பெருந்தகை வளவ.துரையனார் அவர்கள் ‘வலையில் மீன்கள்' என்ற பெயரில் முத்தொள்ளாயிரப் பாடல்கள் சிலவற்றுக்கான தமது நவீன உரை நூலை எமக்கு அனுப்பி இரு மாதங்களுக்கும் மேலாகிறது. செளந்தர சுகனில் தொடர்ந்து இந்நூற்பொதிவுகளை வாசித்திருக்கிறேன். வாழ்தலின் நெரிசல்களுக்கிடையே ஆசுவாசமடைந்திருக்கிறேன் அவ்வப்போது அதனுள் மூழ்கி.
சேர-சோழ-பாண்டியர்கள் மூவருக்குமாக மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கியதெனக் கொள்ளப் படினும், நமக்குக் கிடைத்தது கடவுள் வாழ்த்தையும் சேர்த்து 130 பாடல்களே என்ற தகவல் வியப்பளிப்பதே. எழுதியவர், தொகுத்தவர் எதுவும் தெரியாவிடினும், பாடல்களின் நயமும், பொருட்செறிவும் சொல்லழகும் இன்னும் நிலைநிற்கப் போதுமானதாய்!
பழந்தமிழ் இலக்கிய-இலக்கண நூல்களை இன்னமும் உயிர்ப்போடு நம்மிடையே உலா வரச் செய்யும் சிறப்பு உரையாசிரியர்களையே சார்வதாய் உள்ளது. திரு. துரையனாரினுள் ஒளிந்திருக்கும் ஓய்வு பெறாத தமிழாசிரியர் நெஞ்சம் நமக்கு இத்தகு அரிய நூலைக் கையளிக்க வல்லதாய் இருக்கிறது.
அவர்தம் உரைவீச்சை ரசித்து ரசித்துப் பொறாமல் இப்பகிர்வு!
கிராமத்து அப்பிராணிப் பெண் ஒருத்தியின் ஒற்றைப் பாத்திரப் பேச்சில் நம்மை அவளின் உலகில் உலவச் செய்து, பாடலின் பொருளை உணர வைக்கும் நுட்பம் நூலின் இப்பகுதியை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டியது. நூலின் முழுமையான வாசிப்பனுபவத்தை இன்னொரு சமயம் பகிர்வேன்.
‘சன்னலே கண்கள்' என்ற தலைப்பிலான 23ம் மீனின் துள்ளல் (வலையில் மீன்கள் - பக்கம் 98-101)...
“ஏஞ்சாமி என்னையா என்னா ஊருன்னு கேக்குறீங்க? நல்லப்பரெட்டிப்பாளையம் சாமி! அதுக்குள்ளாறயே மறந்துட்டீங்க, போன வாரம்தான் வந்துருந்தேன். அதான் சாமி, வெசாயக் கெழம, காலை பத்துமணி வண்டி போன ஒடனேயே ஓடி வந்தேனே! அன்னிக்கு இங்க யாரோ அதிகாரி வந்துருக்காங்கன்னு என்னைக் காக்க வெச்சீங்களே!
ஆமாங்க. இப்ப நாபகம் வருதா? எதுக்கு வந்தேன்னா கேட்டுபுட்டீங்க? அதாங்க, நாலாம் வகுப்புல புள்ளய சேர்க்க வந்தேனே... சின்னதா, குள்ளமா, சுருட்டை முடியா இருப்பானே, போய் கூட்டிகிட்டு வரட்டுங்களா? வாணாங்களா, சரி.
அவன் பேரா, முத்தழகுங்க. எங்க ஆத்தா ஊரு சேதாரப்பட்டுல மூணாம்ப்பு முடிச்சாங்க. நல்லாப் படிப்பாங்க. ஊட்டுக்கு வர கடுதாசி எல்லாம் படிச்சுப்புடுவாங்க. அதுசரி; இப்ப எதுக்கு வந்தேன்னு வெசாரிக்கிறீங்களா?
அதாங்க, சரோசா தெரியுமில்ல; ஒங்ககிட்ட அஞ்சுவருசம் முன்னாடி படிச்ச பொண்ணுங்க. என்னா சாமி, நீங்க அத கூட மறந்துட்டிங்க. ஒண்ணுமே ஞாபகம் இல்லீங்களா? பள்ளிக்கூடத்து வெழாவில டான்ஸ் ஆடிச்சே, மைக்குல நல்லா பேசுங்க. நெறய டப்பாலாம் பிரைஸ் குடுத்தீங்களே, ஆங்; அந்தப் பொண்ணுதாங்க. வெளையாட்டுல கூட முன்னாடி நிக்குங்க.
மேலயா, எங்க சாமி படிக்க வைக்கிறது? ஐஸ்கூலு போவணும்; அங்க போனா அப்பறம் காலேசு போணும்னு சொல்லும்; அப்புறம் அதுக்கேத்த புருசன தேடிக் கண்ணாலம் கட்டிக்கணும்; நமக்கு அதெல்லாம் கட்டுப்படியாகுமா?
இப்ப என்னா பண்ணுதுன்னா கேக்கறீங்க; அதையேன்சாமி கேக்கறீங்க; நடுவீரப்பட்டுல கெடக்குதுங்க. ஆமாங்க, புருசன் வூட்டுலதான். அதுக்குள்ளாறயா! நானா கட்டிக் குடுத்தேன்? அது பெரிய கதைங்க.
ஆறு மாசம் முன்னாடி ஆந்திராவுக்கு கரும்பு வெட்டப் போனமா! இந்தப் பொண்ணு சரோசாவை எங்கக் கூட்டிப் போறது? வயசுப் பொண்ணைக் கூட்டிப் போக முடியுமா? போற எடத்துல எங்க பொங்கணுமோ? எங்க தங்கணுமோ? ஆமாம் சாமி, நாங்க ரெண்டு பேரு போனா எப்படியிருந்தாலும் சமாளிச்சுக்கலாம்னு சரோசாவையும் அவ தம்பியையும் எங்க மூத்தாரு ஊட்லதான் உட்டுட்டுப் போனோம்.
அங்க எப்படியும் கரும்பு வெட்டறது ரெண்டு மூணு மாசம் தள்ளுங்க. என்னா ஆச்சுன்னா கேக்கறீங்க, நாங்க அங்க இருக்கறப்ப இங்க சரோசா அறுப்புக்குப் போயிருக்கு. போகுங்க. ஆமா; களை எடுக்கறது, நடவு நடறது எல்லா வேலயும் ஒப்பா செய்யுங்க; எங்க மூத்தாரு அவங்க சம்சாரம் எல்லார் கூடயும் தான் போகும்.
ஆமாம் சாமி; கண்ணுல தண்ணி கலங்குதுங்க; வேலைக்கிப் போகச்சே பண்ருட்டி பக்கத்திலேருந்து ஆளுங்க வேலக்கி வந்துருக்காங்க. அதுல ஒரு புள்ளயாம், காமராசுன்னு பேருங்க. என்னாங்க நீங்க, அதெல்லாம் அந்தக் காலம், மருமவன் பேரச் சொல்லாம இருக்கறது.
நேரமாகுதுங்களா, நானும் என் கொறயச் சொல்லணுங்க. கொஞ்சம் கேட்டுக்குங்க; பண்ருட்டி, நடுவீரப் பட்டு ஆளுங்க கூட எப்படியோ இவளுக்கு நெருங்கிப் பழக்கம் வந்திடுச்சு; அவங்க போறப்ப, ஒருநா இவளும் காமராசு கூடப் போயிட்டா; வெவரம் தெரிஞ்சு எங்க சனங்க போயிப் பார்க்கறச்சே ரெண்டு பேரும் கல்லாணமே கட்டிகிட்டாங்களாம்.
மூணு மாசம் கழிச்சு கரும்புவேல முடிச்சிட்டு நாங்க ரெண்டு பேரும் வந்தமா... ஊர்ப்பூரா ஒரே கதை கதையா சொல்லுது. சிறுக்கி மக இன்னா மாதிரி செஞ்சு புட்டாலும் பெத்த மனசு கேக்குதுங்களா!
மொதல்ல நான் மட்டும் போயி பார்த்துட்டு வந்தேன். அப்புறம் என் ஊட்டுக்காரரும் வந்தாரு. ரெண்டு பேரும் கால்லே உழுந்து மன்னிப்பு கேட்டாங்க. ஆமாங்க. எல்லாம் சரியா வர்ற மாதிரி தான் இருந்துச்சு. நாங்க மூணாவது தடவ போறச்சே கல்லாணந்தாம் முடிஞ்சு போச்சுன்னு கம்முகினு இருக்கீங்க. சீரு செனத்தில்லாம் எப்போன்னு கேக்குறாங்க. ஆமா, மருமவன், அவங்க அம்மாக்காரி, அத்தை எல்லாரும் தான்.
என்னான்னு கேட்டா ஏழு பவுனு நகையாம். சின்ன வண்டியாம், பீரோவாம் ... அடுக்கினே போறாங்க. நானும் என் ஊட்டுக்காரரும் சரிங்க, கொஞ்சம் கொஞ்சமா செய்யறோம்னு சொல்லிட்டு அடுத்த தபா போறச்சே மருமவனுக்கு ஒரு மோதிரம் ஒரு பவுனுல எடுத்துட்டு, சரோசாவுக்கு ரெண்டு பவுனிலே ஒரு சங்கிலியும் போட்டோம். ஒத்துகிட்டாங்களான்னு கேக்கறீங்களா? என்னா கூட்டம் அது? ஒரே ஆட்டம் ஆடிட்டாங்க.
எல்லாம் மொத்தமாத்தான் செய்யணும்; இதென்ன கொஞ்சம் கொஞ்சமா ரவோண்டுன்னு பாக்க உடலீங்க. மூஞ்சியில எறிஞ்சிட்டாங்க. பொண்ணையே பாக்க உடலீங்க. போன மாசம் திருவந்திபுரத்துல எங்க சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு எல்லாரும் வந்திருந்தாங்க. பொண்ணை எங்க கூடப் பேசக் கூடாதுன்னு சட்டதிட்டம் பண்ணி வச்சிட்டாங்களாம். ஆனா என்னை ஆசையா வச்சிருக்காங்கன்னு சொல்லி அனுப்பிச்சுடுச்சு. இப்ப முழுகாம வேற இருக்குங்க.
அழுவாம எப்படிங்க இருக்க முடியும்? நெனைச்சாலே பதறுதுங்க. எங்க ஊட்டுக்காரரைத் தேத்த முடியலிங்க. என் ரோசா என் ரோசான்னு அவரு உயிர விடறாருங்க. அதெல்லாம் சரி; இப்ப என்னா வெசயம்ன்னு கேக்கறீங்களா?
என்னமோ உதவிக்குழுவாம்; பேங்குல பணம் வாங்கப் போறாங்களாம்; அதுக்கு சரோசா படிச்ச சீட்டு வேணுமாம். எட்டாம் வகுப்பு படிச்ச சீட்டு வேணும் சாமி; அது எங்க சாமி வரும்? நான் தான் இவ்ளோ கதை சொல்றனே! எங்கிட்ட தரலாம்ல... அது கையெழுத்து போடணுமா? நானும் வாங்கலாமா! சரிசாமி! இந்தச் சாக்கிலாவது அதை நீங்க பார்த்து வெசாரிங்களேன்.
அடுத்த வாரம் எங்க ஊர்ல அம்மன் திருவிழாவுக்கு அவசியம் வரும்ங்க. காலையில கோயிலுக்கு வந்துட்டு சாயந்திரம் போயிடும். வெள்ளிக் கெழமைதான். நான் வரச் சொல்றேன். காலையில இங்க வந்து வாங்கிக்கச் சொல்றேன். கொஞ்சம் அன்னிக்கு தயவு பண்ணி குடுங்க சாமி! உங்களுக்குப் புண்ணியமாப் போவும்.
