உயிர் போகும் வரை கழுத்தில்
கயிறு இறுக்கி என்னைச் சாகடி
வலுக்கட்டாயமாய் என் வாய்திறந்து
முழுக்கக் கவிழ்த்துவிடு பூச்சிமருந்தை
முழுக்குப்பி திராவகத்தை
எனை நோக்கி வீசியெறி
மண்ணெண்ணையால் என்னைக் குளிப்பாட்டி
ஒற்றைத் தீக்குச்சியால் உடல் கொளுத்து
கனரக வாகனத்தை கடும் வேகத்தோடு மோதி
என்னைச் சிதறடி
நள்ளிரவு உறக்கத்தில் தலையணையால் நாசியடைத்து
உடலைக் கட்டையாக்கு
ஆவேச உச்சத்தில் அடித்து துவம்சித்து
நார் நாராய் கிழி எனதுடலை
ஐந்தாறு மனிதக் கழுகுகளோடு
என் சதைபிய்த்து உன் பசியாற்று
நவீன கொலைக்கருவிகளால்
ஒருநொடியில் உயிர்போக்கு
நயவஞ்சக நரிமுகம் காட்டி
தினமொரு சித்திரவதை செய் என்னை
என்னைத் துண்டு துண்டாய் வெட்டி
மசாலாதடவி ருசியேற்றி
கொதிக்கும் எண்ணெய்க் கொப்பரையில்
வறுத்துத் திண் நரபோஜியே
அகழ்வாரைத் தாங்கும்
நிலமும் ஓர் நாள்
எரிமலையாக...
கொதிநீர் ஊற்றாக...
உருமாறுவது போல்
என்போன்றதொரு பெண்ணால்
உயிர்வளர்த்து உடல்வளர்த்த
உன்னையும் பெற்றாளே - அவள்
தன் கருப்பையை கழற்றியெறியட்டும்
இன்றைய கண்ணகியாக...
பொசுங்கிச் சாம்பலாகட்டும்
ஆண் எனும் ஆணவம்.