கிருஷ்ணப்ரியா எனுமொரு எழுத்தாளி....

      


               துளையிடப்பட்ட முத்து மணிகளை மாலையாக்கி மதிப்பு கூட்டுவது போல், கவிஞர் கிருஷ்ணப்ரியா, அவ்வப்போது கதைமொழியில் வெளிப்பட்ட தம் அனுபவங்களை அவற்றின் உணர்வுகளை வாசகருக்குக் கடத்தும் வகையில் 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற ஒரு தொகுப்பு நூலாக்கியது சிறப்பு. முன்னெடுத்த ஈழவாணிக்கும் (பூவரசி பப்ளிகேஷன்ஸ்) நன்றி சொல்லியாக வேண்டும் நாம்!
கிருஷ்ணப்ரியா & ஈழவாணி 

               அலங்காரம் தேவையற்ற, பிறந்த குழந்தையின் கண் உறுத்தாத நிர்வாணம் போன்ற புனைவற்ற யதார்த்த அழகுக் கதைகள்!
               புத்தகத்தைப் புரட்டி முதலில் படித்தது முன்னுரையான மகிழ்ச்சியுடன் எழுதுகிறேன்' தான்!
               விளக்கின் பிரகாசம் அருகிருப்போரையும் வெளிச்சப் படுத்துவதைப் போல என்னையும் தொற்றிக்கொண்டது மகிழ்ச்சி!
               சக பயணிகளின் உணர்வுகளைப் பின் தொடர்வதால் கிடைக்கப் பெற்ற சில கதைக் களங்கள். எளிதாக நம்மைக் கைபிடித்து அழைத்துச் சென்று நமக்குள் செலுத்திய அதே உணர்வுகள்! மின்கடத்தி போல இங்கே ஒரு உணர்கடத்தியாக கதாசிரியர்!
              
               ஒரு குடும்பத்தலைவியாக பணியேற்று ஊதியம் பெறும் பணிக்கும் செல்ல வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எழுத்தாளிப் பெண்ணின் நேர வறுமையும் அலைச்சல்களும் அதற்குள் தேடிக் கண்டுபிடிக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களும் பிறவி சுபாவமான சக உயிர்களை நேசிக்கும் பண்பும் நேர்த்தியாக வெளிப்படுகிறது  ‘நானும் என்னைப் போன்ற அவளும்' தலைப்புக் கதையில்.
           ரேவதியின் மனச்சலனத்தைப் போக்கி அவரது அம்மாவை அவரே இறுதிக்காலத்தில் பாதுகாத்து அதன் பலனடைய வற்புறுத்திய இந்திராவாகட்டும், (கானல் நீரல்ல கருணை)
               ஊர் உலக நடப்பைக் கண்டு தன் மாமியாரை தன்னோடே எப்போதும் வைத்துக் கொள்ளத் துணிந்த வாணியாகட்டும்,
               சினேகிதியை துன்புறுத்தக் காரணமாயிருந்த அவளது ஓர்ப்படி தன் சொந்த மகள் வாழ்வின் சோகத்தை சேர்ந்து அனுபவிப்பதை குரூர சந்தோஷத்தோடு முதலில் பார்த்தாலும், தன் பிறப்பின் குறைபாட்டுக்கு தனது காரணம் எதுவுமற்ற அக்குழந்தையின் முகத்தைப் பார்த்தும், அக்குழந்தையின் அம்மாவின் வெள்ளந்தித் தன்மையாலும் மனம் நெகிழ்ந்து அனுதாபம் காட்டும் சித்ராவாகட்டும் கதைப் போக்கில் நமக்கு அறிவுறுத்துவதும் மனித நேயமும் மனித மாண்பும் தான்.
               ‘கோவில்பட்டி போனீங்கன்னா...' கதைநாயகி பெண்மையின் மற்றொரு பரிமாணம். இரக்கமும் கருணையும் பின்னிப் பிணைந்த கதாசிரியர் ஆதரவற்ற பெண்ணின் பசிபோக்க மெனக்கிட்டு எதிர்ச்சாரியில் சென்று தோசை வாங்கி வந்தது பெரிதென்றால், அதனினும் பெரிதாக எனக்குப் படுகிறது தன் ஆதரவற்ற நிலையிலும் தன் உடன்பிறந்தவர்களின் மேல் அப்பெண் வெளியிடும் பாசம்.... பணத்துக்கும் பாசத்துக்கும் தொடர்பில்லை என்பதை பறைசாற்றும் பாத்திரப் படைப்பு. கதை முடிந்த பின் நம் காதுகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது, "கோவில்பட்டி போனீங்கன்னா, நாடார் காலனி, வண்ணான் தெரு..."
              சந்தித்த வேளையில்' கதையில் அவரவருக்கான முதல் காதல், காலங்கள் கடந்தும் மனசின் அடியாழத்தில் ஓரிழையாக ஒட்டிக் கொண்டிருக்கும் என்பதான நிரூபணம்.
               மேற்படி கதையில்,
               ‘தூசியைப் போல் எடுத்து எறிந்து விடாமல், யாரும் பார்க்க வேண்டாத பரிசைப்போல் அவன் நினைவை மனதின் ஆழத்தில் புதைத்தாள்'. என்று அழகிய உவமையோடு  தன் மனவோட்டத்தை இலாவகமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். அலங்காரமும் அழகைக் கூட்டவே செய்கின்றன...!
               பள்ளித் தோழமைகளையும் பள்ளி நாட்களையும் இன்னும் பசுமைமாறாமல் மனதில் பொதித்து வைத்திருந்துபடிக்கும் போதே வயசைக் குறைத்துவிடும் ஜாலம் மிக்க எழுத்து வேகம்.(சுருதி பேதம்)
              ஊமை வலி'யின் மாதவி, பெண்மையின் மற்றுமொரு பரிமாணம். மாதவி மிகமிக அப்பிராணி. தீட்டு வந்த நாளைக் கூட கணவன் வாயால் சொல்பவள். மாமியாரின் கரிசனம் தாண்டி கதாசிரியரிடம் தன் நிலைமையை அவர்களின் சுய ரூபத்தை சொல்ல முடிகிறது. மனசில் கழுகுபோலும் பாவனையில் கோழிக்குஞ்சாகவும் மாறும் தந்திரத்தை கைக்கொள்ளும் போது அவளின் வன்மத்தை பழிவாங்கும் உணர்வைத் தாண்டி தன் வயிற்றுப் பிள்ளையை பாதிக்குமா வாந்திக்கான மாத்திரை என கேட்டுத் தெரிந்து கொள்ள முயலும் தன்மையால் அவளை மன்னிக்கிறது நம் மனசு
              பிராயச்சித்தம்' கதையில் எல்லா இனத்திலும் மறுக்கப்படுவது பெண்ணினம்' என்ற வரி மனசைத் தைத்தது. மிருகத்தில் கூட குட்டிகளின் பொறுப்பு பெண்ணினம் சார்ந்ததாகவே இருந்து தொலைக்கிறது.  தாய்மை உணர்வு அந்த நாயின் பேரில் பெரிதும் பரிதாபத்தை உண்டாக்கி விட்டது. அதனால் தான் படைப்பின் அதிசயமாக மனிதனுக்கு  மட்டுமே அனைத்து உணர்வுகளையும் எண்ணங்களையும் தாங்கிய மனசு இருக்கிறது.
               ‘வாழ்வெனும் செல்வம்'  உரையாடல்கள், கதைக்கரு, கதைப்போக்கு, கதைமாந்தர் படைப்பு போன்ற பலவும் சிறப்பாக இருக்கிறது. உண்மைச் சம்பவமாக இருக்கலாம். அனுபவமாகவும் இருக்கலாம். எழுதிய விதம் தெறிப்பு!  பிரச்சினையோட எல்லாத் தரப்பையும் விலாவாரியா காட்டியிருப்பது படிக்கும் போது முழுமையான திருப்தியைத் தருகிறது. கதையின் தலைப்பும் ரொம்ப பொருத்தம்.
                ‘நினைவுகளில் உறைந்த காயம்' கடந்த தலைமுறைப் பெண்ணொருத்தியின் வாழ்க்கைச் சாபம். 14 வயதில் மணமான, ஒரு கால் ஊனமான ஒருத்தியின் வாழ்க்கைப்பாடுகள். 21 வயதில் 5 பிள்ளைகளுடன் போராடி, இறுதிவரை கம்பீரம் குறையாமல் பிள்ளைகளை முன்னேற்றி, வாழ்வில் ஜெயித்தவள் அவள். அவளின் துணிவும் கம்பீரமும் தெளிவும் பெண்கள் அனைவருக்குமானதொரு பாடம்.
      தொகுப்பின் தலைப்பு நல்ல தேர்வு. முன்னட்டை மற்றும் பின்னட்டை வடிவமைப்பும் நேர்த்தி. பின்னட்டையில்  கதாசிரியர்  படம் ரொம்பவே இயல்பாக வழக்கம் போல் அழகாக... ஈழவாணியின் சுருக்கமான வரிகள் உடனடியாக புத்தகத்தைப் புரட்டி உள்ளே நுழைத்துவிடுகிறது நம்மை. 
        பெண்ணாக வாழ்வதில் மகிழ்ந்த தருணங்களை விட வருந்தி அழுத தருணங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் அதிகமாகவே இருக்கிறது. கிருஷ்ணப்ரியாவாகிய நீங்களும் நிலாமகளாகிய நானும் இதற்கு உட்பட்டவர்களே. 
       சாமானியப் பெண்கள் அழுது அழுது கடந்திடும் பலவற்றை  எழுதி எழுதி ஆற்றிக் கொள்கிறோம் கதைகளாககவிதைகளாககட்டுரைகளாக...

நூல் வெளியீட்டு விழா காணொளி: https://www.youtube.com/watch?v=PD8is5kga0A

நூற் பெயர்:   நானும் என்னைப் போன்ற அவளும் (சிறுகதைகள்)
ஆக்கம்:      கிருஷ்ணப்ரியா (89399 98444)
பக்கங்கள்:   84
வெளியீடு:    பூவரசி பப்ளிகேஷன்ஸ், (96001 31346)
                   அண்ணா நகர்சென்னை-02.
விலை:        ரூ.100/-

# உலகப் பெண்கள் தின வாழ்த்துக்கள்!
               
8 கருத்துரைகள்
  1. 'நானும் என்னைப் போன்ற அவளும்' என்ற சிறுகதைத் தொகுப்பினை நன்கு அலசி ஆராய்ந்து, மிக அழகாகத் தங்கள் பாணியில் விமர்சனம் செய்துள்ளது மிகச் சிறப்பாக உள்ளது.

    அந்த சிறுகதைத் தொகுப்பு நூலை உடனடியாக வாங்கிப் படிக்கணும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியுள்ளது.

    நூலாசிரியர் அவர்களுக்கும், தங்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. சுருக்கமான அழகான நூல் விமர்சனம்... நன்றி... ஆசிரியருக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. வாசிக்கத் தூண்டும் நூல் அறிமுகம் & விமர்சனம். நன்றி தோழி. நூலாசிரியர் கிருஷ்ணப்ரியாவுக்கு வாழ்த்துகள்.

    \\சாமானியப் பெண்கள் அழுது அழுது கடந்திடும் பலவற்றை எழுதி எழுதி ஆற்றிக் கொள்கிறோம் கதைகளாக, கவிதைகளாக, கட்டுரைகளாக...\\ முத்தாய்ப்பாய் நீங்கள் இங்கே குறிப்பிட்ட வரிகள் இன்றைய சூழலில் பல பெண் படைப்பாளிகளின் நிலையை அப்பட்டமாய் விளக்கும் வரிகள்...

    ReplyDelete
  4. அருமையான விமர்சனம்.
    வாழ்த்துக்கள் கிருஷ்ணப்ரியாவிற்கும், உங்களுக்கும்.

    ReplyDelete
  5. என் பிரிய நிலா....
    இன்று தான் இந்த பதிவைப் பார்க்கிறேன்... மனம் நெகிழ்ந்த நன்றிகள் நிலா.. என்னை எப்போதும் ஊக்கபடுத்தும் உங்கள் வரிகள். இப்போது கூடுதலாக பெரு மகிழ்ச்சியில் திளைக்க வைக்கிறது...

    ReplyDelete
  6. வாழ்த்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  7. வாழ்த்துக்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  8. மிக அழகான அறிமுகம்.சபாஷ்! இப்படி ஒரு அறிமுகம் வாங்கவே புத்தகம் எழுதலாம்.

    ReplyDelete