கபீர்தாஸ் கண்ணிகள்-30

கபீர்தாஸ் கண்ணிகள்-30     
(தமிழில்: ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம்)

     கபீர்தாஸ் ஒரு பக்திக் கவி; பதினைந்தாம் நூற்றாண்டுக்காரர்; உத்திரப் பிரதேசத்தைச் சார்ந்தவர். Couplets-கண்ணிகள்-இரண்டிரண்டு அடிகளால் ஆன இவை Dohas என்றும் சொல்லப்படுகின்றன. இரவீந்திரநாத் தாகூர் கூட இவரின் சில கண்ணிகளை (காண்க: One Hundred Poem of Kabir) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். கபீர்தாஸின் பஜன்கள் அளவுக்குக் கண்ணிகள் பரவலாக இன்னும் அறியப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

தாள்நிலம், ஏழுகடல் தான்மசி; பேனாவாய்
நீள்தருக்கள் கொண்டும் நினைஎழுதி மாலதுமோ?

கட்டிப் பனியுருகி நீரிற் கலப்பதுபோல்
ஒட்டி அவனோடும் ஒன்றாத லேபக்தி!
   *
உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?

கத்துகிறாய் பட்டினியில்! காதுதந்து கேட்பார்யார்?
மெத்தஒரு கர்ப்பத்தில் மேல் அவனே தாங்கலையா?
   *
அன்னமும் நாரையை அல்லவா ஒத்திருக்கும்?
பின்னதோ மீன் உண்ணும்; முன்னதோ முத்துமணி!

சிந்து மழைத்துளிக்கே சிப்பி கடல்மிதக்கும்;
அந்தோ துளிகுடித்தால் ஆழி அடியொதுங்கும்!
   *
பாலும் விஷமாகும் பாம்புக்கே வார்த்திட்டால்!
ஞாலத்தில் தீயவரால் நல்லதுவும் மாறிவிடும்!

“நான்” ,“எனது” விட்டுவிட்டால் நல்லவன்யார் உன்னைவிட?
ஏன், வாழ்வின் நங்கூரம் இந்த நிலைத்தமனம்!
   *
தாகித்தும் சக்ரவாகம் தண்ணீர் அருந்தாமல்
வேகத் துடன்பெய்ய வேண்டும் மழைக்கடவுள்!

வட்டப்பூ வாட; உதயமோ அத்தமிக்க...
கட்டல் நொறுங்க; குழந்தையோ தான்மரிக்க...!
   *
பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
“பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!

எச்சரிக்கும் மண்சேறும்: “ஏ குயவா நீ
அச்சோ அழுத்தாதே வாய்ப்பு வருமெனக்கும்!”
   *
ஓர்நாள் நடக்கும் இது! உன்னையும் பார்ப்பவர் ஆர்?
பாரியாளும் பேசாள்; பறக்கும் உலகமிது!

தெப்பமாய் பாம்பையெலாம் தேடிநீ கட்டிவிட்டால்
அப்போ கடல்தாண்டி அக்கரையுஞ் சேர்வாயா?
   *
பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!

சிங்கத்தின் பிம்பம் தெரியக் கிணற்றுநீரில்
பங்கம்; விழுந்(து)இறக்க வைக்கும் முயலொன்று!
   *
முந்திப்போம் ஆட்டுவழி, மந்தையே போம்,அலவா?
சிந்திப்போம் என்றிலையே... செல்லுகிறோம் ஈதேபோல்!
   *
“வீழ்ந்த பிறகும் விருட்சம் உன்னோ(டு) ஒட்டுவனா?”
ஆழ்ந்த  வருத்தத்தில் ஆடி இலைவீழும்!

வானகத்து வீடிருந்து வந்தான் விருந்தாளி,
கானகத்து மேற்பயணம்; காப்பாற்ற சாவுதுணை!
   *
வாராப் புதையும் வடவாக் கினியாலே!
ஆரறி வார்தகிப்பை ஆர்க்கும் கடல்தவிர?

விண்ணின் நிலவொளியால் மண்தா மரைமலரும்;
அண்மையா கும்தூரம் அன்புக்(கு) உருகிட்டால்!
   *
தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?

வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?
   *
இழித்துமே பேசலும் ஏன்கால்கீழ்ப் புல்லை;
விழியுங் கிழிபடலாம் வேகமாய்த் தானெழுந்தால்!

