உடனே வேப்பிலையை அரைத்து சிறு உருண்டை உள்ளுக்குக் கொடுத்து நிறைய தண்ணீர் பருகக் கொடுக்கவும். கடிவாயில் மஞ்சளை அரைத்துப் பற்றுப் போட நாய்க்கடி விஷம் பரவாமலிருக்கும்.
*வாயுக் கோளாறால் குழந்தைகளின் வயிறு உப்புசத்துக்கும், விக்கலும் புளியேப்பமும் இருக்கும் அஜீரண சுரத்துக்கும் சம அளவு வேப்பங்கொழுந்தும் நுணா இலையும் இரண்டாகக் கிள்ளிப் போட்டு கஷாய சட்டியில் போட்டு வதக்கி சிறிது ஆவி வந்ததும், கொஞ்சம் மிளகு, ஓமம் ஆகியவற்றைத் தட்டிப் போட்டு தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்கவிட்டுவடிகட்டி காலையும் மாலையும் அரை அவுன்ஸ் தர உடல் வியர்த்து சுரம் தணியும். சீரணமாகாமல் மப்புதட்டியதும் மலமாகக் கழிந்து நலமாகும்.
*குழந்தைக்கு நாக்கில் வெள்ளை மாவுபோல் படிந்திருந்து, மலச்சிக்கலும் இருந்தால், தூங்காமல் அழுதுகொண்டே, சமயங்களில் வாந்தியும் எடுக்கும். இதற்கு வேப்பங்கொழுந்தையும், அதிமதுரத்தையும் தட்டிப் போட்டு நெய் விட்டுக் காய்ச்சி இறக்கி வடிகட்டிக் கொண்டு, சர்க்கரை சேர்த்து பாகுபதமாக இறக்கிக் கொள்ளவும். காலை மாலை அரை அவுன்ஸ் குழந்தைக்குக் கொடுக்க மலச்சிக்கல் தீரும். பெரியோர்க்கெனில் ஒரு அவுன்ஸ் இரு வேளை கொடுக்கலாம்.
*முகப்பருவிற்கும் கரும்புள்ளிகளுக்கும் வேப்ப இலைகள் போட்டு கொதிக்க வைத்த நீரை ஆவி பிடித்து, அந்நீரால் முகம் கழுவி வர நல்ல மாற்றம் தெரியும். கட்டி போலான பழுத்த பருக்களுக்கு வேப்ப இலையும் மஞ்சளும் அரைத்துப் பூசலாம்.
*வேப்பங்கொழுந்துடன் சீரகம், மிளகு சேர்த்து அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் காயவைத்துக் கொள்ளவும். கைக்குழந்தைக்கு எண்ணெய் முழுக்கு செய்விக்கும் நாளில் தாய்ப்பாலிலோ வெந்நீரிலோ இவ்வுருண்டைகள் இரண்டைக் கொடுக்க கபம் வெளியேறும். கீரைப் பூச்சிகள் செத்தொழியும்.
*உடல் பருமனைக் குறைக்க நாள்தோறும் வேப்பம்பூவை ஊறவைத்த குடிநீர் அருந்தவும்.
*சிறுவர் முதல் பெரியவர் வரை வயிற்றுக்குத் தீங்கின்றி குடலிலுள்ள மலக்கிருமிகளை ஒழிக்க வேப்பம்பூக் கஷாயம் உகந்தது.
*நல்ல கொதி நீரில் வேப்பம்பூவைப் போட்டு வரும் ஆவியை காதிலுள்ள ரணம் குணமாக காட்டலாம். தொண்டைப் புண்ணும் குணமாக்கும் இந்த நீராவி.
*அடிக்கடி ஏப்பம் அல்லது வாந்தி வரும் உணர்வுக்கு சிறிதளவு வேப்பம்பூவை வறுத்துப் பொடிந்து பருப்பு ரசத்துடன் சாப்பிடவும்.
*வேப்பம்பூ சீரண சக்தியை அதிகரிக்கும். உடல் வெப்பத்தை ஏற்படுத்தும். பித்தத்தைக் கண்டிக்கும். அதனால் தான் ரசத்துக்கு தாளிக்கும் போது அரை ஸ்பூன் வேப்பம்பூவையும் சேர்த்து வறுத்து சேர்க்க மணமும் ருசியும் அதிகரிக்கும். வற்றல் குழம்பு செய்யும் போதும் வேப்பம்பூ சேர்த்து தாளிக்கலாம். சிறிதளவு பூவை வறுத்தெடுத்து மிளகாய், புளி, உளுத்தம்பருப்புடன் அரைத்து துவையலாகவும் உட்கொள்ளலாம்.
*நீரிழிவு நோயாளர்கள் வேதிப் பொருள்களாலான மாத்திரைகளின் துணையின்றி இரத்த சர்க்கரையளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, தினசரி ஒரு ஸ்பூன் வேப்பம்பூவை இரண்டு டம்ளர் நீரிலிட்டு சுண்டக் காய்ச்சி அரை டம்ளராகக் குறுக்கி குடித்து வரலாம்.
*எந்த நோயும் அணுகாதிருக்க தேனில் ஊறவைத்த வேப்பம்பூவை படுக்குமுன் கொட்டைப்பாக்களவு எடுத்து சாப்பிடவும்.
