புத்தரின் புன்னகையும் அவர் பெற்ற ஞானமும் அவரை அறிந்தவர்களுக்கொரு பிரமிப்பைத் தரத்தக்கது. மூடிய கண்களின் தியான அமைதியும் விரிந்த இதழ்களின் ஓரப் புள்ளி கிளர்த்தும் தத்துவ விசாரமும் விசாலமான அறிவின் அறிவிப்பாக தொங்கிய காதுகளும் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையாக விரிந்த சகஸ்ரகாரச் சக்கரத்தின் புற அடையாளம் போன்ற உச்சிக் கொண்டையும் பார்ப்பவரை ஈர்க்கும் தன்மை கொண்டது. அவரது பூர்வாசிரமப் பெயரும் வரலாறும் நாமனைவரும் அறிந்ததே.
ஜெர்மன் மொழியில் எழுதப்பட்ட(1922) ‘சித்தார்த்தன்' நாவல் நம் கெளதம புத்தரைப் பற்றியதல்ல. இந்தியாவின் கேரளமாநிலத்தில் தம் மூதாதையரின் வேர் பரவியிருக்க, ஜெர்மனியிலிருந்து கிழக்கிந்திய நாடுகளைச் சுற்றிப் பார்க்க வந்த (1912)ஹெர்மன் ஹெஸ்ஸே இலங்கை வழியாக இந்தியா வந்தபோது புத்தர் வரலாறு கேள்விப் பட்டு தம் மனதுள் தொடர்ந்து 10 வருடங்கள் ஒரு கதைக் கருவையும் அதற்கான கதாநாயகன் நம் புத்தரிலிருந்து மாறுபட்ட வாழ்வின் தேடலில் தன் ஞானத்தை தானே கண்டடையும் உத்தியையும் உருப்போட்டதன் விளைவே ‘சித்தார்த்தன்' என்றொரு புதினம். ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது இந்நாவல். ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப் பட்டிருக்கிறது.
150 பக்கங்களுக்குள் மனித வாழ்வை அதன் தத்துவச் சரடை கொண்டுவர முடிந்திருக்கிறது அவருக்கு! பக்கங்களின் எண்ணிக்கையோ பிரம்மாண்டமோ தீர்மானிக்க முடியாத மகோன்னதம் அல்லவா படைத்தலின் உன்னதம்! பிரபஞ்சத்தின் கோடானுகோடி உயிரணுக்களும் சர்வ சாதாரணமாக உருவான இவ்வுலகில் மனித மனதின் அற்புதம் என்றென்றும் வியப்புக்குரியதே.
பிறப்பும் வாழ்வும் மரணமும் அனைத்து உயிர்களும் அடையத்தக்க எளிதானதாக இருப்பினும், பகுத்தறிவால் மனித நிலையடைந்த ஒவ்வொருவருக்கும் ஏதேனுமொரு தருணம் ஞானம் சித்திக்கிறது. அதனைக் கைப்பற்றி வாழ்வின் இரகசியங்களைத் தெளிந்திடும் இடம் அவரவருக்கான கயாவாகவும், வாழ்தலின் வலிமிகு வெம்மைகள் தணியும் தருநிழல் அவரவருக்கான போதிமரமாகவும் அமைந்து விடுகிறது.
இந்நாவலில்
சித்தார்த்தன் எனுமொரு அந்தண இளைஞன், தம் குலக்கல்வியால் பெற்ற வேத அறிவும், சமண, பெளத்த மடாலயங்களின் தத்துவங்களும் தனக்குத் தெளிவிக்காத இந்த வாழ்வின் அர்த்தமென்ன? ‘நான்' என்பது எதைக் குறிக்கும்? இவ்வுலகில் நிலைத்த இன்பம் எது? துன்பங்களேயற்ற வாழ்வு உண்டா? வாழ்தலின் பாதை செல்லும் வழி யாது? அது சொல்லும் பொருள் என்ன? என்ற பலப்பல வினாக்கள் சிந்தையைச் சுரண்ட, விடைதேடிக் கண்டடைகிறான். இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு சிலரேனும் இருப்பர். அத்தகையோர் சொன்னதும் சொல்லாததும் ஏட்டில் எழுத்தாக நிலைபெற, பின்வருவோர் பின் தொடர ஏதுவாகிறது. கல்வி கேள்வியால் அறிவதைக் காட்டிலும் நம் அனுபவத்தால் அறியப்படும் ஞானத் தேடலில் கரை காண்பது நம் பிறப்பின் அர்த்தமாகிறது.
அவனது வழித்துணையாக, பால்யகால நண்பன் கோவிந்தன், சமண, பெளத்த துறவிகள், கணிகை கமலா, கங்கையின் படகோட்டி ஒருவன், கமலாவுக்கும் அவனுக்கும் பிறந்த மகன் என சித்தார்த்தனின் பெரும்பயணம் நம் கண்முன் காட்சியாக விரிகிறது. கதை மாந்தர்களின் உளவியல் பாங்கும் ஆங்காங்கே விலாவாரியாக சொல்லப்பட, வாசிக்கும் நாமும் அவர்களாகவே உருமாறி மனமேடையில் வாழ்வதான உணர்வையளிக்கிறது.
