செந்தமிழ்ச்சாரலின் சொந்தங்களுக்கு கவிஞர் சக்தி அருளானந்தம்
'நான் படிச்சாச்சு... நீங்க?' பகுதியில்
#இலகுவானதெல்லாம்_இலேசானதல்ல கவிதைத் தொகுப்பின் நயம் பாராட்டல்....
நெய்வேலியைச் சேர்ந்த நிலாமகள் சௌந்தர சுகன் இதழ் வழி அறிமுகமானவர்.சுகன் இதழின் விழா ஒன்றில் கட்டுரை வாசிக்க மேடையேறியபோது நேரில் அறிமுகம்.பிறகு தனலட்சுமி பாஸ்கரனின் நூல் வெளியீட்டு விழாவுக்கு சேலம் வந்தபோது நட்பு நெருக்கமானது.பறத்தல்,பறத்தல் நிமித்தம் நிலாவின் முதல் கவிதைத் தொகுப்பு. இது இவரின் இரண்டாவது தொகுப்பு.
முதல் தொகுப்பை அணுகும் போதும், இரண்டாம் தொகுப்பை அணுகும் போதும் நாம் கொள்ளும் மன நிலை வேறு வேறு
தவழும் குழந்தை எழுந்து நிற்க முயற்சி செய்வது, ஒன்றிரண்டு அடிகள் எடுத்து வைப்பது நம்மைக் கொண்டாட வைத்துவிடுகிறது.ஆனால் இரண்டாம் தொகுப்பு என்னும் போது ஒரு கவிஞருக்கு ஒருவித எதிர்பார்ப்புச் சுமையை ஏற்றிவிடுகிறது.
"முந்தையதில் பல புரிதல்களும்,தெளிதல்களும்,பக்குவங்களும் சாத்தியமாக்கியிருக்கிறது.இவ்வேளையில்" இது நிலாமகளின் இரண்டாம் தொகுப்பின் முன்னுரையிலிருந்து.எனவே அந்தப் புரிதல்,தெளிதல்,பக்குவம் கவிதைகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
கவிதையின் வடிவம் எளிமையாக இருந்தாலும் அதன் உள்ளடக்கம்,அது பேசும் விசயம் எளிமையானதல்ல என்கிற புரிதலுக்கு வருகிறோம். அதைப்போல இந்தத் தொகுப்பு 'இலகுவானதெல்லாம் லேசானதல்ல என்கிறது.
'எதிரிலிருக்கிறாய் நீ
ஊர்தியின் எரிபொருளாகவா
பாய்மரத் துடுப்பாகவா
பஞ்ச பூதங்களிலுமா
தேடுமென்னுள்ளேயா?'
நிலாமகள் எதைத் தேடுகிறார்?தேடுவதை அடைந்தாரா?
அவர் தேடல் முடியவில்லை
"இன்னும் இன்னும்
எத்தனை பிரதட்சயம்
இருக்கிறதோ இறைவசம்!!"
கண்ணுக்கெட்டாத தொலைவு செல்லவேண்டியிருக்கிறது இந்தப் பயணிக்கு.பயணியைக் கடந்து செல்கின்றனர் பலர்.
"காற்றாக சிலர்
கல் நெஞ்சினராக சிலர்
நிழலாக சிலர்
பெருவெளியாக சிலர்
கால் இடறும் நெருஞ்சியாக சிலர்..."
சக பயணிகள் எத்தகையவர்களாக இருந்தாலும்,இந்தப் பயணி பலருக்கும் நிழலாக,குடையாக,உயிர்ப்புடன் இருப்பதுடன்
"வழி நெடுக
மரங்களும் கற்களும் இருக்குமென "
நம்பித் தொடர்கிறார் தன் நீள் பயணத்தை.
வாழ்க்கையின் மீதான,சக மனிதர்களின் மீதான நம்பிக்கையை நிலாமகள் இழக்கவில்லை. தாண்டவமாடிய 'தானே' புயலுக்குப் பின்னும்
"எல்லாம் கடந்தும்
எம் தோட்டத்தில்
தப்பிப் பிழைத்த
செம்பருத்திச் செடியின்
ஒக்றைப்பூ"
கவிஞருக்கு பெரும் பெரும் எதிர்பார்ப்புகளின்றி சிறிய விசயங்களே போதுமானதாயிருக்கிறது.அதிலேயே அவரும் நிறைவு கொள்கிறார்.அதை இந்தத் தொகுப்பின் முன்னிலையிலும் வண்ணதாசனின் மேற்கோளை எடுத்தாண்டிருக்கிறார்.
"#இப்படித்_தான்_இருக்கிறேன்_நான்_இப்படி_இருப்பது_போதும்_எனக்கு".
-வண்ணதாசன்.
'வரவேற்பறையை
தன் வாசத்தால் நிரப்பப்
போதுமானதாயிருக்கிறது
தோட்டத்தில் அரும்பிய
ஐந்தாறு மல்லிகைகளுக்கு"
'யாசி'என்றொரு கவிதை .கேளுங்கள் தரப்படும் என்பதற்கேற்ப யார் யார் என்னென்ன கேட்டார்கள்,என்னென்ன பெற்றார்கள் என்று பட்டியலிடுபவர்
'உன் நேசத்தை யாசிக்குமெனக்கு
புறக்கணிப்பை வழங்குகிறாய்'
என்கிறார் புண்பட்ட மனதுடன்.நேசத்தை யாசிக்கும் இவருக்கு வழங்கப்பட்டதோ புறக்கணிப்பு. புறக்கணிப்பை வழங்குபவருக்கு எதிராக இவர் ஏந்தும் ஆயுதம் அன்பு.
