அகவெளிப் பயணத்தின் வழித்துணை

   
   
 ‘விருப்பத்தில் நிலைபெறுதல்' எனும் குறுவிளக்கம் மூலம்  ‘வேட்டல்' நூல் வழி உணர்த்தவிருக்கும் சாரத்தை கோடிட்டுக் காட்டுகிறார் நூலாசிரியர் திரு. ம. செந்தமிழன்.

            முதல் பக்கத்தின் ஒற்றை வரியான ‘தேடுதல் என்பதே எதையோ தொலைக்கும் முயற்சி தான்' என்றது வாசிப்பின் ஆர்வத்தைத் தூண்டப் போதுமானதாகிறது.

‘தேவையானவை தேடி வரும்'
‘விருப்பம் எனும் மாமருந்து'
‘சிறுத்தைகளும் மான்களும்'
‘துன்பங்களிலிருந்து விடுதலை'
‘வேட்டல்'
‘நம்பிக்கையைக் காட்டிலும் விருப்பம் மேலானது'
‘விதி'
போன்ற உப தலைப்புகளில் நூலாசிரியர் நம்முள் பாய்ச்சும் சிந்தனை வீச்சுகள் காலப்போக்கில் துளிர்த்துவிட்ட  பல மூடத்தனங்களை வேரறுப்பதாய் இருக்கின்றன.

            இறுதியாக ‘சமூகத்தின் விருப்பத்திற்காக பேராற்றலால் அனுப்பப் பட்டவர்' என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயா பற்றிய கட்டுரை வேட்டலின் சாத்தியத்தையும் வேட்டலின் அற்புதத்தையும் நமக்கு உணர்த்துகிறது.

               பானை சோற்றுக்கு ஒரு சோறெடுத்துப் பதம் பார்ப்பதுண்டு. (குக்கர் வராத காலத்தில்) கூடுதல் தண்ணீர், கூடுதல் வெப்பத்தில் குழைய வேக வைக்கப் படும் பொங்கலுக்கு அது வேண்டியதில்லை. அவ்வப்போது பக்குவமாக கிளறுவது மட்டுமே அவசியம். நம்மை ஒரு கிளறு கிளறியிருக்கிறார் செந்தமிழன் தன் ‘வேட்டல்' மூலம்.

            ஆசைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு; உணர்வுக்கும் உணர்ச்சிக்குமான வேறுபாடு; பகுத்தறிவுக்கும் மெய்யறிவுக்குமான வேறுபாடு; நம்பிக்கைக்கும் விருப்பத்துக்குமான வேறுபாடு போன்றவற்றைத் தெளிவாக விளக்கும்  இந்நூல் நமது அகவொளிப் பயணத்தின் ஒரு ஊன்றுகோல்.

நூலில் நான் அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டவற்றில் கொஞ்சம் உங்களோடு பகிர்கிறேன்.

உங்கள் பிரத்யேக வாசிப்பில் மேலதிக மனத் தெளிவை ஏற்படுத்த விழையும் வல்லமை நிறைந்தது இந்தப் புத்தகம்.


******நம் ஐந்து புலன்களும் எப்போதும் தம் கடமைகளைச் செய்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நமது தேவை எதுவென்பதை ஆறாம் அறிவாகிய மனம் தான் நமக்கு உணர்த்த வல்லதாய் இருக்கின்றது. 

*****விருப்பம் எனும் உணர்வுதான் உயிர்களை வழிநடத்துகிறது; வாழ வைக்கிறது. எதன் மீது நீங்கள் ஆழ்ந்த விருப்பம் கொள்கிறீர்களோ அது உங்களை வந்தடையும். அல்லது அதை நோக்கி நீங்கள் நகர்த்தப் படுவீர்கள். இதுவே விதி. இது மாறுவதுமில்லை. மனிதர்களால் மாற்றப்படுவதுமில்லை. விருப்பத்தில் உள்ள உயிர்களுக்கு அவை விரும்பியவற்றை அளிக்கவேண்டுமென்பதே பேராற்றலின் விருப்பம்.

******விருப்பம் என்பது உணர்வு. ஆசை என்பது உணர்ச்சி. உணர்வுக்கும் உணர்ச்சிக்குமான வேறுபாடுகளை அறிந்து கொண்டால் மாயையைக் கடப்பது எளிதாகி விடும். அறிவு, உணர்ச்சிகளை முன்வைக்கும் தன்மையுள்ளது. அறிவு எப்போதுமே உணர்வை நிராகரிக்கும். உணர்வென்பது பேராற்றலின் நெருக்கமான அங்கம். ஒவ்வொரு உயிருக்குமான உணர்வு அவ்வுயிர் படைக்கப்படும்போதே பேராற்றலினால் ஊட்டப்படுகிறது. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து எழும் உணர்வுகளை மட்டுமே பற்றுக்கோலாகக் கொண்டு வாழத் துவங்கினால், அவ்வுயிர் துன்பங்களிலிருந்து விடுதலை அடைகிறது. உணர்வின் உன்னதத்தை அறிந்து கொள்ள, பசிதான் சிறந்த வழி. உணர்வு வலியுறுத்தும் தேவைகள் அனைத்தும் விருப்பங்கள். உணர்ச்சி தூண்டும் தேவைகள் அனைத்தும் ஆசைகள்.

*****விருப்பம் உள்ளோருக்கு பேராற்றலின் அருள் கிட்டுகிறது. அந்த அருளுக்கு முன் அறிவு தோற்றுப் போகிறது. விருப்பத்தில் நிலைபெறத் தெரிந்தவருக்கு அறிவு பணிவுடன் சேவகம் புரிகிறது. 

******அறிவின் அறிவுரைகள் எல்லாம் சுயநலமானவை. ஆதாயம் அடைவதற்காக எதையும் செய்யலாம் என்பது தான் அறிவுக்குத் தெரிந்த ஒரே மந்திரம். ‘விருப்பங்கள் நிறைவேற்றப்படும்' எனும் மந்திரத்தை அறிந்து கொள்ளுமுன் விருப்பத்தின் மேன்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும். விருப்பத்தை நிறைவேற்றத் தேவையான தர்க்கங்கள் பேராற்றலால் படைக்கப்படும். ஆசைகளோ தர்க்கங்களை உருவாக்கிவிட்டு தான் செயல்படத் துவங்கும். விருப்பம் தான் உயிர்களின் இயல்புணர்வு. ஆசை, மனித குலத்தின் பாவச்சிந்தனை. 

******ஆசைகள் அனைத்துமே பாவத்தின் கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்பவை. விருப்பங்களோ எப்போதும் படைப்பால் பாதுகாக்கப் படுபவை. இப்போதைய வீடுகளின் அலமாரிகள் ஆசைகளால் நிரப்பப் பட்டுள்ளன. பேராசைகளின் பிடியில் சிக்கி, அமைதியைக் கெடுத்துக் கொண்டு சேர்க்கும் ஒரு பருக்கைச் சோறும் வயிற்றால் செரிக்கப்படாது என்பது மறைபொருள்-மெய்ப்பொருள். அமைதியற்ற மனம் நோய்களின் சரணாலயம். இலக்குகளால் நிரம்பிய மனம் அமைதியின் பகைக்கூடம். எல்லாக் குருக்களும் சமூகத்தில்  பரப்பவேண்டியது இதையே. இதுவே அனைத்துச் சமயங்களின் நோக்கமும் விளக்கமும். 

******வளமாக வாழ வேண்டுமென்பது விருப்பம். பணக்காரராக வாழ வேண்டுமென்பது ஆசை. வளமை பேராற்றலின் படைப்பு. ஆசைகள் மனித அறிவின் உருவாக்கம்.  அதிகரித்த ஆசைகளால் கடன் அட்டைகளில் பணயம் வைக்கப்பட்ட வாழ்வின் வலியால் சூன்யமாகி விடாமல், அமைதியாகவும் இன்பமாகவும் வாழ்வதே வாழ்வின் இலக்கு என்றிருப்போருக்கு வாழ்க்கை வசப்படும்.

******ஆசைகளைப் புரிந்து கொண்டு, விருப்பங்களை உண்மையாக உணர்ந்து வாழ்வோர், பேராற்றலின் ஆசி பெற்றோராவர். சிக்கல் ஏதுமற்ற வாழ்க்கை அவர்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. விருப்பங்களில் வாழ்வோருக்கு வெற்றியுமில்லை; தோல்வியுமில்லை; அவர்கள் எவருடனும் போட்டியில் ஈடுபடுவதுமில்லை. 

            மரபு வழிப்பட்ட அறக்கொள்கைகளைப் புறக்கணித்து அறிவின் மேன்மையில் விளைந்த நவீன வேளாண்மை விளைவித்த சமூகத்தின் பேரழிவுக்கு அடிகோலிய நோய்களின் பெருக்கமும் அவற்றுக்கான மருந்துகளின் பக்க விளைவுகளும் நல்ல உணவு, நல்ல வாழ்க்கை, நல்ல நிலம், சக உயிர்களின் மீதான அன்பு ஆகிய மனம் சார்ந்த சிந்தனைகளை சிதைக்கத் தக்கதாக அமைந்ததை நூல்வழி உணர்ந்து நம் அறிவை நெறிப்படுத்திக் கொள்வது நன்று.

               ‘எதையாவது இழந்தால்தான் இன்னொன்றை அடைய முடியும்' என்ற கற்பிதத்தை திணித்துக் கொண்ட இன்றைய வாழ்வியல் தரும் செயற்கை இன்பங்கள் விரைவில் திகட்டிப் போக, இன்பமும் அமைதியும் தவழும் வாழ்வுக்காக பேராற்றலின் கொடைகளான பசி, தாகம், உறக்கம், பாலுணர்வு, ஆரோக்கியம் ஆகிய மனித வாழ்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளையெல்லாம் விரும்பத் தலைப்படுவோரின் அறிவின் இருளகற்றி உணர்வின் ஒளி கூட்டி அகவெளிப் பயணத்தின் வழித்துணையாகிறது தமிழ்ப் பற்றாளர்-பத்திரிகையாளர்-எழுத்தாளர்-சமூகப் போராளி-திரைப்பட இயக்குநர்-மரபு வழி மருத்துவர்-இயற்கை விவசாயி  என பல்துறை வித்தகர்
ம. செந்தமிழனின் ‘வேட்டல்'.


நூல் பெயர்:               வேட்டல்
நூலாசிரியர்:              ம.செந்தமிழன் http://semmaivanam.com/, 
                                              https://www.facebook.com/directorsenthamizhan
வெளியீடு:                   செம்மை வெளியீட்டகம் 
மின்னஞ்சல்:               semmaivanam@gmail.com                     
விற்பனைப்  
    பொறுப்பாளர்:         விஜயன் கதிர்வேல் (kathir.vijayan.1@facebook.com)
                                           தொடர்பு எண்: 73588 87896
பக்கங்கள்:                     96
விலை:                         ரூ. 90/-







3 கருத்துரைகள்
  1. வணக்கம்
    புத்தக விமர்சனத்தை படித்த போது வாங்கி படிக்க வேண்டும் என்ற உணர்வு அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. சிறப்பான கற்பிதம்... உண்மையும் கூட...

    நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. நல்லதோர் நூல் அறிமுகத்திற்கு நன்றி.

    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete