வாழ்கநீ! எம்மான்...

      உடுத்திய எளிய உடை, சாப்பிட்ட அலுமினியத் தட்டு, தூங்கிய கோரைப் பாய், உடல் தேய்த்துக் குளித்த வெள்ளைக் கல்... தன் எளிமையைக் காந்தி ரகசியமாக வைத்திருக்கவில்லை. அது அவரது பிரகடனம். எளிமையாக இருப்பதைப் பிரகடனப்படுத்தியது வழியாக அவர் முன் வைக்கும் அறைகூவல்கள் ஏராளமானவை. மன்னர்களுக்கும் பிரபுக்களுக்கும் அது தெளிவாகவே ஒரு சொல்லைச் சொன்னது- அவர்களின் காலம் முடிந்து விட்டது. எளியவர்களின் காலம் வந்து விட்டது என்று. விக்டோரியா ராணிக்கே காந்தி தன் உடை மூலம் அந்தச் சேதியை தெள்ளத்தெளிவாகச் சொன்னார். எளிய கோமண உடையுடன் சக்கரவர்த்தினிக்குச் சமானமாகச் சென்று பேச்சு வார்த்தை மேஜை முன் அமர்ந்தபடி! கோகலேயிடமும் திலகரிடமும் இல்லாத எது அவரிடமிருந்தது? எளிமை. முன்னுதாரணமான எளிமை.

      இன்று வரை நம்மைச் சூழ உள்ள நாடுகளில் ஜனநாயகமில்லை. ஏன்?
 சாமானியர்களை ஆட்சியாளர்களாக ஏற்க அங்குள்ள மக்களின் மனம் ஒப்பவில்லை. காந்தியின் உடையைப் புரிந்து கொண்ட சாமானிய விவசாயியில், சமையற்கட்டுப் பெண்டிரில் உள்ளது இந்திய ஜனநாயகத்தின் அஸ்திவாரம். மூன்றாம் வகுப்பு இரயிலில் செல்லும் கோமணாண்டியான காந்தி ஒரு உயிருள்ள பதாகை. அதன் பெயரே ஜனநாயகமென்று புரிந்து கொள்ள மனசாட்சியோ வரலாற்றுப் பிரக்ஞையோ சற்றே திறந்திருந்தால் மட்டும் போதுமானது.

      கொள்கைகளும் கோட்பாடுகளுமல்ல, தியாகமே இயக்கங்களை உருவாக்கும் ஆதார சக்தி.

      தன்னை எளிமைப் படுத்திக் கொள்வதன் வழியாகவே பாவங்களிலிருந்து விடுபட இயலும் என்றும் அதுவே முக்தியென்றும் சொல்கிறது சமணம். ஏனென்றால் ஒரு மனிதன் வென்றாக வேண்டிய எதிரி அவனே. அவனுடைய காமக்குரோதங்களே அவனைக் கீழிறக்கி கட்டுண்டு வாழச் செய்கின்றன. இந்த ஆசீவக-சமணக் கருத்து ஈராயிரம் வருடத்து தமிழ்ச் சொற்களில் சொல்லப் பட்டிருக்கிறது. ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று!

      ஒரு ஆளுமை எந்த அளவுக்கு வீரியம் உள்ளதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அது காமமும் உணவில் ருசியும் கொண்டதாக இருக்குமென யூகிக்கலாம். அவை அடிப்படை இச்சைகள். அதேயளவுக்குத் தன்மைய நோக்கும் நகைச் சுவை உணர்ச்சியும் அதற்கு இருக்குமென்றும் சேர்த்துக் கொள்ளலாம். எந்த மனிதர், தன்மைய நோக்காலும் நகைச்சுவையாலும் அவ்விச்சைகளை விலக்கி, சிதறும் தன் ஆளுமையை ஒருங்கிணைத்துக் கொள்கிறாரோ அவரே எங்கும் சாதனையாளராகிறார்.

      இந்திய அரசியலுக்குள் காந்தி நுழையும் போது, கடுமையான விரதங்கள் மூலம் தன்மீதான கட்டுப்பாட்டை அடைதல் மற்றும் பொது வாழ்க்கையில் விழுமியங்களை உண்மையுடன் முன்வைத்தல் என்ற இருதளங்களிலும் ஈடுபட்டிருந்தார். தான் நம்பிய எளிய இயற்கை வாழ்க்கையை, மானுடர்களுக்குள் பேதமில்லாத வாழ்க்கையை நடைமுறைப் படுத்த முயன்றார். அத்துடன் விழுமியங்களை முன்வைத்து உருவாக்கிய சத்தியாகிரக போராட்ட முறையை மிக வெற்றிகரமாக சம்பரானில் நடத்தியும் காட்டினார். அந்தப் போராட்டத்திலிருந்த நேர்மையும் துணிவும் எளிமையும் அவரை அதுவரை இந்தியாவிலில்லாதிருந்த ஒரு புதிய சக்தியாக அடையாளம் காட்டின. இங்கேதான் இந்தியர்களால் காந்தி 'மகாத்மா'வாக அடையாளம் காணப்பட்டார்.

