நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >

Showing posts with label கவிதை. Show all posts

தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு

பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது
பெருவரமன்றோ உயிர்தனைக்  காக்க...

பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின்
அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும்
பெற்றோர் மனப்பாங்கில் 
அறநூல்கள் நம்மை வழிநடத்தும்
தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல்

அறிவை விரிவு செய்ய 
குரங்குப் பிடியாய் 
நூல்பல கற்க
கற்றபடி நிற்க 
விழைந்திடு மனமே

உடும்புப் பிடியாய் அறத்தொடு நிற்க 
உறுதிநாம்  கொண்டிட
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கம் ஒழிந்திடும்

திருடனைப் பிடித்து
தண்டனை கொடுத்து
திருந்தி வாழ்ந்திட வாய்ப்பும் தந்திட
தயார் நாம்... 
அவன்?

பிடிசோறும் இன்றி
பட்டினிப் பாட்டில்
திருடத் துணிந்தவன்
விலையாய் கொடுப்பது
உயிராய் இல்லாதிருக்கட்டுமே... 
உலகின் அழிவு தள்ளிப் போகும்

புகைப்பிடிப்பவன்
தனக்கு மட்டுமன்றி
சுற்றியிருப்போர்க்கும்
பற்ற வைக்கிறான்
நோய் நெருப்பை

எல்லோரும் ஒருநாள்
பிடிசாம்பலாக அல்லது
மண்ணோடு மண்ணாக...

தண்ணீர் பிடித்து
தாகம் தணிப்பது மாறி
சொட்டுநீரால் உதட்டை ஈரப்படுத்தும்
நாள் நெருங்கி விட்டதோ...!

கைப்பிடி அவலில்
உயிர் தரித்திருப்பர்
கைப்பிடி விதையில்
உலகு தழைக்கும்
கைப்பிடித்தவர்
இறுதிவரை துணை
கற்றது கைப்பிடிமண் அளவு
பிறர் கைப்பிடியில்
கூடாது நம் சிண்டு

நாடி பிடித்திடும்
வைத்தியர் உணர்வர்
மேனியுறும் இன்னல்
பேச்சில் பிறர் நாடி
பிடித்திடும் சமர்த்தர்
தன்காரியப் புலியாவர்

உழுதவன் நெல்லை
சாக்கில் பிடித்து
அழிந்த விலைக்கு விற்கும்போது 
ஒட்டுமொத்த உலகை
சபித்தே ஆற்றுவான்
எரியும் வயிற்றை

மாசக் கடைசியில்
கையிருப்பு தேய்ந்திட
இழுத்துப் பிடித்து
இழுத்துப் பிடித்து
தளர்ந்து சலிக்குது
இல்லற வண்டி

நம்பியவன் துரோகமிழைத்தால்
கேள்வி கேட்டு அவன் சட்டையைப் பிடி
இலட்சியப் பாதையில் தடைகள் இடர்ப்பட
விடாதே பிடி வெற்றி பெறும் வரை ஓயாதே

உறவும் நட்பும் விலகாதிருக்க
பசைபோல் அன்பை
சேர்த்துப் பிடி

ஆள்வோர் சட்டம்
கிடுக்கிப் பிடி
திணறித் தவிக்கும் சாமானியனுக்கு 
வரிகள் பலவும்
இரும்புப் பிடி

எதிர்பார்ப்பது நழுவும் போதெல்லாம்
நம்பிக்கையை விடாதே பிடி!

 - நன்றி: சாந்தா தத்
                 நிறை
                இலக்கிய இதழ்
             





Share on:


 தந்தை கரம்பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை வழிமறித்துக் கேட்டேன்யான்.
“நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடக்கும் இளந்தென்றலே-உந்தன்நாளின் பெரும்பொழுதில் மனவிருப்போடிருப்பது
அப்பாவிடமா? அம்மாவிடமா?"
“அப்பாவிடம்தான்!” என ஒற்றைச் சொல்லைச் சிறகாக்கி
கொவ்வை இதழ்விரி குறுநகை தெறிக்க-தன்
ஒளிர்விழிகளால் புன்னகைத்து
எனைக் கடந்தாள்; மனங்கிளர்ந்தாள்-ஆம் ஆம்!!

அப்பாவின் கம்பீரம் மகளின் பிரம்மிப்பு
அப்பாவின் புன்னகைதான் மகளின் பூரிப்பு
அப்பாவின்  பண்பாடு மகளுக்கு வழிகாட்டி
அப்பாவின் குணமெல்லாம் மரபணுவாய் மகளிடம்.

தந்தைகரம்பற்றி தள்ளாடி நடந்தமகள்
பிந்தைவாழ் கடலில் பெருநீச்சல் பழகிட
சிந்தை பொலிவுற செந்தமிழ்க் கல்விபெற
தள்ளிவாழ முதற்சூழல் மேற்கல்வி, விடுதிவாசம்
பிரிதலும் கூடலும் அன்புபெருக்கிற்று இருவருக்கும்.

வளர்ந்த மகளுக்கு வாழ்க்கைத் துணை தேடும் பெருவிழைவில்
நாள்பார்த்து கோள் பார்த்து நல்லனவெல்லாம் தேர்ந்து
தான்பார்த்த வாலிபனை ஊர்கூட்டி மணமுடித்து
இணைந்தவர்கள் வைத்த அடி ஏழில்
தன்பிறவிப் பயன் துய்த்து
விழிகசிய தழுதழுத்து விடைபெறும் தன்குலமகளை
வழியனுப்ப மொழியற்று
தலையசைக்கும் தருணமதில் தளர்வுற்று
உயிர்சோரும் தகப்பன்களின்
உணர்வதை உணர்த்திட
உணர்-வதையையுணர்த்திட
எம்மொழியிலுமோர் சொல்லில்லை!
எம் மொழியிலும் ஓர் சொல்லில்லையே!!

இதுநாளும் தன் ஆதாரமான மகள்
இன்னொருவன் மனைக்குத் தாரமாக அலங்கரிக்க
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் எனக்கென்னும்-
இன்னுமவள் தளிர்நடைக்காரிதான் என எண்ணும் தந்தைமனம்
பின்னாளில் அவளுமோர் தாய்மைப் பேறடைய
மறுபடியும் மகளுக்கோர் வாய்ப்பு வரும்
தந்தை கரம் பிடித்து தள்ளாடி நடைபயில.

பத்துமாதங்கள் பொத்திப் பொத்தி பாதுகாத்த
கர்ப்பிணியின் மடியிறங்கி  மகவுபெறும் நாளும் வர
மகவீன்ற தன்மனைவிக்காய் மகப்பேறு அறைவெளியே
தவித்தலைந்த பழங்கால- பழம் கால நினைவுகளோடு
தள்ளாடித் தள்ளாடி தனித்தலையும் தகப்பனின் மனக்கிடங்கில்
உள்ளோடிக் கிடக்கும் வாட்டம் ஒருகோடி...

வெள்ளப் பெருக்கெடுத்த மதகுடைந்து பீறிட்டாற்போல்
 செல்லமகள்பெற்ற சிறுமகவைப் பரவசமாய் சிரம்தாழ்த்திக்  கையேந்தி
கேசத்துப் பொய்-மையோடு பூரிப்பைக் காட்டிட
வாய்நிறைந்த பல்லோடிருந்த அப்பாவின் கம்பீரம்
மெல்லக் குழைந்து தாத்தாவான கணம்
அடடா...வெகு அற்புதம்... அழகின் உயர் உன்னதம்.

தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

காதலித்துக் கைபிடித்த காரணம் பொறாது எங்கள்
வாழ்விணையை வசந்தத்தை ஆள்வைத்து அடித்து மாய்த்த
கொடும் சாதிவெறியில் மனம் பிழன்றயெம் பெற்றோரை
தள்ளி வைத்தோம் அடியோடு. இனியெங்கள் தந்தை யார்?
தந்தைகரம் பிடித்து தள்ளாடி நடைபழகி
வந்தவொரு சிறுபெண்ணை மறித்துயான் கேட்டாற்போல்
எனைமறித்துக் கேட்கின்றனர் கெளசல்யாக்களும் திவ்யாக்களும்.

