திருவிழாக் கூச்சலில்
தனித்து இனிக்கிறது
ஊதல்காரனின் இசை
காலை நேரத்தில்
உற்சாகமாய் தொடர்ந்தொலித்த
அவனது ஊதல்
வியாபார மந்தமாலோ
வயிற்றைப் புரட்டும் பசியாலோ
தட்டுத் தடுமாறுகிறது
மதியப் பொழுதில்
இசையால் மட்டுமே
உயிர்த்திருந்தான்
அவன்
கூட்டம் நெரிந்த
மாலைப் பொழுதில்
இருள் விலக்க
எரியும் தீப்பந்தமாய்
உயர்ந்தோங்கிய
அவனது குழலொலி
எட்டும் செவிகளைப்
பிரகாசமாக்குகிறது
பெற்றோரை தம்
பிடிவாதத்தால் மசிய வைக்கும்
குழந்தைகள்
சூழ்ந்தனர் அவனை
இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்.
(கல்கியில் பிரசுரம் ஆனது )