'நீ யோசித்ததுண்டா
அன்பெனும் ஆயுதம் பற்றி?!'
இப்படி அன்பை ஆயுதமாக ஏந்துவதற்கான காரணம் மீண்டும் அன்பு மலருமென்ற நம்பிக்கை.
'நினைவுப் பானை புரண்டெழுந்து
வெந்து தணிகிறது
கடந்தகாலத்துப் பிரியங்களின் ஊர்வலம்
துளிர்க்குமொரு காலமென
நம்பிக்கையில் நகர்கிறது காலம்"
பட்டியலிடும் இன்னொரு கவிதையுண்டு.நிலவின் பயன்பாட்டை நிலா இப்படி சொல்கிறார்.
விளையாட்டு பொம்மை,ஆற்றுவிக்கும் மருந்து,இயற்கையின் வெளிச்சம், அபலையின் வழித்துணை, தணிவிக்கும் தண்ணொளி,ஜொலிக்கும் பெருநட்சத்திரம்...முடிப்பு தான் இதை வேறொன்றாக மாற்றிவிடுகிறது.
'நிலவுக்கும் உண்டு
அரிதாரம் தேவையற்ற
பல அவதாரங்கள் '
'நிலவுக்கும்' என்னும் போது வேறு எது எதற்கு என்று மனம் தேடலைத் துவங்குகிறது.
நிலாமகளின் நுட்ப உணர்வு நுணுக்கமான பலவற்றை அனுமானிக்கிறது.
'பள்ளித் தண்டவாளத் துண்டில்
உள்ளுறைந்திருக்கும்
இரயில்களின் தடதடப்பும்
விழுந்து மாய்ந்த உயிர்களின்
இறுதி ஓலமும் கேட்கிறது'
ஒற்றைக் குயிலின் மென் சோகக் குரல் அவர் மனதுக்குள் உறைந்திருக்கும் வன் சோகத்தை
'அடியாழத்தில்
அமிழ்ந்துபோன
பலப்பலத் துயரங்களை அறுத்து அறுத்து
மேலெழப் போதுமானதாயிருக்கிறது'
நிலாமகள் கவிதைகளில் வெளிப்படும் இன்னொரு அம்சம் தாய்மை. கல்வி நிமித்தம் அவரைப் பிரிந்து சென்றிருக்கும் குழந்தைகள் மீதான பரிவு பசித்துக் கிடக்கும் ஊதல் காரனின் பசியை நினைத்து தாயினும் சாலப்பரிந்து உருகுகிறது.
'இன்றிரவு உறங்கலாம்
அவனும்
நிறைந்த வயிறுடன்'
-செவிக்குணவு
மென்மையாய் நகரும் நிலாவின் கவியுலகம்
'தம்மை
தகர்த்தவர்க்கும்
சிதைத்தவர்க்கும்
மிதித்தவர்க்கும்
உறுதுணையாய் இறுதிவரை..
மணலாயிரு'
என்று போதிப்பவர்க்குள்ளும் இருக்கும் வன்மம் வெளிப்படுகிறது.
'திறந்திருந்த உடற்பரப்பில்
சுருக்கென கடித்து-தன்
விடமேற்றிய சிறு குளவி...
ஏற்றிய கடுகடுப்பு குளவி பல்லியிடம் சிக்கியதும் ஏற்படும் குதூகலம்..வன்மம் தவிர்த்த வாழ்வரிதா? என்கிற கேள்வியை நமக்குள்ளும் கவிஞருக்குள்ளும் எழுப்புகிறது.
வாழ்த்துகள் நிலா.
வெளியீடு
************
ஊருணி வாசகர் வட்டம்,
22/105,பாஸ்கர் காலனி,
3வது தெரு,விருகம்பாக்கம்,
சென்னை-600 092.
பேச:81481 94272
89393 87296
விலை₹70/-
நன்றி :
முகநூல்
கவிஞர் சக்தி அருளானந்தம்
https://m.facebook.com/story.php?story_fbid=618953895103916&id=100009679339172
வை.கோபாலகிருஷ்ணன்
ReplyDelete19 February 2018 at 07:39
தங்களின் இரண்டாம் தொகுப்பு நூலுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
தோழர் சக்தி அவர்களுக்கு,
நூலை தங்களிடமிருந்து வாங்கிப் பெற்றிடும் சக்தியும்,
அதை அலசி ஆராய்ந்துப் படித்து ரஸிக்கும் சக்தியும்,
தான் படித்ததை பிறருக்கு மிக அழகாக எடுத்துச்சொல்லிடும் சக்தியும்
இயற்கையாகவே ’அருளும் ஆனந்தமும்’ ஆக மிகப்பெரிய வரமாகக் கிடைத்துள்ளன.
கவிஞர் சக்தி அருளானந்தம் அவர்களுக்கும் என் பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.
மேலும் பல நூல்கள் தாங்கள் வெளியிட, தங்களுக்குப் ப்ராப்தம் அமையட்டும். மீண்டும் என் நல்வாழ்த்துகள், மேடம்.
எப்போதும் உற்சாகம் தரும் தங்கள் ஆசிகளுக்கு நன்றி சார்.
Deleteநல்லதொரு அறிமுகம் சகோ. பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteமகிழ்வும் நன்றியும் சகோ.
Delete