      அவரைக் கேட்டுப் புரிந்து கொண்டு அல்ல அவரைக் கண்டு உள்வாங்கியே கோடிக்கணக்கானவர்கள் அவர் பின்னால் சென்றார்கள். அவர் சொல்வது சரி என்று புரிந்து கொண்டதனாலல்ல... அவர் சரியானவரென்று புரிந்து கொண்டதனால்!

      அவர் தன்னையே தன் செய்தியாக ஆக்கிக் கொண்டவர். தன் வாழ்க்கையே தன் செய்தியென்று கூற ஒரு தலைவனுக்கு அபாரமான மனதைரியம் தேவை. என் தனி வாழ்க்கையில் ரகசியங்களில்லை என்றறிவிக்க, என்னை ஆய்வு செய்து பாரென்று வரலாற்றின் முன் வந்து நிற்க, தன் நேர்மை மேல் ஆணித்தரமான நம்பிக்கை தேவை. எல்லையற்ற ஆன்ம வல்லமை தேவை. இந்திய அரசியலின் நூறு வருட வரலாற்றில் இவரைத் தவிர வேரெவருமே அப்படிச் சொல்ல முடியாது.

       தன்னைத்தான் காந்தி இந்தியா முழுக்கக் கொண்டு சென்றார். நூற்றுக் கணக்கான இரயில் நிலையங்களில் மூன்றாம் வகுப்புப் பெட்டியின் வாசலில், விரதத்தால் மெலிந்த கரிய உடலுடன் வந்து நின்று, தன் கருணைமிக்க கண்களில் நகைச்சுவை ஒளிரும் சிரிப்புடன் மக்களை நோக்கிக் கும்பிட்டார். அதுவே இந்தியா முழுவது சென்று சேர்ந்த செய்தி. அதுவே இந்த நாட்டை ஒன்றுதிரட்டி ஜனநாயக அரசியலுக்கு கொண்டுவந்த கருத்தியல் பேரலை. அந்த இடத்தை அவருக்களித்தது அவரது மகாத்மா என்ற அடைமொழி. இந்த தேசத்தில் அதற்கான ஒரு மெய்யியல் தாக்கம் உள்ளது. கண்ணில் காணும் அனைத்து மேன்மைகளிலும் கடவுளைக் காணுதல் என அதைச் சொல்லலாம்.

      காந்தி புலன் நிராகரிப்பையே தன் யோகமாகக் கொண்டவர். புலன்களுக்கு வசப்படுதல் என்பது அக வலிமையை இழத்தல் என்றெண்ணியவர். துறந்து கொண்டே வந்தார் காந்தி. அவரைப் பொறுத்தவரை அது முன்னேற்றம். ருசிக்கான உணவை, காமத்தை, வசதியான இல்லங்களை. ஒரு கட்டத்தில் அவர் வசதியான ஆடைகளைத் துறந்து எளிமையான ஆடைக்கு வந்ததும் அந்தப் பரிமாணத்தின் ஒரு கட்டமே. காந்தியின் அந்த உடை அவரை இந்தியாவின் பல்லாயிரம் மெய்ஞானிகளில் ஒருவராக அடையாளம் காட்டியது. ராமகிருஷ்ண பரமஹம்சரின், வள்ளலாரின், நாராயணகுருவின், ரமணரின் தோற்றமல்லவா அது? அவரைப் போன்ற ஆன்ம வல்லமை மிக்க பலர் அப்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உலகம் அறிந்தும் அறியப்படாமலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களுள் ஒருவர் அரசியலுக்கு வந்தாரென்பதே காந்தி.

       அவர் தன்னை சாதாரண அறிவுத் திறனும் சாதாரணமான ஆன்மீக வல்லமையும் கொண்ட ஒருவரென்றே எண்ணினார். தன்னாலேயே ஒரு விஷயத்தைச் செய்ய முடியும் என்னும் போது ஏன் எல்லோராலும் செய்ய முடியாதென்று கருதினார்.

