நாவில் நிலைத்திடும் ருசி



               பல்வேறு சமையல் குறிப்புகளையும் வீட்டுப் பராமரிப்பு முறைகளையும் மாத சஞ்சிகைகளில் எனது திருமண வாழ்வின் 23 ஆண்டுகாலமாக ஒரு பார்வையில் கடந்ததுண்டு. கண்ணில் பட்டதில் கருத்தில் நின்றது அடுத்த தடவை அப்பதார்த்தங்கள் செய்யும் போது நினைவில் மின்னிக் கையாண்டு பார்த்ததும் உண்டு. இணையத்தின் வலைப்பூ பக்கங்களில் எப்போதேனும் எதற்கேனும் அரிதாக சமையல் பக்கங்களைத் தேடியதுண்டு.

               அம்மா வீட்டில் மேலோட்டமாகத் தெரிந்து வந்த சமையல், மாமியார் தன் கைப்பக்குவத்தால் வீட்டினரைக் கட்டிப் போட்டிருந்த இலாவகம் பழகி நாளடைவில் கணவர், குழந்தைகளின் ருசி நாக்கால் சுவையேற்றியது எனக்கு.

               ஐந்தறிவு உயிர்கள் தம் பசிக்கு விதிக்கப் பட்டிருந்த இரையை உண்டு உயிர் தரித்திருக்க, ஆறறிவு மனிதன் தன் உயிர் வாழ்தலின் அத்தியாவசியமான உணவை வேக வைத்து, வறுத்துப் பொரித்து, சுட்டு சுவையேற்றி...
நாளொன்றுக்கு மூன்று வேளை பெருந்தீனியும் பல வேளை சிறுதீனியுமாக பகுத்துண்டு, பெண்ணினத்தின் தலையாய வேலையாகவும் சமைத்து விட்டான்.

               இன்றைய காலகட்டத்தில் சமையல் துறை ஆண்கள் கோலோச்சும் அளவில் வளர்ந்துள்ளது. கல்லூரி விடுதியிலிருந்து வெளியேறி, தனியறையில் வசித்துப் படிப்பை அல்லது வேலையைத் தொடரும் இளைஞர்கள் சுய சமையல் பழகிக் கொள்வது பல விதங்களிலும் எளிதாகவும் இயல்பாகவும் ஆகியுள்ளது. ஆண்களுக்கு இணையாக பெண்கள் படிப்பில் வேலையில் ஊதியத்தில் தன்னிறைவு அடைந்ததன் விளைவாக, சமையலறை விலங்கிலிருந்து பெண்ணினம் விடுபட ஏதுவாகியுள்ளது. குடிக்கத் தண்ணீர் வேண்டிக் கூட அடுக்களை வராத-உட்கார்ந்த இடத்திலிருந்து ஏவும் பெருமைமிக்க ஆண்கள் வாழ்ந்த வீட்டில் நானும் என் மகளுக்கு முன்னதாக  மகனுக்கு சமையல் பழக்க வாய்க்கிறது.

               நெய்வேலியின் 19 ஆண்டுகால புத்தகத் திருவிழாவில் ஒரு சமையல் புத்தகம் கூட வாங்காத குடும்பம் எங்களுடையதாகவே இருக்கும். எங்கள் இல்லத்திலிருக்கும் பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான நூல்களுடன் திருமதி சரஸ்வதி அரங்கராசன் அவர்களின் உடல் நலம் காத்திடும் உன்னதக் குழம்புகள்' வந்து வாசிப்பின் ருசி கூட்டியுள்ளது. இத்தருணம், நெய்வேலி கலைக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் திரு. மருதூர் அரங்கராசன் அவர்களுக்கு நன்றி கூற விழைகிறேன்.

               மனைவியின்பால் உள்ள வாஞ்சையில் சிலர் வெங்காயம், பூண்டு உரித்து தருவதைப் போல் தம் துணைவியாரின் சமையல் நூலைச் செம்மைப் படுத்தும் வகையில் இலக்கியச் சுவையூறிய மொழிநடையும், பொருத்தமான இடங்களில் பொருந்தும் பழமொழிகளும், சொலவடைகளும், பழம் தமிழ்ப்பாடல்களில் சமையல் சார்ந்த நம் பாரம்பரிய உணவுப் பொருட்களின் மகத்துவங்களை எடுத்துச்சொல்லி சிலாகிப்பதும், மட்டுமின்றி தாவரப் பொருட்களின் அறிவியல் பெயர்களோடு, வழங்கப்படும் வேறு பல பெயர்களும் பிற மொழியில் வழங்கப் படும் பெயர்களும் என அறுசுவை பொதிந்த உணவாகவே நூலை நமக்கு சமைத்ததில் அவர்தம் பங்கு வெளிப்படுகிறது.

               ஆசிரியரும் தம் கணவர், மகன், மருமகள், மருமகன், பெயரன் என அனைவருக்கும் நன்றி பாராட்டியிருப்பது வெறும் வெற்றுச் சம்பிரதாயமன்று என்பது புலனாகிறது. பாடப் புத்தகம் போல் வறட்சியாக இல்லாமலிருப்பதற்கு பக்கங்கள்தோறும் பெட்டிச் செய்தியாக சமையல் தொடர்பான பிற குறிப்புகளை நகைததும்பச் சொல்வது பிற சமையல் நூல்களிலில் இருந்து வேறுபடுத்திக் காட்டும் உத்தியாக உள்ளது. ஆங்காங்கே தரும் அனுபவக் குறிப்புகளின் பரிவு, நம் வீட்டுப் பெரியவர்கள் நமக்கு சொல்லித் தரும் உணர்வைத் தருவதால் ஆசிரியர் நமக்கு நெருக்கமாகி விடுகிறார் மனசளவிலும்.

               தலைப்புக்குத் தக்க 30 குழம்புகளை விலாவாரியாக விவரித்த பின்னும், பயன் தரும் பலவகைக் குறிப்புகள் பக்கங்களை நிறைக்கின்றன. சர்க்கரைப் பந்தலில் தேன்மாரி என்ற பழந்தமிழ்ச் சொற்றொடரை நினைவூட்டும்படி. அத்துடன் முடிந்ததா? அன்றாடச் சமையலில் பயன்படுத்தப்படும் மளிகை-மசாலாப் பொருட்களின் தமிழ்-ஆங்கிலப் பட்டியல்! திகட்டத் திகட்ட உண்டு வெளிவந்த விருந்தின் முத்தாய்ப்பான தாம்பூலத் தரிப்பாய்! கொடுக்கும் மொய்க்கு பல மடங்கு பலத்த விருந்து!!

               உரலில் தானியம் குத்திப் புடைத்து கல் இயந்திரத்தில் மாவரைத்து அம்மியில் மிளகாய் அரைத்த காலமெல்லாம் மிக்ஸியால் களவாடப் பட்டது. அதே ருசி தரத் தக்கதென மிக்ஸி கம்பெனிகளின் விளம்பரத் தந்திரம் பிசுபிசுத்து மக்கள் பாரம்பரிய சமையலையும் பாரம்பரிய சுவையையும் தேடத் துவங்கியுள்ள இக்காலத்துக்கு மிகப் பொருத்தமானதாக வெளியாகியுள்ளது இச்சமையல் நூல். அதனால் தான் வருடத்துக்கு ஒரு பதிப்பாக 2016-ல் இரண்டாம் பதிப்பை எட்டியிருக்கிறது!

               ஆசிரியரின் அடுத்தடுத்த நூல்களாக துவையல் வகைகள், பொரியல் வகைகள், ரசம் வகைகள், இனிப்பு-கார திண்பண்டங்கள் என பல்கிப் பெருகிட மனம் கனிந்து  வாழ்த்துவதில் நம் குழந்தைகளுக்கும் சமையல் பழக கையளித்திட எளிதாகுமென்ற   சுயநலமும் கலந்தே இருக்கிறது என்பேன்.


               ஏனெனில், அமிழ்தத்தை கீரை என்று விருந்தாக்கிய ஓளவை காலத்துப் பெண்ணின் பாரம்பர்யம் நூலாசிரியரின் இரத்த அணுக்களிலும் விரவிக் கிடக்கிறது.

உடல்நலம் காத்திடும் உன்னதக் குழம்புகள்

ஆசிரியர்: சரஸ்வதி அரங்கராசன்
வெளியீடு: முகிலன் பதிப்பகம்
                              அடையாறுசென்னை-20
பேசிட:      96002 44444, 044-24410248
மின்னஞ்சல்: saraswathy.r.59@gmail.com
பக்கங்கள்: 176
விலை: ரூ.120
6 கருத்துரைகள்
  1. மருதூர் அரங்கராசன் அவர்கள் எங்கள் கல்லூரியில் தமிழ்த் துறை தலைவராக இருந்தார் - நான் கல்லூரியில் படித்த காலத்தில்......

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு. மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. வணக்கம்
    தங்களின் பார்வை நூல் பற்றி சொல்லிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆயுதப்பூ சிறுகதை நூல் வெளியீடு.-மலேசியா-சிங்கப்பூர...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. நிலா!
    அந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள். இல்லையெனில் அந்த வகைகளை சமைத்து, கூப்பிட்டு சாப்பாடாவது போடுங்கள்!
    உங்கள் நூல்அறிமுகம் நிறைவானது!

    ReplyDelete
  4. @வெங்கட் நாகராஜ்

    மகிழ்வும் நன்றியும் சகோ...

    ReplyDelete
  5. @கவிஞர்.த.ரூபன்

    மகிழ்வும் நன்றியும் சகோ...

    தங்கள் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போவது குறித்து வருத்தமே எனக்கு.

    ReplyDelete
  6. @மோகன்ஜி

    நன்றி ஜி.

    கடலூர், திருச்சி பயணங்களில் நெய்வேலியை நுழைக்க முடியுமா பாருங்க.

    ReplyDelete