செல்மாவின் “கவிதை அப்பா”

   
       கன்னல், ஆலை, தும்பு, கழை, இக்கலம், அங்காரிகை, இக்கு,  ஈர், வெகுரசம், கணை, வெண்டு, மதுதிரிணம், வேழம்... இவையனைத்தும் கரும்பைக் குறிக்கும் வேறு தமிழ்ச் சொற்களாக பழந்தமிழகராதிகள் மூலம் அறிகிறோம்.       நினைவில் வாழும் சிவகங்கைக் கவிஞர் ‘மீரா'வின் செல்லமகள் செல்மாவுக்கு அன்பு, பாசம், நேசம், தோழமை, ஆசான், வழிகாட்டி, வழிபடுதெய்வம் என அனைத்துக்கும் ஒரே உருவாய் அப்பா... அப்பா... அப்பா மட்டிலுமே!
       தன் மணவாழ்வில் இரு ஆண் குழந்தைகளுக்குப் பின் பத்தாண்டுகள் கழித்துப் பிறந்த பெண் மகவைத் தன் ஆதர்சக் கவிஞர் கலீல் கிப்ரானின் ‘செல்மா'வாகவே வளர்த்தெடுத்தார் கவிஞர் மீரா.
       முதுகலைத் தமிழிலக்கியம் பயின்ற தன் அன்பின் செல்மா, பின்னாளில் தனக்காக ஒரு கவிதை நூலெழுதி கண்ணீர் அஞ்சலி செய்வாரென கனவிலும் நினைத்திருப்பாரோ...!
       கிப்ரான் தன் ‘தீர்க்கதரிசி'யில் சொல்வதைப் போல, “தனக்குச் சிறகுகள் தந்த நாவையும் உதடுகளையும் ஒரு குரலால் சுமந்து செல்ல முடியுமா?”

       முடிந்திருக்கிறது! “கவிதை அப்பா” நூல் சமைத்த செல்மாவால்!!
       “தான் கவிதையெழுத வேண்டிய தாள்களை, தன்னையொத்த, தனக்கடுத்த படைப்பாளிகளின் படைப்புகளைப் பக்கம் பக்கமாகப் பதிப்பிக்கப் பயன்படுத்தியவர்; அதற்கான பணிகளால் ... பயணங்களால் தன் ஆயுட்பக்கங்களை அதிகமாக்கிக் கொள்ளாமல் அவசரமாய் போனவர்.
       அவரது பிள்ளை கதிர்... அகரம் - அன்னத்தின் பதிப்பகத் தொடர்ச்சியாய்...
       அவரது செல்லமகள் செல்மா... அவரது படைப்பின் தொடர்ச்சியாய்...”

-நூலின் பின்னட்டையில் கவிஞர் அறிவுமதியின் அணிந்துரைச் சொற்களிவை.  கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் சிற்பி, கவிஞர் இரா. மீனாட்சி, கவிஞர் மு. மேத்தா என மீராவின் ஆத்மார்த்த நண்பர்களின் ஆசியுரைகளும் செல்மாவைக் கரம்பிடித்து இலக்கிய உலகினுள் வலம்வரச் செய்கின்றன.

       கடவுள் வந்து வரமளித்தால் கூட மறுபடி உங்களுக்கே மகளாகப் பிறக்க வரம் கேட்கும் செல்மாவை...  (பக். 45)

      அர்ச்சுனருக்குக் கிடைத்த துரோணாச்சாரியாரைப் போல் உங்களைத் தனக்கென பொத்திப் பாதுகாத்த செல்மாவை...  (பக். 48)

      உங்கள் இருப்பின் தடயங்களை தடவிப் பார்த்து, அந்த வெற்றிடத்தின் மெளன உணர்வுகளை விழுங்கிச் செரிக்கச் சிரமப்படும் செல்மாவை...  (பக்.49)
     
       கண்ணை விட்டகலாக் கண்மணியாய் தன்னை விட்டகலா உங்கள் நினைவுகளைச் சுமந்து (பக்.53), மணல் வீடு கட்டி மறுநாள் மழையழித்தபின் பார்த்தது போல், முன்னறிவிப்பில்லாமல் நினைத்தபோது வந்து மனதில் பட்டவர்களை தன்னுடன் அழைத்துச் செல்லும் மரணதேவனால் களவாடப்பட்ட தந்தையை நினைத்து நினைத்து நெக்குருகித் தவித்துக் கிடக்கும் செல்மாவை...