எல்லோருக்கும் தந்தையே எம் இறையே
மகள்களின் கடவுளான தந்தைகள் சாத்தானாகிப் போனது ஏன் ?!

குறிப்பு: கவியரங்கத்தில் எழுதி வாசித்த  எனது கவிதை.
நன்றி: கண்ணதாசன் பிறந்தநாள் விழா, 
              'இலக்கியச் சங்கமம்', நெய்வேலி.











Share on:

 

ஒரு வயதில் காது குத்துவது வழக்கம்

அப்பாவைப் பெற்ற தாத்தா போய்ச் சேர்ந்தார்

மூன்றாவது வயதில் குத்துவோமென்று இருந்தனர்.


அம்மாவைப் பெற்ற பாட்டி

சிவபதவியடைய

துளையில்லாக் காதுகளை

அமுக்கும் தோடு அலங்கரித்தது.


புதுவீட்டு கிரகப் பிரவேசத்தோடு

காது குத்தல் சிலாக்கியம் என

மனை தேடித் தேடி அலுத்து

கட்டிய வீடும் அமையாமல்

காரணங்கள் பெருகி

ஒன்பதில் தான் குதிர்ந்தது 

பத்திரிகை அடித்து, மண்டபம் பிடித்து

ரெண்டு வேளை விருந்தொடு

தம்பி பெண் காதணி விழா.


காலை உணவில் பூரி கட்டாயம்

மதிய உணவுக்கு முன் ப்ரெஷ் ஜுஸ் ஜில்லென்று

மதிய விருந்து முடிவில் ஐஸ்க்ரீம் அவசியம்

அப்பாவும் அம்மாவும் திட்டமிட்டனர்.


‘எண்ணெய்ப் பண்டம் செரிக்காது என்பாய்

குளிர்பானம் சளிபிடிக்கும் என்பாய்

ஐஸ்க்ரீம் சாக்லெட் எல்லாம் பல்லுக்கு கேடென்பாய்

வரப்போகும் உறவுக்கும் நட்புக்கும் 

இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதா?'

நானும் அதெல்லாம் அன்னைக்கு சாப்பிடலாமா?

தொணதொணக்கிறாள் விழா நாயகி.


ஒரு சிணுங்கலில்லை; அழுகையில்லை

முகம் கூட சுருக்கவில்லை

பத்தர் வேலை முடித்தபின்

பட்டுப்பாவாடையுதறி

மாமா மடியிலிருந்து எழுந்தவள்

வந்த விருந்தினர்கள் சூழ

புகைப்படக்காரர் சொன்னபடி 

கேட்டு ஒய்யாரமாக ஒத்துழைத்தாள்.


‘அப்பா, நீ சொன்னபடி அழவேயில்லை நான்'

‘நல்ல பொண்ணு!'

பெருமை பொங்க சொன்ன அப்பா

தழுவி உச்சி  முகர்ந்தார்.


மதிய விருந்து முடியும் வேளையில்

அம்மாவின் தோழி தன்னுடன் செல்ஃபி எடுக்க அழைக்க

கையிலெடுத்த ஐஸ்க்ரீமை வைத்துச் சென்றாள்.

பந்தி முடிந்த அவசரத்தில் 

இலையோடு குப்பைக்குப் போனது அது.


தேடிவந்தவள் தேம்பியழுகிறாள் வெகுநேரம்

மிச்சமிருக்கும் அவளது குழந்தைமை 

கண்ணீராய் பெருகியோடுகிறது...

அதன் உள்நீரோட்டமாய் காதுவலியும் இருக்கலாம்.

ஆற்றவியலாமல் தவிக்கின்றனர் அம்மாவும் அப்பாவும். 


Share on:

அவரவர் கவலை
அவரவர் படட்டும்
நமக்கெதற்கு?
கிடைத்த வாழ்வை அனுபவி மனசே...

அவரவர் சிக்கல் தீர்க்க
அவரவர்க்கு விரலிருக்கு
நமக்கென்ன?
உள்நுழைந்து மாட்டாமல்
ஒதுங்கியிரு மனசே...

அவரவர் வருத்தம்
அவரவர் தாண்டட்டும்
கைதூக்குவதாய் நினைத்து
குட்டையில் விழலாமா
முட்டாள் மனசே...

அவரவர் பிரச்சினை
அவரவர் தலைவலி
நம் தலை பத்திரம்
நகர்ந்திடு மனசே...

அவரவர் பொறுப்பை
அவரவர் உணரட்டும்
நமக்கானதைப் பார்த்திட
நகரும் பொழுதைப் பிடித்திடு மனசே...

அவரவர் வலிகள்
அவரவர் வினைவழி
கூட்டவும் வேண்டாம்; குறைக்கவும் வேண்டாம்
மரம்போலிருக்கப் பழகிடு மனசே.

Share on:
நன்றி:
http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html

விதவிதமான வினாயகர் உருவங்கள்
சிரிக்கும் புத்தர் சிலைகள்
குபேர பொம்மைகள்
கொஞ்சும் சதங்கைகள்
வண்ணவண்ண மணித்திரள்கள்
இலைகள், பூக்கள், கனிக்கூட்டங்கள்
உலகின் ஒட்டுமொத்த
போன்சாய் உருவங்களாக
சாவிக்கொத்துகளின் ஆதிக்கங்கள்.

கோர்க்கப்படும் சாவிகளுக்கு
அணைவாய் இருக்க போட்டா போட்டிகள்
ஒவ்வொருவர் கையிருப்பிலும்
அவரவர் ஆளுகைக்கு உட்பட்டவற்றின்
பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு அரணாய்
விதவிதமான பூட்டுகளின் திறப்பான்கள்

ஒரே வளையதிலிருப்பினும்
வெவ்வேறு மதிப்புகள் ஒவ்வொன்றுக்கும்
வீட்டுக்கு ஒரு பூட்டு
ஒவ்வொரு அறைக்கதவுக்கும் ஒவ்வொன்று
வாகனங்களுக்குத் தனித்தனி
சொந்த வியாபாரத் தலங்களுக்கும் அப்படியே
வேலையிடத்தின் பதவிக்குத் தக்கன
வங்கிகளில் வாயில்காப்போனிடம்
வாசல் கதவுக்கென்றால்
மேலதிகாரிக்கு அலுவலக மேசை மற்றும்
பெட்டக அறைத் திறப்பான்...

எல்லா சாவிகளுக்கும் போலிகள் உண்டு
உரிமையாளரிடம் மட்டுமல்ல
கண்ணி வைத்து திருடும் கயவர்களிடமும்.
கணினியுகத்தில் பாஸ்வேர்டுகளும்
அதையுடைக்கும் எத்தர்களும் ...

அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படாதவராக
அனைவருமிருந்தால் பூட்டுதானெதற்கு?
சாவியுமெதற்கு??

பிரபஞ்சத்தின் ஐந்தறிவு வரை ஜீவராசிகளுக்கு
பூட்டுமில்லை; சாவியுமில்லை; சாவிக்கொத்துகளுமில்லை!
Share on:
நன்றி: http://venkatnagaraj.blogspot.com/2017/02/blog-post.html


தட்டுசுற்றா உடுத்தியிருக்கும்  செல்லம்மா-உன்
தலைச்சுமையா இருப்பதுவும் என்னம்மா
கோணக் கொண்டைக்காரி
கொள்ளைச் சிரிப்புக்காரி
கைவளை கலகலக்க
கட்டுடல் பளபளக்க
என் கண்ணைப் பறிக்குறடி கண்ணம்மா
உன் காலுக்கு செருப்பா நான் வரட்டுமா?

முதல் குண்டு கூழ்ப்பானை
அதுக்கு மேல மோர்ப்பானை
மூணாவதா நெல்லுச்சோறு
நெத்திலிக் குழம்பு அடுத்ததில
மிச்சத்துல வகையான வெஞ்சனம்
தலைக்கு மேல சுமக்கறது சொல்லிட்டேன்
மனசுக்குள்ள இருக்குறத சொல்லட்டா?

உச்சியில ஏறி உள்ளங்காலைக் கொதிப்பேத்தும்
ஒத்தைக் கண்ணன் சாயட்டும் மேற்கே
உழவும் பறம்படியும் முடிஞ்சிடும் அங்கே
பொழுதடங்க வந்துடுவோம் நாங்க
புடிச்சிருந்தா பொண்ணு கேட்டு
வீடுதேடி வாங்க
இப்ப வழிய விட்டு ஓரமாப் போங்க.
Share on:


விரிந்த தன் இலைகளில் பச்சையம் வற்றி
செம்மைதூக்கலான
மஞ்சள் நிறமடர்ந்த
வாதாம் மரத்தின் திலக வடிவ இலைகள்
தடக் தடக் என
இரவும் பகலும் உதிர்ந்தபடி இருக்க
மரத்தடியில்
கிளைபடர்ந்த தூரம் வரை
மண்மூடிக் கிடக்கும் இலைமெத்தையில்
ஒய்யாரமாய் அமர்ந்து
விருந்தாகிறாய்
என் புகைப்படக் கருவிக்கு.
வெற்றுக் கிளைகளின் இடைவெளியில்
எட்டிப்பார்க்கும் கதிரவனால்
ஒளி பிரகாசிக்கும் உன் வதனம்
இனி துளிர்த்துப் பூத்துக் காய்த்துக் கனியாகும்
வாதாம் பழ நிறத்தை நினைவூட்டி
வனப்புடையதாக்கியது புகைப்படத்தை.




Share on:
பட உதவி: http://venkatnagaraj.blogspot.com/
நூறுநாள் வேலையில் தூர்வாரிய ஏரி இது
கிடக்கும் சொற்ப நீரை
இயந்திரம் கொண்டு உறிஞ்சியே
கருகும் பயிரைக் காப்பாற்றப் பார்க்கிறோம்

அப்பன் பாட்டன் காலத்தில்
முப்போக வெள்ளாமை.
வண்டிமாடுகள் ஓய்ச்சலின்றி
வீட்டுக்கும் வயலுக்குமாக
நடைபோட்டபடி இருந்தன

வாய்க்கால் பாசனமற்று வானமும் கருமியானதில்
பஞ்சம் தலைமீற ஏர்மாடுகள் விற்று உயிர்வாழ்ந்தோம்
அப்புறம் வண்டியிழுக்கும் காளைகளும்விலைபோயின

எஞ்சிய வண்டியிது
தம் பயண அனுபவங்களை
சக்கரங்கள் கடையாணிகளுடன் கதைத்துப் பொழுதோட்டும்.
உளுத்துப் போகும்முன் அடுப்புக்கு விறகாகும்.

கஞ்சிக்கு வழியற்றும்
கெளரவம் பார்த்து
ஏதோவொரு விதையை பூமியில் விசிறிவிட்டு
சாவு வரும் பாதை தேடி
தவிக்கும் உழவன் வாழ்வை
பாழும் தெய்வமும் பார்த்து இரங்கவில்லை
ஆளும் அரசுக்கும் ஆயிரம் சொந்தவேலை. 
Share on:
பட உதவி: வெங்கட் நாகராஜ் 
உடைக்குப் பொருத்தமாய்
வளையல், நகப்பூச்சு, கொண்டையூசி
எல்லாம் அழகுதான்.
உன் வெள்ளைப் பல்லிலும்
பஞ்சு முட்டாய் தின்று படிந்த
பக்கி ரோஸ் கலர் பிரமாதமென்றேன்
நாணிக் கவிழ்கிறாய் தோழியின் தோளில்.  


Share on:

தாம் உதிர்த்த மலர்கள் சூழ
நிற்கும் மரம்போல
என் ஞாபகப் பரப்பெங்கும்
உனது வாசனையே

கூழாங்கல்லின் மழமழப்பும்
பூவிதழின் மெதுமெதுப்புமாக
சிலிர்க்கச் செய்கிறதென்னை
உன்
கைவிரல் நுனி தொடல்.

தன்னை அறியப் பிரயத்தனப்படும்
ஒவ்வொருவருக்கும்
தனித்தனி தெளிவு தரும்
ஜென் கவிதை நீயென்பேன்...

எளிதாய் யாரும் படித்திட உதவும்
கோனார் தமிழுரை நானென்கிறாய்!


Share on:


இருக்கையில் அமர்ந்திருந்த கொசு
திடுமென்ற மின்விசிறி சுழற்சியால்
எழுந்து படபடத்து சுழல்கிறது

மறுபடி நினைவூட்டப்பட்ட
மறந்துபோனதொரு
வலிமிகு பொழுதைப் போல

ரீங்காரமிட்டபடி
ரத்தம் முழுக்க
உறிஞ்சியெடுக்கும்
தீராக்குரோதமுடன்
சுழலும் இக்கொசுவுக்கு
சற்றும் சளைத்ததில்லை
அந்நினைவுகளின் கொக்கரிப்பு

நசுக்கியெறி உன் வலிக்கொசுவை.
மகிழ்ச்சி!
Share on:
"மரம் மாதிரி நிக்கிறியே
மடப்பயலே..."

கோபம் வந்தால் அப்பாவின் வாயிலிருந்து
கட்டாயம் புறப்படும் வசை இது.

பல்லைக் கடித்து கண்களை உருட்டி
தலையில் தலையில் அடித்துக் கொள்வார்.

காலம் போன காலத்தில்
நோய் தின்றது அப்பாவின் வலதுகாலை...

முதலில் சுண்டுவிரல்
தொடர்ந்து
அடியடியாய் அடியடியாய்
அறுத்துதெறிந்து
முடிவில் முழுக்காலும் ஆனது
ஒரு கட்டைக் காலாக.

சிலகாலம் சென்று
உயிர் கழிந்த உடம்பும் கட்டையாக.

எரியூட்டித் திரும்பிய முன்னிரவில்
விளக்கு மாட ஒளியில்
துக்கம் தூண்டியது அனைவருக்கும் ...
அவரது எரியூட்டப்படாத கட்டைக் கால்.

கரும காரியம் முடிந்தவுடன்
கட்டைக் காலில் மண் நிரப்பி
ஒரு பூச்செடி நட்டான்  மடப்பயல்
உயிர்த்துச் சிரித்தார் அப்பா.
Share on:


சூரியப் பேரொளியில்
வானத்து நிறத்தையுடுத்தி
தகதகக்கிறது
அணைக்கட்டில் சுழித்தோடும் நதிநீர்.

பாதையில் முந்தைய நாள்
அடித்துப் பெய்த மழைச்சுவடு
சற்றுமற்று உருகிய தார்
செருப்பு தாண்டிச்  சூடேற்ற

நீர்த்தேக்க மதகுகளின் நிழல்விழும் பகுதியில்
நிற்குமென் பார்வையில்
மேம்பால ஏற்றத்தில்
மெதுமெதுவாய் ஊர்ந்திடுமோர்
ஊர்தியின் தூரக்காட்சி.

சுதந்திரதினக் கொண்டாட்டத்தில்
குழந்தைகள் குழாம் சேர்ந்தும் பிரிந்தும்
பல்லுருக் காட்டுதல் போல்
தொடுவானின் வெண்மேகங்கள்
கற்பனை கூட்ட

மதகுநிழலருகின் ஆழம்காணா நீரோட்டம்
மேற்பரப்பில் அலையடிக்கிறது சிலுசிலுப்பாய்
காற்றின் துணைகொண்டு...
சில பாய்மரப் படகுகளும் காற்றோட்டத்தில்
அசைந்தாடிச் செல்ல

எதிலிருக்கிறாய் நீ?
ஊர்தியின் எரிபொருளாகவா...
பாய்மரத் துடுப்பாகவா...
பஞ்சபூதங்களிலுமா?
தேடுமென்னுள்ளேயா..!





Share on:


சதுரங்களால் சூழப்பட்ட
நம் கிராமத்து இருப்பிடங்களில்
ஏதேனுமோர்
அல்லது எல்லா மூலைகளிலும்
எப்போதேனும் வேண்டியிருக்கும்
நமதுடைமைகள் நிரம்பிக் கிடக்க...

