செடி காப்பாத்திடுச்சு...!!



அனைவருக்குமான கொண்டாட்டமாக ஆங்கிலப் புத்தாண்டு துவக்கம்!

ஆன்மீக அன்பர்களுக்கோ வைகுண்ட ஏகாதசி!

எங்க வீடருகே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீநிவாசப் பெருமாள் வெகு உற்சாகமாக இருக்கிறார்.

புல் டோசர் வைத்து நிரவப்பட்ட தெருவின் புதுப் பொலிவு.

புது வண்ணத்தில் கோயில் சுவர்.

தெரு வியாபாரிகள் காலையில் இருந்தே தத்தமது கடை விரிக்க இடங்களை தயார் செய்தபடி இருக்கின்றனர். தின்பண்டங்கள், பெண் குழந்தைகளுக்கான அலங்காரப் பொருட்கள், அவல் பொரி கடலை தள்ளுவண்டிகள், பலவகைக் காய்கறிக் கடைகள், பூசை பொருட்கள், சிறு குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள்,   வண்ணக் கோலப் பொடிப் பொதிகள், என ஒரு தற்காலிக அங்காடி உருவாகிக் கொண்டிருக்கின்றது. 

அரை ஆண்டு விடுமுறையில் உடனிருக்கும் அவர்களின் பொடிசுகள் அங்குமிங்கும் ஓட்டம். ஒரு குட்டிப் பையன் பலூன்களை ஊதிக் கட்டிக் கொண்டிருந்த தன் தகப்பனிடம் வேண்டிப் பெற்ற ஒரு மஞ்சள் நிற பலூனை  நீளமானதொரு நூலில் பிணைத்து விளையாடுகிறான். காற்றின் ஓட்டத்தில் பலூனை கீழே விடாமல் தட்டி விளையாடுவதில் இருக்கிறது அவனது கவனம்.

அருகில் ஒரு தள்ளுவண்டியில் மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் செய்யத் தேவையான பொருட்கள். காவலுக்கு இன்னொரு பொடியன். இரு பொடியன்களுக்கும் ஆனதொரு இனிய ஒப்பந்தப் படி சிப்ஸ் கடைப் பையனுக்கு  பலூன் விளையாட்டுக்கு வாய்ப்பு வருகிறது . (இவனது அப்பா சிப்ஸ் பொரிக்கத் தொடங்கியதும் தனக்குத் தின்னத் தரும்  சிப்ஸில் பலூன் பையனுக்கும் ஒரு பங்கு)

பலூன் பையன் தள்ளு வண்டியிடம் நின்றாலும் கண்களும் மனசும் தன் பலூன் மேல் தான்.

சிப்ஸ் காரர் பையன் விளையாடும் ஆர்வத்தில் பலூனை ஓங்கித் தட்ட உயர எழும்பிய பலூனை காற்றும் தன்பங்குக்கு அடித்து ஆடுகிறது. பின் தொடர்கிறான் சிறுவன். இரு பொடியன்களையும் திகைப்பூட்டி அருகாமை வேலி மேல் செல்கிறது பலூன். பதறி ஓடும் இருவரையும் ஆசுவாசப் படுத்தும்படி  வேலியினருகில் இருந்த குத்துச் செடியில் தவ்வியது முட்களுக்கு தப்பிய பலூன்.

தாவிப் பிடித்தவன் சொல்கிறான், 'செடி காப்பாத்திடுச்சு டா... செடி காப்பாத்திடுச்சு!'

நம்மையும் காப்பாற்ற இந்த பூமித் தாய் தன் மடி வளர்க்கும் தாவர இனங்கள் பலவற்றைப் பொதித்து  வர இருக்கின்றன இனிவரும் சில பதிவுகள். அவற்றின் தாத்பர்யம் உணவே மருந்தாக. மருந்தே உணவாக.

நலம் பெருக வருக புத்தாண்டே!




6 கருத்துரைகள்
  1. வணக்கம்.

    இனிய புத்தாண்டு + வைகுண்ட ஏகாதசி நல்வாழ்த்துகள்.

    HAPPY NEW YEAR 2015 ! :)

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தங்களுக்கும், பதிவுலக நட்புகள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. வணக்கம்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete