‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம் ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர் திரு. ம. செந்தமிழன்.
முதல் பக்கத்தின் ஒற்றை வரியான ‘தேடுதல் என்பதே எதையோ தொலைக்கும் முயற்சி தான்' என்றது வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டப் போதுமானதாகிறது.
‘தேவையானவை தேடி வரும்'
‘விருப்பம் எனும் மாமருந்து'
‘சிறுத்தைகளும் மான்களும்'
‘துன்பங்களிலிருந்து விடுதலை'
‘வேட்டல்'
‘நம்பிக்கையைக் காட்டிலும் விருப்பம் மேலானது'
‘விதி'
போன்ற உப தலைப்புகளில் நூலாசிரியர் நம்முள் பாய்ச்சும் சிந்தனை வீச்சுகள் காலப்போக்கில் துளிர்த்துவிட்ட பல மூடத்தனங்களை வேரறுப்பதாய் இருக்கின்றன.
இறுதியாக ‘சமூகத்தின் விருப்பத்திற்காக பேராற்றலால் அனுப்பப் பட்டவர்' என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா பற்றிய கட்டுரை வேட்டலின் சாத்தியத்தையும் வேட்டலின் அற்புதத்தையும் நமக்கு உணர்த்துகிறது.
பானை சோற்றுக்கு ஒரு சோறெடுத்துப் பதம் பார்ப்பதுண்டு. (குக்கர் வராத காலத்தில்) கூடுதல் தண்ணீர், கூடுதல் வெப்பத்தில் குழைய வேக வைக்கப் படும் பொங்கலுக்கு அது வேண்டியதில்லை. அவ்வப்போது பக்குவமாக கிளறுவது மட்டுமே அவசியம். நம்மை ஒரு கிளறு கிளறியிருக்கிறார் செந்தமிழன் தன் ‘வேட்டல்' மூலம்.
ஆசைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு; உணர்வுக்கும் உணர்ச்சிக்குமான வேறுபாடு; பகுத்தறிவுக்கும் மெய்யறிவுக்குமான வேறுபாடு; நம்பிக்கைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு போன்றவற்றைத் தெளிவாக விளக்கும் இந்நூல் நமது அகவொளிப் பயணத்தின் ஒரு ஊன்றுகோல்.
நூலில் நான் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டவற்றில் கொஞ்சம் உங்களோடு பகிர்கிறேன்.
உங்கள் பிரத்யேக வாசிப்பில் மேலதிக மனத் தெளிவை ஏற்படுத்த விழையும் வல்லமை நிறைந்தது இந்தப் புத்தகம்.