ஒரு தூரிகையின் சிலிர்ப்பில் தெறித்த சில கவிதைகள்

நூல் பெயர்:எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை
ஆசிரியர்:- ப. தியாகு (80123 30511)
வெளியீடு: வெயில்நதி (99411 16068)
பக்கங்கள்: 80
விலை: 70/-

        “பார்த்ததில் பார்க்காததையும், கேட்டதில் கேட்காததையும் உணர வைப்பது கலையின் அடிப்படைச் செயல்பாடு” என அணிந்துரையில் இருவரியில் அடக்குகிறார் கவிதைவெளியில் நெடுந்தூரம் பயணித்திருக்கும் திரு.சமயவேல்.
        நிலா உடைய, சூரியன் சிதறியதாம். என்னடா இது அதிசயம் என்று பார்த்தால், நிலா வடிவ கோழிமுட்டையொன்று கைதவறி விழ, உள்ளிருந்த மஞ்சள் கரு சிதறி கவிச்சை வாடையோடு சூரியன் தகிப்பது போல் தெரிந்திருக்கிறது தியாகுவின் கவிமனசுக்கு.
         மரக்கிளைகளில் பச்சைப் பாம்பு போலவும் சிறுகொடிபோலவும் தோற்றப்பிழையாக ‘நீ' எனக்கு யாதுமாகி நின்றாய் என்பதாக மற்றொரு கவிதை. ‘நீ' மனம் கவர் காதலியாகவுமிருக்கலாம்; மனதுக்கினிய மழலையாகவுமிருக்கலாம். வரிகளில் வழியும் கவித்துவம் வாசிப்பவர் மனசை சிலுசிலுக்கச் செய்கிறதென்பதை மறுக்க முடியுமா?!
        கூண்டுப் பறவை ஆரூடம் மட்டுமா சொல்கிறது?
யாருடைய கவிதைவரிகளிலும் சிறகசைக்கவும் தானே செய்கிறது...! கூண்டுப் பறவையின் குஞ்சுகளுக்கும் அதே கதியென்பது ஒரு சோகமெனில், அவற்றுக்கு தாய்ப்பறவை சொல்லும் சமாதானமாக ‘வேடன் விரித்த வான்வலையில் சிக்காமல் தப்பினோம்' என்பதை படிக்கையில், இருப்பதைக் கொண்டு திருப்தியடையும் நம் மனோபாவத்தை வேறு வழியற்ற அதுவும் கைக்கொண்டிருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
    மூடியே கிடக்கும் கைவிடப்பட்ட வீட்டினுள் கதிர்ப்பாதம் புக வழிசெய்த விளையாட்டுப் பிள்ளையொருவனின் பந்து நேசிக்கப்பட வேண்டியதொன்றாகிறது.
         வாழ்வது பற்றிய கற்பிதங்களிலிருந்தும் வாழ்வாதாரங்கள் பற்றிய குறுக்கு விசாரணைகளிலிருந்தும் அவ்வப்போதேனும் நம்மை துண்டித்துக் கொள்ள இப்படியான கவிதைகளில் ஆசுவசம் கொள்ள வேண்டியிருக்கிறாது.
       ‘டிசம்பர் மாத வாத்து' என் சிறு பிராயத்தில் மழை பொழியா நாட்களிலும் காலைக்கடனாக தினசரியின் தேதித் தாள் கிழித்து கர்மசிரத்தையாக செய்த கப்பல்களை நினைவுச்சுழலில் நனைத்தெடுக்கிறது.
         தினம் நான் இறைக்கும் பிடிதானியம் வரும் குருவிகளின் பசியாற்றுவதாய் இதுநாள் வரை நினைத்திருந்தேன். என் ரசனையின் பசியாற்றிப் பறந்த அக்குருவிகளை இன்றே உங்கள் கவிதை வழி தரிசித்தேன்.
         சிறகுகள் இருப்பினும் தேன்சிட்டுகள் பூக்களின் தேன் உறிஞ்சுவது தம் நீள் அலகுகளால் தான். கற்பனையின் உச்சம் தொட இச்சைப்படும் கவிஞனுக்கும் வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்ய வருமானமும் அதற்கொரு பிடிமானமும் வேண்டியதாகிறது.
        அழகியல், ரசனை, அனுபவம், நவரசம் மட்டுமின்றி தத்துவமும் ஞானமும் கைவரப் பெற்றிருக்கிறீர்கள் என்பதை ‘இளநீர்க் கூடன்றி வேறென்ன இந்த தேகம்' என்பதிலும், ‘வாழ்வை போதிக்கும் விளக்கின் திரியினூடாடி வெளியேறிக் கொண்டிருக்கும் உயிர்த் திரவத்தில் மரணத்தை தரிசிப்பதிலும்' அறிதலில் நின்று நிமிர்ந்து பார்க்கிறேன் நான்.
        இயேசுநாதர் உயிர்த்தெழுந்தது அற்புதம். நம் குழந்தைகளின் விளையாட்டில் நாம் உயிர்த்தெழுவது வேடிக்கை. நாட்டுக்காக, மொழிக்காக, இனத்துக்காக பலியானவர்களெல்லாம் உயிர்த்தெழ முடிந்தால்...?! நிராசையின் பிதற்றல்.
     ‘பனித்திவலை' தலைப்பிட்ட கவிதையில்(நடுவே விழியாயிருந்து / மருளும் / விரிந்த இலைத் திரை மீதிலொரு / பனித்திவலை / சூரியனிடமிருந்து / நீண்டு வருகின்றன / கூர் நகங்கள்) செறிவானதொரு கற்பனையும் கருத்தும் அழகியலும் அணிநயமும் காண முடிகிறது.

     மேலும், ‘பனித்துளி' கவிதை வாசித்தபின் மனதின் அசைபோடலில் அப்துல்ரகுமானின் (மின்மினிகளால் ஒரு கடிதம்) கீழ்க்கண்ட கவிதை வரிகள் நினைவுப் பரப்பில் உலவின.

*பூக்களின் மேல்/பனித்துளிகள்/இரவின்/ரகசியக் கடிதம்
*இந்தப் பனித்துளிகள்/ இரவு யாருக்காகவோ/ அழுதிருக்கின்றன/என்னைப் போலவே
*சிரிப்பில் சுரந்த/ கண்ணீர் போல்/ பூவில் பனித்துளி
*பூவின் மேல்/ பனித்துளி போல்/ உன்மீது/ என் கவிதை
   
    யானை, பள்ளி நிமித்தம் நிஷித்-ஐப் பிரிதல், போஸ்ட் ஆபீஸ், ரம்மியம், மான் மரம், பிள்ளைகள் இரயில், பைத்தியத்தின் வானம், பனித்துளி என முழுமையான மனதுக்கு இதமான மகிழ்வூட்டும் கவிதைகள் தொகுப்பை நிறைவுபடுத்துகின்றன .

     பானை சோற்றுக்கு இருசோறு பதமாய் கீழிரு கவிதைகள். மீதியை கவிதை நூலில் காண்க. அவரது வலைப்பூவிலும் பெரும்பாலும் காணலாம் நீங்கள்.

         'பள்ளி நிமித்தம் நிஷித்-ஐப் பிரிதல்' கல்விக்காக பிள்ளையைப் பிரிந்த ஒவ்வொரு பெற்றோரும் அனுபவித்தது.(http://pa-thiyagu.blogspot.in/2013/06/blog-post.html)

யானை

நின்றால் கோவில் முன்றில்
கிடந்தால் சுற்றுச்சுவரோர
கொட்டிலென்றான
யானைக்கெப்போதும் விருப்பம்
கானக வாசம்

ஆசி பெறவென
மனிதர் திரள் முன்னிற்கையில்
அது
தன் கூட்டத்தை
நினைத்துக் கொள்கிறது

தூண்கள் தாங்கும்
கூரையினடியிலிருந்து
அது
தன் அடவியின் முடிவுறாத
பச்சை வானத்தை
மனத்தின்கண் மீள்பார்வை பார்க்கிறது

நீளம் காலம் அறிந்திராததும்
திசைகளைக் கணக்கில் கொண்டிராததுமான
முன்னாட்களின் பயணங்களை
நின்றவிடத்திலிருந்து அசைபோடுகிறது

மழை நாளில் மட்டும்
கொட்டிலோரம்
கொஞ்சம் தேங்கும் நீரில் தோன்றும்
இன்னொரு யானை
இதனைத் தேற்றுகிறது.
-----------------

பனித்துளி

பனித்துளி-
புல்லின் விரலில்
வெள்ளிக்கல் மோதிரம்
அணிவிக்கும்

இலைக்கண்ணில்
ஆனந்தக் கண்ணீர் பெருக்கும்

பூவிதழ் சருமத்தில்
முத்தாய் வியர்க்கும்

கொடியில்
கொஞ்ச தூரம் சறுக்கும்

பனித்துளி-
வயிறு நிரம்ப
வெயிலைத் தின்னும்

வயிறு முட்ட
வெயிலைக் குடிக்கும்

வெயிலையுடுத்தி மறையும்
பனித்துளி.
---------------------

 தியாகுவின் வலைப் பூ முகவரி:
'வானவில்லில் தோய்வதான கனவிலிருக்கும் தூரிகை' 

 http://pa-thiyagu.blogspot.in/


11 கருத்துரைகள்
  1. நிச்சயம் வாங்கிப் படிக்கவேண்டும்
    என்கிற எண்ணம் ஏற்படுத்திப்போகும்
    அற்புதமான அறிமுக விமர்சனம்
    வாங்கிப் படித்துவிடுவேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மகிழ்வும் நன்றியும் ஐயா!

    ReplyDelete
  3. ரசிக்க வைக்கும் விமர்சனம் செய்தது மட்டுமில்லாமல் தள அறிமுகமும் அனைவருக்கும் தொடரவும் உதவும்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. பனித்துளி-
    புல்லின் விரலில்
    வெள்ளிக்கல் மோதிரம்
    அணிவிக்கும்
    அழகான வரிகள்..
    சிறப்பான விமர்சனம் ..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  5. படிக்கத் தூண்டுது.
    நிலா - சூரியன் கற்பனை நயம் சாகும் வரை நினைவிலிருக்கும்.

    ReplyDelete
  6. தூரிகையின் சிலிர்ப்பில்.. தலைப்பு நன்று.

    ReplyDelete
  7. அழகான விமர்சனம். தியாகுவின் கவித்துவம் மிக இயல்பாய் மலரும் வரிகளில். வாசிப்பின் ரசனையில் தோயலாம் ஆனந்தமாய் !

    ReplyDelete
  8. @ திண்டுக்கல் தனபாலன்...

    தங்கள் தொடர் வருகையும் உற்சாகம் தரும் பின்னூட்டமும் தியாகுவுக்கும் புளங்காகிதமே பாலாண்ணா.

    @ இராஜராஜேஸ்வரி...

    தொடர் வருகையும் கருத்தும் மகிழ்வை தருபவை தோழி!

    @ அப்பாதுரை...

    இரு முறை வந்து படிக்கும் அளவில் பதிவு அமைந்துள்ளது நிறைவும் மகிழ்வும் சார்.

    @ ரிஷபன்...

    ரிஷபன் சாரை வலைப் பக்கம் வெகு நாட்களுக்குப் பின் வரவழைத்தமைக்காக தியாகுவுக்கு நன்றி சொல்ல வேண்டும் நான்! தியாகுவுக்கான வருகைக்கு நன்றி சார்!

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்... உடனே வாங்கிப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தியது..

    ReplyDelete
  10. ப. தியாகு அவர்களின் கவிதைகள் யாவுமே மனம் ஈர்ப்பவை. அற்புதமான கவிதைகளுக்கு உங்கள் விமர்சனம் இன்னும் அழகு சேர்க்கிறது. திரு. சமயவேல் அவர்களின் அணிந்துரை வரிகளை மெய்ப்பிக்கின்றன கவிதைகளும் உங்கள் விமர்சனமும். நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  11. சிறப்பான நூல் அறிமுகம். யானை பற்றிய கவிதை படித்ததும், திருவரங்கம் கோவில் யானை கோவிலுக்குள் நின்று கொண்டு இருக்கும் காட்சி மனதினுள்.......

    இதுவரை இவர் எழுத்தினை படித்ததில்லை. அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete