வாசித்தலை நேசிப்போம்-புத்தக தின வாழ்த்துகள்

      தன்னை வாசிப்பவரை அனுபவங்களாலும் ஞானத்தாலும் நிரப்புகிற அறிவுப் பிரபஞ்சம், ஞானத் தந்தை புத்தகம்!
       ரோஜா ஒன்று. எல்லாக்காலத்திலும் அதே நிறம் அதே வாசம். ஆனால் ஒரே புத்தகம் வாசிக்க வாசிக்க காலம்தோறும் புதியதாகிறது. வாசிப்பவரைப் புதியவராக்குகிறது. அதுதான் புத்தகத்தின் ரகசியம். புத்தகத்தின் அதிசய ஆற்றல்.
        எழுதி முடித்த புத்தகமென்பது உறைந்து இறுகிப் போன சிந்தனையன்று. இடையறாது இயங்கி வளர்ந்துகொண்டிருக்கிற ஓர் அனுபவக்கற்றை. வாழ்க்கையைப் போல் உயிருடன் இயங்கி முன்னேறும் பேருணர்வு. ஊட்டி சென்று ஒருவாரம் சுற்றித் திரிந்தவன் கற்றறிந்ததை விட ஊட்டி பற்றி எழுதப்பட்ட சிறந்ததொரு நூலை வாசித்தால் பேரதிகமாக உணர்ந்துகொள்ள முடியும்.
         நேர்முகத் தரிசனமென்பது ஒற்றைக் கோணம் மட்டுமே அறிமுகப்படுத்தும். ஒரு நல்ல நூலென்பது, அதன் பன்முகத் தோற்ற முழுப்பரிமாணத்தை உணர்த்தும்.
          ஒரு மனிதன் பிறந்து எண்பது வயது வாழும் காலத்தில் ஓயாத உழைப்பாலும், பார்த்து கேட்டு பேசி கிடைத்த அனுபவ அறிவாலும் உணர்ந்து தெளிந்ததை விடவும் அதிகமாகவே ஒரு நல்ல நாவலை வாசிக்கும் போது பலநூறு மனிதர்களின் வாழ்வனுபவங்கள் முழுமையும் நமக்குள் இறங்கி வளரத்தொடங்குவது திண்ணம்.
         ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நமக்குள் ஒரு புதிய உலகமாக-புதிய வெளிச்சமாக-புதிய அனுபவமாக ஒவ்வொரு புத்தகமும் விரிகிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம். அவரவர் பார்வையிலிருந்து பதிவாகிற பிரபஞ்சம்.
          புத்தகம் வாழ்க்கையைப் பேசும். எது வாழ்க்கை என்று கற்றுத்தரும். வாழ்க்கைக்கும் பிழைப்புக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தும். “புரட்சியும் கலகமும் ஒன்று என்று வெகுகாலமாக நினைத்திருந்தேன். ‘உள்ளதை அழித்து புதியதை நிர்மாணிப்பது புரட்சி; உள்ளதை அழித்து சூனியத்தில் எறிவது கலகம். இரண்டும் ஒன்றல்ல. எதிரெதிர் முரண் என்பதை ஒரு புத்தக வாசிப்பில்தான் கற்றறிந்து கொண்டேன்.” (மேலாண்மை பொன்னுச்சாமி)
         புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும்.
         உலகம் பொய்யென்று ஒரு புத்தகம் சொல்லிவிடக் கூடும். புத்தகத்தின் ஆற்றல் பொய்யென்று எந்த உலகமும் சொல்லிவிட முடியாது.
நன்றி:  மேலாண்மை பொன்னுச்சாமி, தினமணி -23.4.2012
7 கருத்துரைகள்
  1. காலத்துக்கும் மாற்றம் பெறாத உன்னதமான கருத்துக்கூறும் கட்டுரை. மேலாண்மை பொன்னுச்சாமிக்கும் உங்களுக்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete
  2. // புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும்.
    உலகம் பொய்யென்று ஒரு புத்தகம் சொல்லிவிடக் கூடும். புத்தகத்தின் ஆற்றல் பொய்யென்று எந்த உலகமும் சொல்லிவிட முடியாது.//

    ;))))) சூப்பரான வரிகள்.

    இலக்கியத்திற்கான புகழ்பெற்ற பரிசான சாஹித்ய அகாடமி விருது வாங்கியவரின் சொற்களைப் பகிர்ந்து கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    ReplyDelete
  3. அருமை நிலா! ஒவ்வொன்றும் முத்துக்கள்.

    தங்கப் பதக்கத்தின் மேலே முத்துப் பதித்தது போலே..... மிளிர்கின்றது.

    ReplyDelete
  4. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு உலகின் கதவுகளைத் திறந்துவிடுகிறது. நமக்குள் ஒரு புதிய உலகமாக-புதிய வெளிச்சமாக-புதிய அனுபவமாக ஒவ்வொரு புத்தகமும் விரிகிறது. ஒவ்வொரு புத்தகமும் ஒவ்வொரு பிரபஞ்சம். அவரவர் பார்வையிலிருந்து பதிவாகிற பிரபஞ்சம்.

    புத்தக தின வாழ்த்துகள்..

    ReplyDelete
  5. //புத்தகம் கற்றுத் தராதது எதுவுமில்லை. என்னிடமிருப்பதெல்லாம் புத்தகத்தின் தானம் தான். புத்தகம் பேசும். நம்முடன் தோழமை கொள்ளும். நண்பனாகத் துணை நிற்கும். ஆசானாகக் கற்றுக் கொடுக்கும். தாயாக அன்பு செலுத்தும். தந்தையாகக் கல்வி தரும். //

    உண்மை. புத்தகங்கள் நமக்குக் கற்றுக் கொடுக்கும் விஷயங்கள் எத்தனை எத்தனை.....

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  7. நன்றி நிலாமகள். நானும் வாசித்தேன். உங்களை வழிமொழிகிறேன் ஆனால் சற்று தாமதமாகி.

    ReplyDelete