சக்தியிடமிருந்து மிருணாவுக்கு....

தொடுவானமற்ற கடல்' தொகுப்பிலிருந்து மற்றொரு கவிதை...
நுகரப்பட்ட ஒரு மலரின் மணம் இதர புலன்களைத் தூண்டி மனசின் அடியாழம் வரை ஞாபகப் புதையல்களை சங்கிலித் தொடர்ச்சியாய் எடுத்துவைத்த பட்டியல் மலைக்க வைக்கிறது. அம்மா இறப்பில் முடிந்த நினைவுச் சங்கிலியின் கண்ணி வெகு கனம். தேடலின் உணர்வுக் குவியலில் துக்கம் கசிய வைக்கும் முடிப்பு வாசிப்பை நிறுத்தி நம்மையும் அதில் தோயச் செய்து விடுகிறது.

இதோ சக்தியின் கவிதை வரிகள்...

வாசனை

ஒரு மல்லிகைப் பூவின் மணம்
அதன் மனமாய் மட்டும் இருப்பதில்லை
தவிர்க்கவியலாமல்
நுணாப்பூவின் மணத்தையும் நினைவூட்டுகிறது

நட்சத்திரங்களைப் பூக்களென உதிர்க்கும்
நுணா மரமோ
ஊரையும் அங்கிருந்த வீட்டையும்
அதன் கொல்லைப்புறத்தில்
உழவோட்டிய வயலுக்கு உரமாக
தழைகளும் கிளைகளும் கழிக்கப்பட்டு
மொட்டையாக நிற்கும்
வேலிக் கிளுவையும் கிளோரியாவையும்
சவுண்டல் மரங்களையும்

மக்கிப் போன எருக் குழிகளில் எழும்
மணத்தையும்
எருவடிக்கும் மொட்டை மாட்டு வண்டிகளில்
செய்த சவாரியும்
உரத்திற்காகப் போடப் பட்ட
மாட்டுக்கிடை ஆட்டுக்கிடையையும்
அபூர்வமாய்
ஒருமுறை போட்ட வாத்துக் கிடை
நீந்தித் திளைத்த குளத்தில் துழாவியபோது
கையிலகப்பட்ட நான்கு வாத்து முட்டைகளையும்
அவற்றை அம்மா
அவயம் வைத்த கோழி முட்டைகளுடன்
கலந்து வைக்க
பொரிந்த வாத்துக் குஞ்சுகளையும்
வாத்துக் குஞ்சுகள் நீந்தி வளர்ந்த
பொன்னுகொண்டானாற்றின் கரையில்
எரியூட்டப் பட்ட அம்மாவையும்
ஞாபகப் படுத்தி விடுகிறது.
       -சக்தி அருளானந்தம்

       வெகு காலத்துக்கு முன் மிருணா என்ற தோழியின் கீழ்க்கண்ட கவிதையை ரசித்து ரசித்து வியந்திருக்கிறேன். இன்று வரை அப்படியொரு கவிதை எழுத முடியாத ஆதங்கம் என்னுள் உண்டு. வரிக்கு  வரி அழகுறு அந்தாதி. வார்த்தைகளுள் அடங்கிய படைப்பின் சூட்சுமம்!

எனவே...

அந்தப் பூ புலிநகம் போன்றது
புலிநகம் கழுகின் அலகு போலிருந்தது
கழுகின் அலகு முந்திரி வளைவு
முந்திரி வளைவு பிறை நிலா
பிறைநிலா வானில் மிதக்கும் தோணி
தோணி ஒரு கருநீலத் திமிங்கிலத்தின் வால்
வால் மறியாட்டின் கருங்கொம்பு
கருங்கொம்போ கவண் பிளவு
கவண் பிளவு விரிமரக் கிளை
விரிமரக்கிளை குழைந்து பரவும் நீரூற்று
நீரூற்றோ அந்தியில் செம்பளிங்குப் பூ
அந்தப் பூ...

             -மிருணா
https://cycle2live.blogspot.in/2015/05/blog-post_28.html
6 கருத்துரைகள்
  1. எடுத்துக் காட்டிய இரண்டு கவிதைகளும் வெகு சிறப்பு. பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி சகோ....

    ReplyDelete
  3. யப்பா என்ன அருமையான கவிதைகள். அதிலும் மிருணாவின் அந்தப் பூ கவிதை ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து மீள முடியவில்லை.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆம் சிவா. சில படைப்புகள் நம்மைத் தூண்டும், துலக்கும்.

      Delete
  4. நிலா, எப்படி இருக்கீங்க? அம்மா இறந்த பிறகு என்னால எழுதவே முடியல. ஆனா இன்னிக்கு தற்செயலா இந்த பதிவ நான் பாத்ததும், அதே நாளில் முகநூலில் நீங்கள் வந்ததும் நடந்திருக்குறது மகிழ்வும், இனிமையும். நன்றி நிலா.

    ReplyDelete
  5. Casino Hotel Waterloo - JTM Hub
    Find Casino Hotel Waterloo (formerly JTM) - your next destination 군포 출장샵 for entertainment, 군포 출장마사지 dining and gaming. Experience world-class 김해 출장샵 live entertainment,  Rating: 충청북도 출장안마 4.2 김해 출장안마 · ‎22 reviews

    ReplyDelete