ஒலித்துக் கொண்டேயிருக்கும் 'அவர்களின்' குரல்....

      நேற்று (23.09.2014) கடலூர் அரசு காதுகேளாதோர்  வாய்பேசாதோர்  பள்ளி சென்றோம்.
(Cuddalore deaf and dumb school) தொடர்பு எண் : 04142-221744

ஆசிரியர் மாணவர்களுடன் என் மகளும் (தலைமை ஆசிரியை அருகில்)

மதியம் அவர்களுக்கு உணவளித்து அவர்களோடு உண்டு, பேசி மகிழ்ந்து கழிந்த பொழுது நினைவில் நெடுநாள் நிற்கும்.

பாருங்க... இந்தப் பெண் வளர்ந்து நிற்கும் அழகை...!

அன்று

இன்று .

தத்தம் உடற்குறையை பொருட்படுத்தாது சத்தம் அவசியமற்ற உடல்மொழியால் அவர்கள் சம்பாஷிக்கும் உற்சாகம், சதா சர்வகாலமும் பேசவும் கேட்கவுமாயிருக்கும் நம்மையும் சட்டென பற்றிக் கொள்கிறது. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...

அங்கிருக்கும் ஆசிரியர்களும் உணவு மற்றும் பராமரிப்புப் பணியிலிருப்பவர்களும் போற்றத் தக்கவர்கள். வேலையை வேலையாக மட்டும் செய்யாமல் காருண்யத்தோடும் செய்ய வாய்ப்பு பெற்றவர்கள்.


சில வருடங்களுக்கு முன் மகள் பிறந்த நாளில் அக்குழந்தைகளுக்கு வரைபொருட்களும் கைவினைப் பொருட்கள் செய்ய உபகரணங்களும் வாங்கித் தந்திருந்தோம். பள்ளியின் கைவினை ஆசிரியர் அதை நினைவு படுத்தி, அக்குழந்தைகள் அவற்றை வைத்து செய்தவற்றை காட்டினார். எங்களுக்கு அதிலிருந்து இரண்டு பொருட்கள் தந்தபோது அப்பரிசு மிக்க நெகிழ்வளிப்பதாய் இருந்தது.


பள்ளியின் கைவினை ஆசிரியை


மகளுக்கு அவர்களுடன் பேசி மகிழ்ந்திருக்க ஒரு சிலேட்டும் பல்பமும் உதவியது. நம்முடன் மனம் பகிர அவர்களுக்கு அன்பு ஒன்றே போதுமானதாயிருந்தது. கணவர் மாணவர்களிடையே கலந்து பல செய்திகளை, உபகரணம் தேவையற்ற விளையாட்டுக்களை பகிர்ந்து கொண்டார், அவர்களின் சைகை மொழியிலேயே. பதிலுக்கு அவர்கள் அறிந்தவற்றை உற்சாகமாக பகிர்ந்தனர் அச்சுட்டிப் பிள்ளைகள்.

மகள் கைமருதாணியை காட்டி ஒரு பையன், ‘இது அம்மியில் தண்ணீர் தெளித்து அரைப்பது தானே... நான் பார்த்திருக்கேன். எனக்குத் தெரியும்' என்று சைகையில் பெருமைப்பட்டுக் கொண்டான். அவன் அம்மி அரைத்து, தண்ணீர் தெளித்து மறுபடியும் அரைத்துக் காட்டியதை சொல்லிச் சொல்லி வியந்தாள் மகள்.

அவர்களைப் புகைப்படமெடுத்து அவர்களிடம் உடனடியாகக் காட்டியபோது ‘தான் நன்கு போஸ் கொடுத்திருப்பதாக' மகிழ்ந்து காலரைத் தூக்கி தூக்கி விட்டுக் கொண்டு நண்பர்களிடம் சொல்லிக் கொண்டான் ஒருவன்.

படைத்தவனின் மனக்கணக்கை யோசித்தபடி பார்த்திருந்தேன் நான். கைக்குட்டையால் முகம் துடைத்த என்னைக் கூப்பிட்டு, ‘அழறீங்களா? அழக்கூடாது' என்றாள் ஒரு பெண். அப்போது தான் அழவேண்டும் போலிருந்தது எனக்கு.

மகளின் படிப்பு  பற்றி விசாரித்த ஆசிரியையிடம் எழுந்து சென்று பேசிக் கொண்டிருந்தவளுக்கு அவசரமாய் நாற்காலி எடுத்துப் போய் போட்டு அமரச் செய்த இன்னொரு பெண்ணின் ப்ரியம் மனசில் ஏந்த எளிதாக இல்லை.

