எப்பிறப்பில் காண்பேன் இனி?!



புஜ்ஜி வந்த புதிதில்
‘ஒரு பூனைக் குட்டிக்கு
இத்தனை பாசம் காட்டுவது அதீதம்'
தன் மீதான பரிவின் போட்டியாய் நினைத்து
விடுமுறைக்கு வந்த மகள்
அழுத்திச் சொன்னாள்
ஆதங்கம் தெறிக்க.

‘நமக்கு மிக விருப்பமாயிருந்து
கால தேவனால் களவாடப் பட்ட யாரேனும்
மீண்டிருக்கலாம் புஜ்ஜி வடிவில்' என்றேன்.

புதிரவிழ்க்கும் குறுகுறுப்பில்-தன்
நினைவுக் கிடங்கிலிருந்து
எடுத்து எடுத்துப் பொருத்திப்பார்த்தாள்
ஒவ்வொருவராக...
அவளுடன் நானும்.
கசிந்தது  அவளுள் புஜ்ஜிக்கான பரிவும்.
.......  ......  ......
.......  ......  .......
இனி
அடைக்கலமாக
ஏதேனும் ஓருயிர்
எங்கள் வசம் வந்தால்
புஜ்ஜியையும் பொருத்தி நெகிழ்வோம்.

# 13. 01.2018 மதியம் 2.30 
   புஜ்ஜி களவாடப் பட்டது. துயரின் பிடியில் நாங்கள்.


1 கருத்துரைகள்
  1. யாரோ வேண்டுமென்றே தான் இதைச் செய்திருக்கிறார்கள் போலும்....பாவம் வாய் பேசா ஜீவன்....அதற்கும் சொல்ல எத்தனை விஷயங்கள் இருக்கிறதோ....

    சில தினங்களுக்கு முன்னர் என் சிறியதாயாரின் நினைவு மலர் ஒன்றுக்கான விடயங்களைத் தொகுத்துக் கொண்டிருந்த போது ஒரு பொன் மொழி கண்ணில் பட்டது...

    ‘உங்கள் எதிரிகளை உங்கள் புன்னகை பார்த்துக் கொள்ளும். அதனால் நீங்கள் புன்னகைக்கத் தவறாதீர்கள்’ மனச் சாட்சி உள்ளவர்கள் என்றால் உங்களுடயதை உங்கள் வசம் ஒப்படைப்பார்கள். எனக்கென்னவோ உங்களைத் தெரியாதவர்கள் இதைச் செய்திருக்கச் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.....

    அது வீட்டை விட்டு அதிக தூரம் வெளியே போகிற வழக்கமுடையதோ...

    ReplyDelete