செண்பகவல்லி சீனிப்பயலுக்கு வாக்கப்பட்டு வருசம் ஆறாவுது. எதுக்கு இந்தக் கணக்கெல்லாம்? வானத்துப் பொறை வளர்றதும், தேயறதும் வழக்கம்தானே... ஒரே தினுசாவா இருக்கு மனுச வாழ்வு?! ஏத்தமும் எறக்கமும் எங்கேயும் உள்ளதுதானே... மேல் கீழாவும், கீழ் மேலாவும் ராட்டினம் சுத்துறாப்புல தானே நாம உழுந்து எழுந்து கிடக்க வேண்டியிருக்கு இந்த மண்ணுல...
ஆதியிலேயிருந்து சொன்னா உங்களுக்கும் புரியும்.
செண்பகவல்லிய செம்பா செம்பான்னு கூப்பிடுவோம். அவ கண்ணாலத்தப்போ வெடுக் வெடுக்குன்னு ஒட்டடைக் குச்சியாட்டம் இருப்பா. ஆனா நல்ல லட்சணம்! மான்குட்டி கணக்கா மருண்டு மருண்டு முழிச்சிகிட்டு, மயிலாட்டம் அவ நடந்து வந்த ஒயிலுக்கு ஊரே மூக்கு மேல விரல் வெச்சதுன்னா பாருங்க! ‘சீனிக்கு வந்த பவிசப் பாரேன்'னு ஒரு வாய் விடாம அனத்திகிட்டு கெடந்துச்சு.
செம்பாவோட ஆயி ஜெகதாம்பா, புதுப் பொண்ணு மாப்பிள்ளைய குடுத்தனம் வெச்சிட்டு போறச்சே, அக்கம் பக்கம் வூடுங்களுக்கு வலியப் போயி பேச்சு கொடுத்து சினேகிதமானா. தம் பொண்ணுக்கு அமயஞ்சமயத்துல ஒதவி ஒத்தாசையா இருக்கச் சொல்லி குழைவா கேட்டுகிட்டா. “நாங்களும் மக்க மனுசாக் கூடப் பொறந்தவங்க தானே... கவலைப் படாதீய... பார்த்துக்கறோம்”ன்னு தெம்பு சொல்றாங்க அக்கம்பக்கத்துல.
இந்த ஜெகதாம்பா இருக்காளே, ஒரு பாவப்பட்ட சென்மம். இவ புருசன் இவ வகுத்துப் புள்ளக்காரியா இருந்தப்ப தவிக்க விட்டுட்டு பரதேசியாப் போன மாபாவி. ரெண்டு உசிரை அம்போன்னு கெடாசிட்டு காசாயம் வாங்குன அந்தக் கழிசடை இப்ப இருக்கோ இல்லையோ! ஜெகதாம்பா நெத்திப் பொட்டுல மட்டும் நிலைச்சிருக்கான். தலைப்பிள்ளைக்காரியாச்சேன்னு ஊரு கூடி அவளுக்கு வளைகாப்பு செஞ்சதோட பூவாசம் மறந்தது அவ கொண்டை.
“புள்ளையப் பெத்திருந்தாலும் பின்னாடி உதவுவான். பொண்ணாப் போச்சே செகதம்”ன்னு பிரசவம் பார்த்த மருத்துவச்சி அங்கலாய்ச்சா. “போவுது போ. அதும் ஒருநாள் நெஞ்சுல மிதிச்சுட்டு எவளோடவோ போகும். பொண்ணாச்சும் பெத்தவள நெனைச்சிப் பார்த்து ஒரு நாளைக்காவது உட்கார்ந்து அழும்”ன்னு விட்டேத்தியா பேசறா பச்சை ஒடம்புக்காரி. புருசன் செஞ்ச காரியம் அவ கட்டை வேகற வரைக்கும் அழுத்தித் தானே பாடாப்படுத்தும் அவளுக்குள்ள...!
ஊட்டு வேலை, தோட்ட வேலை, வயல் வேலை, கட்டட வேலைன்னு அந்த ரெண்டு உசிருக்குமான தண்ணிய காட்டிகிட்டிருக்கான் மேலேயிருக்கறவன்.
