வந்தவொரு
சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான்.
“நதியில் விளையாடி
கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின்
பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது
அப்பாவிடமா?
அம்மாவிடமா?"
“அப்பாவிடம்தான்!”
என ஒற்றைச் சொல்லைச்
சிறகாக்கி
கொவ்வை இதழ்விரி
குறுநகை தெறிக்க-தன்
ஒளிர்விழிகளால்
புன்னகைத்து
எனைக் கடந்தாள்;
மனங்கிளர்ந்தாள்-ஆம்
ஆம்!!
அப்பாவின் கம்பீரம்
மகளின் பிரம்மிப்பு
அப்பாவின்
புன்னகைதான் மகளின் பூரிப்பு
அப்பாவின் பண்பாடு மகளுக்கு வழிகாட்டி
அப்பாவின்
குணமெல்லாம் மரபணுவாய் மகளிடம்.
தந்தைகரம்பற்றி
தள்ளாடி நடந்தமகள்
பிந்தைவாழ்
கடலில் பெருநீச்சல் பழகிட
சிந்தை பொலிவுற
செந்தமிழ்க் கல்விபெற
தள்ளிவாழ முதற்சூழல்
மேற்கல்வி, விடுதிவாசம்
பிரிதலும்
கூடலும் அன்புபெருக்கிற்று இருவருக்கும்.
வளர்ந்த மகளுக்கு
வாழ்க்கைத் துணை தேடும் பெருவிழைவில்
நாள்பார்த்து
கோள் பார்த்து நல்லனவெல்லாம் தேர்ந்து
தான்பார்த்த
வாலிபனை ஊர்கூட்டி மணமுடித்து
இணைந்தவர்கள்
வைத்த அடி ஏழில்
தன்பிறவிப் பயன்
துய்த்து
விழிகசிய
தழுதழுத்து விடைபெறும் தன்குலமகளை
வழியனுப்ப
மொழியற்று
தலையசைக்கும்
தருணமதில் தளர்வுற்று
உயிர்சோரும்
தகப்பன்களின்
உணர்வதை
உணர்த்திட
உணர்-வதையையுணர்த்திட
எம்மொழியிலுமோர்
சொல்லில்லை!
எம் மொழியிலும்
ஓர் சொல்லில்லையே!!
இதுநாளும் தன்
ஆதாரமான மகள்
இன்னொருவன்
மனைக்குத் தாரமாக அலங்கரிக்க
இன்னுமவள்
தளிர்நடைக்காரிதான் எனக்கென்னும்-
இன்னுமவள்
தளிர்நடைக்காரிதான் என எண்ணும் தந்தைமனம்
பின்னாளில்
அவளுமோர் தாய்மைப் பேறடைய
மறுபடியும்
மகளுக்கோர் வாய்ப்பு வரும்
தந்தை கரம்
பிடித்து தள்ளாடி நடைபயில.
பத்துமாதங்கள்
பொத்திப் பொத்தி பாதுகாத்த
கர்ப்பிணியின்
மடியிறங்கி மகவுபெறும் நாளும் வர
மகவீன்ற தன்மனைவிக்காய்
மகப்பேறு அறைவெளியே
தவித்தலைந்த
பழங்கால- பழம் கால நினைவுகளோடு
தள்ளாடித்
தள்ளாடி தனித்தலையும் தகப்பனின் மனக்கிடங்கில்
உள்ளோடிக்
கிடக்கும் வாட்டம் ஒருகோடி...
வெள்ளப்
பெருக்கெடுத்த மதகுடைந்து பீறிட்டாற்போல்
கேசத்துப்
பொய்-மையோடு பூரிப்பைக் காட்டிட
வாய்நிறைந்த
பல்லோடிருந்த அப்பாவின் கம்பீரம்
மெல்லக் குழைந்து
தாத்தாவான கணம்
அடடா...வெகு
அற்புதம்... அழகின் உயர் உன்னதம்.
தந்தைகரம்
பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு
சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக்
கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.
காதலித்துக்
கைபிடித்த காரணம் பொறாது எங்கள்
வாழ்விணையை
வசந்தத்தை ஆள்வைத்து அடித்து மாய்த்த
கொடும்
சாதிவெறியில் மனம் பிழன்றயெம் பெற்றோரை
தள்ளி வைத்தோம்
அடியோடு. இனியெங்கள் தந்தை யார்?
தந்தைகரம்
பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு
சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக்
கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.
எல்லோருக்கும் தந்தையே எம் இறையே
மகள்களின்
கடவுளான தந்தைகள் சாத்தானாகிப் போனது ஏன் ?!
குறிப்பு: கவியரங்கத்தில் எழுதி வாசித்த எனது கவிதை.
நன்றி: கண்ணதாசன் பிறந்தநாள் விழா,
'இலக்கியச் சங்கமம்', நெய்வேலி.