இன்றைய நிம்மதி எதில்?


       ‘சந்தால்' பழங்குடியினப் பெண் எழுதிய கவிதையொன்றை அம்பை மொழிபெயர்ப்பில் சமீபத்தில் வாசித்தேன். திருமண வயதை எட்டிய அப்பெண் தன் தந்தையிடம் எப்படிப்பட்ட மணமகனை தனக்காக தேட வேண்டும் என்று சொல்வதாக அமைந்திருக்கும் அந்தக் கவிதை. அம்பையின் வார்த்தைகளில் இதோ அந்தக் கவிதை...

அப்பா,
உன் ஆடுகளை விற்றுத்தான்
நீ என்னைப் பார்க்க வரமுடியும்
என்ற தொலைதூரத்தில்
என்னைக் கட்டிவைக்காதே!

மனிதர்கள் வாழாமல்
கடவுள்கள் மட்டும் வாழும் இடத்தில்
மணம் ஏற்பாடு செய்யாதே!

காடுகள், ஆறுகள், மலைகள் இல்லா ஊரில்
என் திருமணத்தை செய்யாதே!

நிச்சயமாக,  எண்ணங்களை விட வேகமாய்
கார்கள் பறக்கும் இடத்தில்...
உயர்கட்டடங்களும், பெரிய கடைகளும்
உள்ள இடத்தில் வேண்டாம்!

கோழி கூவி பொழுது புலராத,
முற்றமில்லாத வீட்டில்,
சூரியன் மலைகளில் அஸ்தமிப்பதை
கொல்லைப்புறத்திலிருந்து பார்க்க முடியாத வீட்டில்
மாப்பிள்ளை பார்க்காதே!

இதுவரை ஒரு மரம்கூட நடாத
ஒரு பயிர்கூட ஊன்றாத,
மற்றவர்களின் சுமைகளைத் தூக்காத,
‘கை' என்ற வார்த்தையைக் கூட எழுதத் தெரியாதவன்
கைகளில் என்னை ஒப்படைக்காதே!

எனக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்றால்,
நீ காலையில் வந்து அஸ்தமன நேரத்தில்
நடந்தே திரும்பக் கூடிய இடத்தில் செய்துவை!

இங்கே நான் ஆற்றங்கரையில் அழுதால்
அக்கரையில் உன் காதில் கேட்டு
நீ வர வேண்டும்!
________________

என்ன அழகான வீரியமான சிந்தனைகள் அப் பழங்குடியினப் பெண்ணுக்குள்!

(நண்பரின் மகள் வந்திருந்தாள் வீட்டுக்கு. நல்ல படிப்பு; கைநிறைய சம்பளம் வரும் வேலை. 24 வயது.
“அடுத்து, அப்பாவோட  வேலை உனக்கு வரன் பார்க்க வேண்டியது தானா?” என்றேன்.
“இல்ல, ரெண்டு மாசத்தில் வரப்போகும் இண்டர்வியூவில் செலக்ட் ஆகிடுவேன். ஒரு மூணு வருடமாவது அமெரிக்கா போய் சம்பாதித்து வீடு வாங்கிய பிறகுதான் கல்யாணமெல்லாம்...” என்கிறாள்! )
8 கருத்துரைகள்
  1. மிக அழகான பதிவு. இந்தப்பெண் கூறுவது போலவே எனக்கும் என் மனைவிக்கும் வாழ்க்கை அமைந்துள்ளது எங்கள் அதிர்ஷ்டம் என்றே நினைத்து தினமும் மகிழ்கிறோம்.

    உறவினர்களை ஒருநாளும் பிரியாத வாழ்க்கை என்றால் இது தானே !

    இதுபோலெல்லாம் எல்லோருக்கும் அமையுமா என்ன ?

    என் மனம் கவர்ந்த இந்தப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete
  2. தலைப்பும் மொழிபெயர்ப்பும் மிகவும் அருமை.

    கணவன் மனைவி + இதர நெருங்கிய சொந்தங்கள் இங்குமங்கும் பிரிந்து .... நாடு நாடாகச் சென்று .... சம்பாதிப்பதில் என்ன நிம்மதி கிடைத்துவிடப்போகிறது ?

    ஒருபோதும் கிடைக்கவே கிடைக்காது தான்.

    ReplyDelete
  3. @வை.கோபாலகிருஷ்ணன்

    இன்று போல் என்றும் வாழ்க வளமுடன்!!

    'நான் வெகு சுகமாய் இருக்கிறேன்' என்று சொல்லிக் கேட்கவும் ஒரு நிறைவு வருகிறது. எண்ணம் போல் வாழ்வு!!

    ReplyDelete
  4. அழகான வீரியமான சிந்தனை பழ்ங்குடியின பெண்ணுக்கு..

    புதுமைப்பெண்ணுக்கு நவீன சிந்தனை ..

    காலத்தின் முன்னேற்றம்.!

    ReplyDelete
  5. பழங்குடியினப் பெண் எழுதிய கவிதை கண்களில் நீர் கசிய வைத்து விட்டது.
    மிக அருமை.

    ReplyDelete
  6. வணக்கம் நிலா!

    அழகான கவிதை.

    ஒரு சிறு வணிக சஞ்சிகையில் பார்த்தேன். கிராமத்துக்குப் போனால் ஏன் மெலிந்து போனாய் என்று கேட்கிறார்களாம். நகரப் புறத்துக்குப் போனால் ஏன் வெயிற் போட்டுவிட்டாய் என்று கேட்கிறார்களாம்.

    அவரவர் வட்டம் அவரவருக்கு போலும்!

    இன்னுமொரு பண்பாட்டுக்கும் வாழ்வது தான் அதை விடப் பெரும் சிரமம் நிலா. ஊரில் வாழக்கிடைத்தவர்கள் பெரும் பாக்கிய சாலிகள்! உண்மையாக!!

    ReplyDelete
  7. மனதில் நிலைத்திருக்கும் கவிதை! அருமை

    ReplyDelete