பதினோராவது தடவையாக கைப்பேசியை உயிர்ப்பித்து மணி பார்க்கிறேன். வண்டி வரும் தடயமில்லை. 5.35 ஆகிடுச்சு. மத்தியப் பேருந்து நிலையத்தில் 5.20 க்கு சரியா கிளம்பியிருக்கணுமே... கெளம்பறச்சே பேருந்துல தான் ஏதேனும் கோளாறோ... மந்தாரக் குப்பம் போய்விடலாமா? விருத்தாசலம் வழியா வர்ற சேலம் –சிதம்பரம்
வண்டி ஏதாவது கெடைக்கலாம்.... சிதம்பரம் போயி மாயவரம் போகணும். ம்ம்ம்...
என்னோடு புதுக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதறிக் கிடக்கும் மர நிழலில் தலை நுழைத்து நிற்கும் சிலரும் பேருந்து வரும் பாதையை நோக்கிய படி மனச் சலனம் புலப்பட தவிப்புடன்
நின்றிருந்தனர்.
கிராமங்களில் குளமிருந்த காலத்தில்
கும்மாளம் போடும் சிறுசுங்க கரையேற மனசில்லாம
ஆட்டம் போடுறாப்ல சூரியன் மேற்கே வேகமா இறங்காத அழும்பினால் உடம்பு தன் தட்பவெப்பத்தை சமன் செய்துக்க வியர்த்துக் கொட்டுது. பொழுதுக்கும் சூடேறிய தார்ச்சாலையின் வெம்மையில் காற்றும் தாகத்துல தவிக்குது. பையிலிருக்கும் தண்ணீர் பாட்டிலில் கொஞ்சம் நாவறட்சியை பண்டமாற்றினேன்.
இருக்கிற கவலை போதாமல், இந்நேரம் தான் புறப்படும் அவதியில் தலைவலித் தைலம் எடுத்து வைத்துக் கொள்ளாதது நினைவுக்கு வந்து தொலைத்தது. எப்போதும் ஊர்ப்பயணத்துக்கு எடுத்துப் போகும் பையில் ஒரு தைல பாட்டில் இருக்கும். அதுவும் சாவு வீட்டுக்கு போகும் போது பணப்பை இருக்கிறதா என்று பார்க்கிறேனோ இல்லையோ தலைவலித் தைலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வேன். இன்று வேறு பை.
சாவு
வீட்டில் ஓய்ந்து ஓய்ந்து கேட்குற ஒப்பாரி ஒலியும் பயணக் களைப்பும் தலைவலியை தட்டியெழுப்பிடும். எந்த பயணத்துக்கும் வீட்டு வாசலைத் தாண்டும் வரைக்கும் திரும்பி வரும் வரை தேவையான முன் தயாரிப்பு
வேலைகளை செய்து முடிகும் அலுப்பு வேறு. சாவு வீடுகளில் மொத்தமாக கலந்து வைத்ததை திரும்பத் திரும்ப சுட வைத்து கொடுத்துத் தீர்க்கும் காபி எனும் தண்டனை இருக்கிறதே... அப்பப்பா. கடமைக்கு வற்புறுத்தி கையில் திணித்துப் போகும் மக்களை பார்த்தாலே
மண்டை தெறிக்கும்.. இப்போதெல்லாம் அவங்க
திணிச்சுட்டு நகர்ந்தவுடனே உட்கார்ந்த இடத்திலேயே மூலை முடுக்கில் அந்த அரைச் சூட்டுக் கசாயத்தை தள்ளிவிட்டு தப்பிக்க பழகியாச்சு.
சரி. சிதம்பரத்தில் இறங்கியவுடன் ஞாபகமாக ஒரு தைலம் வாங்கிக்கலாம். இவ்வளவு
நேரமாகும்னு தெரிஞ்சிருந்தா கலந்த காபியை ஒரு ஆத்து ஆத்தியாவது
குடிச்சிருக்கலாம்... சுட்டுகிட்ட நாக்கு முணங்கியது. எங்க கிளம்பினாலும் எந்த நேரமானாலும் ஒருவாய் காபியை ஊத்திகிட்டு
தான் கெளம்பறது. பழகிப்போன பொம்பளைக் குடி. அவரோட வரும்போது சில நேரம் பேருந்து
போயிட்டா அடுத்த வண்டி வர்ற வரைக்கும் நிற்கும் போது சொல்லுவார்... “அந்தக் காபியை
போடாம கெளம்பி இருந்தா இந்நேரம் போயிட்டு இருக்கலாம்ல”.
‘வந்தாரய்யா பெருமாள்' ன்னு விஜயலட்சுமி நவநீதக் கிருஷ்ணன் பாடும் உற்சாகக் குரலில்