மவ வயசுக்கு வந்ததும், தன் கைகால் நல்லா இருக்கவே, அவள ஒருத்தன் கையில நல்ல மொறையா ஒப்படைச்சுடனும்னு ஆவலாதி செகதத்துக்கு. தலையைச் சுத்தி மூக்கைத் தொட்டு ஒறவுக் கணக்கில தெரிய வருது சீனிப்பய பத்தி. காமா சோமான்னு கண்ணாலத்தை முடிச்சிட்டா. சீனிப் பயலுக்கு ஆஸ்தி பாஸ்தி ஒண்ணும் அதிகமில்லே. அவன் ஆயி அப்பன் டவுனுக்குப் போய் வர்றச்சே லாரி மோதி ‘மேல' பூட்டாங்க. இவன் அனாதையாகிட்டான். ரெண்டாங்காலு, மூனாங்காலு சொந்தமெல்லாம் இருக்கு. இவனாத் தேடிப் போனா ஒரு வேளை சோறோட சரி. எல்லாம் இருக்குறாப்புல இருந்திருந்தா, காது மூக்கை கால் பவுனில் மூடி, கையில கெடைச்சதைக் கொண்டு செகதம் செம்பாவக் கரையேத்தியிருக்க முடியுமா? இன்னாருக்கு இன்னாருன்னு ‘அவன்' எழுதினதை அழிச்செழுத யாரிருக்கா?!
சீனிப் பயலுக்கு பூட்டன் காலத்திய நாலுமா நெலம் மிச்சமாக் கெடக்கு ஊர்வாரியில. பதினைஞ்சு இருவதடி குறுக்களவுல எறநூறு அடி ஆழக் கெணறும் உண்டு அதுக்குள்ள. ஊருக்குள்ள அப்பன் - புள்ளைக்குள்ள, புருசன் - பொஞ்சாதிக்குள்ள, மாமியா - மருமவக்குள்ள தகறாறு முத்திப் போனா சீனிப்பய கெணறுதான் கதி.
ஊரறிய பகல் பொழுதுல சும்மா பயமுறுத்தக் குதிக்கறவங்களும் உண்டு; யாருமறியாம இராப்பொழுதுல மனம் வெறுத்துக் குதிச்சு சாகறவங்களும் உண்டு. சாவ துணிஞ்சி உழுந்து பொழைச்சவங்களும், பூச்சிகாட்ட உழுந்து செத்தவங்களும் சில பேரு. யாராவது கெணத்துல வுழுந்து களேபாரமாயிட்டா போன தடவை உழுந்தவங்களைப் பத்தின கதையெல்லாம் கிளம்பும் எல்லார் பேச்சிலும். உட்கார்ந்து கேட்கறதுங்களும், ஒட்டுக் கேட்கற சிறுசுங்களும் ஏதாவது ஆ- ஊன்னா, ‘சீனிப்பய கிணறு இருக்கவே இருக்கு'ன்னு நெனைச்சுக்கும்.
வெட்டியான், வண்ணான், பரியாரின்னு ஊர்த்தொழிலாளிங்களோட இந்த ஊருல ஆழக்கெணத்துல எறங்கி, கட்டில்ல கயிறு கட்டி எறக்கி, உப்பி ஊசிப்போன பொணமெடுக்கற கோஷ்டியும் அடக்கம். யாரையாவது காணோம்னா முதல்ல சீனிப்பய கிணத்தைப் பார்க்கறது ஊருக்கே பழக்கமாயிடுச்சு. வருஷாந்திரக் கோயில் கொடை தவிர, இம்மாதிரிக் கூத்துகளுக்கும் ஊரே திரண்டு பரபரப்பாகும். கெணத்து மகாத்மியம் இத்தோட இருக்கட்டும்.
ஊர் வாரிங்கறதாலே ஆடுமாட்டை ஓட்டி மாளாது. வேலி கட்டி ஓயாது. செலவும் அலைச்சலும் கட்டுப்பாட்டுக்கு வராததால கண்ணாலத்துக்கு முன்னாலயே வகுத்துப்பாட்டுக்கு கூலி வேலைக்கு போவ பழகிட்டான் சீனி. இராப்பொழுதுக்கு தலைசாய்க்க ஒரு ஓட்டைக் குடிசை. இந்த லட்சணமான நேரத்துலதான் செம்பா வர்றா மகாலட்சுமி கணக்கா.
அரைச்சுப் பூசின மஞ்சளும், அளவான பொட்டும், நெஞ்சுக்குள்ள தொங்குற பொட்டுத் தாலியுமா தேவதைக் கணக்கா ஜொலிக்கிறா. காது மூக்குல நட்சத்திரமாட்டம் மின்னுற காப்பவுனு, நூறு பவுனையும் மிஞ்சின நெறைஞ்ச அழகாக் காட்டுது அவளை.
களையெடுக்க, நடவு நட, அரும்பு பறிக்க, கல்லக்கொட்ட புடுங்க, வெத்தலை கிள்ளன்னு சீனியோட செம்பாவும் சேர்ந்துக்கறா, வேலை வித்துக்கு. கட்டட வேலைக்கு போவ மட்டும் அவன் ஒப்புக்கறதில்லே. அழகு பொண்டாட்டி மேல அம்புட்டு பிரியம்!
ரெண்டு பேர் ஒழைச்சும் வர்ற காசு போற மாயம் தெரியல. விக்கிற வெலைவாசியில நெதம் உப்போட போச்சு புளியோட போச்சுன்னு ஓடுது அவங்க பொழப்பு.
அலுத்து சலிச்சு படுத்துக் கெடக்கறச்சே ஆசை ஆசையா அவன் கிட்டே நெருங்கினாலும், சால்ஜாப்பு ஏதாவது சொல்லி தட்டிக் கழிச்சிடுவாளாம் செம்பா. பொறுத்துப் பொறுத்து ஒரு நா வெகுண்டெழுந்துட்டான் பய.
“என்னை இஷ்டப்பட்டுத் தான் கட்டிகிட்டியா... கஷ்டத்துக்குக் கட்டினியா?” மட்டை பொளந்த மாதிரி கேட்டுட்டான் மனசு விட்டு.
“அட புத்தி கெட்ட மாமா... இஷ்டத்துக்கு ஒண்ணும் கொறைவில்ல. எனக்கொரு வைராக்கியமிருக்கு. எம்புட்டு நாளைக்குதான் கைக்கும் வாய்க்கும் பத்தாம கூலிக்கு மாரடிக்கிறது? புள்ளக் குட்டின்னு பெருகிப் போனா மிஞ்சிப் போற செலவுக்கு நாம சிண்டைப் பிய்ச்சுகிட்டு இல்லே கிடக்கணும்?”
போய் அடுப்படி எறவாணத்துல சொருவியிருந்த சுருக்குப் பையை எடுத்துட்டு வந்து அவன் மடியில சில்லரையும் நோட்டுமாக் கொட்டுறா.
“அடிப்பாவி. தெனோம் கஞ்சியும் கூழுமா எனக்கு கரைச்சு கொடுத்திட்டு, கள்ளமா ஒளிச்சி வெச்சிருக்கியாடி இம்புட்டையும்?!” அசந்து போய் கேட்கிறான் சீனி.
“ஆமா... உன் உழைப்பை சுரண்டி என் ஆயி ஊட்டுக்கா மூட்டை கட்டறேன்...? நம்ம கொல்லைய பயிர் பண்ண வேணாமா?”
“எந்த மூலைக்கு இந்தக் காசு காணும்?”
“வூடு கட்டுறது, கல்யாணம் பண்ணுறது, பயிர்ச்செலவு இதுக்கெல்லாம் மொத்தமா சேர்த்துகிட்டா ஆரம்பிக்க முடியும்?”
கறம்பா கெடக்குற கையளவு நிலத்த சீராக்கி, கெணத்தைத் தூர்வாரி, பட்டத்துல வெதைச்சு பயிரேத்திட்டா தீர்ந்தது கவலை. அப்புறம் ஆசைக்கும் ஆஸ்திக்குமா புள்ளை பெறக் கசக்குமா செம்பாவுக்கு?
கூலி வேலையில கிடைக்கிற பணத்துல பசிக்கு கரைச்சு குடிச்சு, மானத்துக்கு துணி கட்டி மிஞ்சின காசை வெறியோட சேர்க்கறாங்க ரெண்டு பேரும்.
ரெண்டு சித்திரை-வைகாசி போச்சு. சேர்த்த பணம் தவிக்குது வெளிக்கிளம்ப. தன்னோட கரம்பு நெலத்த பண்ணை வீட்டு டிராக்டர் வெச்சு புழுதி ஓட்டிப் போட்டான் சீனி . பட்டறை செட்டு டவுன்லேயிருந்து வரவழைச்சு, கெணத்தைத் தூர் வாரியாச்சு. பழைய வெலையில ரெண்டு ஊரு தாண்டி இருந்த மோட்டார், பம்பு செட்டோட வந்திறங்குது.
கரம்புல புழுதி ஓட்டும்முன்னே வெட்டிக் கெடத்தின பூவரசும் வேம்பும் வேலிகருவையும் அறுத்து கிறுத்து மோட்டார் கொட்டாய்க்கு சரிபண்ணியாச்சு. மேங்கூரைக்கு தோப்பு நாடான்கிட்ட வாங்குன நூத்தம்பது கீத்து சரியாயிருந்துச்சு. தலையாரிகிட்டே பத்து தெரை வைக்கோல் வெலைக்கு வாங்கி கீத்து மேல பரப்பியாச்சு. கொட்டாய் கட்டினது போக மிஞ்சிய வேலிக்கருவை கழியை நறுவிசா செத்தி முள் உறுத்தாம நெருக்கமா படலாட்டம் அடைச்சு வாசக்கதவும் அதாலேயே ஏற்பாடு செய்தாச்சு. பூட்டு மாட்ட நாதாங்கி தெச்சதோட பம்பு செட்டு வேலை முடிஞ்சுது.
தூரு வாருன கிணறு சும்மா ஜிலு ஜிலுன்னு தெளிவா கெடக்குது. இம்புட்டு மக்க மனுசங்களைக் காவு வாங்கினதுன்னு இப்ப சத்தியம் செஞ்சாலும் புதுசா பார்க்கறவங்க நம்பப் போறதில்லே. அதும்மேல் ஒரு சிமெண்டு மூடியொன்னு தெறந்து மூடறது மாதிரி போடணும்கறது செம்பாவோட உறுதியான முடிவு. சேர்த்த பணம் செலவழிஞ்ச தொய்வில, ‘ஆகட்டும் பார்க்கலாம்'ன்னுட்டான் சீனி. மக்கியாநாள் விடியாம கெளம்பிப் போன செம்பா உச்சி உறுமத்தோட வூடு வந்து சேர்ந்தா.
“கோச்சிகிட்டு ஆயி வூட்டுக்குப் போயிட்டியோன்னு நெனைச்சேன்” கடுப்பும் எகத்தாளமும் கலந்திருக்கு சீனி குரல்ல. வேலை பெண்டு நிமிர்த்துற எரிச்சல் அவனுக்கு.
“எங்கட்டைதான் ஒன்னை வுட்டு தனியா வடக்கப்போவும் மாமா”ன்னு முந்தானையை அவுத்து விசிறிகிட்டே இடுப்புல செருகியிருந்த சுருக்குப்பையை அவன்கிட்ட நீட்டறா. இந்த வூரு மயானக்கரை வூடுங்களுக்கு வடக்குப்பக்கம்.
சுருக்குப் பையிலிருந்து எடுத்த பணத்தையும் செம்பா காது மூக்கையும் மாறிமாறிப் பார்த்து திகைக்கிறான் சீனி. “அம்புட்டையும் அழிச்சிட்டியா புள்ள?”
“இந்தப் பொட்டிருக்கே மாமா... லட்சத்துக்கும் மேலா...” மஞ்சக்கயிறை வெளிய எடுத்துக் காட்டுறா.
“வெறும் கையும் காலும்தான் மிச்சம்ன்னு சொல்லு. ஆழந்தெரியாம கால விட்டுட்டமோ...” சஞ்சலப்படறான் சீனி.
“வெண்ணெ திரண்டு வர்றச்சே ஏம்மாமா தாழி பலத்தை சோதிக்கிறீங்க... சாக்கெணறுங்கற அவப்பேரு நம்ம கெணத்துக்கு இனியிருக்கக் கூடாது ஆமா... எல்லாம் சமாளிச்சுக்கலாம் மனசுத் தெம்போட. எழுந்திருச்சு கஞ்சி குடி... வா.”
கெணத்த மூட சிமெண்டு சிலாப்பு போய் பார்த்தா. அதோட அடக்க வெலைக்கு தாலிப்பொட்டையும் தாரை வார்க்கணும் போலிருந்துச்சு. நிதானிச்ச சீனியும் செம்பாவும் குடிசை வாசலிலே ஒதுங்கி நின்னு நெழல் பரப்புற வைரம் பாய்ஞ்ச வேம்பை குறி வெச்சாங்க. தச்சாசாரி நாலு நாளா நாலு ஆளுங்களோட மெனக்கிட்டு அறுத்து எழைச்சு பங்கீடா கெணத்து வாயை மூடிட்டாங்க.
பொன்னாசாரி தந்த பணத்துக்குள்ள அப்படியிப்படி ஆளுங்க கூலியோட கெணறு வாயை மூடியாச்சு. வெறிச்சோடிப் போன குடிசை வாசலுக்குப் பக்கத்துக்கு ஒண்ணா ரெண்டு வேம்பும், பின்வாசல் புழக்கடை தண்ணி ஓடற இடத்துல ஒரு மாங்கண்ணும் நட்டுட்டாங்க.
சீனியோட நல்ல நேரம், பம்பு செட்டுக்கு குறைஞ்ச லஞ்சத்துல அரசாங்க இலவசக் கரண்டும் ஏற்பாடு செஞ்சு தந்தா செகதம்.
இப்ப ஊர்ப்பய மக்களெல்லாம் பொழுதுக்கும் குதியாட்டம் போட்டுக் கெடக்கறது சீனியோட பம்புத் தண்ணியிலதான்.
