சரத்சந்திரரின் 'தேவதாஸ்'- ஒரு பார்வை.

       நிறைவேறாக் காதலுக்கு மதுவை நாடும் பழக்கம் சுமார் 47 ஆண்டுகளாக எழுதாச் சட்டமாகியதன் மூலகாரணமாக, சரத் சந்திரரின் ‘தேவதாஸ்' நாவலுமிருக்கிறது. ஒரு கதாபாத்திரம், காதல் தோல்வியின் சோர்வுக்குக் குறியீடாகவே மாறிய விந்தை!
       ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து வறுமையால் படிப்பைத் தொடரமுடியாமல் கைவிட்ட சரத் சந்திரர், ஏழைகள் படும் துன்பங்களையும், சந்திக்கும் போராட்டங்களையும் உலகுக்கு எடுத்துரைப்பதே எழுத வந்ததற்கான காரணமென்கிறார். பக்கிம் சந்திரர், தாகூர் போன்றவர்கள் சமூக மாற்றம், சுதந்திரப் போராட்டம், மெய்தேடல் என தீவிரத் தளங்களில் எழுதிய போது, இவர் பாமரர்களும் படிக்கும்படியான எளிமையான, சுவையான, பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப நாவல்களை எழுதி, தாகூரை விடவும் புகழ்பெற்றவர். நகர மயமாதலின் ஆரம்பகால மாற்றங்களை இவரது எழுத்தில் உணரலாம். இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் திரைப்படமாக்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை அடைந்துள்ளது ‘தேவதாஸ்'!

        வங்காள கிராமத்திலுள்ள ஜமீன் குடும்பங்களின் அழிவு மறைமுகமாக மிக நுட்பமாகச் சித்தரிக்கப் படுகிறது. இயல்பாக அறிமுகமாகும் கதாபாத்திரங்களின் உணர்ச்சி வெளிப்பாடுகளே கதைசொல்லலின் பிரதான பணியாக, திருப்பங்கள் அதிகமற்று சம்பவங்களால் நகர்கிறது இக்கதை.
         பார்வதியின் மிதமிஞ்சிய அன்பைத் தவிர்க்கவும் தப்பித்துச் செல்லலுமாகவே கையாளுகிறான் தேவதாஸ். கூடவேயிருந்து வளர்த்து ஆளாக்கும் விசுவாச வேலையாள் தர்மதாஸுடன் கல்கத்தாவுக்கு மேற்படிப்புக்காகச் செல்வதும் அப்படியே.
         வேறு வழியற்று, பெற்றோர் பார்க்கும் வரனுக்கு இரண்டாம் தாரமாகிறாள் பார்வதி. தன் கணவனுக்கும் முதல்தாரக் குழந்தைகளுக்குமாக உண்மையான குடும்பப் பெண்ணாகும் அவளுக்கு வாழ்வியல் வசதிகள் வெகுமதியானாலும், தேவதாஸ் மீதான காதல் மனதளவில் சற்றும் குறையாமல் வாழ்கிறாள் பார்வதி. புதுக்கணவன் குடும்பத்தை வெறுக்கவுமில்லை; தேவதாஸை மறக்கவுமில்லை அவள்.
          பிந்தைய வாழ்வில் தேவதாஸால் கவரப்படும் சந்திரமுகி கூட அவனைவிட வசதி படைத்தவள்; வயதானவள்; ஆடல்பாடல்களில் தேர்ந்தவள்; பார்வதியை விட அழகி; தேவதாசுக்காக அனைத்தையும் துறக்கும் அளவு அன்பு நிறைந்தவள்.
          இருவரின் அன்பையும் அனுபவிக்க தேவதாஸின் பிறவி குணமான அலட்சிய ஆடம்பரப் போக்கு இடம் தரவில்லை. காலம் கடந்து பாருவின் அன்பு புரிகிறது அவனுக்கு. மீட்டெடுக்க முடியாத தூரம் கால ஓட்டம், சமூக அந்தஸ்து எனும் தடைகளைத்  தாண்டிட தைரியமற்று தன் இருப்பைத் தானே அழித்துக் கொள்ளுமாறு குடிப்பழக்கம் அவனை அடிமையாக்குகிறது.
           அப்பழக்கம் அவனை மூர்கனாகவோ, பைத்தியக்காரனாகவோ ஆக்கவில்லை. எனினும், கோழையாக, நம்பிக்கை துரோகத்தால் வியாதியஸ்தனாக ஆக்கி விடுகிறது. மரணம் துரத்தும்போது காதலை யாசித்த அவனுக்குத் தனக்காக ஒரு சொட்டுக் கண்ணீர் சிந்தவும் ஆளற்று, இறுதி தகனத்துக்கு மிஞ்சிய விரல் மோதிரமே வழித்துணையாகிறது. இலக்கின்றி வாழ்தலின் கோர முடிவை விதி, குரூரமாக எழுதிச் செல்கிறது.
         “மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு-பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை , அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி  ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப் போக வேண்டும்.”
             மேற்கண்ட வரிகளுடன் நிறைவடையும் இப்புதினம், வாசிக்கும் நம் மனம் முழுக்க ‘தொம்'மென அமர்ந்து அழுத்துகிறது. காதலனுபவம் அற்றவர்களும் காதலின் வலி உணரும் தருணம் இது. மொழிபெயர்த்த புவனா நடராஜனின் பணி மகிழ்தற்குரியது.

வங்காள மூலம்: சரத் சந்திர சட்டோபாத்யாய (1876-1938)
தமிழில்:                  புவனா நடராஜன்(1943)
வெளியீடு:             காலச்சுவடு
விலை:                   ரூ. 100/-
21 கருத்துரைகள்
  1. ஆஹா எவ்வளவு நேர்த்தியான அறிமுகம்.உலகம் அறிந்த கதையை இப்படிச்சொல்லி மறுவாசிப்புக்கு உட்படுத்தும் உங்கள் எழுத்து பாராட்டுதலுக்குரியது.

    ReplyDelete
  2. நல்லதொரு புதினத்தின் அருமையான அறிமுகம். பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  3. வாசிக்கவேணும்போல இருக்கு விமர்சனம்.அதுவும் கடைசிப் பகுதியில் சொன்ன மரணிக்கும் நேரத்தில் உறவுகளின் தேவை !

    ReplyDelete
  4. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
  5. நல்ல பதிவு தோழி.நன்றாக எழுதியுள்ளீர்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  6. #காம‌ராஜ்...
    எழுத்தில் வாசிப்ப‌து என‌க்கிது முத‌ல்த‌ட‌வை தோழ‌ர். ப‌ட‌மும் பார்த்த‌தில்லை நான்.(வாழ்வே மாய‌ம் இத‌ன் சாய‌லோ...)

    #முனைவ‌ர் இரா.குண‌சீல‌ன்...
    நீங்க‌ளெல்லாமிருக்கும் வ‌லையுல‌கில் நானும் ஒரு ஓர‌மாய்...

    #கோவை2டெல்லி...
    ம‌கிழ்வையும் ந‌ன்றியையும் ச‌ம‌ர்ப்பிக்கிறேன் தோழி.

    #ஹேமா...
    ஹை... வாசிக்க‌த் தூண்டும‌ள‌விலிருக்கிற‌தா...!உற்சாக‌ம‌ளிக்கும் வார்த்தைக‌ள். ந‌ன்றி தோழி!

    #ச‌ண்முக‌வேல் ஐயா...
    மிக்க‌ ந‌ன்றி ஐயா!

    #ச‌ந்ரு...
    ச‌ந்தோஷ‌ம் ச‌ந்ரு.

    #மிருணா...
    உற்சாக‌ப்ப‌டுத்த‌லுக்கு ந‌ன்றியும் அன்பும்!

    ReplyDelete
  7. //“மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு-பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை , அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப் போக வேண்டும்.”//

    நல்லதொரு நியாயமான எதிர்பார்ப்பு. இந்த பாக்யம் ஒரு சில அன்புள்ளங்களுக்கே வாய்க்கக்கூடும்.

    நல்லதொரு அறிமுகத்திற்கு, நன்றிகள்.

    ReplyDelete
  8. ஆஹா! நல்ல அருமையான அலசல்.தமிழ் அழகாய் உங்களோடு பயணிக்கிறது.வசீகரமான வார்த்தைகள்!

    இந்த ஹிந்தி மொழியிலான தேவதாஸ் படத்தை அவுஸ்திரேலிய SBS தொலைக்காட்சி காட்டியிருந்தது.பார்த்தேன்.

    பிரமாண்டமான செலவில் இந்திய அலங்காரங்களின் ராணியாக ஐஸ்வர்யாவைக் காட்டியிருந்தார்கள்.

    அது சொல்லும் செய்தி நீங்கள் சொன்னது மாதிரி‘இலக்கற்று வாழ்தலின் கோர முடிவு’ அல்லது வாழ்க்கையை வாழத் தெரியாத ஒருவனின் நாட்குறிப்பு.


    மணிமேலகா.

    ReplyDelete
  9. இலக்கின்றி வாழ்தலின் கோர முடிவை விதி, குரூரமாக எழுதிச் செல்கிறது.

    தேவதாஸின் பாதிப்பு மனசுக்குள் விழுந்தது எழுத்தின் வெற்றி என்றே சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  10. //மரணம் என்பது ஒரு கேடு இல்லை. ஆனால் மரண காலத்தில் ஒரு அன்பு ஸ்பரிசமும், நட்பு-பாசம் நிறைந்த முகமும் கண்ணுக்கு முன்னால் தெரிய வேண்டும். அந்த ஸ்பரிசத்தை , அதில் நிறைந்து கிடக்கும் அன்பை உணர்ந்தபடி ஒரு மனிதனின் வாழ்க்கை முடிய வேண்டும். தனக்காக சிந்தப்படும் கண்ணீர்த் துளியைப் பார்த்தவாறே அவன் செத்துப் போக வேண்டும்//

    விலைமதிப்பற்ற பிரிவுபசாரமல்லவா அது? யாருக்குக் கிடைக்கும் இப்படியான மதிப்பற்ற கண்ணீர்த் துளிகள்? அவள/னல்லவோ கொடுத்துவைத்தவள்/ன்?

    மறக்கமுடியாது தேவதாஸையும் நினைவுபடுத்திய நிலாமகளையும்.

    அப்பாடி! ஒருவழியா பின்னூட்டம் போட வழிபிறந்தது.

    ReplyDelete
  11. @வை.கோ.சார்...

    எல்லோருக்குமான‌ வ‌ரிக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் அதுவாயிருப்ப‌தால் யாவ‌ர்க்கும் இண‌க்க‌மாயிருக்கின்ற‌ன‌. இத்த‌னை நாள் வாழ்வில் ஒரு அன்பு உள்ள‌மேனும் ச‌ம்பாதிக்காவிடில் வேறு எதைச் ச‌ம்பாதித்து தான் என்ன‌...?! அப்ப‌டியான‌ ப‌ரிவும், பிரிய‌மும் உள்ள‌வ‌ர்க‌ள் இறுதியில் ப‌க்க‌த்திலிருப்ப‌தும் ஒரு கொடுப்பினைதான். தொட‌ர் வ‌ருகையால் ஊக்க‌ம‌டைகிறேன் நான். ந‌ன்றி ஐயா.

    ReplyDelete
  12. @ம‌ணிமேக‌லா...
    த‌ங்க‌ள் க‌ருத்துக‌ள் என்னை ப‌ல‌ப்ப‌டுத்த‌வும் உற்சாக‌ப் ப‌டுத்த‌வும் செய்கின்ற‌ன‌. ந‌ன்றி தோழி! வாழ‌த் தெரியாத‌வ‌னின் நாட்குறிப்பு பிற‌ருக்குப் பாட‌மாக‌வாவ‌து இருக்க‌ட்டும். 'எப்ப‌டி வாழ‌க்கூடாது என்ப‌த‌ற்காக‌ என‌து ச‌ரிதையை எழுதுகிறேன்' என்ற‌ க‌விய‌ர‌ச‌ர் க‌ண்ண‌தாச‌ன் நினைவில் வ‌ருகிறார்.

    பின்னூட்ட‌ச் சிக்க‌லெனில் 'அனானிம‌ஸ்' என‌க் குறிப்ப‌த‌ற்கு ப‌தில் நேம்/யு ஆர் எல் என்ப‌தில் க்ளிக்கி, பெய‌ர் குறித்து, யுஆர்எல் இட‌த்தில் த‌ங்க‌ள் வ‌லைப்பூ முக‌வ‌ரியைக் குறிக்க‌லாமே. நான் அப்ப‌டித்தான் இப் பின்னூட்ட‌ங்க‌ளை இட்டிருக்கிறேன். முய‌ற்சி செய்து பாருங்க‌ள்.

    ReplyDelete
  13. @ரிஷ‌ப‌ன்...

    வ‌ருகையும் ப‌கிர்வும் ம‌கிழ்வைத் த‌ருகிற‌து சார்.

    ReplyDelete
  14. @சுந்த‌ர்ஜி...

    அத்தி பூத்தாற்போன்ற‌ வ‌ருகையே பெரு ம‌கிழ்வ‌ளிப்ப‌தாய். ஏதோ த‌ப்பு செய்து விட்ட‌து போலொரு குற்ற‌வுண‌ர்வில் நெளிந்து கொண்டிருந்த‌ன‌ ப‌திவுக‌ள்.

    ReplyDelete
  15. மிக மிக அருமையான மதிப்புரை
    ஏற்கெனவே படித்து ரசித்த நாவல்தான் ஆயினும்
    தங்கள் பதிவிற்குப் பின் மீண்டும் ஒருமுறை
    படிக்கத் தோன்றுகிறது
    முன்பு படிக்கையில் தேவதாஸின் கையாலாகாத்தனம்
    குறித்து அதிக எரிச்சலடைந்த ஞாபகம்
    இப்போது நாவல் புதிய பரிமாணங்களைக் காட்டலாம்
    (ஏனெனில் வாழ்வு குறித்த நமது கண்ணோட்டங்களும்
    அதிக மாறுதல் அடைந்திருப்பதால்)
    நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. @ர‌ம‌ணி சார்...

    உற்சாக‌மூட்டும் வ‌ருகைக்கும் ப‌கிர்த‌லுக்கும் ந‌ன்றி ஐயா.
    தேவ‌தாஸின் கையாலாகாத் த‌ன‌ம் எரிச்ச‌லூட்டுவ‌தெனினும், ப‌ரிதாப‌மும் இர‌க்க‌மும் எழுவ‌து பார்வ‌தியின் க‌ண்ணோட்ட‌த்திலிருந்து இய‌லாத‌வொன்றே.பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ர் நாமாயில்லாத‌ வ‌ரை எதிலும் அனுதாப‌ப்ப‌ட‌ எளிதாக‌ முடிகிற‌து.
    நீங்க‌ள் சொல்வ‌து போல் ம‌றுவாசிப்பில் மாறுப‌ட்ட‌ கோண‌ங்க‌ள் புல‌ப்ப‌ட‌ வாய்ப்பிருக்கிற‌து.

    ReplyDelete
  17. இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.பகிர்தலுக்கு நன்றி.

    http://zenguna.blogspot.com/

    where is follow button?

    ReplyDelete
  18. @குண‌சேக‌ர‌ன்...

    முத‌ல் வ‌ருகைக்கும் க‌ருத்துக்கும் மிக்க‌ ந‌ன்றி ந‌ண்ப‌ரே.
    பிளாக்க‌ர் குழ‌ப்ப‌டியில் காணாம‌ல் போயிருக்கும் ஃபாலோ ப‌ட்ட‌ன் தானாக‌ வ‌ரும்வ‌ரைக் காத்திருப்போம். அல்ல‌து என‌து வ‌லைத‌ள‌ப் ப‌ராம‌ரிப்பாள‌ரான‌ சின்ன‌ம‌க‌ன் சிபி வ‌ரும்வ‌ரை.

    ReplyDelete
  19. காதலனுபவம் அற்றவர்களும் காதலின் வலி உணரும் தருணம் இது.

    நல்ல வரி ..
    தொடருங்கள் ...

    அன்புடன்
    கருணா கார்த்திகேயன்

    ReplyDelete