ஒரு துணிக்கடை. பண்டிகைக்கு இன்னும் ஒருமாதம் இருக்கும் நேரம். இலேசான கூட்டம் கடையில். வெள்ளை கோட் தேடி வந்த மூவர், கடை சிப்பந்தி காண்பித்தவை திருப்தி படாததால் வெளியேறுகின்றனர். வழிமறித்த கடை முதலாளி என்ன தேடி வந்தீங்க? ஏன் எதுவும் வாங்காமல் போறீங்க? என்றார்.
“வெள்ளை கோட்...”
“இருக்கே... ஏ... சரவணா... காட்டுப்பா இவங்களுக்கு...”
“பார்த்தோம்...”
“அப்புறம்?”
“சைஸ் சரியில்லை. அதான்...”
“எல்லா சைசிலும் நம்ம கிட்ட இருக்கே. சொல்லப்போனா இந்த ஊரிலேயே நம்ம கடையில் மட்டும் தான் இதெல்லாம் கிடைக்கும். நீங்க என்னடான்னா... விளம்பரத்துக்கு மயங்கி எங்கியோ போய் காசை கொட்டிட்டு வர்றீங்க”
அவர்கள் கையிலிருந்த பைகளை பார்த்து அவரே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் போல.
“ஐயோ.. இதுல துணியில்லைங்க. வீட்டிலிருந்து எடுத்து வந்தது. மற்ற பொருட்கள் வாங்கி எடுத்துப் போக.”
“அதெல்லாம் கிடையாது. அங்கே போயிருக்கீங்க, இங்கே போயிருக்கீங்க, எங்க கடையில் வாங்க மட்டும் யோசிக்கிறீங்க. நீங்க எங்க வேணுமானாலும் போய் கேட்டுப் பாருங்க. இருக்காது. கோட்டுக்கு நம்ம கடைக்கு தான் வந்தாகணும்.”
“இரண்டு பைகளிலும் வேறு பொருட்கள் தான் இருக்கு. நாங்களே முதல் வருடம் உங்க கடையில் தான் கோட் வாங்கினோம். எப்பவும் உங்க கடையில் எடுக்கறவங்க தான். இப்ப இருக்கறது அளவு சரியில்லை அதான் போறோம்.”
அருகில் வந்த கடை சிப்பந்தியும் இருந்தவை எல்லாம் காட்டியாயிற்று என்று சொல்ல, சமாளித்துக் கொண்ட முதலாளி, “உங்க சைஸ் என்ன சொல்லுங்க, அடுத்த வாரம் வந்தா ரெடி பண்ணி வைக்கிறோம்.” முட்டுச் சந்தில் முட்டி நின்றது அவரது கோபம்.
அவரின் ஆவேசம் தன் வியாபாரத்தை அதிகரிக்கவா? தன்னிலும் வெற்றியடைந்த பிற வியாபாரி மேல் பொறாமை போர்த்திய ஆணவமா?
வேறு கடையின் பெயர் தாங்கிய பையை தன் கடையினுள் பார்க்கவும் சகிக்காத அவரின் மனப்பாங்கை என்ன சொல்லலாம்? நிமிண்டிக் கொண்டேயிருந்த மனசை சுமந்தலைந்தேன்.
பிறகு, ஜெயமோகனின் ‘விதி சமைப்பவர்கள்' நூலை வாசித்த போது, ஐந்தாவது அத்தியாயம் ‘ஒரு மரம் மூன்று உயிர்கள்'. அதில் சில வரிகள் துணிக்கடைக்காரரை அடையாளம் காட்டியது.
“அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள் தான் பலர். அதில் வெற்றி கொள்ளும் போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததும் அந்த எக்களிப்பு வந்து விடுகிறது. நான் இதில் இரு வகையினரைக் காண்கிறேன்...
ரயில்களில் முதல் வகுப்பில் வரும் புதுப் பணக்காரர்கள் ஒருவகை. இவர்கள் ரயில்களில் பிறரைச் சந்தித்ததுமே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை விசாரித்துவிட்டு, தன் பணம், சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்லும் சுயததும்பல்களோடு இருப்பார்கள்.
நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனையில் மிதப்பாக இருப்பார்கள்.
இந்த இருசாரர்களுக்கும் நரகம் என்ற ஒன்று அவர்களின் அருகேயே உள்ளது. அது, அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம் தான். அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்க முடியாது. இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அவர்களின் அகங்காரம் அடிபட்டுக் கொண்டுமிருக்கும். அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும் போதாது அவனுக்கு. அது பிறர் எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்க வேண்டும்.
தன்னைச் சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சிலதருணங்களே முழுமையான இன்பம் தரவல்லது. அந்தத் தருணங்களை அடைய இந்த மனிதர்களுக்கு அவர்களின் கையில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.”
மன உளைச்சல் தீர்ந்தது ஜெயமோகனை வாசித்ததில்.