பொரி




ஒவ்வொரு பண்டிகைக்கும் நிவேதனம் செய்து உண்ண வேண்டியவை என்றொரு பட்டியல் நம்மிடம் உண்டு.

இன்றைய கார்த்திகை தீபத் திருவிழாவில் பிரதான இடம் வகிக்கிறது அவல் பொரி. அகல் விளக்குகளும் வண்ணக் கோல மாவுப் பொடிகளும் தெருவெங்கும் கூவிச் செல்லும் சிறு தெருவியாபாரிகள் ஓய்வெடுக்க இரவாகிவிடும். கையிருப்பை விற்குமட்டும் நாலு தெரு சுற்றியாக வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு.

கடைத்தெருவுக்கு சென்றாலும் நெற்பொரியும், அவல்பொரியும், வெல்லமும், வாழையிலையும், விதவிதமான வடிவங்களில் அகல் விளக்குகளும், வாழைத் தார்களும் தப்படிக்கு ஒன்றாக குவித்து வைக்கப் பட்டு மும்முரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சரஸ்வதி பூஜையில் முன்னணியில் நின்ற அரிசிப் பொரி இன்று கேட்பாரற்று பட்டாணிக் கடைகளில் ஒரு ஓரமாக ஒதுங்கி இருக்கிறது. வருடமெல்லாம் தேவைப்படும் பூக்காரர்களுக்கும் தனிக் கொண்டாட்டம் தான்.

கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

அந்தப் பொரியுடன்  வெல்லப்பாகு, தேங்காய், பொட்டுக்கடலை, ஏலக்காய், எள் எனப் பலவற்றையும் சேர்த்து சுவைகூட்டியபிறகே இறைவனுக்கு படைக்கிறோம். இத்தனையும் சேர்த்து உருண்டையாக்கி அதன் மதிப்பை கூட்டவும் முடிகிற நமக்கு ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும். மனிதனும் சக உயிர்கள் மேல் அன்பு, கருணை, இரக்கம், ஈகை போன்றவற்றைக் கைக் கொண்டு உன்னத நிலையடைய முனைய வேண்டுமல்லவா!

தீப ஒளி பரவட்டும் உலகெங்கும் தீமையழித்து...!
தீப ஒளி பரவட்டும் மனசெங்கும் மேன்மையளித்து...!!


4 கருத்துரைகள்
  1. கெட்டி அவல் பக்குவமாய் தணலில் பொரிக்கப்பட்டு தன்னளவில் பெரிதாகி உள்ளுக்குள் கனமற்றிருப்பது, மனிதன் தன் ஆணவம் கண்மம் மாயை போன்றவற்றை அனுபவ அடுப்பில் அறிவெனும் பெருநெருப்பில் புடமிட்டு மனசும் உடம்பும் கனமற்று இருக்க விழைய வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி நிற்கிறது.

    சிறப்புமிக்க விளக்கத்திற்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. // ஒற்றுமையின் மகிமை புரிய வேண்டும்... //

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அவல்பொரியின் தத்துவம் மிக அழகான விளக்கம் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  4. கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete