பறவை வடிவிலொரு பரமன்...

மனிதக் குரல்களால்
சலிப்புறும்போது
ஏதேனுமோர்
பறவையின் மொழிதேடி
உடல்தாண்டி நீளும் செவி
தோட்டம் முழுக்க அலைகிறது

கூர்மையேறிய
அதன் புலனுணர்வில்
கிறீச்சிடும் ஒலி கொண்டே
பறவையை அனுமானிக்கும் நுட்பம்
கைவரப்பெற்ற கர்வத்தை
பங்கம் கொள்ள வைக்கிறது
இதுவரை கேட்டறியாதொரு
புதுப் புள்ளொலியின் குழைவு.

செவி தொடர்ந்து வெளியேறிய
உடம்பும் மனசும்
தோட்டத்து மரக்கிளைகளை-
செறிந்திருக்கும் இலைகளை-
துழாவத் தொடங்கியது துள்ளலோடு.

பரவசம்பரமானந்தம்;
பலநாள் புத்துணர்வூட்டுமாம்
பரம்பொருளறிதல்!

தான் கண்ட
விரல் அகல
முழம் நீள வெள்ளை வால்
கருந்தலைக் குருவி
எங்கிருந்து எங்கு போகிறதென
இணையம் வழித் தேடித் தெளிந்த
என் குதூகலமோ
கடவுளைக் கண்டதைப் போல்.

இன்னும் இன்னும்
எத்தனை பிரத்யட்சம்
இருக்கிறதோ இறை வசம்!!


நன்றி: ஜூலை,13  'சங்கு' வளவ.துரையன் 
6 கருத்துரைகள்
  1. r.jaghamani@gmail.com
    Message: இதுவரை கேட்டறியாதொரு
    புதுப் புள்ளொலியின் குழைவு.

    பறவையைக்கண்டு உள்ளம் குதூகலித்தது..+

    ReplyDelete

  2. //கூர்மையேறிய
    அதன் புலனுணர்வில்
    கிறீச்சிடும் ஒலி கொண்டே
    பறவையை அனுமானிக்கும் நுட்பம்
    கைவரப்பெற்ற கர்வத்தை
    பங்கம் கொள்ள வைக்கிறது
    இதுவரை கேட்டறியாதொரு
    புதுப் புள்ளொலியின் குழைவு.//

    நெய்வேலிக்காரவுங்களுக்குத்தாம் இப்புடியெல்லாம் வாய்க்குமுங்க. ஆனாலுங் கூட எல்லாரு காதுலயும் இது உளுவுதான்னா அதுவும் இல்லீங்க. பறவைங்க கூவுறதக் கேக்க தெய்வ மனம் வேணுமுங்க. அது ஒங்ககிட்ட வாச்சிருக்கு தங்கச்சி. கேக்கவே மனசு குளுந்து போட்டுதுங்க.

    ReplyDelete
  3. பறாவையின் குரல் தேடி மட்டுமா என்ன?அனைத்துமான பிற வேற்றுமைகள் தேடி அலைகிற
    மனது.

    ReplyDelete
  4. //தான் கண்ட விரல் அகல முழம் நீள வெள்ளை வால் கருந்தலைக் குருவி எங்கிருந்து எங்கு போகிறதென இணையம் வழித் தேடித் தெளிந்த
    என் குதூகலமோ கடவுளைக் கண்டதைப் போல்.//

    அருமையான ஆக்கம். [நேற்றுவரை பின்னூட்டம் கொடுக்க முடியாமல் ஏதோ ஓர் தடை இருந்து வந்தது.] பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. அருமையான வரிகள்.

    ReplyDelete
  6. புள்ளொலியில் புதுமை தேடும் கனிவும் பொறுமையும்.. எனக்கு இல்லை எனக் கொஞ்சம் ஆதங்கப் படவைக்கிறது கவிதை. புள்ளீந்தப் பேரின்பம் நிஜம். பரம்பொருளறிதல் கற்பனை. :)

    ReplyDelete