26ம் தேதி வெள்ளிக் கிழமை எல்லோரும் விடுமுறைக்காக வீடு செல்லவிருப்பதாகவும், அவரவர் பெற்றோர்/பாதுகாவலர் வந்து அழைத்துச் செல்வர் என்பதையும் பகிர்ந்து கொண்ட பெண்ணின் முகமொழிகளுக்கும் மகிழ்வுக்கும்  இணையேது!

ஒரே குடும்பத்தில் பிறந்த சகோதர சகோதரிகள் மூவர் அப்பள்ளியில் இருந்தனர். இன்னும், இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்த ஒரு பெண்ணும் ஆணும் செவித்திறனும் பேச்சுத் திறனுமற்றிருந்ததை கேட்டறிந்த போது மனம் கனத்துப் போனது.  அவர்களைக் கூப்பிட்டுக் காட்டியபோது வாயடைத்துப் போனேன். அவர்களின் பெற்றோரை எண்ணி கலங்கித் தான் போனேன்.

சாப்பாடு பரிமாறியபின் அனைவரும் எழுந்து நிற்க, ஆசிரியை எங்களை அறிமுகப்படுத்தி, எங்கள் நலனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கச் சொல்லி குரல்வழியும், சைகை மொழியிலும் கூற அவர்கள் கோரஸாக கைகூப்பி குலவையிடுவதுபோல்  ஒருதினுசில் குரலெழுப்பிய போது, அவர்களுக்காக பிரார்த்தித்தது மனசு.

மஹாள ய அமாவாசையில் எங்கள் போக்கில் இதுவொரு பித்ரு காரியமாக அமைந்தது. சர்வ தேச காதுகேளாதோர் வாரம்  ஆண்டுதோறும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் கொண்டாடப் படுகிறதாம்... 1951-ம் ஆண்டிலிருந்து!! அதுவும் சேர்ந்து கொண்டது பாருங்கள் இந்த நிகழ்வில்!!!

புலம்பல், புகார் அற்ற அவர்களின் உலகில் சில மணி நேரம் இருந்து வந்தது வாழ்தலின் நெருடல்களைக் களைந்து நிறைவை அதிகரித்தது.



5 கருத்துரைகள்
  1. மகிழ்வென்பது கிடைப்பதில் திருப்தியுடனிருப்பதில் தானே...
    மஹாள ய அமாவாசையில் பித்ரு காரியமாக அமைந்த காருண்யம்மிக்க சிந்தனை.. வாழ்த்துகள்.!.

    ReplyDelete
  2. //மஹாளய அமாவாசையில் எங்கள் போக்கில் இதுவொரு பித்ரு காரியமாக அமைந்தது.//

    மஹாளய அமாவாசையில் மஹத்தானதோர் காரியம்தான் செய்துள்ளீர்கள்.

    //புலம்பல், புகார் அற்ற அவர்களின் உலகில் சில மணி நேரம் இருந்து வந்தது வாழ்தலின் நெருடல்களைக் களைந்து நிறைவை அதிகரித்தது.//

    உண்மைதான். இதைக் கா தா ல் கேட்கவே எனக்கும் ஒரே மகிழ்ச்சியாக உள்ளது.

    முற்றிலும் வேறொரு உலகத்திற்கு என்னையும் அழைத்துச்சென்று காட்டியுள்ள தங்களின் அழகான இந்தப் பகிர்வுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  3. தே அனுபவம் எனக்கும் கிடைத்திருக்கிறது! அவர்கள் உலகம் நம் உலகைக்காட்டிலும் அழகு என்பேன் நான்!

    ReplyDelete
  4. பள்ளிக்குச் சென்றது அழகு, மகளோடு சென்றது அதைவிட அழகு , மகளின் ரசனை மனதை வெல்ல, தாயின் உணர்வு நிறைவு. A thousand cheers to u both!

    ReplyDelete
  5. மனதைத் தொட்ட பதிவு.

    அவர்களின் உலகம்....

    தில்லியில் உள்ள ஒரு கண் பார்வையற்ற குழந்தைகளின் விடுதியில் இப்படி ஒரு நாள் உணவு கொடுத்தபோது எனக்குக் கிடைத்த உணர்வு.... இப்போதும் இந்த பதிவினைப் படித்தபோது...

    பாராட்டுகள் உங்கள் குடும்பத்தினருக்கும் பள்ளியை வழி நடத்தும் ஆசிரியப் பெருமக்களுக்கும்!

    ReplyDelete