மரம் வளர்த்த மனிதனின் கதை... தொடர்ச்சி...1

 (முதல் பகுதி: http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html )

      விதைகள் அதனுள் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தார். நல்லவற்றைத் தனியாகவும் சொத்தைகளைத் தனியாகவும் வைத்தார்.
       நான் என் பைப்பில் புகைத்தபடி அமர்ந்திருந்தேன். நான் கொஞ்சம் உதவட்டுமா என்று கேட்டேன். அது தன் வேலை என்றார். அந்த வேலையை மிகுந்த கவனத்தோடு அவர் செய்வதைக் கவனித்தேன்.
        அப்போதுதான் நாங்கள் முதலும் கடைசியுமாகப் பேசிக்கொண்டோம்.
        பின், அவர் தேவையான ஓக் விதைகளை பரிசோதித்தபின் பத்து பத்தாகப் பிரித்தார். அவற்றிலும் சிறியவைகளையும் கீறல் விழுந்தவைகளையும் ஒதுக்கி வைத்தார்.
         இப்போது மீண்டும் அவைகளை துல்ல்¢யமாகப் பரிசோதித்து இறுதியாக அவர் மேசையில் 100 ஓக் விதைகல் சேர்ந்ததும் வேலையை நிறுத்தி விட்டார்.
         நாங்கள் படுக்கைக்குச் சென்றோம். அவரோடு கூட இருந்த கணங்கள் எனக்கு நிறைவான மன அமைதியைத் தந்தது.
        அடுத்த நாள் காலை இன்னும் ஒருநாள் நான் அங்கே தங்கிவிட்டுப் போகலாமா என்று கேட்டேன். நான் கேட்டது அவருக்கு இயல்பாகத் தோன்றியிருக்கலாம். எனக்கு அவரோடு தங்கியிருக்க வேண்டும் போலிருந்தது.
        அப்படிக் கேட்டதால் அவரை எதுவும் பாதித்ததாக எனக்குத் தெரியவில்லை. அடுத்தநாள் எனக்கு ஓய்வு தேவைப்படவில்லை.
        அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள விரும்பினேன். அவர் பட்டியிலிருந்த ஆடுகளை விடுவித்து மேய்ச்சலுக்கு புறப்பட்டார்.
         அதற்கு முன் அவர் ‘ஓக்' விதைகள் இருந்த பையை நீர் இருந்த கிண்ணத்தில் ஊறப்போட்டார். அவர் ஆடு விரட்டும் தடிக்குப் பதிலாக ஒரு இரும்புக் கம்பியை எடுத்துவருவதை நான் கவனித்தேன். என் கட்டை விரலளவு தடிமனாகவும் என் தோள்பட்டை உயரத்திலும் அது இருந்தது.
        நான் அங்குமிங்கும் உலாவுவதைப் போல் அவரைப் பின் தொடர்ந்தேன். ஒரு குறிப்பிட்ட தொலைவில் அவர் போகும் பாதைக்கு இணையான பாதையொன்றில் நானும் நடந்தேன்.
       அவரது ஆடுகள் பள்ளத்தாக்கிலிருந்த புல்வெளியில் மேயத் தொடங்கின. ஆடுகளுக்கு நாயைக் காவலுக்கு விட்டுவிட்டு நான் நின்றிருந்த மலை முகட்டுக்கு ஏறத்தொடங்கினார். என்னைக் கடிந்து கொள்ளத்தான் வருகிறார் என்று நினைத்து சற்று பயந்தேன்.
       ஆனால், நான் நின்றிருந்த இடத்தைத் தாண்டி மேலே அவர் சென்று கொண்டிருந்தார். எனக்கு வேறு வேலை எதுவுமில்லை என்றால், என்னையும் தன்னோடு வரும்படி அழைத்தார். அவருடைய இலக்கை நாங்கள் அடைந்ததும் அந்த இரும்புத் தடியால் குழியெடுக்கத் தொடங்கினார்.
         ஒவ்வொரு குழியிலும் ஒரு ஓக் விதையைப் போட்டு மண்ணை மூடினார். 
        இந்த மலைப்பரப்பு உங்களுடையதா என்று கேட்டேன். இல்லையென்று சொன்னார்.
         இந்த நிலம் யாருடையதென்று கேட்டேன். அதுவும் தெரியவில்லை என்றார். அது பொது நிலம். கோயில் சொத்தாக இருக்கலாமென்றார். இல்லையெனில் இந்த இடத்தைப் பற்றிக் கவலைப்படாத யாரோ ஒருவருடையதாகவும் இருக்கலாம் என்றார். அதுபற்றி அவருக்குக் கவலையில்லை.
         அப்படியாக தொடர்ச்சியான அக்கறையோடு தான் கொண்டு வந்த 100 ஓக்  விதைகளையும் விதைத்தார்.
       மதிய உணவிற்குப் பின் தான் ஏற்கனவே நட்ட ஓக் செடிகளைப் பார்வையிடத் தொடங்கினார்.
          கடந்த மூன்று வருடங்களாக அவர் இந்தத் தரிசு நிலத்தில் மரங்களை நடத் தொடங்கியுள்ளார்.
      கிட்டதட்ட 10,000 விதைகள் விதைத்துள்ளார். அவற்றிலிருந்து 2,000 இளஞ்செடிகளே வெளிவந்துள்ளன. இவற்றில் பாதியையும் இழந்து விடுவேன் என்றார். வேர்க்கரையானோ, எலிகளோ, இயற்கை சீற்றமோ இளஞ்செடிகளின் அழிவை மேலும் அதிகரிக்கலாம்; யாருக்குத் தெரியும் என்றார்.
      அந்த 10,000 ஓக் கன்றுகளைத் தவிர இதற்கு முன் அங்கே எதுவுமே இருந்திருக்கவில்லை.
       அவருடைய வயதைக் கேட்டேன். அவர் சொன்னதை விட அவருக்குக் கூடுதலாக இருக்கலாம் போல் இருந்தார்.
        பின்னர் அவர் பெயர் கேட்டென். அவர் பெயர் ‘எல்சியர்டு பூபியர்' என்றார். பள்ளத்தாக்குப் பகுதியில் அவர் ஒரு பண்ணை வைத்திருக்கிறார்.  அங்குதான் அவர் வாழ்வு சிறந்திருந்தது. 
       கொடிய நோய்த் தாக்குதலினால் முதலில் அவரது ஒரே மகனையும் அடுத்து அவரது மனைவியையும் இழந்திருக்கிறார். பின்பு தான் ஏகாந்தமான இந்த இடத்துக்கு வந்திருக்கிறார்.
        தன்னுடைய ஆடுகளோடும், நாயோடும் வாழ்வதே அவருக்கு மனதுக்கு நிறைவாய் இருந்திருக்கிறது.
    இந்த நிலப்பகுதி மரங்கள் இல்லாமல் பாலைநிலமாய் மாறிக் கொண்டிருக்கிறது. தனக்கென்று குறிப்பாக எந்த வேலையும் இல்லாததால் இந்தப் பகுதியில் மரங்களை நடும் வேலையைத் தேர்ந்தெடுத்தேன் என்று கூறினார்.
       அவருடைய பகிர்வு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இளைஞன் ஆதலால் என் எதிர்காலம் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சொன்னேன்: இன்னும் 30 ஆண்டுகளில் 10,000 ஓக் மரங்கள் மிக அருமையாக வளர்ந்திருக்குமென்று. அதற்கு அவர் சொன்னார்: “கடவுள் என்னைப் பிழைக்க வைத்திருந்தால் இந்த 30 ஆண்டுகளில்...”
       இன்னும் ஏராளமான விதைகளை விதைத்திருப்பார். இந்த 10,000 ஓக் மரங்கள் கடலில் விழுந்த ஒரு துளி நீர் போல தான். ஏற்கனவே அவர் புங்கன் மரங்களை வளர்ப்பது பற்றிய நுட்பத்தைத் தெரிந்து வைத்திருந்தார். அதோடு கூட புங்கன் விதைகளை நட்டு நாற்றங்காலில் இளம் செடிகளை வைத்திருந்தார். அந்த புங்கன் செடிகள் வளர்ந்திருந்த பாத்தி மிக அழகாக இருந்தது.
     மேலும் அவர் பள்ளத்தாக்குகளில் மரம் வளர்க்க வேறு வகையான விதைகளையும் வைத்திருந்தார்.
     அவர் சொன்னார்: இந்த மண் படுகைக்கடியில் ஈரப்பதம் இருக்கிறது. கண்டிப்பாய் நட்ட விதைகள் மரங்களாகும்.
        அடுத்தநாள் நான் என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போதுதான் முதல் உலகப்போர் மூண்டது.
     தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நான் இராணுவச் சேவையில் ஈடுபட்டிருந்தேன். ஒரு போர் வீரன் மரங்களைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பது இயல்பான செயலல்ல. போர் நிறுத்தத்துக்குப் பிறகு எங்கள் படை கலைக்கப் பட்டது. எனக்கு இராணுவச் சேவைக்கான கணிசமான ஒரு தொகை ஊதியமாகக் கிடைத்தது.
               நான் மீண்டும் பயணப்பட்டு அந்த மலை முகட்டுக்கு வந்தேன்.
                                                          -வளரும்...

இவற்றையும் வாசிக்கலாம்...




3 கருத்துரைகள்
  1. பசுமை பரவிய நினைவுகள்..!

    ReplyDelete
  2. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. //இந்த மண் படுகைக்கடியில் ஈரப்பதம் இருக்கிறது. கண்டிப்பாய் நட்ட விதைகள் மரங்களாகும்.//

    பசுமையான பதிவு. சுவாரஸ்யமாகவும் உள்ளது. பாராட்டுக்கள். நன்றிகள்.

    ReplyDelete