      இந்தியாவுக்கு ஓர் அரசியல் சுதந்திரத்தை வாங்குவது அவரது இலக்கு அல்ல. அவரது கனவுகள் மகத்தானவை. போரில்லாத ஓர் உலகத்தைப் பற்றி அவர் எண்ணினார். வளங்கள் சூறையாடப்படாத ஓர் வாழ்க்கை முறையைக் கற்பனை செய்தார். பேதங்களில்லாத மானுடத்தைப் பற்றி உருவகித்துக் கொண்டார். அதற்குப் புலன்கள் மேல் கட்டுப்பாடும் சகமனிதர்கள் மேல் பிரியமும் போதுமேயென்று எண்ணினார். அவை எளிய மக்களுக்கு மாபெரும் சவால்கள் என அவர் புரிந்துகொள்ளவேயில்லை.

      காந்தி இந்திய மரபு வகுத்த ஞான முறைகளில் ஒன்றை, கர்ம யோகத்தை, தன் பாதையாகக் கொண்டவர். அதனூடாகக் கனிந்த ஞானி.

(திரு. ஜெயமோகனின் இன்றைய காந்தி நூலின் முதல் பதினைந்து பக்கங்களில் என் கவனம் நிரப்பிய வரிகளிவை. இன்னுமிருக்கிறது... படிக்கவும் ,பகிரவும்)

நூற்பெயர்: இன்றைய காந்தி
ஆசிரியர்: ஜெயமோகன்
வெளியீடு: தமிழினி,
                          67. பீட்டர்ஸ் சாலை,
                          ராயப்பேட்டை, சென்னை-14
பக்கங்கள்: 512
விலை : ரூ.300/-
9 கருத்துரைகள்
  1. நல்ல பகிர்வு சகோ. மகாத்மா காந்தி பற்றி இன்று [30.01] உங்கள் பதிவு! மிக்க நன்றி.

    ReplyDelete
  2. யாரொருவர் தன்வாழ்க்கையின் ரகசியங்களைத் திறந்த புத்தகமாக்கத் துணிந்தாரோ-துணிவாரோ-

    யாரொருவர் தன் சொல்லையும் செயலையும் ஒன்றாய் இணைத்தாரோ-இணைப்பாரோ-

    யாரொருவர் இலக்கை அடைந்ததன் பின்னுள்ள காலத்தை முன்கூட்டியே கண்டறிந்து சொன்னாரோ-சொல்வாரோ-

    யாரொருவர் யாராலும் தொடமுடியாத உயரத்தை விட்டுச் சென்றாரோ-செல்வாரோ-

    யாரொருவரை இனிவரும் காலங்கள் தாகித்துத் தேடியலையுமோ-தேடிக்கண்டடையுமோ-

    அவருக்குப் பெயர் காந்தி என்பதாய் இருக்கும்-இருக்கட்டும்.

    ReplyDelete
  3. வாழ்க நீ எம்மான்..
    இன்றையத் தேவை இப்படி அபூர்வமான மனிதர்தான். நாம் எதற்கும் பின் சென்றே பழகி விட்டோம்.. வழி நடத்த தகுதியான எவரும் அமையா விட்டால் தேசம் இப்படித்தான் கொள்ளை போகும். நல்ல தலைமைக்குப் பிரார்த்தனையுடன்.

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  5. என் மலர்த்தூவலும் !

    ReplyDelete
  6. "ஜெய‌ 'மோக‌ன்" தாஸ் க‌ர‌ம் ச‌ந்த் காந்திஜி'க்கு எம‌து அஞ்ச‌லி.

    ReplyDelete
  7. முத்துக்களாய்;முற்றிய மல்லிகை மொட்டுக்களாய்
    பொறுக்கியெடுத்து மாலையாக்கி தந்திருக்கிறீர்கள் நிலா.

    காந்தியை வரிகளால் வடிவமைத்த திறம் வியக்க வைக்கிறது!

    மேலும் இது போன்ற பதிவுகளைத் தாருங்கள்.அறிய ஆவல்.

    ReplyDelete
  8. முதன்முதலாக உங்கள் பதிவிற்கு வந்தேன்.படித்தது நிறைவைத்தருகிறது.காந்தியை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் நான்.எனக்கு எட்டுவயதிருக்கும்போது.அப்போதைய மெட்ராசில் ஒரு கூட்டத்தில் கேள்வி கேட்க வந்த ஒருவனிடம் தமிழில் ‘உட்காரையா” என்று கூறியது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை அரக்கோணம் தாசில்தார் தெருவில் நாங்கள் விளையாடும்போது ரேடியோவில் ஒலிக்கக்கேட்டு ஊருக்கே தெரியப்படுத்தினோம். அன்று ஊரே அழுதது இன்றும் நினைவுக்கு வருகிறது பழைய நினைவுகளை கிளரவிட்ட உங்கள் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete