பட்டி மன்றம்
பாட்டி செத்த பத்தாம் வினாடி
பெரிய குழப்பம்
பிணத்தை
எரிப்பதா புதைப்பதா என்று
உள்ளூர்ப் புலவர் ஓடி வந்தார்
பட்டிமன்றம் வைத்துப்
பார்த்தால் என்ன என்று.
நவயுகக் காதல்
உனக்கும் எனக்கும்
ஒரே ஊர்
வாசுதேவநல்லூர்...
நீயும் நானும்
ஒரே மதம்
திருநெல்வேலிச்
சைவப் பிள்ளைமார்
வகுப்பும் கூட...
உன்றன் தந்தையும்
என்றன் தந்தையும்
சொந்த ஊர்க்காரர்கள்
மைத்துனன்மார்கள்
எனவே
செம்புலப் பெயல்நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.
இவ்விரண்டு கவிதைகளும் கவிஞர் மீராவை பரவலாக அறிந்தவர்களால் அடையாளப்படுத்தப்படுவது. இக்கவிதைகள் அடங்கிய ‘ஊசிகள்' தொகுப்பில் அடையாளம் காட்டாத பல அரசியல் கவிதைகள் கூட அடங்கியுள்ளன.1974-ல் முதற்பதிப்பு பெற்ற ‘ஊசிகள்' 2008-க்குள் எட்டு பதிப்பை எட்டியிருப்பதைக் காணும்போது இவை பரவலாக வாசிக்கப் பட்டிருக்கின்றன என்பது மட்டும் புரிகிறது.
“சமுதாயத்தின் நோய்க்கிருமிகளைப் பார்க்கும்போது சங்கடப்படுகிறேன். கோபமும் வருகிறது. ஒரு சுகாதாரமான சமுதாய ஆசைதான் இந்த ‘ஊசிகளை' உருவாக்கியது. என்னைப் பொறுத்தவரை இலக்கிய உப்பரிகையில் உலாவுவதை விடச் சமுதாய நடைபாதைகளைச் செப்பனிடுவதையே முக்கியமாகக் கருதுகிறேன்” எனும் மீராவின் விளக்கம் நல்ல துலக்கம் நமக்கெல்லாம்.
இந்நூலை அணிந்துரைத்த எஸ்.ஏ. பெருமாள் சொல்வது போல், கவிஞர் எதைப் பற்றி எழுதினார் என்பதுதான் முக்கியம். கவிதையை ஒரு கைவாளாய் பிரயோகித்தவர்கள் தமிழில் வெகு அபூர்வம். அவர்களில் மீராவுக்கு முக்கிய இடமுண்டு.
கீழ்வரும் கவிதைகளும் ‘ஊசிகள்' தொகுப்பில் தான் உள்ளன. என்றென்றைக்குமாக.
விகிதங்கள் தான் அதிகரித்துள்ளன.
பழக்கம் பொல்லாதது
ஆராவமுதன்
அமைச்சர் பதவியை
இழந்து வருந்தி
இருந்த ஓர் இரவில்
அருகில் தூங்கிய
ஆசை மனைவியைச்
சும்மா சும்மா
சுரண்டலானார்:
அம்மா கேட்டார் ஆத்திரத்தில்:
“ஏன் தான் உங்களுக்கு
இன்னும் அந்தப்
பொல்லாப் பழக்கம்
போகவில்லையோ?”
ஜனநாயக சோஷலிசம்
ஐந்து வருடம்
முடிந்தால் தேர்தல்
என்பதை மாற்றி
இங்கே
வருடா வருடம்
வைத்தால் போதும்
பெரும் பெரும்
புள்ளிகள் எல்லாம்
வெள்ளிப் பணத்தை
அள்ளி இறைப்பர்
ஆடிக் கரைப்பர்
சுலபமாகச்
சோஷலிசத்தை
அடையும் வழியிது;
அற்புத வழியிது.
* ****
மகாத்மாவின்
சிலையைச் செய்ததில்
மாபெரும் மோசடியாமே!
ஆத்திரம் வேண்டாம்
அன்பரீர்...
மோசடி செய்ததற் கிடையில்
ஏதோ
சிலையும் செய்ததாய்
நினைத்துக் கொண்டால்
நெஞ்சம் மகிழ்ந்து போவீர்!
*அரம் போலும்...
எங்கள்
தேசியமயம்
அரம் போன்றது...
‘இது போல் பளபளப்பு இல்லை'
என்று மக்கள்
ஏத்திப் புகழத்
தனியார் துறையைச்
சரியாய்த் தினமும்
கூர்மைப் படுத்திக்
கொடுக்கும்...
*கொடுத்து வைத்தவர்...
என்னருமைத் தமிழ்தாய்
ஈன்ற மக்களே!
உங்களைப் போல்
உலகில் யாரே
கொடுத்து வைத்தவர்...!
சினிமா அரங்கில்
அரசியல் கூத்து;
அரசியல் மேடையில்
சினிமாச் சண்டை.
ஒரே ஒரு கல்லில்
இரண்டு மாங்காய் ...
உங்களைப்போல்
உலகில் யாரே
கொடுத்து வைத்தவர்!