      நாடியவரை மட்டுமின்றி வாடியவரையும் விற்பன்னர்களாக மாற்றிய அதிசயப் பேரொளியே... (பக். 74)
 ‘கவிதை' அப்பாவே...
       எப்படித் துணிந்தீர் விட்டுப் பிரிய...?!
       செல்மாவுக்கு தன் பிரசவ வலிகளையும் தாண்டியதாய் உங்கள் பிரிவின் வலி.(பக். 79)
       உங்கள் பிரிவின் கமறலில் தன் பிறந்த நாள் நினைவுமற்றுப் போன செல்மாவை...(பக் 86)

       மின்சாரமற்ற நேரங்களில் கைவிசிறி கொண்டு காற்றளிக்கும் உங்கள் மகள், உயிர்சாரமற்றுக் கிடக்கும் தந்தையுடலுக்கு விசிறமாட்டாமல் திகைத்து தவித்து நின்றதை... (பக். 91)
       அதியனுக்குக் கிடைத்த நெல்லிக்கனி தனக்குக் கிடைத்திருந்தால் தன் அப்பாவை உயிர்த்திருக்கச் செய்திருக்கலாமே என ஆற்றாமையில் கசியும் செல்மாவை... (பக். 90)
       ‘கவிதை அப்பா'வில் கண்டு மனம் பதைக்கிறோம்.
        “வீட்டிருந்தாள் அன்னை வீதிதனிலிருந்தாள்
       நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள்
       பால்தெளிக்க...” எனத் துறவையும் தாண்டி தாய்ப்பாசத்தில் பட்டினத்தார் கதறியதை ஒத்திருக்கிறது நூலின் அனைத்து கவிதைகளும்.
 பக்கம்.45லிருக்கும் வரம் கேட்கும் கவிதையில்,
        “இன்னும் பலரோ அளவுக்கு அதிகமாய்
        சொத்து சேர்த்துவிட்டு
       அது பிடிபட்டுவிடாமல்
       வீட்டின் வாயிலை
       பலப்படுத்தச் சொன்னார்கள்”
என்ற செல்மாவின் வரிகள், அவர் தந்தையின் மரபணு வழியான அரசியல் எள்ளல் தெறிப்பதை உணர்த்துகிறது.

      “ஜனனமும் பூமியில் புதியது இல்லை
       மரணத்தைப் போலொரு பழையதுமில்லை...
       இரண்டுமில்லாவிடில் இயற்கையுமில்லை
       இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
      
       தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும்
       சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும்
       மழலையின் தேன்மொழி செவியுறும் போதும்
       மாண்டவர் எம்முடன் வாழ்ந்திடக் கூடும்”

-என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகளை செல்மாவுக்கும் நமக்குமான ஒத்தடமாக்குவோம்.

நூற்பெயர்:  'கவிதை அப்பா'
ஆசிரியர்  : செல்மா (கண்மணி பாண்டியன் )
வெளியீடு : அகரம்
                      மனை எண் 1 , நிர்மலா நகர்,
                     தஞ்சாவூர் 613  007 .
     பக்கம் : 96
     விலை: ரூ. 60 .

நன்றி: கிழக்கு வாசல் உதயம் - மார்ச். 2012
7 கருத்துரைகள்
  1. நூல் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  2. தொடர்பணியோட்டம். பதிவு காணும் ஆசையில் வந்தேன். விரைவில் வந்து பதிவு பறறிக் கருத்துரைப்பேன்.

    ReplyDelete
  3. அருமையான நூல் விமர்சனம்.

    ReplyDelete
  4. தினமணியில் அண்மையில்" கவிதை அப்பா " வுக்கான விமர்சனம் படித்தேன். தங்களின் விமர்சனம் கண்டவுடன் செல்மாவின் கவிதை அப்பாவை நிச்சயம் வாங்கி படிக்கத் தூண்டியது

    ReplyDelete
  5. முதுகலைத் தமிழிலக்கியம் பயின்ற தன் அன்பின் செல்மா, பின்னாளில் தனக்காக ஒரு கவிதை நூலெழுதி கண்ணீர் அஞ்சலி செய்வாரென கனவிலும் நினைத்திருப்பாரோ...!

    " கவிதை அப்பா " செல்ல மகள் செல்மாவின் அரிய படைப்பிற்கு பாராட்டுக்கள்..

    ReplyDelete
  6. மீரா இனி வாரார்

    ReplyDelete