நேத்து கனவில் அப்பா வந்தாருங்க... என்றேன் இவரிடம். இவருக்கு அப்பா. எனக்கும் அப்பாவாக இருந்தவர் தானே...
உடலற்றுப் போன அவரை, கனவில் உடம்பும் உசிருமான இருப்பில் பார்த்த நெகிழ்வில் மனசெங்கும் ஒரு பரவசம். காலைமுதலே அவரைப் பற்றிய நினைவலைகள். காதில் சங்கை வைத்து அதில் கடலோசையை கேட்டு சிலிர்த்து, பக்கத்திலிருப்பவர் காதிலும் வைத்து கேட்கத் தூண்டுவது போல இவரிடம் பகிர, அப்படியா... எனக்கு அடிக்கடி வருவார் என்றார்.
சமையல் சாப்பாடெல்லாம் முடிந்து, இவர் மதியப் பணிக்கு சென்றபின், வண்ணதாசனின் ‘அகம்புறம்' எடுத்தமர்ந்தேன். யார்கிட்டேயாவது பேசணும் போலவோ, எதையேனும் கேட்கணும் போலவோ இருக்கும் போதெல்லாம் புத்தகமே உற்றதுணை. அதிலும் மனதோடு பேச வண்ணதாசன் எழுத்துக்கள் வெகு இதம் அல்லவா...!
இப்போதுதான் புதிதாகப் படிக்கத் துவங்குவது போல் தலைப்பிலிருந்து துவங்கினேன்.
முதல் பக்கத்தில் “ஈடு இணையற்ற அன்பிற்கு...” என்றெழுதி அன்பளித்திருந்த உஷாவின் கையொப்பம், தேதியோடு. தற்போது தொடர்பு எல்லைக்கு வெகு அப்பாலிருக்கும் அந்த நேசத்தின் சீமாட்டியை சுற்றிடத் தொடங்கியது தடம் மாறிய என் நினைவலைகள். அவரையே நேரில் பார்ப்பது போலும் பலவற்றையும் பேச்சிலும் எழுத்திலும் பகிர்வது போலவுமான நிறைவைத் தரும் வல்லமை பெற்றிருந்தது அவ்விரு வரிகள்.
பக்கத்தின் எஞ்சிய வெற்றிடத்தில்
சில கூட்டல் கழித்தல்கள். கிடைக்கும் வெள்ளையிடத்தில் மனதின் கணக்கை எழுதிப்பார்க்கும் பழக்கம் என் மாமனாருக்கு உண்டு. வருமானத்துக்குள் செலவும் சேமிப்பும் அடக்கும் சாமர்த்தியம் பழகியவர் அவர். செய்தித் தாளின் ஓரங்கள்,வார இதழ்களின் விளம்பரப் பக்கங்களின் வெற்றிடங்கள், திருமண அழைப்பிதழ் உறை என கையில் கிடைப்பதிலெல்லாம் மனக்கணக்கை எழுதிப் பார்ப்பார். குறிப்புகளாக இருக்கும் அதைப் பார்க்கும் பிறருக்கு தலையும் புரியாது காலும் புரியாது. வெறும் எண்கள் எதைச் சொல்லும்? எந்நேரமும் ஏதேனுமொரு பாட்டு மனசில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் அவருக்கு வரவு செலவு கணக்கு.
அதிலிருந்து மீண்டு ஆசிரியர் உரைக்கு தாவினேன். “நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் நம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது” என்ற பதிப்பாசிரியர் கருத்தை ஆமோதித்து பக்கம் புரட்டினேன். அதில் ‘என்னுரை'யாக வண்ணதாசன் சொல்கிறார், “... வாழ்க்கை நம்மை குறிப்பிட்ட சில மனிதர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது போல் எழுத்தும் சில குறிப்பிட்ட வாசகர்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறது. இதுவரை சேர்த்ததை விடவும் பலரை இந்தத் தொடர் மூலம் அடைந்திருக்கிறேன். அடைதல் என்பது இன்னொரு வகையில் தொடுதல் எனக்கு. நான் சிலரையும் என்னைச் சிலரும் தொட்ட கணங்கள் இதனிடையே உண்டு.”
முதல் அத்தியாயத்துக்குப் போவோம்.
முதன்முதல் வீட்டுக்கு வந்த பிரம்ம நாயகம், வடக்கு வளவுத் தாத்தாவை ஞாபகப்படுத்தும்படி இருக்கிறார் வண்ணதாசனுக்கு. ஒவ்வொருத்தரும் வேறு யாரையோ நினைவுபடுத்திக் கொண்டு தானே இருக்கிறார்கள்...
பிரம்மநாயகம் கேட்கிறார் வண்ணதாசனிடம்.. “உங்க வீட்டில் ஊஞ்சல் இருக்கா?” செருப்பைக் கழற்றும் போது சுவற்றில் கை ஊன்றியவருக்கு சுவருக்குள்ளிருந்து கிர் கிர் என்று சத்தம் கேட்டதாம். அடுத்த வீட்டில், அடுத்த அறையில் தொட்டில் ஆடுகிற சத்தம், பழைய மின்விசிறி ஓடுகிற சத்தம், காலண்டருக்கு ஆணி அடிக்கிற சத்தமெல்லாம் கையால் கேட்கப் படுவதுதானே!
உள்ளங்கையைப் பார்க்கும் வண்ணதாசனுக்கு கைரேகை ஓடையாகவும், அது நதியாக மாறுவதும் தெரிகிறது. ஒருநாள் சிவனும் அவரும் ஆற்றங்கரையில் அமர்ந்திருக்க, தன் அப்பா அம்மா இறப்புக்குப் பின் அப்பா எப்போதும் அமர்ந்து தேவாரம் பாடிக்கொண்டே ஆடிய ஊஞ்சலை விடிந்தும் விடியாமல் வந்து கேட்டு வாங்கிப் போன பேரனைப் பற்றிச் சொன்னதும் நினைக்கிறார்.
பிரமு உபசரிப்புக்குத் தந்த பிஸ்கெட்டை சாப்பிடாமல் அதன் ஓரங்களைத் தடவியபடி முன்னொரு நாள் தான் ஒரு நண்பரின் பார்வையற்ற சிறுபெண்ணைப் பார்க்கப் போனபோது வாங்கிச் சென்ற பிஸ்கெட் பாக்கெட்டை பிரிக்காமல் அப்பெண் தடவிக் கொண்டிருந்ததை நினைவுபடுத்திக் கூறுகிறார்.
வண்ணதாசனுக்கு ஒரு ரயில்வேஸ்டேஷனை ஒட்டிய தெருவும் அந்தப் பெண்ணின் வீட்டு வாதாமரமும் ஊஞ்சலில் ஆடிய பெண்ணும், மடிநிறைய கனகாம்பரப் பூக்களைப் பறித்துக் கட்டிக் கொண்டிருக்கும் மற்றொரு பெண்ணும் பிரிக்கப்படாத பிஸ்கெட் பாக்கெட்டும் கற்பனையில் வருகின்றன. எழுதுகிறார்...
“ஒரு சொல் அல்லது சின்ன இடைவெளி மூலமாக எங்கெங்கோ நகர்ந்து போய்விட முடிகிற மாதிரிதானே இந்த மனம் இருக்கிறது!”
பிரமு சொல்கிறார், “உங்களைப் பார்க்கிறதுக்கு பஸ்ஸில் வந்துகிட்டிருந்தப்ப ஒரு ஆலமர விழுதை முடிச்சுப் போட்டு உட்கார்ந்து ஏழெட்டு வயசுப் புள்ள ஒண்ணு ஊஞ்சல் ஆடுது. அப்பன்காரன் ஆட்டுதான்...”
அதைச் சொல்லும் போது அந்தப் பிள்ளையாகவோ அந்த அப்பனாகவோ அந்த விழுது ஊஞ்சலாகவோ மாறிவிட்டிருக்கிறார் பிரமு.
வண்ணதாசனுக்கு தானொரு மின்சாரமற்ற இரவில் வீடு திரும்புகையில் வழியிலிருக்கும் மாநகராட்சிப் பூங்காவில் நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு ஆணும் பெண்ணும் எதிரெதிராக இரு ஊஞ்சல்களில் ஆடிக்கொண்டிருந்ததைப் பார்த்த நினைவு வருகிறது.
“வீட்டில் இல்லாவிட்டால் என்ன, மனதில் இருக்கிறது! மனதில் என்ன மனதில்?
மனம் தான் அந்த ஊஞ்சலே!” என்று “ஊஞ்சல் மனசு”அத்தியாயத்தை முடித்திருப்பார் வண்ணதாசன்.
ஊஞ்சல் ஆடுவது மன அழுத்தத்துக்கு ஒரு மாமருந்து என்று என்றோ படித்ததும் இப்போது எனக்கு நினைவுக்கு வந்தது.
மாமனாரின் இருந்த கால நினைவுகள், ஊஞ்சலின் பின்னோட்டம் போன்றதான வீச்சில் என் மனமெல்லாம் ஆக்கிரமித்திருக்க, ஒரு புத்தக வாசிப்பு ஒரே வீச்சில் முன்னோக்கி செலுத்தியது.
ஊஞ்சல் ஆட்டம் போன்றே இலகுவாகவும் ரம்யமாகவும் அமைந்துவிடுகிறது சில நேரங்கள். குறிப்பாக வாசிக்கும் நேரங்கள்.....!
வாசிப்பின் வரம் கிடைத்த மனித மனம் தம் தெளிதல்களை, புரிதல்களை சக மனிதர்களின் பொக்கிஷமாய் புத்தகமாய் வடித்தெடுப்பதால் மேன்மையுறுகிறது.
#உலகப் புத்தக தின நல்வாழ்த்துக்கள்!
நல்ல பகிர்தல்.
ReplyDeleteஉலகப் புத்தக தின நல்வாழ்த்துக்கள்.
ஆஹா! என்ன அழகாய் சொல்லி விட்டீர்கள் நிலா?
ReplyDeleteஒரு ஊஞ்சல் ஆடிய அனுபவம் உங்கள் எழுத்தில் எனக்கு வாய்த்தது. அழகான கோர்வை. அழகான முடிப்பு. நல்லதொரு முத்தாய்ப்பு.
well come back....
@கோமதி அரசு
ReplyDeleteமகிழ்வும் நன்றியும் தோழி!
@மணிமேகலா
ReplyDelete“நம்மைப் பற்றிய புரிதல்கள் கொண்டவர்களிடம் நம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் போது மகிழ்ச்சியும் மன நிறைவும் ஏற்படுகிறது”
இது வலையுலகில் எனக்கு மிகுதியும் வாய்த்திருக்கிறது. அதனால் தான் தங்களைப் போன்ற சிநேகிதங்கள் என்வசமானது... மகிழ்வும் நன்றியும் தோழி!
அப்பாவாய் தன்னை பாவிக்கும் மருமகளை எந்த மாமனார் ஆன்மாவும் ஆசீர்வதித்தபடிதான் இருக்கும். மனசைப் பற்றி சொல்ல வண்ண தாசனையெல்லாம் கூட்டி வருவானேன்?! நீங்களே பவழமல்லி உதிர்த்தாற்போல மனசை கொட்டிதானே பதிவை ஆரம்பித்திருக்கிறீர்கள்?
ReplyDelete@மோகன்ஜி
ReplyDeleteதன்யளானேன்!
அற்புதம் நிலாமகள்... வண்ணதாசனின் பார்வையில் வாழ்வை ரசிப்பது ஒரு அற்புதமான சுகானுபவம்.. அந்த அனுபவத்தோடு உங்களனுபவமும் மனம் நிறைக்கும் இதம்..
ReplyDelete@கீத மஞ்சரி
ReplyDeleteமகிழ்வும் நன்றியும் தோழி. எப்போதேனும் தங்களைப் போன்றோருடன் தொடர்பில் இருக்க இந்த எளிய ஆத்மார்த்தமான பதிவுகள் உதவுகின்றன எனக்கு. உங்களைப் போல் வாழ்விடத்தின் சிறப்புகளை கோர்வையாக செம்மையாக எழுத்தில் தரவியலா எளியவள் ஆகிய நான், உங்க கட்டுரைகளின் ரசிகை.
ஊஞ்சல் மனசு. இந்த இரண்டுசொற்களே ஆயிரம் சிந்தனைகளைக் கிளப்பிவிடுகின்றன.
ReplyDelete@சிவகுமாரன்
ReplyDeleteநெடுநாள் கழித்த தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது சிவா. அயல்நாடு சென்று இருக்கிறீர்களா? பொருளாதாரத் துரத்தல்கள் நம்மை ஆட்டுவிக்கின்றன.எங்கிருந்தாலும் இறைதுணையில் நலமடைவீர்கள்.