'சிந்தித்தல், பசித்திருத்தல், காத்திருத்தல்' என்றிருந்த சித்தார்த்தன் 'மோகித்தல், விரும்புதல், துன்புறுதல்' எனும் நிலையடைகிறான். ஆற்றிடமிருந்து படகோட்டி வாசுதேவன் கற்றிருந்த 'காத்திருப்பது, பொறுப்பது, கேட்பது' சித்தார்த்தனுக்கும் வசப்படுகிறது.
தன்னிடம் ஒட்டாத தன் மகனின் பிடிவாதம் தாங்காமல் அவன் போக்கில் சொந்த ஊருக்குப் போகவிடும் சித்தார்த்தன், தன் இளமைக் காலத்தில் தன் தந்தையிடம் தான் பிடிவாதம் கலந்த பவ்யத்துடன் வீட்டை விட்டு வெளியேறி ஞானத் தேடலில் ஈடுபட்டதை நினைத்துப் பார்க்கும் போது தன் தந்தையின் அன்றைய மனநிலையையும், தன் மகனின் இன்றைய மனநிலையையும் ஒருங்கே உணர வல்லவனாய் இருக்கிறான்.
சித்தார்த்தனுடன் வாழ்ந்து ஒரு மகனை ஈன்ற கணிகை கமலா காலப்போக்கில் துறவை நாடி தன் பயணத்தில் மகனை அவனுக்கு உரியவரிடம் சேர்ப்பித்த நிம்மதியில் உயிர் துறக்க, அவளின் மூடிய இதழ்கள் இறுகி உலர்ந்திருப்பினும் சித்தார்த்தனுக்கு பிளந்த அத்திப் பழத்தை நினைவுபடுத்துவதைப் படிக்கும் நமக்கு, கமலாவை முதன்முதல் சந்தித்தபோது அவளின் செழுமையான இதழ்களும், அதனிடையோடிய வரிகளும் நடுவே அமைந்த சிறுவளைவும் பிளந்த அத்திப்பழத்தை நினைவூட்டியதும், அதன்வழி அவன் கற்றவையும் அனுபவித்தவையும் நினைவில் எழுகிறது. சொல்லப்படும் உவமையின் பொருத்தப்பாடு நம் வியப்பை விரிக்கிறதோடல்லாமல் எழுத்தாற்றலின் அடையாளமாகவும் இருக்கிறது. புதினத் தொடக்கத்தில் முதல் வரியில் விரிந்த அத்திமர நிழலில் விழுந்து கிடந்த அத்திப் பழங்கள் சித்தார்த்தனின் மனதில் பால்ய வயதில் எத்தனை துல்லியமாகப் பதிந்திருக்கிறது!
அறிந்ததிலிருந்து அறியாததற்கு இட்டுச் செல்வது ஞானம் மட்டுமல்ல... உவமித்தலின் பெரும்பாங்கும் அதுதானே! பெருவணிகன் காமஸ்வாமியின் தொடர்பில் பெரும்பொருளுக்கு அதிபதியாகும் கதாநாயகன் உலகியல் இன்பங்கள் அனைத்தையும் திகட்டத் திகட்ட துய்த்து சலிப்படையும் போது எல்லாம் தாண்டிய ஞானத்தின் துவக்கப் புள்ளியை அடையும் போது புதினத்தின் வெளிப்பாடுகளில் சர்வ சாதாரணமாக கையாளப்படும் உவமைகள் ஒவ்வொன்றும் படைப்பாளியின் நேர்த்தியான உன்னதமான சுவையூட்டிகள். ஒரு உவமை சொல்லப்படும் விதம், நுட்பம், பொருத்தம் போன்றவை படைப்பாளியின் திறனை உயர்த்திப் பிடிப்பதாய் அமைகிறது. வாசிப்பில் அவ்விடங்களின் நயம் வெகு அருமை. ‘சம்சாரம்' அத்தியாயத்திலிருந்து ஆழ்ந்து பயணிக்கிறது புதினம். மறுபடி மறுபடி வாசிக்கத் தூண்டும் வலிமை பொதிந்திருக்கும் பக்கங்கள் மொத்தப் பக்கத்தின் எண்ணிக்கையை கூட்டாமல் கூட்டுகிறது.
மேலும், புதினத்தை விறுவிறுபேற்றி, கூடவே விரியும் சிந்தையடுக்குகளைத் தருவதாக ஆங்காங்கே வரும் உரையாடல்கள் செறிவாக அமைந்துள்ளன. கோவிந்தனுடனான படகோட்டியுடனான தத்துவார்த்த உரையாடல்கள், வணிக ரீதியான காமஸ்வாமியுடனான உரையாடல் போன்றவை சித்தார்த்தனின் கதாபாத்திரத்துக்கு மெருகேற்றும்படி உள்ளது. கமலாவுடனான சிருங்காரம் ததும்பும் பேச்சுக்களும் இறுதியில் ஞானத் தெளிவுடனான பேச்சுகளும் சித்தார்த்தனின் தேடல் முற்றுப் பெற பெரிதும் துணை நிற்பவை.
புதினத்தின் இறுதிப் பகுதியில் கோவிந்தனுடனான சித்தார்த்தனின் தாம் பெற்ற அனுபவ விளக்கங்கள் நமக்குமான ஒரு ஆழ் நிலை தியான உணர்வைத் தர வல்லது. உயிர்கள் அனைத்தும் ஒன்று என்பதும் அன்பு ஒன்றே பெருந்தேவையும் பெருந்தெய்வமும் என்பதை உய்த்தறிய வைப்பது.
மழை போல, ஆறு போல, காற்று போல, நிலம் போல, வானம் போல தன்னியல்பில் செல்லும் வாழ்வும் இதமோடு இருக்கிறது. மழையை உள்வாங்கிச் செழிக்கும் மரம் பிறிதொரு மழைக்கு வித்தாகிறது.
நேர் அனுபவத்தால் தாமே அறிய வேண்டிய உண்மையைப் பிறரிடமிருந்து கொடையாகவோ, கிரயமாகவோ, கடனாகவோ பெற்றுவிட முடியாது என தம் சிறப்புரையில் பேராசிரியர் கி.சுவாமிநாதன் கூறுவது போல் இப்புதினத்தின் வாசிப்பனுபவம் தனித்துவமானது.
https://www.youtube.com/watch?v=roNPUpp02o0 |
திருலோகத்தின் மொழிபெயர்ப்பு திரிலோகத்தையும் வலம்வரும் எனப் பாராட்டுப் பெற்ற, திருவையாறு லோகநாதையர் சீதாராம் பல்துறை விற்பன்னர். 'மந்தஹாசன்' என்ற புனைப்பெயரும் உண்டு இவருக்கு. 'கந்தர்வகானம்' என்ற கவிதைத் தொகுப்பும், 'இலக்கியப் படகு' என்ற கட்டுரைத் தொகுப்பும் இவருடையதென அறிகிறோம். மேலும், மனுதர்ம சாஸ்திரத்தை சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்த பெருமை இவரையே சாரும். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை மனம்கவர் வகையில் பல இடங்களில் சொற்பொழிவாற்றி பொற்காசுகள் பெற்றவர்.
நூல் பெயர்: சித்தார்த்தன்
மூல மொழி ஜெர்மன் - ஹெர்மன் ஹெஸ்ஸெ
ஆங்கிலம் வழி தமிழில்: திருலோக சீத்தாராம்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-
பின்குறிப்பு:
திருலோக சீதாராம் குறித்த மேலதிகத் தகவல்களுக்கு இவர்தம் உறவினர் திரு வானவில் மோகன் ஜி அவர்களின் பதிவொன்றில் காணலாம்.
http://vanavilmanithan.blogspot.in/2014/10/blog-post.html
தோழர் கதிர்பாரதியின் 'யவ்வனம்' வலைப்பூவின் பதிவு ஒன்றும் திருலோக சீதாராம் அவர்களைப் பற்றிய பல பெருமைமிகு செய்திகளைத் தாங்கியுள்ளது.
http://yavvanam.blogspot.in/2016/01/blog-post.html
திரு. விக்ரமன் அவர்கள் தினமணியில் திருலோக சீதாராம் பற்றி சிலாகித்து எழுதிய கட்டுரை... http://www.dinamani.com/weekly_supplements/tamil_mani/article635446.ece
//பிளந்த அத்திப் பழத்தை நினைவுபடுத்துவதைப் படிக்கும் நமக்கு .....//
ReplyDelete//சொல்லப்படும் உவமையின் பொருத்தப்பாடு நம் வியப்பை விரிக்கிறதோடல்லாமல் எழுத்தாற்றலின் அடையாளமாகவும் இருக்கிறது.//
ஒவ்வொன்றையும் ரஸித்து ருஸித்து மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.
மிகச் செறிவாக எழுதியிருக்கிறீர்கள் நிலா ! மிக நுணுக்கமாகப் படித்திருக்கிறீர்கள்.
ReplyDeleteதிருலோகம் பற்றி சொல்லும் போது என்னையும் நினைவு கூர்நதமைக்கு நன்றி. அவரைப் பற்றி ஒரு நூலாகவே வெளியிட்டுவிட வேண்டும் எனும் எண்ணத்தில் தான் அந்தப் பதிவையும் விவரமாக எழுத வில்லை.
அ ரோல் பற்றிய ஆவணப்படம் வெளியிடப் பட்டுவிட்டது.
You tubeல் thiruloga seetharam என தேடுங்கள்.
நிறைய எழுதுங்கள் நிலா!
'திரு லோகம்' அ ரோல் என வந்தது iPhone உபயம்!
ReplyDelete@மோகன்ஜி
ReplyDeleteஉடனடி வருகையால் என் மதிப்பை கூட்டியமைக்கு மிக்க நன்றி ஜி!
பதிவின் செறிவுக்கு இன்றைய என் வயதும் வாழ்வின் கடந்த அனுபவங்களும் முக்கிய காரணம். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் இதே நூலின் முதல் வாசிப்பில் இன்றைய உணர்தலும் புரிதலும் எனக்கில்லை.