“என்னம்மா அது? பார்த்துப் பார்த்து சிரிச்சிகிட்டிருக்கே?” என்றவாறு எனது படுக்கையருகே வந்தமர்ந்தார் அம்மா.
ஆம். என் கையிலிருக்கும் இந்த புகைப்படம் கடந்த ஒருமணி நேரமாக என்னை எங்கெங்கோ கூட்டிச் செல்லும் வல்லமை பெற்றிருக்கிறது தான்.
எனது பக்கத்துப் படுக்கை, நோயாளி யாருமின்றி காலியாக உள்ளது. எனவே தான் இரண்டாம் வகை சிறப்பு அறை, முதலாம் வகை சிறப்பு அறை போன்ற ஏகாந்தத்தை தருகிறது எனக்கு.
எனது தந்தையின் மத்திய அரசுப் பணிக்கான சிறப்புச் சலுகை என் குடும்பத்தினருக்கான இந்த மருத்துவமனையின் சேவை. பணித் தகுதிக்கேற்ப இட வசதி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே உள்நோயாளிகள் பிரிவு உண்டு. தலா இருபது படுக்கைகள் கொண்ட பகுதி. அதுவன்றி மூன்றாம் வகை சிறப்பு அறைகள் நான்கு படுக்கைகள் கொண்டிருக்கும். இரண்டாம் வகையெனில் இரண்டு படுக்கைகள் கொண்ட அறைகள். முதல் வகையெனில் ஒரு நோயாளிக்கொரு படுக்கை மற்றும் உடனிருக்கும் துணையாளருக்கு ஒரு படுக்கை. இவையன்றி குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் பிரிவு என சகலருக்கும் தனித்தனிப் பிரிவுகளோடு பிரம்மாண்டமானதாய் இருக்கும் மருத்துவமனையின் வளாகம்.
இங்கு வந்து சேர்ந்த போதிருந்த எனது நிலையை இந்தப் பத்து நாட்கள் வெகுவாக சீரமைத்தே இருக்கின்றன.
பாருங்க... இந்த புகைப்படம்
எடுத்த கதையை உங்க கிட்ட சொல்லாம ஏதேதோ நட்ட நடுவுல பிடிச்சிப் பேசறேன். நீங்களும் தடுமாறி முழிக்கிறீங்க.