துளையிடப்பட்ட முத்து மணிகளை மாலையாக்கி
மதிப்பு கூட்டுவது போல், கவிஞர்
கிருஷ்ணப்ரியா, அவ்வப்போது
கதைமொழியில் வெளிப்பட்ட தம் அனுபவங்களை அவற்றின் உணர்வுகளை வாசகருக்குக் கடத்தும்
வகையில் 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கியது சிறப்பு. முன்னெடுத்த ஈழவாணிக்கும் (பூவரசி
பப்ளிகேஷன்ஸ்) நன்றி சொல்லியாக வேண்டும் நாம்!
![]() |
கிருஷ்ணப்ரியா & ஈழவாணி |
அலங்காரம் தேவையற்ற, பிறந்த குழந்தையின் கண்
உறுத்தாத நிர்வாணம் போன்ற புனைவற்ற யதார்த்த அழகுக் கதைகள்!
புத்தகத்தைப் புரட்டி முதலில் படித்தது
முன்னுரையான ‘மகிழ்ச்சியுடன்
எழுதுகிறேன்' தான்!
விளக்கின் பிரகாசம் அருகிருப்போரையும்
வெளிச்சப் படுத்துவதைப் போல என்னையும் தொற்றிக்கொண்டது மகிழ்ச்சி!
சக பயணிகளின் உணர்வுகளைப் பின் தொடர்வதால்
கிடைக்கப் பெற்ற சில கதைக் களங்கள். எளிதாக நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று
நமக்குள் செலுத்திய அதே உணர்வுகள்! மின்கடத்தி போல இங்கே ஒரு உணர்கடத்தியாக
கதாசிரியர்!
ஒரு குடும்பத்தலைவியாக பணியேற்று ஊதியம் பெறும்
பணிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எழுத்தாளிப் பெண்ணின் நேர வறுமையும்
அலைச்சல்களும் அதற்குள் தேடிக் கண்டுபிடிக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிறவி
சுபாவமான சக உயிர்களை நேசிக்கும் பண்பும் நேர்த்தியாக வெளிப்படுகிறது ‘நானும் என்னைப்
போன்ற அவளும்' தலைப்புக் கதையில்.