உழுத நெலத்த பயிரேத்தணுமே... வெதைக்க, நாத்து பறிக்க, களையெடுக்க, மருந்தடிக்க, உரம் போடன்னு செலவு மேல செலவு. ஊரைச் சுத்திக் கடன் சீனிக்கு.
வேப்பங்கண்ணு மரமாச்சு. வாங்கின கடனையெல்லாம் ரெண்டு வருச வெள்ளாமையில அடைச்சு நிம்மதியா நிமிர்ந்தாங்க ரெண்டு பேரும்.
சம்பா வயித்துல வம்ச வித்து வளருது இப்ப. ஊருசனம் சீனிப்பயலை அண்ணாச்சின்னு கூப்பிடறாப்ல மரியாதையும் பெருகிடுச்சு. குடிசை வீடு கல்லு வீடாகி, மாட்டுக் கொட்டாய்க்குக் கூட சிமிட்டிதரை! வண்டி மாடும், உழவு மாடுமா நாலைஞ்சு ஜதை, நாட்டுப் பசுவும், ஜாதிப் பசுவுமா ஐஞ்சாறு, கெடேறியும் காளையுமா ஏழெட்டு உருப்படின்னு நெறைஞ்சு கெடக்கு சீனியோட மாட்டுக் கொட்டாய்.
சீனியோட நாலுமா நெலத்து வெளைச்சலுக்கு மட்டுமில்லாம கற்பக விருட்சமாட்டம் அந்தக் கெணறு. ஊருக்கே பாசனம் செய்யறாப்பல அதோட ஊத்து சொரக்குது. வாடகைக்குத் தண்ணி விட்டே பெருங்கடனை பைசல் செய்யறான் சீனி.
செம்பாவோட வளைகாப்புக்கு வந்த செகதம், புள்ள தாயிட்டேருந்து பூமியில வுழற வரைக்கும் போகலே. ஒரு நா கைப்புள்ளைய தலைக்கு ஊத்தி செம்பா கையில கொடுத்துட்டு, கைய தரையில ஊணி எழுந்திரிக்கறச்சே சோப்பு கொழகொழப்பு வழுக்கிடுச்சு செகதத்துக்கு. அங்கிருந்த அம்மி மோடையில தலைகுப்புற தடுமாறி வுழுந்துட்டா. கையில வாங்குன புள்ளய கீழே கிடத்திட்டு செம்பா ஓடியாந்து என்னா புண்ணியம்? பத்துநாளு கண்ணு கூட தெறக்காம கெடந்த செகதம், நிரந்தரமா கண்ணை மூடிட்டா.
பாவம் செம்பா. பிள்ளை பெத்த பச்சை ஒடம்போட, தன்னைப் பெத்தவ போன துக்கம் கரைய ஒப்பாரி வைப்பாளா? கத்திக் கத்தி வெரைக்கிற தம்புள்ளையப் பாப்பாளா? காடு கழனின்னு கெடக்கற புருஷனுக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப் போடுவாளா? தடுமாறிட்டா தடுமாறி.
ஆத்தா போன துக்கத்தை அடிமனசில போட்டு மூடினாலும், அழுது குழிஞ்ச கண்ணை சரிபண்ண முடியலை. சீனி இருக்கற சமயம் வலுக்கட்டாயமா சிரிப்பை வரவழைச்சுக்குவா கண்ணுல. அவன் படிதாண்டி வெளிய போனதும், தன்னால குளமாகும் கண்ணு ரெண்டும். ஆயி செத்த வேதனை அரிச்செடுக்குது அவளை. வினவு தெரிஞ்ச நாளா கெடந்த ஒத்த ஒறவும் அத்துப் போச்சே!
அவளும் செகதமும் வாழ்ந்த வாழ்வும், பட்ட பாடுங்களும் வரிசைகட்டி வந்து போகும் அவ மனசிலே. புள்ள மொகத்து சிரிப்பும், சீனியோட அரவணைப்பும்தான் அவ உசிரைத் தங்க வெச்சுது. இனியாவது ஆயிக்காரியை நிழலோட்டமா உட்கார வெச்சு பார்த்துக்கணும்கற தன் மனக் கோட்டையெல்லாம் இடிஞ்சி தரைமட்டமாப் போனதை நினைச்சு நினைச்சு வெம்பிக் கிடப்பா.
பக்கத்துக் குடிசை பர்வதக்கா தான் இப்பல்லாம் செம்பாவுக்கு சமய சஞ்சீவி. சயரோகத்துல இருமிக்கிட்டிருக்கற தன் புருஷனுக்கு சிசுருஷை பண்ணிட்டு, பள்ளியோடம் போற மவனுக்கு சோறாக்கிட்டு, கெடைக்கற பொழுதுல செம்பாவுக்கு வூட்டையும், ஒடம்பையும், மனசையும் தாங்கிப் பிடிக்கிறவ அவதான்.
வெளி வேலைக்குப் போறதுக்குப் பதிலா, செம்பா வூட்டுத் தோட்ட வேலைக்கே சொச்ச பொழுதுக்கும் போவ ஆரம்பிச்சா பர்வதம். செம்பா வூட்டுல ஒத்தாசை முடிஞ்சு செத்த முன்ன பின்ன நேரஞ்செண்டு அவ போனாலும் சீனியும் கண்டும் காணாம போயிடுவான். அவனுக்கும் செம்பா இல்லாம தெணறலா இருந்துச்சு வயக்காட்டு வேலை. குறுக்க மறுக்க பருவதம் போகவும் நடவோ, களையெடுக்கவோ சீனிக்கும் வேலை சுளுவாச்சு. சமயாசமயத்துல அவனில்லாட்டி, மோட்டார் போட்டு தண்ணி நெறைஞ்சதும் மோட்டாரை நிறுத்தறதும் பருவதமே பார்த்துக்கிடுவா.
தீபாவளி, பொங்கல் நாள் கிழமையில பருவதத்துக்கும் சேலை எடுத்தாந்தான் சீனி. அவ புருசன் புள்ளைக்கும் புதுத் துணிமணி உண்டு. அப்படியே, கொஞ்ச நாளிலே ஒரே இடமா ஆக்கி துண்ணவும் ஆரம்பிச்சாங்க.
செம்பா புள்ள பால்குடி மறக்கற நேரம். சீனி அவளை வயக்காட்டு வேலைக்கு வரவே கூடாதுன்னுட்டான். சும்மா வூட்டையே சுத்தி சுத்தி வந்தா அவ. கட்டிக்கறச்சே வெடுக்கு வெடுக்குன்னு இருந்தவ, புள்ளை வகுத்துல இருந்தப்ப கொஞ்சம் செழிப்பானா. இப்பவோ ரெட்டைநாடிக்காரியாயிட்டா. புள்ளயப் பார்த்துகிட்ட நேரம் போக சும்மா கெடந்த நேரத்தை தூங்கித் தான் கழிக்க வேண்டியிருந்துச்சு.
மவன் பொறந்த நேரம், சீனி தன் நெலத்துக்குப் பக்கத்து நெலத்தைப் போக்கியம் புடிச்சான். மேக்கால ஒரு காணி வாரத்துக்கும் பயிர் பார்க்கறான். தெக்கால ரெண்டு மா கெரையமே பண்ணிட்டான். எல்லாத்துக்கும் பாசனம் கெணத்து ஊத்துதான். மூணு போகம் வெளைச்சல். வெள்ளையும் சள்ளையுமா பொழுதுக்கும் பெரிய மனுச தோரணை வந்தாச்சு சீனி அண்ணாச்சிக்கு.
ஒரு நாளு, பம்பு செட்டுல ஏதோ கோளாறு. டவுனுக்குப் போயி ரிப்பேருக்கு ஆளு சொல்லிட்டு வந்தான் சீனி. நடவுக்கு தண்ணி கட்டி உரம் போட்டாவணுமே. அடுத்த ரெண்டாம் நாளும் வெள்ளெனவே கெளம்பிட்டான். பத்துமணி வண்டியில டவுனுலேயிருந்து ரிப்பேர் செய்யறவங்க வந்து எறங்கிட்டாங்க. பருவதம் காலை வேலையெல்லாம் முடிச்சு கஞ்சி குடிச்சிட்டுப் போயி ஒரு நாழியாவுது. நேத்து வரப்புல முட்டு முட்டா அள்ளிப் போட்ட களைச் செடிங்களை வாரி ஓரத்துக் குப்பைக் குழியில போட்டாகணுமே.
வந்து நின்ன ஆளுங்களுக்கு கெணத்தங்கரைக்கு வழி சொல்லியனுப்பிட்டு, சோறாக்க உலை பானை ஏத்துறா செம்பா. ரிப்பேர் பண்ண வந்தவங்க கிட்டயே பருவதத்துக்கு, தானே சமைச்சு எடுத்து வர்றதா சேதி சொல்லி உட்டிருந்தா. பழக்கம் விட்டுப் போனதுல உப்பு, புளி பண்டமெல்லாம் இருக்கற இடம் கூட கொழப்பமாச்சு அவளுக்கு. ஒருவழியா சமையலை ஒப்பேத்தவும் தூங்குன மவன் முழிக்கவும் சரியாத்தான் இருந்துச்சு.
ஆளுங்களுக்குத் தனியா சோறு கொழம்பும், அக்காவுக்கும் தனக்குமா தனிப் பாத்திரத்திலுமா எடுத்து வெச்சா. புருசன்காரன் கூட எந்நேரமானாலும் கொல்லைக் கரைக்கு வந்துடுமேன்ற நெனைப்பு ஓட அவனுக்கும் சேர்த்தே எடுத்துகிட்டா. மவனை சீவி சிங்காரிச்சு கையில புடிச்சிகிட்டா. அவ நேரம், இன்னைக்கு பய தொந்தரவில்லாம தூங்கிக் கெடந்தான் வேலை முடியற வரை.
ரொம்ப நாளைக்கப்புறம் காட்டுல மாமனோட சேர்ந்து சாப்பிடப் போற ஆவலாதி காலுக்குள்ள புகுந்து பறக்கடிக்கவும் வெயில் கூட உறைக்கலை அவளுக்கு.
ஊர்வாரி தலைமாட்டுக்கு வந்தப்பவே அவ கண்ணு ரெண்டும் மக்க மனுசாளைத் தேடி அலைமோதுது. மோட்டார் பிரிச்சுக் கிடக்கு. ஆளுங்களைக் காணும். டீக்குடிக்க கலைஞ்சி போயிருப்பாங்களாட்ருக்கு. அவங்க வரதுக்குள்ள சோத்துக்கூடையை மோட்டார் கொட்டாயில வெச்சிட்டு செத்த உட்காரலாம்ன்னு உடம்பு கெஞ்சுது. வேலைவெட்டியில்லாம வசம் கண்டதுக்கு திடுக்குன்னு வந்த வேலை அசரடிச்சுது.
கெணத்துல மூடியிருந்த மரச்சட்டம் தைச்ச மூடி கழட்டி ஓரமா சாய்ச்சு வெச்சிருக்கு. மவனோ புடிச்சிருந்த அவ கையை ஒதறிட்டு கெணத்தாங்கரைக்கு ஓடறான். உச்சியேறிட்ட சூரியனும் திறந்து கிடக்கிற கிணத்தை எட்டிப் பார்த்து கெடக்கற தண்ணிய தகதகன்னு மின்ன வெக்கிறான்.
கெணத்து மோட்டைச் சுத்தியும் வெண்டையும் கத்திரியும், பக்குழி பரங்கிக் குழியுமா தழைஞ்சி கிடக்கு. தென்னண்டை ஓரமா சுத்தியும் சிங்கம் வெடிச்சுக் கிடக்குற நாலைஞ்சு வாழையும் குலைதள்ளி ஜிலுஜிலுன்னு இலையை ஆட்டிகிட்டுக் கிடக்குங்க. நட்ட நடவு ரெண்டு நாளா தண்ணி பார்க்காம சேறு காயற பதமா இருக்கு.
“ஏஞ்சாமி... எட்டக்க வாடி... என்னைய்யாவே...!” ஓட்டமா ஓடி கெணத்துப் பக்கமா ஓடுன மவனை இழுத்தணைச்சுகிட்டா. இவ கையிலயிருந்து திமிறி தப்பிச்சிட்டு மவன்காரன் செடிங்களோட பறந்து குலாவிகிட்டிருக்கற தும்பிங்களை பிடிச்சு வெளையாட மும்முரமாயிட்டான்.
சரி, சோத்துக்கூடையை வெப்போம்ன்னு சாத்திக் கெடக்குற மோட்டார் கொட்டாயை பார்த்துப் போறா செம்பா. “என்னைப் பெத்தாரு... கெணத்துப் பக்கம் மட்டும் போவக்கூடாது என்னா” காத்தோட போகுது அவ கொரல்.
கொட்டாயை நெருங்கவும் தழைஞ்ச கொரலா ரெண்டு பேரு பேச்சு சத்தம் கேட்குது. குரல்வாட்டம் சீனியையும், பருவதத்தையும் நெனப்புக்கு கொண்டுவருது புத்தி. அதுக்கு கோட்டி பட்டம் கட்டுது மனசு. காலு ரெண்டும் தயங்குது.
“விடு மாமா. அதோ செம்பா வர்றா.”
சிணுங்கறது அக்கா தானோ...?!
“எ... எங்க?”
இது மாமனாட்டம் தானிருக்கு.
“ஆ... ஆ... பயமிருக்கில்ல...!”
