கவிதை அப்பாவுக்கொரு செல்ல மகளின் கவிதாஞ்சலி...
மரபுக் கவிதை மயங்கிய பொழுதில் புதுக்கணித சூத்திரமாய் புதுக்கவிதைப் பூங்காவில் பூத்திட்ட புதுமைக் கவி...
எண்பதுகளில் மட்டுமல்ல, என்றென்றும் நம் நினைவில் இனித்திடும் ‘கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள்' படைத்த எழுச்சிக் கவி...
களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
களம்பல கண்டவர், கவிதைத் திறத்தால் உளம்பல வென்றவர், உயர்வாய்த் தளம்பல கண்டவர், பதிப்புக் கலைக்கு முகமென நின்றவர், சாகாத வானம், சரியாத பேரிமயம், நேர்(மை)க் கோடாய் நின்ற நெருப்பு, சிவகங்கைக் கொரு சிறப்பு... கவிஞர் மீரா!(நன்றி: ‘ஆனந்தஜோதி'-மார்ச்,2012, பேரா. இரா.பாஸ்கரன்)
இப்பூவுலகில் வாழப்பிறந்த அனைவரும் ஏதேனுமொருநாள் புறப்பட்ட இடத்துக்கு போய்ச்சேர வேண்டியுள்ளது உலக நியதி. 2002-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ம் தேதி கவிஞர் மீராவை காலன் களவாண்டு சென்றான். அவரை மைய அச்சாய்க் கொண்டு சுழன்ற இலக்கிய உலகும், இல்லற உறவுகளும் செய்வதறியாமல் பதைத்து பரிதவித்தனர். அழுதும் அரற்றியும், அவர் பெருமைகளைப் பேசிப் புளங்ககித்தும், நினைவெழும்போதெல்லாம் நின்று கலங்கியும் ஆற்றவொண்ணா வேதனையில் ஆழ்ந்தனர்.
எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படுவது எத்துணை சத்தியமோ அத்தகையதே ஆண் குழந்தைக்கு அம்மா மேல் அதீத பிரியமும் பெண் குழந்தைக்கு அப்பா மேல் அளவற்ற பாசமும் வேர்விட்டிருப்பது.
கவிஞர் செல்மா தன் கணவர் மற்றும் குழந்தைகளுடன் |
லெபனான் நாட்டுக் கவிமாமன்னன் கலீல் கிப்ரான் மேல் வெகு மையல் கொண்ட மீரா, கிப்ரானின் ‘முறிந்த சிறகுகள்' நாயகி செல்மா மீதான ஈர்ப்பில் தன் அன்பு மகளுக்கு செல்லப் பெயராய் சூட்டி அழைத்து மகிழ்ந்த காலத்தில் எண்ணியிருப்பாரோ என்னவோ, பிற்காலத்தில் படைப்புலகில் தடம் பதிக்கும் தன் மகள் இப்பெயருடன் இலக்கிய வானில் வலம் வர இருக்கிறார் என்பதை!
தன் பிரிய அப்பா தன்னைப் பிரிந்ததை தாங்க முடியாமல் செல்மா அவர் நினைவுகளை கவிதைகளாய் இறக்கி வைத்துள்ளார் ‘கவிதை அப்பா' நூலில். மீன்குஞ்சுக்கு நீந்தவும் கற்றுத் தர வேண்டுமா?!
குக்கர் வராத காலத்தில் எங்கள் தாய்மார்கள் உலை வைத்து சோறாக்கினர். கொதிவந்த சாதத்தில் ஓரிரண்டு பருக்கைகளைக் கரண்டியிலெடுத்து பதம் பார்த்து வடித்து விடுவது வழக்கம். நானும் ‘கவிதை அப்பா'வில் இருக்கும் இரண்டொரு கவிதைகளை ஆராயப் புகுகிறேன்.
பயணத்தை விரும்பாதவர்களும், பயணம் மேற்கொள்ளாதவர்களும் அரிதினும் அரிதே. பயணத்துக்கான ஆயத்த ஏற்பாடுகளாக தேவையான பணம் சேகரித்தல், போய்வரத் தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுதல், போக்குவரத்துக்கு சரியான மார்க்கத்தையும் வாகனத்தையும் தேர்தல், முக்கியமான, நெருங்கிய அன்பு கொண்டவர்களிடம் பயணம் சொல்லிக் கிளம்புதல் எனப் பலவும் உண்டு. வேலை நிமித்தமாய், விழாக்கள் நிமித்தமாய், புனித யாத்திரைகளாய் பலவிதமான பயணங்களை நாமறிவோம்.
எந்த ஆயத்தமும் தேவையற்ற, சொல்லாமல் செல்லும் ஒரே யாத்திரை இறுதி யாத்திரை மட்டுமே. முதுமையோ வியாதியோ முன்னறிவிப்பு செய்வதுண்டு. விபத்து போன்ற எதிர்பாரா ‘பயணமும்' நிகழ்வதுண்டு. எல்லோருக்கும் இனியவராய் இருக்கும் சிலரை எதிர்பாரா நேரத்தில் காலக் கொடுமையாய் பறிகொடுக்கும் அவலமும் காண்பதுண்டு.
செல்மாவின் ஒரு கவிதை இப்படித் தொடங்குகிறது...
உங்களின் பயணம்
அறிவிக்கப்படாமையால்...
அறிவிக்கப்படாமையால்...
திகைப்புதான் நமக்கும்.
அடுத்த வரிகள் சற்று அழுத்தமாய்...
விஸ்வரூபமெடுத்து
வேர்விட்டு வளர்ந்தமையாய்...
வேர்விட்டு வளர்ந்தமையாய்...
ஆகாயம் வரை விஸ்வரூபமெடுத்து, பாதாளம் வரை வேர்விட்டு!
என்னை ஆக்கிரமித்து
என் நெஞ்சைப் பிளந்து...
என் நெஞ்சைப் பிளந்து...
ஆகாயம்முதல் பாதாளம் வரை அதிர்வு திடீர் பேரிழப்பால். நெஞ்சு பிளப்பது போலொரு துயரம்.
எரிமலைக் குழம்பாய்
வெடித்துச் சிதறிய...
வெடித்துச் சிதறிய...
கொதிநிலை தாங்காமல் வெடித்துச் சிதறிய எரிமலைபோல் நெஞ்சம் பிளந்து எண்ணங்கள் துயர் பூசி சிதறிக் கிடக்க,
பல நாட்கள்
நித்திரை தொலைந்தது...
நித்திரை தொலைந்தது...
பகல் நேரம் குடும்பப் பொறுப்பில் பெண்கள் வேலையில் கவனம் செலுத்தினாலும், எல்லாம் ஓய்ந்து சாயும் நேரம் மனசுள் புகும் மாளாத வேதனை, அன்பென்றால் என்னவென்று அறியவும் துய்க்கவுமான அப்பாவின் இழப்பு... அயர்வில் நெருங்கும் உறக்கத்தையும் தூர விரட்டுவதாய்.
பல நேரம் மனநிலையில் நல்லதொரு மாற்றம் வேண்டி உல்லாசப் பயணங்கள் கைக்கொள்வது நம் வழக்கம். கவிஞர் சொல்கிறார்,
யாத்திரை போகலாம்
என்றாலும்
என் கால்கள்
பயணப்படத் துடித்தன
நீங்கள் இருக்கும்
திசை நோக்கி. .......பக்கம் - 67
என்றாலும்
என் கால்கள்
பயணப்படத் துடித்தன
நீங்கள் இருக்கும்
திசை நோக்கி. .......பக்கம் - 67
வாசிப்போரின் மனதிலும் அதிர்வலைகள் வியாபித்து செல்மா மேல் பேரிரக்கம் சுரக்கிறது. செல்மாவுடன் சேர்ந்து நம் தொண்டைக் குழிக்குள்ளும் பெரும் கேவல் எழத் தவிக்கிறது. பிரிந்து கிடக்கும் கவிதை வரிகளை ஒருங்கே வாசிக்க, நம்முள் அதிர்வேட்டு.
இன்னொரு கவிதையில் சொல்வார்... மணல் வீடு கட்டி மகிழ்ந்த சிறுமி மழை வந்து கரைத்துப் போக, ஏமாற்றத்தில் கண்கள் குளமாகி பேதமையாய் நின்ற அந்த வினாடிபோல,
என் அப்பாவின்
பாசச் சித்திரங்களை
என் மனக் கற்றாழையில்
தொடுத்துக் கொண்டிருந்த எனக்கு
யாரோ வந்து
அபகரித்தது போன்றதொரு ஆற்றாமை. (பக்கம் - 75)
பாசச் சித்திரங்களை
என் மனக் கற்றாழையில்
தொடுத்துக் கொண்டிருந்த எனக்கு
யாரோ வந்து
அபகரித்தது போன்றதொரு ஆற்றாமை. (பக்கம் - 75)
இக்கவிதையில் ‘மணல் வீடு, மழை, மனக் கற்றாழை, யாரோ' போன்ற சொற்களுக்கெல்லாம் படிமம், உருவகம், உவமை, உள்ளுறை, இறைச்சி இன்னபிற திறனாய்வுப் பதங்களையெல்லாம் பொருத்திப் பார்க்க விழைகிறது கவிமனசு.
பொங்கிப் பெருகிய அவரின் ஆற்றாமை ஒரு கவிதை நூலை சமைக்கும் பக்குவத்தை தந்திருக்கிறது. உணர்வுகளின் வடிகாலாக ஏதேனும் உபயோகமான படைப்பு இருப்பது யாவர்க்கும் நலமே. வாசிப்பாளரிடம் தன் உணர்வுகளை ஏற்றிவிடும் வல்லமை பெற்றவர்களே சிறந்த படைப்பாளிகளாக முடிகிறது. இந்நூலை வாசிக்கும் அனைவரும் ஒரு கணமேனும், ஒரு வரியிலேனும், ஒரு சொல்லாலேனும் நெகிழ்வது கண்கூடு.
நூற்பெயர்: ‘கவிதை அப்பா'
நூலாசிரியர்: செல்மா
வெளியீடு: அகரம்
மனை எண்-1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்- 613 007.
மனை எண்-1, நிர்மலா நகர்,
தஞ்சாவூர்- 613 007.
பக்கம் : 96
விலை: ரூ. 60/-
(கவிஞர் மீரா நம்மைப் பிரிந்து 11 ஆண்டுகள் 1மாதம் முடிந்து விட்டது! எத்தனை ஆண்டுகள் கழிந்தாலும் இழப்பின் துயரம் அவரது குடும்பத்தினருக்கு எள்ளளவும் குறையாது அல்லவா... எழுத்தாகவும் அதனுள் உறைகருத்தாகவும் என்றென்றும் நம்மோடு உயிர்த்திருக்கிறார்!)
உங்கள் விமர்சனம் புத்தகத்தினை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. அடுத்த தமிழகப் பயணத்தில் வாங்கிட குறித்து வைத்துக் கொண்டேன்.....
ReplyDeleteவிமர்சனம் மிகவும் அருமை...
ReplyDeleteபுத்தக விமர்சனம் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteஅருமையான விமரிசனம்!
ReplyDeleteமீன்குஞ்சுக்கு நீந்தவும் கற்றுத் தர வேண்டுமா?
ReplyDeleteபுத்தக விமர்சனம் அருமை..!
விமர்சனம் அருமை. புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தூண்டியது.
ReplyDeleteசிறப்பான விமர்சனம் .ஆழமானப் பாசப்பிணைப்பை வெளிக்கொண்டுவரும் படைப்பு என்று கருதுகின்றேன்
ReplyDeleteமீராவைப் படித்திருக்கிறேனா, நினைவுக்கு வரவில்லை. புத்தகக் கடைக்குப் போனால் இனி இவரைப் பற்றி நினைவுக்கு வரும்படி வலிக்காமல் கீறியிருக்கிறீர்கள். 'கற்பனைகள்-காகிதங்கள்' மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteமகளின் நூலறிமுகத்துடன் ஒன்றிரண்டு வரிகள் அப்பாவின் வரிகளும் சேர்த்திருக்கலாமே - என் போன்றவர்களுக்குச் சற்றுக் கைத்தாங்கலாக இருந்திருக்கும்.
ReplyDeleteஅப்பாவுக்கு மகளின் மீதிருக்கும் பாசத்துக்கு பெண் குழந்தை என்ற காரணத்துக்கு மேல் பல படிகள் உண்டு என்று நினைக்கிறேன். அதே போல் அம்மாவுக்கும்.