அவற்றை இடறாதபடி
எஞ்சிய இடத்தில்
நடமாடப் பழகின
நம் சிறுபிராயக் கால்கள்...

இரண்டு அறை, மூன்று அறை கொண்ட நம்
நகரத்து வசிப்பிடங்களில்
அறைதோறும் தலைக்குமேல்
சிமெண்ட் பரண்களில்
ஏறிக்கொண்டன
என்றேனும் உதவுமென ஏறக்கட்டியவை...

பேருந்து நிலையங்கள்
திரைப்பட அரங்குகள்
வழிபாட்டுத் தலங்கள்
இன்னபிற பொதுஇடங்களிலும்
எங்கேனுமோர்
நடமாட்டமற்ற மூலைகளில்
வீடற்ற வாழ்வுற்றோரின்
உடமைகள் இடம் பிடிக்க...

நம்
மனசின் ஒரு மூலையிலோ
வீட்டின் ஒரு முடுக்கிலோ
ஒடுங்க இடமற்ற
வயசாளிகள் புகல்வதால் பெருகும்
முதியோர் இல்லங்களின்
மூலைமுடுக்கெல்லாம்
வெறிச்சிட்டுக் கிடக்கின்றன
அவர்களின்
மனத்துயரைப் பறையறிவித்து.

Share on:





என் சுவாசக் காற்றிலும்

நான் பருகும் நீரிலும்

உலகை தினந்தினம்
ஒளியூட்டும் பகலவனிலும்

கண்ணுக்கெட்டா தொலைவிலிருந்தும்
காதுக்கெட்டும் கோயில் மணியின்
ஓம்கார ஒலியிலும்

பாதையெங்கும்
மிதிபடும் மண்ணிலும்

அணுத்தொகுப்பாய்

அடிமனசில் அருவுருவாய்

உயிர்த்திருக்கிறாய் அம்மா...

என்னுயிர் உள்ள மட்டும்
உயிர்த்திருப்பாய்!

பிறகும் என் வாரிசுகளுள்!!
***************************

படக் கலவைக்கு நன்றி:    S .சிபிக்குமார்


சிபியிடமிருந்து எனக்கு வந்த வாழ்த்துச் செய்தி இது!
மின்னஞ்சல் வாழ்த்துக்கு நன்றி மகனே...
 
Share on:
தோலுரித்துத் தொங்கும்
ஆடுகளை கோழிகளை
கண்ணெடுத்துப் பார்க்க அஞ்சி
அந்தக் கடைகளின்
தெருவையே தவிர்த்துச் செல்லும்
கால்களும்

கடிக்காத எறும்பை
நசுக்க விரும்பாத
கருணையும் இருந்துமென்ன...

திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கெனக் கடித்து-தன்
விடமேற்றிய சிறுகுளவி
பிடிபடாமல் பறந்தது
கடுகடுப்பே மனசிலும்...

வலி மரக்க பற்பசைதடவி
மனம் மறக்க வலை மேய்ந்தேன்
கணினியில்...

சிற்றசைவில் கண் திரும்ப
சுவர்ப்பல்லி வாயில் சிறுகுளவி
அதக்கி அதக்கி
விழுங்கி
சப்பு கொட்டி நாசுழற்றி
திருப்தியான பல்லியை

குரூரக் குதூகலிப்பு எழ
பார்க்கும் என்னுள்
மெல்ல மெல்ல
வளர்ந்தது பல்லியின் வால்.

Share on:

உயிர்ச் சிறைக் கூடமாய்
மனித உடம்பிருக்க
கருவறை வெளிபோந்தும்
மற்றுமொரு சிறைவாசம்
சந்தர்ப்ப சூழலால்...

வெகு தாமதமாகவேனும்
கட்டறுத்தது காலக் கத்திரி
வயிறு குளிர மனம் நெகிழ
மறுபிரசவித்தாய் உன் மகனை.

வாழிய!




Share on:

இணையுடனான
காதல் கனிமொழியா?

துணையற்ற முதுமையின்
ஏக்கப் புலம்பலா?

பகிர்ந்து மாளாத
நட்பின் குதூகலமா?

பேசி முடியாத
பங்காளிச் சண்டையா?
Share on:
மனிதக் குரல்களால்
சலிப்புறும்போது
ஏதேனுமோர்
பறவையின் மொழிதேடி
உடல்தாண்டி நீளும் செவி
தோட்டம் முழுக்க அலைகிறது

கூர்மையேறிய
அதன் புலனுணர்வில்
கிறீச்சிடும் ஒலி கொண்டே
பறவையை அனுமானிக்கும் நுட்பம்
கைவரப்பெற்ற கர்வத்தை
பங்கம் கொள்ள வைக்கிறது
இதுவரை கேட்டறியாதொரு
புதுப் புள்ளொலியின் குழைவு.

செவி தொடர்ந்து வெளியேறிய
உடம்பும் மனசும்
தோட்டத்து மரக்கிளைகளை-
செறிந்திருக்கும் இலைகளை-
துழாவத் தொடங்கியது துள்ளலோடு.

பரவசம்; பரமானந்தம்;
பலநாள் புத்துணர்வூட்டுமாம்
பரம்பொருளறிதல்!

தான் கண்ட
விரல் அகல
முழம் நீள வெள்ளை வால்
கருந்தலைக் குருவி
எங்கிருந்து எங்கு போகிறதென
இணையம் வழித் தேடித் தெளிந்த
என் குதூகலமோ
கடவுளைக் கண்டதைப் போல்.

இன்னும் இன்னும்
எத்தனை பிரத்யட்சம்
இருக்கிறதோ இறை வசம்!!


நன்றி: ஜூலை,13  'சங்கு' வளவ.துரையன் 
Share on:


பசித்தவன் உணவையும்
படிப்பவன் அறிவையும்
விதைத்தவன் இலாபத்தையும்
வலுத்தவன் பயத்தையும்
கொடுப்பவன் புண்ணியத்தையும்
கொல்பவன் பாவத்தையும்
படைத்தவன் புகழையும்
தடுப்பவன் கீழ்ப்படிதலையும்
சிந்திப்பவன் தெளிவையும்
சிரிப்பவன் மகிழ்வையும்
குடிப்பவன் வியாதியையும்
பகைப்பவன் வெறுப்பையும்
பொறுப்பவன் நன்மையையும்
துறப்பவன் நிம்மதியையும்
யாசித்துப் பெற
உன்
நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை ஆயுதமாக்கும்
நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!

நன்றி: தமிழ்த் தாராமதி ,மார்ச்-2013
Share on:
  • ← Previous post

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • “மின்மினிகளால் ஒரு கடிதம்”- அப்துல் ரஹ்மான்
    *விளக்காக எரித்தல் விட்டிலாக எரிதல் வேறென்ன இருக்கிறது காதலில்? ^^^^^^^^^^^^^^^ *நான் தவளை என் கிணறு நீ இது என் பெருமை. ^^^^^^^^^^^^...

Blog Archive

  • ▼  2020 (1)
    • ▼  March (1)
      • வானில் சில தாமரைகள்
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ►  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ►  June (2)
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • அக்ஷ்ய பாத்ரம்
    புதிய தாலாட்டு
    1 week ago
  • கீதமஞ்சரி
    மலைகளுக்கு நடுவில் மனம் மயக்கும் சோலை
    3 months ago
  • CrUcifiXioN
    Vintage collections
    4 months ago
  • முத்துச்சிதறல்
    துபாயில் ஏவுகணைகள்!!
    7 months ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    Hello world!
    8 months ago
  • சிவகுமாரன் கவிதைகள்
    சீட்டுக்கவி
    1 year ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    1 year ago
  • ஹரணி பக்கங்கள்.......
    2 years ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    6 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    6 years ago
  • Thanjai Kavithai
    8 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    8 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    9 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    9 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    9 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    9 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    10 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    10 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    10 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    11 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    12 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    13 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    14 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    15 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates