பால் பானங்கள் சில...
தோல் நீக்கிய இஞ்சியை (ஒரு இஞ்ச்) நசுக்கி அரை டம்ளர் நீரில் காய்ச்சி வடிகட்டி, அரை டம்ளர் சூடான பாலில் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு அல்லது தேன் கலந்து பரிமாறவும்.
காலை காபிக்கு பதில் இதை தினசரி அருந்த, நெஞ்சு கரிப்பு, புளிஏப்பம், வாயு தொல்லை ஆகியவை நீங்கும். நல்ல பசி ஏற்படும். நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இஞ்சி ஒரு காய கல்ப மூலிகையாதலால் முதுமையைத் தள்ளிப் போடும். (அப்படிப் போடுங்க!)
பாதாம் பருப்பு 2, முந்திரிப் பருப்பு 4, கசகசா 1 டீஸ்பூன் இவற்றை ஊற வைத்து அரைத்து சூடான ஒரு டம்ளர் பாலில் கலந்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை வெறும் வயிற்றில் குடிக்க, வாய்ப் புண், வயிற்றுப் புண் குணமாகும். இதை தினமும் குழந்தைகளுக்குக் கொடுக்க புரதச் சத்து எளிதில் கிடைப்பதோடு நாள் முழுதும் உற்சாகமாகச் செயல்படத் துணைபுரிகிறது.
காம்பு நீக்கப்பட்ட ஐந்து செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர் விட்டுக் காய்ச்சி அரை டம்ளராக்கி, பால் சர்க்கரை சேர்த்துப் பருகலாம். இது இதய நோயாளிகளுக்கு ஒரு சிறந்த மருந்து. மேலும், இரத்த அழுத்த நோயாளிகள், வெள்ளை படும் பெண்களுக்கும் ஒரு சிறந்த பானம். இதை தினம் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.
10 தாமரை இதழ்களை ஒரு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளர் ஆகும் வரை கொதிக்க வைத்து, வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து அருந்திவர ‘இதய கமல'மாகிய தாமரையால் இதய நோயாளிகளுக்கு நலம். தாமரைப் பூ இதழ்களை நிழலில் உலர்த்திப் பொடி செய்து கொண்டும் இவ்வாறு தயாரிக்கலாம்.
‘ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ' எனும் பழமொழிக்கிணங்க ஆவாரைப் பூ, இலை, பட்டை இவற்றை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொண்டு, இப்பொடியில் ஒரு டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க விட்டு வடிகட்டி பால் சர்க்கரை சேர்த்து வெறும்வயிற்றில் தினசரி பருகிவர, உடல் வறட்சி, அடங்காத தாகம், மூச்சுத் திணறல் ஆகியவை நீங்கும். தோல் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் இதை தினமும் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க, நீரிழிவு கட்டுப்படும். நல்ல சுறுசுறுப்பை உண்டாக்கும்.
கொத்துக்கடலை ஒரு கைப்பிடி எடுத்து இரவில் ஊறவைத்து விடவும். 4 அத்திப்பழங்களைத் துண்டாக்கி கடலையுடன் ஊறவிடவும். மறுநாள் காலை இக்கலவையை நன்கு வேக வைத்து வடிகட்டி சிறிது பால் சர்க்கரை சேர்த்து பருகி வர இரத்தம் தூய்மையடையும். உடல் திசுக்களுக்கு வளர்ச்சி அளித்து சுறுசுறுப்பை உண்டாக்கும். இரத்தப் பற்றாக்குறையுள்ளவர்கள், மாதவிடாய் கோளாறுள்ளவர்களுக்கு இதுவொரு சிறந்த பானம்.
100 கிராம் வறுக்காத நிலக்கடலையை நீரில் ஊறவைத்து வடிகட்டி,ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஒரு நாள் முழுதும் வைத்துவிட்டால் மறுநாள் அது முளைவிட்டிருக்கும். அத்துடன் 2 முந்திரிப்பருப்பு 4 ஏலக்காய் சிறிது குங்குமப்பூ ஆகியவற்றைப்போட்டு நன்கு அறைத்துப் பாலெடுத்து சர்க்கரை சேர்த்துப் பருகலாம். (முளைகட்டிய பயிறை தினசரி தேவையானதை எடுத்துக்கொண்டு குளிர்பதனப்பெட்டியில் பத்திரப்படுத்திக்கொள்ளலாம்.)
இது குழந்தைகளுக்கு மிகச் சிறந்த பானம். நரம்புகளுக்கு நல்ல சக்தியளிக்கிறது. முளைகட்டிச் செய்வதால் கூடுதல் சத்துகள் பெற வாய்ப்புள்ளது.
100 கிராம் எள்ளை ஊறவைத்து முளைக்க வைத்துக் கொண்டு, சிறிது தேங்காய்த் துருவல், ஏலக்காய் கலந்து நன்கரைத்துப் பால் எடுத்துக் கொள்ளவும். சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் சேர்த்துப் பருகலாம். இது பருவமடைந்த பெண்களுக்கு சிறந்த பானம். ஒல்லியான குழந்தைகளுக்கு இதை தினமும் செய்து கொடுக்கலாம். (‘இளைத்தவனுக்கு எள்ளு' என்பதை நினைவூட்டிக் கொள்க.)
100 கிராம் கொள்ளை ஊற வைத்து முளைக்க வைத்து அத்துடன் சிறிது தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்றாக அரைத்துப் பாலெடுத்து , சிறிது வெல்லம் அல்லது பனைவெல்லம் கலந்து பருகி வர, மழைக்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பவர்கள், மூட்டு வலியுள்ளவர்கள், பக்கவாத நோயாளிகள் குணமடைவர்.
உடல் எடையைக் குறைக்க பிரயாசைப்படுபவர்கள் இதைத் தினம் பருகிவர பலன் உறுதி. (‘கொழுத்தவனுக்குக் கொள்ளு')
அடடே, வாங்க, வாங்க. இதோ கைப்பிடி புதினா இலைகளைக் கொதிக்க வைத்த நீரில் சிறிது எலுமிச்சை சாறும் சர்க்கரையும் (வெல்லம், பனைவெல்லம்) கலந்த சூடான புதினா தேநீர் குடிங்க. வயிற்றுக் கோளாறுகளுக்கு நல்லது. சூடாக பருகுவதால் எலுமிச்சை சாறு சளிபிடிக்குமென்ற பயமில்லை. வாய் துர்நாற்றம் போகும். நாள்முழுதும் புத்துணர்ச்சி. ருசியோ, தினம் தினம் பருகச் செய்யும். இரத்தம் விருத்தியாகும்.
என்னது... இன்னொரு டம்ளரா...!
இஞ்சி, பாதாம், புதினா தவிர மற்றதெல்லாம் புதிது... நன்றி...
ReplyDeleteஆரோக்கியபானங்கள் பகிர்வுக்கு நன்றி நிலாமகள். இங்கே அத்தி, ஆவாரை, தாமரை கிடைக்காது. இஞ்சி, புதினா தினசரி உபயோகித்தாலும் பானங்களாக இதுவரை உபயோகித்ததில்லை. முளை கட்டின பயிர் பால் புதிய செய்தி. விரைவில் ஒவ்வொன்றாக செய்கிறேன். நன்றிப்பா.
ReplyDeleteநமது மரபும், பழக்க வழக்கங்களும் ஒருபோதும் மனதுக்கோ, உடலுக்கோ ஊறு விளைவிப்பவை அல்ல. மாறாக நாம் பழகிக் கொண்டிருக்கும் அத்தனை பழக்கங்களும் நம் உடலையும், மண்ணையும், மனதையும் எத்தனை தூரம் பாதித்திருக்கின்றன என்ற விழிப்புணர்வு கெட்ட கீழ் மக்களாய்த் திரிகிறோம்.
ReplyDeleteநமது பாரம்பர்யத்தைப் பின்பற்றுவது இருக்கட்டும்; காட்டிக் கொள்ளவே கூச்சப்படும் அளவுக்கு நாம் சொரணையற்றுக் காயடிக்கப்பட்டிருக்கிறோம்.
அத்தனையும் தாகம் தணிப்பதுடன், உடல் நலத்தையும் மறைமுகமாகக் காப்பாற்றின. என் பள்ளிப் பருவத்தில் பருகிய பருத்திப்பால் காணாமலே போய்விட்டது. ஒவ்வொரு ஊரிலும் இறங்கும்போது அதைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.
வாழ்த்துக்கள் நிலாமகள்.
அருமையான பானங்கள்..!
ReplyDeleteபயனுள்ள பானங்கள்.
ReplyDeleteஎல்லாவற்றையும் உடனடியாகக் கலந்தடிக்கணும் போல ஓர் எழுச்சி ஏற்படுகிறது.
முதலில் ஸ்ட்ராங்காக ஒரு காஃபி நுரை பொங்கக்குடித்து விட்டு பிறகு ஏதாவது செய்ய முடியுமா என யோசிக்கிறேன்.
பகிர்வுக்கு நன்றிகள்.
அருமையான பானங்கள்.
ReplyDeleteகுறிப்களுக்கு நன்றி.
சுவையான பானங்கள் தயாரிக்கும் முறை அருமை .
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி தோழி .
சுவையான பானங்கள்.....
ReplyDeleteநெய்வேலி வந்தால் உங்கள் வீட்டுக்கு இந்த பானங்கள் குடிக்கவே வரவேண்டுமென நினைத்திருக்கிறேன்......
பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.
என்னைப்பொருத்தவரை எல்லாம் புதிதுதான்
ReplyDeleteசெய்து பார்க்க எண்ணம் இருக்கிறது
பகிர்வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
அநேகமாக இதெல்லாமே இங்கே தேநீர் பக்கெட்டுக்களாகக் கிடைக்கிறது நிலா !
ReplyDelete:) எல்லாம் சரிதான் நிலாமகள் மேடம், பொய் சுவைகளுக்கு / ரசாயன பானங்களுக்கு பழகிவிட்ட இந்த பாழாய்ப்போன ’நா’ மீறிப்போனால் ஒரு வாரம் மேற்கண்ட சுவைநீர் வகைகளுக்கு ஒத்துழைக்கிறது அப்புறம் பழையபடி, அப்போதைக்கு சுவைப்பது தவிர எந்த நன்மையும் பயக்காத பொய் சுவை பானங்களையே நாடுகிறது. நிறைய இழந்துகொண்டிருக்கிறேன்(றோம்) என்பது வருத்தம்தான். பகிர்வுக்கு நன்றிகள்! :)
ReplyDeleteஅருமையான பானகங்கள்.
ReplyDeleteதலைப்பைப் படிச்சுட்டு அவசரமா பதிவைப் படிச்சா.. நியாயமா?
ReplyDeleteகொள்ளுப்பாலா!! கொள்ளு போதைப் பொருள் இல்லையா?
இஞ்சித்தேநீர் செய்து பார்க்கத் தோன்றுகிறது.
நல்ல மருத்துவக்குறிப்பு,
ReplyDeleteஆயிரமாவது பதிவுக்கு
ReplyDeleteவாழ்த்துரைத்து சிறப்பித்தமைக்கு
மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள் ..!
இந்த குடி, குடிகளை வளர்க்கும் வளமாய்.
ReplyDeleteமரபையும், மண்ணையும், மான்பையும் மறக்காமல் சுவையையும் சேர்த்த உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
ReplyDelete