தவறி விழுந்து தண்ணீரில் தத்தளிப்பவனுக்கு
பிடிமானமாக துரும்பேனும் கிடைப்பது
பெருவரமன்றோ உயிர்தனைக் காக்க...
பிடிவாதம் செய்யும் சிறுபிள்ளையின்
அறியாமை போக்க தளராமல் புத்தி சொல்லும்
பெற்றோர் மனப்பாங்கில்
அறநூல்கள் நம்மை வழிநடத்தும்
தாயின் கண்டிப்பு பூனைப்பிடி போல்
அறிவை விரிவு செய்ய
குரங்குப் பிடியாய்
நூல்பல கற்க
கற்றபடி நிற்க
விழைந்திடு மனமே
உடும்புப் பிடியாய் அறத்தொடு நிற்க
உறுதிநாம் கொண்டிட
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வழக்கம் ஒழிந்திடும்
திருடனைப் பிடித்து
தண்டனை கொடுத்து
திருந்தி வாழ்ந்திட வாய்ப்பும் தந்திட
தயார் நாம்...
அவன்?
பிடிசோறும் இன்றி
பட்டினிப் பாட்டில்
திருடத் துணிந்தவன்
விலையாய் கொடுப்பது
உயிராய் இல்லாதிருக்கட்டுமே...
உலகின் அழிவு தள்ளிப் போகும்
புகைப்பிடிப்பவன்
தனக்கு மட்டுமன்றி
சுற்றியிருப்போர்க்கும்
பற்ற வைக்கிறான்
நோய் நெருப்பை
எல்லோரும் ஒருநாள்
பிடிசாம்பலாக அல்லது
மண்ணோடு மண்ணாக...
தண்ணீர் பிடித்து
தாகம் தணிப்பது மாறி
சொட்டுநீரால் உதட்டை ஈரப்படுத்தும்
நாள் நெருங்கி விட்டதோ...!
கைப்பிடி அவலில்
உயிர் தரித்திருப்பர்
கைப்பிடி விதையில்
உலகு தழைக்கும்
கைப்பிடித்தவர்
இறுதிவரை துணை
கற்றது கைப்பிடிமண் அளவு
பிறர் கைப்பிடியில்
கூடாது நம் சிண்டு
நாடி பிடித்திடும்
வைத்தியர் உணர்வர்
மேனியுறும் இன்னல்
பேச்சில் பிறர் நாடி
பிடித்திடும் சமர்த்தர்
தன்காரியப் புலியாவர்
உழுதவன் நெல்லை
சாக்கில் பிடித்து
அழிந்த விலைக்கு விற்கும்போது
ஒட்டுமொத்த உலகை
சபித்தே ஆற்றுவான்
எரியும் வயிற்றை
மாசக் கடைசியில்
கையிருப்பு தேய்ந்திட
இழுத்துப் பிடித்து
இழுத்துப் பிடித்து
தளர்ந்து சலிக்குது
இல்லற வண்டி
நம்பியவன் துரோகமிழைத்தால்
கேள்வி கேட்டு அவன் சட்டையைப் பிடி
இலட்சியப் பாதையில் தடைகள் இடர்ப்பட
விடாதே பிடி வெற்றி பெறும் வரை ஓயாதே
உறவும் நட்பும் விலகாதிருக்க
பசைபோல் அன்பை
சேர்த்துப் பிடி
ஆள்வோர் சட்டம்
கிடுக்கிப் பிடி
திணறித் தவிக்கும் சாமானியனுக்கு
வரிகள் பலவும்
இரும்புப் பிடி
எதிர்பார்ப்பது நழுவும் போதெல்லாம்
நம்பிக்கையை விடாதே பிடி!
- நன்றி: சாந்தா தத்
நிறை
இலக்கிய இதழ்