அம்பையின் ‘சிறகுகள்
முறியும்’ மற்றும் ‘வெளிப்பாடு’ பற்றிய வாசிப்பனுபவம்...
கதைகளோ காவியமோ புனைவு எனும் வகைப்பாட்டில்
கொண்டாலும் படைத்தவருக்கும் படிப்பவருக்கும் இடைப்பட்ட ஒரு நட்பை, ஒரு உறவை
ஏற்படுத்தும் வண்ணம் அமைகிறது. வாழ்வியலின் பாதையெங்கும் அறத்தின் சாரம்
நிறைந்துள்ளதால் எந்தவொரு கதைசொல்லியும்
தன் கதைமாந்தர்களின் பேச்சாலும் செயலாலும் ஏதோவோர் அறத்தை நிறுவவே
தலைப்படுகிறார். கண்டுகொள்ளாமல் விடப்பட்ட, கண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கும்
பலதரப்பட்ட சமூகச் சீர்கேடுகளின் ஆரம்பப் புள்ளி தேடிப் பயணித்தால், அங்கு ஒரு
தனிமனிதனின் அலட்சியமும் அத்துமீறலும் காணக் கிடைக்கிறது.
தான் சார்ந்த சமூகத்தை மேம்படுத்தவும் தன்
படைப்பை வாசிப்பவர் மனதைப் பண்படுத்தவும் விழையும் நோக்கும், மாற்றங்களை,
மறுமலர்ச்சிகளை, தெளிவுகளையும் புரிதல்களையும் கொண்டிருக்கும் எழுத்தின் வீச்சும்
கொண்டிருப்பதே படைப்பாளியின் ஆகச் சிறந்த பேராற்றல்.