மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்






















முதற்பதிப்பு: நவம்பர் 2013,
பக்கம்: 80
விலை: 65/-

கோடுகளில் ஓடுவதில் அமைதி கிடைத்ததினால்
கோடுகள் சிலதைக் காட்டி மகிழ்வித்ததினால்
கோடுகளைக் கொண்டு அடைய முடிந்ததினால்
கோடுகளில் உணர்ந்து
கோடுகளால் உணர்த்த முடிந்ததினால்
கோடுகளால் அல்லது
கோடுகளோடு வாழவும் முடிந்ததினால்
கோடுகளும் கலை எனப்பட்டதினால்
எல்லாவற்றையும் கோடுகளில் ஓடவிட்டு
கோடுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன்

என்ற தன்னைப் பற்றிய  அறிமுகப்படுத்தலோடு தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிறவன்' நூலை சுவைபடத் துவக்குகிறார் செந்தில்பாலா.

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த நெகனூர் புதூர் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர், அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். கதை, கவிதை, ஓவியம், குறும்படம், நாடகம் எனப் பலதளங்களில் வெளிப்படத் துடிக்கும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘கதைகள் தீர்ந்த போது அம்மா சொன்ன கதைகள்' (2007)  முகனூல் பக்கத்தில் தெளிவோடும் திறனோடும் இயங்கிக் கொண்டிருக்கிறார். https://www.facebook.com/senthilbala.bala
    “ஒற்றைக் கோட்டில் உருவெடுக்கும் பாலாவின் ஓவியங்கள் அலாதியானவை; பிரமிப்பூட்டுபவை. அவற்றிற்கு இணையான பாதையில் பல்வேறு தரிசனங்களோடு இருட்டும் வெளிச்சமுமாய் பிரவகிப்பவை அவரது கவிதைகள்” -இது அவரது ஆத்ம நண்பர் நறுமுகை ஜெ.ராமகிருஷ்ணனின் அறிமுகச் சொற்கள்.




கதைகளோடு உள்நுழைந்ததும்
சுவற்றில் தொங்கிக் கொண்டிருக்கும்
கூட்டிற்குள்ளிருந்து வெளியேறுகிறது குருவி

சமையலறையிலிருந்து வெளியேறி
வாசலில் நிற்கிறது நிழல்

வந்ததும் சொல்லச் சொல்லி

கூட்டிடமும்
சுவரோடு ஒட்டிக் கிடக்கும் பூனையிடமும்
சொல்லி முடித்து
தூங்கிவிடுகிறேன்.

-இது பாலமுருகன் எனப்படும் செந்தில்பாலாவின் மனைவியும் மகளும் ஊருக்குச் சென்ற தருணத்தின் வெறுமையோடிருக்கும் வீட்டில் நுழைந்த அவரின் வாழ்விலிருந்து கசிந்த கவிதை.
          எனது கவிதைத் தொகுப்பின் (பறத்தல்- பறத்தல் நிமித்தம்) அறிமுகம் மற்றும் வெளியீட்டு விழாவை என் உடன்பிறவா சகோதரர் நறுமுகை ஜெ.ரா. செஞ்சியில் கொண்டாடிய சமயம், செந்தில்பாலாவுடன் அவர் வீட்டினுள் பிரவேசித்த எனக்கு இரு எதிர்பாரா வியப்புகள். ஒன்று ஓங்கி உயர்ந்த பனைமரத்து உச்சியில் பார்த்திருந்த தூக்கணாங்குருவிக் கூடு ஒன்று அவரது வரவேற்பறைச் சுவரில் தொங்கியது.
         தன் உயிரோடும் உணர்வோடும் கலந்திருந்த கிராமத்தை விட்டு பிழைப்பின் பொருட்டு நகரவாசியான போதும் தன் குழந்தைக்கு தான் ரசித்து ருசித்தவற்றையெல்லாம் காட்டித்தரும் அவரது அக்கறை தெரிந்தது அதில்.
          இரண்டாவது, அவர் துணைவியார் பெயர். பரவலாகக் காணமுடியாத என் பெயரை ஒத்தவரை சந்திக்கும் போது எழும் குதூகலம் எனக்குள்.
          அன்றைய பின்மதியப்  பொழுதின் ஏறக்குறைய மூன்றுமணி நேரம் பாலா வீட்டில் நெய்வேலி பாரதிக்குமார், ஜெ .ரா., 'வெயில்நதி' இயற்கை சிவம்,செஞ்சி தமிழினியன் மற்றும் பாலாவுடனான காத்திரமான இலக்கிய உரையாடல்கள் மேல் ஒருகண்ணும் காதும் இருக்க, மற்றொரு கண்ணும் காதும் பாலாவின் அம்மா, துணைவி, குழந்தையிடம் இருந்தது எனக்கு .

         பாலா மனிதர்களைக் கற்ற வழியை சற்று பார்க்கலாம், அவரது கவிதை வழி. தொகுப்பின் தலைப்பை மையப்படுத்தும் கவிதையாக இதுவே எனக்குப் படுகிறது...

காலி பாத்திரத்திலிருந்து வயிறு நிரப்பவும்
வெறுங்குடத்திலிருந்து மொண்டு குடிக்கவும்
கூட கற்றிருக்கிறேன்

குணமறிந்து அணுகக் கற்றிருக்கிறேன்
சமூகத்திடமிருந்து

எல்லாக் கணங்களிலும்
சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்கிறது வாழ்வு

என்றாலும்

எல்லா மாற்றங்களும்
தொடக்கத்தில் வலியைத்தான்
கொடுக்கின்றன.

    இருந்தும் பாலாவின் வாழ்தலினூடான அனுபவங்கள் அவரைப் புடமிட்டிருப்பது புரிகிறது கீழ்க்கண்ட கவிதையில்...

நீண்ட பயணத்தை முடித்துக் கொள்ளும்
திட்டமிருந்தது ஒரு நாள்

வழிப்போக்கனொருவனுக்கு வழிகாட்டும் பொருட்டு
தொடர்ந்த பயணத்தின் நீட்சி

வேருக்குள் புகுந்து கனிக்குள் அடைபட்ட
நீரெனக் காத்துக் கிடக்கிறது

இளைப்பாற வரும் அடுத்த
வழிப்போக்கனொருவனுக்காக.


    மேலும் சில கவிதைகளின் சில வரிகள் என் சிந்தனையை கூர் தீட்டுகின்றன. அவரது மகள் சீவித் தள்ளும் பென்சில் போல. என் பார்வை தாண்டி எந்தவொரு நூலும் போல் உங்கள் வாசிப்பில் வேறு தளங்களும் விரிக்க வாய்ப்பிருக்கிறது.

எல்லாவற்றிற்கும் அல்லது எல்லோருக்குள்ளும்
ஒரு கணக்கு இருக்கிறது
மெளனத்துக்கும் முணுமுணுப்புக்குள்ளும்
புலம்பலுக்குள்ளும்
வேடிக்கைப் பார்ப்போருக்குள்ளும் கூட
ஒரு கணக்கு இருக்கிறது

அவரவருக்குள்ளும் ஒரு கணக்கு
ஓடிக்கொண்டே இருக்கிறது

எல்லாவற்றிற்கும்
கணக்கு பார்க்க முடியாது அல்லது கூடாது
அதிலும் ஒரு கணக்கு இருக்கிறது

உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் கணக்கிற்கும்
வெளியில் பேசும் கணக்கிற்கும்
சம்பந்தமே இருக்காது ஆனால் இருக்கும்

ஒரு கட்டத்தில் எல்லா கணக்குகளும்
பொய்த்துப் போகின்றன

அனாயசமாக
கணக்கு
அதுவொரு கணக்கைப் போட்டுவிட்டு
மிக இயல்பாக போய்க்கொண்டே இருக்கிறது.




    கணக்கை பாடமாக எடுத்துப் படித்துத் தேர்ந்தவர்களும் பிறருக்குக் கற்பிப்பவர்களும் வாழ்வின் கணக்கை கவனமாகவே கையாள முயல்வர். ஆம். பாலா ஒரு கணக்கு ஆசிரியராக அரசுப் பள்ளியில் வேலை செய்கிறார்!

தொகுப்பைப் பெற நீங்கள் விரும்பினால்... தொடர்பு கொள்க:

நறுமுகை,
25/35, தேசூர்பாட்டை,
செஞ்சி, விழுப்புரம் மாவட்டம்.
604 202.
மின்னஞ்சல்: narumugai@gmail.com
தொலைபேசி: 9486150013


11 கருத்துரைகள்
  1. நூல் அறிமுகம் அருமை. பாராட்டுக்கள்.

    ஒற்றைக்கோட்டு ஓவியங்கள் மிகச்சிறப்பாக உள்ளன. அந்த ஓவியருக்கு என் வாழ்த்துகள்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சிந்திக்க வைக்கிறது கவிதை வரிகள்... பாலா அவர்களுக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. வரும் ஆண்டில் அனைத்தும் மேலும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பாலா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    பகிர்வுக்கு நன்றி.
    உங்களுக்கும், உங்க குடுமபத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. கோட்டில் அமைந்திருக்கிற வாழ்க்கையும்;அவற்றுக்குப் பொருத்தமான கோட்டோவியமும்; மனிதர்களைக் கற்றுக் கொண்டு போகிற விதமும்; ஒரு மனிதன் வாழ்வைப் புரிந்து விதத்தை சொல்கிறது.அதைச் சொன்ன பாங்கும் அழகு.

    அறிமுகத்துக்கு நன்றி நிலா.

    உங்களுக்கும் எனது உளப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. ஓவியங்களும், கவிதை வரிகளும் அருமை..

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

    ReplyDelete
  7. ஒற்றைக் கோட்டு ஓவியங்கள் அனைத்துமே சிறப்பு. கவிதைகளும் நன்று. முகவரி குறித்துக் கொண்டேன்.

    ReplyDelete
  8. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கவிதையாய் மாற்றத் தெரிந்த தேர்ந்த ரசனையும் கோடுகளை ஓவியமாய் மாற்றத் தெரிந்த நுண்திறனும் அசத்துகின்றன. நூலாசிரியர் பாலாவுக்கு மனமார்ந்த பாராட்டுகள். நூலறிமுகம் செய்தமைக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  9. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html

    ReplyDelete
  10. வணக்கம்.
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்சென்று பார்வையிட இதோ முகவரிhttp://blogintamil.blogspot.com/2014/01/blog-post_22.html?showComment=1390346663710#c775027748531686835

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete