முதற்பதிப்பு: நவம்பர் 2013,
பக்கம்: 80
விலை: 65/-
கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்
கோடுகளில் உணர்ந்து
கோடுகளால் உணர்த்த முடிந்ததினால்
கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்
கோடுகளும் கலை எனப்பட்டதினால்
எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டு
கோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்
என்ற தன்னைப் பற்றிய அறிமுகப்படுத்தலோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்' நூலை சுவைபடத் துவக்குகிறார் செந்தில்பாலா.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கதை, கவிதை, ஓவியம், குறும்படம், நாடகம் எனப் பலதளங்களில் வெளிப்படத் துடிக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்' (2007) முகனூல் பக்கத்தில் தெளிவோடும் திறனோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார். https://www.facebook.com/senthilbala.bala
“ஒற்றைக் கோட்டில் உருவெடுக்கும் பாலாவின் ஓவியங்கள் அலாதியானவை; பிரமிப்பூட்டுபவை. அவற்றிற்கு இணையான பாதையில் பல்வேறு தரிசனங்களோடு இருட்டும் வெளிச்சமுமாய் பிரவகிப்பவை அவரது கவிதைகள்” -இது அவரது ஆத்ம நண்பர் நறுமுகை ஜெ.ராமகிருஷ்ணனின் அறிமுகச் சொற்கள்.