(அப்பவும், இப்பவும், எப்பவுமே இப்படித்தான்!!)
*கல்வி சிறந்த தமிழ்நாடு
பி.யூ.சி.யா?
ஒரு நூறு போதும்
பி.எஸ்.சி. பி.எட்.
இருநூறு ஆகும்.
எம்.எஸ்.சி. ஆயிரம்
எம்.பி.பி.எஸ்.
ஏழு ஆயிரம்.
இங்கே
சேர வாரும்
செகத்தீரே.
(மறுபடியும் நினைவூட்டுகிறேன் ... இத்தொகுப்பு வெளியான ஆண்டு 1974. இன்றைய நிலவரம் ஒப்பிட்டால்...! )
*ஒன்றே செய்க
சுடுங்கள்...
உணவு கோரிக்
கிளர்ச்சி செய்தால்!
உடனே சுடுங்கள்
மக்களைக் காக்க
முடியவில்லையே
என்ற கவலை எதற்கு?
சட்டம் ஒழுங்கையேனும்
சரியாய்க் காத்தால் போதும்...
சுடுங்கள்...
சும்மா சுடுங்கள்.
('தனியொருவனுக்கு உணவில்லையெனில்...' பாரதியின் கம்பீர முழக்கம் நினைவில் வருகிறதா?)
சுரண்டலாமா?
விழித்துப் பார்த்தேன்
விரலை மெதுவாய்க்
கடித்தொரு பாச்சை
கால்வாங்கியது
பதைத்துக் கேட்டேன்:
“பாவப் பூச்சியே!
கட்டை விரல் ஏன்
தட்டுப்படாமல்
போனதுன் கண்ணில்?
மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?
சுரண்டலாமா?
சுரண்டலாமா?
[இக்கவிதை வாசித்தபோது பாச்சை, ‘ஆள்பவர்'ஆக உருமாறியது ஒருகணம் மனக்கண்ணில். (வீட்டில், வேலையிடத்தில், சமூகத்தில்) கடி தாங்காத போது ‘ஒரே போடு'!]
கவிதை வரிகளும் உங்களின் விமர்சனமும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்... நன்றி...
சுலபமாகச்
ReplyDeleteசோஷலிசத்தை
அடையும் வழியிது;
அற்புத வழியிது.
அனைத்துவரிகளும் ரசிக்கவைக்க்கும் அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
அனைத்துமே அருமை. கவிஞர் மீராவின் வரிகளும், தங்களின் வரிகளும்...
ReplyDeleteஅனைத்துமே அருமை.
ReplyDelete//மெலிந்திருக்கின்ற
சுண்டு விரலைச்
சுரண்டலாமா?//
அர்த்தமும் ஆழமும் நிறைந்த அற்புதமான வரிகள்.
பகிர்வுக்கு நன்றிகள்..
#செம்புலப் பெயல்நீர்போல
ReplyDeleteஅன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே.#
அண்ணன் தங்கை உறவு வருவதைக் கூட கண்டுக்காமல் கலந்து விடுகின்றனவே இந்த காலத்தில் !
நன்றி.
ReplyDeleteசமுதாய நோக்கா, சிறு நகைச்சுவையா, வயிற்றெரிச்சலா, பெண்ணியமா... மீராவின் தாக்கம் என்று சொன்னால் எப்படிப்பட்ட கவிதைகளைச் சொல்வீர்கள்?
நெல்லிக் கனிகள் போல ஒரு வித சுவை நிலா. உள்ளூர் நிலவரம் தெரியாததால் இனிப்பும் புளிப்புமாய் போல.
ReplyDeleteதோழியாரே, நலமா?
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப்பிறகு உங்களது இடுகையை படிக்கிறேன். வேலைப்பளு, நேரமின்மை.
நல்ல பகிர்வு. "இலக்கியப் பணியைவிட சமுதாயப்பணி சிறந்தது" என்ற இடம் அருமை. உண்மையும் கூட.
வழக்கமாக உங்கள் இடுகைக்கு ஒரு சில நாட்களில் 20க்கும் கூடுதலான விமர்சனங்கள் இருக்கும்..ஆனால் இந்த இடுகைக்கு 15 நாட்கள் ஆகியும் வெறும் 7 விமர்சனம் மட்டுமே :-(
உங்களது இலக்கிய...சமுதாய அக்கரையை மெச்சுகிறேன்.
தொடருங்கள், வாத்துக்கள்.
அன்புள்ள நிலாமகள்.
ReplyDeleteகவிஞர் மீராவின் ஊசிகள் தொகுப்பைத்தான் முதன்முதலில் அவரை அறிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பு எனக்கு. இன்றுவரை ஊசிகள் தொகுப்பின் ஒவ்வொரு கவிதையையும் என்னுள் ஊசிபோலத்தான் ஏற்றிக்கொண்டிருக்கிறேன். என்றைக்கும் சாகா கவிதைகள் அவை. எங்கள் எம்எல்ஏவை பாருங்கள்... ஏழு நாளில் எட்டுக் கட்சிகள்.. என்ப் பாதித்தவை ஏராளம். சமுகநோய்க்கு உற்ற மாமருந்தான தொகுப்பு அது. நினைபடுத்திவிட்டீர்கள். நன்றி.