*வேப்பம்புண்ணாக்கு விவசாயிகளின் தோழன். ரோஜா செடி வளர்ப்போர்க்கு உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் பயனாகும். வேப்பெண்ணெயும் விவசாயத்தில் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது.வேப்பமரப் பட்டையை பொடித்து நீரிழிவுக்கு மருந்தாக உபயோகிக்கின்றனர்.
*அணில் வேப்பம்பழம் தின்னும் அழகை ரசித்ததுண்டா நீங்கள்? வேப்பம்பழ ருசியும், மணமும் உணர்ந்ததுண்டா உங்கள் நாவும் நாசியும்?!
அருமை..ஆரண்ய விலாஸத்திலும் வாசலில் வேப்ப மரம் இருக்கிறது..ஆனால் அது மலை வேம்பு? மலை வேம்பு, சாதாரண வேம்பிலிருந்து எங்ஙனம் மாறுபட்டது?இதற்கும் அது போல் மருத்துவ குணம் உண்டா..
ReplyDeleteஅறிந்து கொள்ளும் ஆவலில்,
ஆர்.ஆர்.ஆர்.
அம்மாடியோவ்...அசந்து போனேன் வேம்பின் நிழலொத்த உங்கள் அக்கறையான பதிவால். அதென்ன கடைசியில அப்படி கேட்டுட்டிங்க.சிறு வயது விளையாட்டெல்லாம் வேப்பமரத்தை சுற்றித்தான்.வேப்பமரத்தை பற்றி ஐந்தாவதில் படித்த பாட்டு கூட இன்னும் நினைவில் இருக்கிறது.நேர்ல இல்லாம தப்பிச்சுட்டிங்க... இல்லேனா பாடியே உங்களை வேப்ப மரத்தில ஏத்தியிருப்பேன் :)
ReplyDeleteவேப்ப மரத்துக்குக் கீழ் அமர்ந்தாலே நோய் தீரும் என்பார்கள்.மொத்தமும் மருத்துவகுணம்.நல்ல பகிர்வு.
ReplyDeleteவேம்பின் பயனை அறிந்த பதிவு
ReplyDeleteஅசத்தல்
வேப்ப மரத்துக்குக் கீழ் அமர்ந்தாலே நோய் தீரும் என்பார்கள்.மொத்தமும் மருத்துவகுணம்.நல்ல பகிர்வு.
ReplyDeleteஎங்கள் வீட்டைச் சுற்றியும் வேப்ப மரங்கள் இருக்கிறது. அதுவும் மலை வேம்பு தான். கொத்து கொத்தாய் இப்போது காய்கள் வந்துள்ளன.
ReplyDeleteவேப்ப மரக் காற்று ஆனந்தம் அல்லவா!
நல்ல பகிர்வு.
அம்மா வைத்துத் தரும் வேப்பம்பூ ரசமும், பண்டிகை நாட்களில் செய்யும் வேப்பம்பூ பச்சடியும் நினைவுக்கு வந்து விட்டது சகோ.... வேம்புக்கு எத்தனை எத்தனை நற்குணங்கள்.....
ReplyDelete@ஆர்.ஆர்.ஆர்....
ReplyDeleteதேடித் தேடி அறிந்தவற்றை ஒரு பதிவாக்கி உள்ளேன். மிக்க நன்றி ... தேடிக் கண்டடைய வைத்தமைக்கு.
@மிருணா...
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி தோழி. முருங்கை மரத்தில் ஏற்றினால் தான் விபரீதம்(!) மேலும் மேலும் வேம்பைப் பற்றி அறிய நேர்வதால் மற்றொரு பதிவிட எண்ணுகிறேன். (தங்களைப் போன்றோரின் உற்சாகப்படுத்தல் தரும் தெம்பில்)அந்தப் பாட்டை ஆடியோ ரெக்கார்ட் செய்து தங்கள் வலைப்பூவில் பதிவிடலாமே... வரும் சந்ததியினர்க்கு பயனாகுமல்லவா!
@சண்முகவேல் ஐயா...
ReplyDelete@இராஜகோபாலன் ஐயா...
@போளூர் தயாநிதி ஐயா...
தங்கள் வருகை எனக்கு உற்சாகமளிக்கிறது... நன்றி!
கோவை2டெல்லி...
ReplyDeleteநல்லது ஆதி. ஆர்.ஆர்.ஆர். சார் மூலம் நானும் மலைவேம்பைப் பற்றியறிந்தேன்.
@இரத்தினவேல் ஐயா...
ReplyDeleteமிக்க நன்றி!
@வெங்கட் நாகராஜ்...
ஆம் சகோ... வேப்பம்பூ ரசத்தின் மணமும் சுவையும் ஆஹா... சித்திரை வருடப்பிறப்பில் முக்கிய இடம் பிடிக்கும் பதார்த்தம் வேப்பம்பூ போட்ட மாங்காய்ப் பச்சடியல்லவா. அறுசுவையும் நிறைந்த அதை வருடத் தொடக்கத்தில் உண்ண நியதியை ஏற்படுத்திய முன்னோர் செயல் வியத்தற்குரியது. எல்லா சுவையும் எல்லா உணர்வுகளும் சமாக பாவிக்க ஒரு ஏற்பாடல்லவா அது.
Interesting and very useful details.
ReplyDelete