ஓடத்துள் நீர்வந்தால் வீட்டுக்குள் காசுவந்தால்
ஓடிவெளி ஏற்றிடுவர் உத்தமர் எல்லோரும்!
   *
கானில் மலர்கள் கனிகளெலாம் ஏராளம்;
மானிடனே, தித்திப்பை விட்டேன் அலைகின்றாய்?

அன்னம் பறக்கிற(து) ஆகாயம், புல்லைவிட்டும்!
தண்ணீர் பருகும் தரைவீடு தான்மறந்தும்!
   *
நீலக் கடல்வீழ்ந்த நீர்ச்சொட்டா மீண்டுவரும்?
வாலறிவன் தேடி வழியை இழந்தேனே!

வேண்டிய(து) ஆறடிதான்; விண்முட்டும் மாளிகைஏன்?
ஈண்டெதற்குப் பேராசை? ஏராளக் கர்வங்கள்?
   *
பற்றோ கவர்ச்சிமிகு பாவையைப் போல்;விரட்டிச்
சற்றே துரத்திடினும் சட்டென வந்தொட்டும்!

(நன்றி: திசை எட்டும்)
9 கருத்துரைகள்
  1. உன்னுடைய நூலகத்தை ஓடையிலே வீசியெறி!
    என்னபயன் ராமனில் இன்னமும் ஆழாமல்?

    Thanks for sharing

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. ஆஹா எவ்வளவு அருமையாக இருக்கிறது வார்த்தைகள் ஏந்தி நிற்கும் கருத்துக்கள்! சேகரித்து வைத்துக் கொண்டேன். மனதிலும் ஏட்டிலும்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி நிலா!

    ’தன்னையறிந்து செறிந்தடங்கி தானற்றால் பின்னைப் பிறப்பில்லை வீடு’(177) என்றும்;

    அறம் பாவம் ஆயும் அறிவு தனைக் கண்டால் பிறந்துழல வேண்டா பெயர்ந்து’(172) என்றும்

    செல்லல்,நிகழல்,வருங்காலம் மூன்றையும் சொல்லும் மவுனத் தொழில்’(281)
    என்றும் ஒளவையாரின் குறள் மூலம் சொல்கிறது.(எப்போதோ பார்த்த போது எழுதி வைத்தது.) பகிரத் தோன்றிற்று.

    ReplyDelete
  4. \\வீழ்த்தி விடுவான் விறகுவெட்டி என்னைவிடு;
    பார்த்தானா உச்சிப் பறவை களைஎண்ணி?\\

    ஒரு மரத்திற்கிருக்கும் நேயம் கூட மனிதனுக்கில்லாமல் போனதே.

    \\பா(கு)இனிப் புக்குப் பறந்த ஈ கால்,சிறகு
    நோகஒட்டிக் கொண்டதே நொந்து வெளிவராமல்!\\

    பேராசையின் பெருவெளிப்பாடு பொருத்தமான உவமையின் வழியே.

    \\பூத்த மலரைப் பறித்தாந்தோட் டக்காரன்,
    “பார்த்துக்கோ, நாளை நமதுமுறை!” மொக்குசொலும்!\\

    நிலையாமை உணர்த்தும் சீரிய வரிகள்.

    அப்பப்பா... குறள் போல் ஒவ்வொன்றும் ஆழ்கருத்தை அகத்தே கொண்டுள்ளனவே. கபீர்தாசரின் பாடல்களை அழகாகத் தமிழ்ப்படுத்திய ஆகாசம்பட்டு வெ. சேஷாசலம் அவர்களுக்கும் பகிர்ந்துகொண்ட தங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி, நிலாமகள்.

    ReplyDelete
  5. எப்படி இப்படி தேடி பிடித்து படிக்கிறது மட்டுமின்றி , உடன் பகிர்ந்தும் கொள்கிறீர்கள் . Great

    ReplyDelete
  6. //தாகம் எடுத்திட்டால் சாக்கடைநீர் ஆர்குடிப்பார்?
    ஆ,கங்கை யோடுசேர்ந்தால் ஆரே குடிக்காதார்?// ;))))

    அனைத்தும் அருமையாக உள்ளனவே. பகிர்வுக்கு நன்றி. vgk

    ReplyDelete
  7. அருமை...பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  8. கபீர்தாசின் தோகா இந்தி வகுப்பில் படித்தது. அப்போதே அவற்றின் இனிமையை ரசித்து சில தோகாக்களை மொழிபெயர்த்திருக்கிறேன்.
    இந்த மொழிபெயர்ப்பு மிக அருமையாக இருக்கிறது.
    நன்றி

    ReplyDelete