நேத்து கனவில் அப்பா வந்தாருங்க... என்றேன் இவரிடம். இவருக்கு அப்பா. எனக்கும் அப்பாவாக இருந்தவர் தானே...
உடலற்றுப் போன அவரை, கனவில் உடம்பும் உசிருமான இருப்பில் பார்த்த நெகிழ்வில் மனசெங்கும் ஒரு பரவசம். காலைமுதலே அவரைப் பற்றிய நினைவலைகள். காதில் சங்கை வைத்து அதில் கடலோசையை கேட்டு சிலிர்த்து, பக்கத்திலிருப்பவர் காதிலும் வைத்து கேட்கத் தூண்டுவது போல இவரிடம் பகிர, அப்படியா... எனக்கு அடிக்கடி வருவார் என்றார்.
சமையல் சாப்பாடெல்லாம் முடிந்து, இவர் மதியப் பணிக்கு சென்றபின், வண்ணதாசனின் ‘அகம்புறம்' எடுத்தமர்ந்தேன். யார்கிட்டேயாவது பேசணும் போலவோ, எதையேனும் கேட்கணும் போலவோ இருக்கும் போதெல்லாம் புத்தகமே உற்றதுணை. அதிலும் மனதோடு பேச வண்ணதாசன் எழுத்துக்கள் வெகு இதம் அல்லவா...!
இப்போதுதான் புதிதாகப் படிக்கத் துவங்குவது போல் தலைப்பிலிருந்து துவங்கினேன்.
முதல் பக்கத்தில் “ஈடு இணையற்ற அன்பிற்கு...” என்றெழுதி அன்பளித்திருந்த உஷாவின் கையொப்பம், தேதியோடு. தற்போது தொடர்பு எல்லைக்கு வெகு அப்பாலிருக்கும் அந்த நேசத்தின் சீமாட்டியை சுற்றிடத் தொடங்கியது தடம் மாறிய என் நினைவலைகள். அவரையே நேரில் பார்ப்பது போலும் பலவற்றையும் பேச்சிலும் எழுத்திலும் பகிர்வது போலவுமான நிறைவைத் தரும் வல்லமை பெற்றிருந்தது அவ்விரு வரிகள்.
பக்கத்தின் எஞ்சிய வெற்றிடத்தில்