கெக்கலியாய் சிரிக்கிறாளே அக்கா. இப்படி ஒய்யாரமாவெல்லாம் சிரிச்சுப் பார்த்ததுமில்ல, கேட்டதுமில்ல... ஏந்தெய்வமே! நடக்க துணியாம திகைச்சு நின்னா செம்பா. மனசை மூளை ஜெயிச்ச கொண்டாட்டத்துல இன்னும் கூர்மையாகுது அவ புத்தியும் புலனும்.
“பயமென்னா கெடக்கு... ஊருலகத்துல நடக்காததா...? அதுவொரு கதியத்தது. என்னை என்னா செய்துடும்?”
தோப்பு தொறவெல்லாம் கண்ணு முன்னால தட்டாமாலையா சுத்துது. கீழ வுழுந்துடாம இருக்க பக்கத்துல நின்னு துக்கம் விசாரிக்கிற வேப்ப மரத்தைக் கெட்டியாப் பிடிச்சுக்கறா. மனசு பிடிமானத்துக்கு அம்மாக்காரி நெனைப்பு. கனவுல நடக்கறாப்புல நடந்து கெணத்துல பளிங்காட்டமா மின்னிட்டு கெடக்குற தண்ணிய உத்துப் பார்க்குறா. ரெண்டு கண்ணுலயும் பெருகியோடற தண்ணீ கெணத்து தண்ணிய மேலக் கொண்டுவந்துருமாட்ருக்கு. கெணத்தாங்கரைக்குப் பக்கத்துல கூழாங்கல்லுங்களைப் பொறுக்கி வெச்சு வெளையாடிட்டிருந்த மவன் ஓடியாந்து காலைக் கட்டிக்கறான்.
“பசிக்குதும்மா”.
ந்ல்லதொரு படைப்பு. தலைப்புப்போலவே படிக்கப்படிக்க ‘சுழல்’ ஆக இழுத்துக்கொண்டே சென்று விட்டது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteசெம்பாவின் இத்தனைக் கஷ்டங்களும் பலனற்றுப்போய்விட்டனவே. கணவனின் தராதரம் உயர்த்த, குழந்தைப்பேற்றையே தள்ளிவைத்தவள், இன்று அந்தக் கணவனாலேயே தள்ளிவைக்கப்பட்டுவிட்டாள். தூர்வாரப்பட்ட கிணறு, துணிந்து செம்பாவை ஏற்றுக்கொண்டுவிடுமோ என்று உள்ளுக்குள் பயம் வந்தது, நல்லவேளை, பசியோடு பிள்ளை வந்து, வாழப் பிடிமானம் தந்தது. ஒரு கிராமியக் கதையை அதே மண்ணின் மணத்தோடு எழுத்தில் கொண்டுவந்தமை சிறப்பு. மனம் நிறைந்த பாராட்டுகள் நிலாமகள்.
ReplyDeleteசுழல்.... எங்களையும் உள்ளே இழுத்து விட்டது....
ReplyDeleteசிறப்பான சிறுகதை நிலாமகள்.....
பாராட்டுகள்.
சுழல் இழுத்துக்கிட்டு போய் விட்டது. கணவனின் வாழ்க்கை தரத்தை உயர்த்த பாடுபட்ட செம்பாவுக்கு இந்த நிலையா....:((
ReplyDeleteகுழந்தை தான் இனி அவள் பிடிமானம்...
வட்டார மொழியில் சிறப்பான சிறுகதை. பாராட்டுகள்.
சுழலுக்குள் தொலைந்து போனேன் நான்.
ReplyDeleteவாழ்க்கைச் சுழலுக்குள் பெண்ணின் இருப்பையும் அவளுக்கு வடிவமைக்கப்பட்டிருக்கின்ற வாழ்வுத் தளத்தையும் அவளோடு வாழும் ஒரு மொழிநடையில் சொல்லிச் செல்லும் கதைஎன்னைக் கொண்டு சென்று எங்கோ ஒரு தெரியாத ஒரு கிராமத்தின் குடிசையோரமாக் கரை ஒதுக்கி விட்டிருக்கிறது.
அருமை நிலா.
பெண் இந்தச் சூழலில் இருந்து மீளவே முடியாதா என்ற வினா தான் என் மனதில் கேள்வியாய் எழுந்து நிற்கிறது.
உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்திருக்கிறேன் நிலாமகள். நேரமிருக்கும்போது தொடருங்கள்.
ReplyDeletehttp://geethamanjari.blogspot.com.au/2013/07/blog-post_24.html
மனம் பதைக்க வைக்கிறாள் செம்பா.தளர்வில்லாத எழுத்து.வாழ்த்துகள் நிலா !
ReplyDelete