அப்புறம் இன்னொரு வெசயம் சாமி! அது வந்துச்சுன்னா எங்க ஊட்டுக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்க. கோயிலுக்குப் போறச்சவோ இல்ல வரச்சவோ எங்க ஊட்டோரமா தெரு சன்னல் பக்கமா போகச் சொல்லுங்க சாமி; நான் பாத்துகிடுதேன். அதுபோதும் சாமி; கண்ணால பார்த்தாலே போதும். தம்பிகிட்ட சொல்லி ஒங்களுக்கு ஞாபகம் மூட்டச் சொல்றேன். வரட்டுங்களா! ஒங்களுக்குக் கோடி புண்ணியம்; நீங்க நல்லா யிருக்கணும்!"
துடியடித் தோற்செவித் தூங்குகைந் நால்வாய்ப்
பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்ந்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலுமெம்
சாலேகம் சாரா நட
-முத்தொள்ளாயிரம் 50
(துடி- உடுக்கை; தோல்- கேடகம்; நாலுதல்- தொங்குதல்; தூங்குதல்- தொங்குதல்; சேலேகம்- செந்தூரம்; சாலேகம்- சன்னல்)
பாடலின் பொருள்:
மன்னன் உலா வரும் போது அவனைக் காண்பதற்காக அவனைத் தாங்கிய யானையிடம் நீ என் வீட்டுச் சன்னல் பக்கமாக நட என்று வேண்டல்.
நூற்பெயர்: வலையில் மீன்கள்
உரைக்காரர்: வளவ துரையன்/93676 31228
வெளியீடு: அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்/94446 40986
பக்கங்கள்: 160
விலை: ரூ. 100/-
நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...
ReplyDeleteது வந்துச்சுன்னா எங்க ஊட்டுக்கு எல்லாம் அனுப்ப மாட்டாங்க. கோயிலுக்குப் போறச்சவோ இல்ல வரச்சவோ எங்க ஊட்டோரமா தெரு சன்னல் பக்கமா போகச் சொல்லுங்க சாமி; நான் பாத்துகிடுதேன். அதுபோதும் சாமி//
ReplyDeleteவிதி எனச் சொல்லி ஓடிப்போவதா ?
மதி இழந்த செயலது. நான் என் செய்வேன் எனச் சொல்வதா?
பதி என்றவன் தன்னைக்
கதியற்று நிற்கச்செய்து
நிதி கொண்டு வா இல்லையேல்
நீ இல்லை எனச் சொல்கிறானே...
நீதி எங்கே ? மனு
நீதிச் சோழா நீ வந்து
சொல்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthatha72.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
இலக்கியப்பாடல்,,,,,,,,,, ஆனால் மனம் கனக்கசெய்கிறது, நல்ல அறிமுகம்,
ReplyDeleteவாழ்த்துக்கள்.
மனம் வேதனையுற்றது. சுப்புத்தாத்தாவின் பதிவைப் படிச்சுட்டு வந்தேன்.
ReplyDeleteநல்லதோர் நூல் அறிமுகம். நன்றி சகோ.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநூல் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
@ரூபன்
ReplyDeleteவணக்கம் சகோ...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
@Geetha Sambasivam
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!
@mageswari balachandran
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி!
@வெங்கட் நாகராஜ்
ReplyDeleteநன்றி சகோ... மறவா வருகைக்கும்!
@sury Siva
ReplyDeleteரசிப்புக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுதா அவர்களே...!
@திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteஊர் கூடித் தேர் இழுப்பது போல் வெகு விமர்சை தங்கள் முயற்சி! அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.
நல்லகதையாகத் தேர்ந்தெடுத்து வெளியிட்டு இருக்கிறீர்கள். இது முழு நூலையும் வாசிக்கும் ஆர்வவத்தைத் தூண்டும். நன்றிகள்
ReplyDelete