மொழி எதுவாயினும் எச்சமூகமாயினும் பெண் ஆனவள் சந்திப்பவைகளும் சாதிப்பவைகளும் ஒருபோலவே தான் இருக்கின்றன. 2009-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கன்னட சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளும் பேரளவு பேசிச் செல்பவை பெண்ணியம் நிறைந்த பெண்ணே உணரத்தக்க ஆகச் சிறந்த நுட்பமான மனவெழுச்சிகளின் தழுவல்களே.
மூல ஆசிரியர் வைதேகி(ஜானகி சீனிவாசமூர்த்தி 1945) கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர். தென் கன்னட மாவட்டக் குந்தாபுரத்தில் பிறந்த இவர், கதை, கவிதை, நாவல், கட்டுரை, குழந்தைகள் நாடகம், மொழிபெயர்ப்பு என எழுத்தின் சகல பாகங்களிலும் கால் பதித்து, மத்திய சாகித்ய அகாதெமி விருது, கதா மற்றும் கர்நாடக சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றிருப்பவர்.
மூல ஆசிரியர் வைதேகி(ஜானகி சீனிவாசமூர்த்தி 1945) கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர். தென் கன்னட மாவட்டக் குந்தாபுரத்தில் பிறந்த இவர், கதை, கவிதை, நாவல், கட்டுரை, குழந்தைகள் நாடகம், மொழிபெயர்ப்பு என எழுத்தின் சகல பாகங்களிலும் கால் பதித்து, மத்திய சாகித்ய அகாதெமி விருது, கதா மற்றும் கர்நாடக சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றிருப்பவர்.
திரை மற்றும் நாடகத் துறையில் மட்டும் இருப்பவர்களல்ல நடிப்புக்காரர்கள். இயல்பு வாழ்விலும் நம்மில் அநேகர் ஏதேனுமோர் தருணத்தில் அல்லது அனைத்து சமயங்களிலும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதை அநாயசமாக பிறவிக் கலைஞர்கள் போல் செயலாக்குபவர்களும் உள்ளனர். ‘நடிகை' கதையின் நாயகி ரத்னாவும் அப்படியான ஒரு பாத்திரமே. தன் வாழ்வின் நாலாவித துயரங்களையும் மறைத்து, சக மனிதர்களும் அதை மறக்கும்படியும் உறவினர் வீட்டு விசேடங்களில் கூடியிருப்போரை மகிழச் செய்ய, பிறரைப்போல் பேச்சும் பாவனைகளும் செய்து சிரிப்பூட்டுகிறாள். அவள் வாழ்வின் அடுக்கடுக்கான சோகங்களை கதை முடியும் போது அறியும் நமக்கும் இனம்புரியாத அனுதாபம் எழும்படிச் செய்கிறார் ஆசிரியர்.
வேலை வாய்ப்புக்காக பட்டிணம் வந்த உறவுக்காரியிடம் அனாவசியமாக பக்கத்து வீட்டு அக்கப்போர்களையும் அவர்களை சதா வேவு பார்த்து தானே கற்பிதமாக்கிக் கொண்டவற்றை பேசித் தூற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்ட சபீதாவும் ரத்னாவின் இன்னொரு பரிமாணமே. (‘சபீதா')ஆனால் தனக்கு கிடைக்காதது பிறருக்கு கிடைத்த ஆற்றாமையை பொறாமை மிக விமர்சனம் செய்யும் குரூரம் சபீதாவை நாம் அருவருக்கும்படி செய்கிறது.
மனம் கவர்ந்தவன் ஒருவனாகவும், மணம் புரிந்தவன் வேறொருவனாகவும் அமைந்த பெண்ணின் இறுதி மூச்சு அடங்கிய தருணம் அவளைக் காண வந்த மனம் கவர்ந்தவனின் தவிப்பும் தடுமாற்றமும் இறந்தவளின் ஆன்மா சாந்தியடையும் படி இருந்தாலும், உயிரோடிருக்கும் அவள் கணவன் மற்றும் உறவினர், ஊரார் மன ஓட்டங்கள் நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் கதை ‘பேச்சற்ற கணம்'.
வாய்க்கால், வரப்பு, குட்டை, தோட்டம் தாண்டிப் போய்க் கொண்டிருந்த வீட்டுக்கு பாதை செப்பனிடப்பட்டு விட்டது. நெடுநாட்கள் கழிந்து அங்கே சுலபமாகப் போய்விடும் பெண்ணொருத்திக்கு பாதையற்ற நாட்களின் சிரமங்களை விட பாதை எளிதான பின் வந்த சிக்கல்கள் புரிகின்றன. வாசலில் கிளைபரப்பி நின்ற பலா மரத்தின் இழப்பு தாங்கவொன்னாததாக இருக்கிறது. பாதையற்ற தோட்டமாக இருந்தபோது அங்கிருந்த மனிதர்களிடமிருந்த நெறியோடான வாழ்வு முறை சீர்கெடவும் காரணமாகிவிட்டது அந்தப் பாதை. (வீடு வரை பாதை) பாரம்பர்யத்தின் பலவும் நாகரீகத்தின் பெயரால் சீர்குலைந்து நிற்கும் போதெல்லாம் நமது முன்னேற்றம் குறித்த ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
அடுத்த கதையான ‘கேள்வி'யும் சந்திப்பது இத்தகைய சிக்கலே. நாகரீக யுவதிகள் இருவர் சொற்பொழிவு ஆற்றுபவரிடம் வரம்பு மீறியதொரு கேள்வியை வைத்து அதை எதிர்கொள்கையில் ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தவர்' விந்தை மனிதரா அல்லது நாகரீகம் என்ற பெயரால் தறிகெட்டோடும் இன்றைய இளைய சமூகம் விந்தையானதா என்ற வேதனை எழுகிறது. அசட்டுத் துணிவும், அடாவடியும், சமத்துவ மாயையும் பெண்களை எந்தளவுக்கு புத்தி பேதலிக்கச் செய்திருக்கின்றன...!
‘புதிர்' கதையின் சுபா ஆண்ட்டி அன்று முழுக்க எங்குதான் சென்றாள் என்பது நமக்கும் புதிராகவே உள்ளது. கதையின் சுவாரஸ்யம் அதுதான். வாசிப்பவர் கற்பனைக்கு விட்ட ஆசிரியரின் சாமர்த்தியம் மெச்சத் தக்கது. எனினும் ஒரு பெண் தனக்குத் தோன்றியதை, தன் நீண்ட நாள் அவாவை நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் கைவரப் பெறுவதற்குள் அவளின் பாதி ஆயுளைக் கழித்து விடும்படி ஆகிவிடுகிறது என்பது உள்ளோடியிருக்கும் சோகம்.
ராஜம் அத்தையின் வாழ்வில் திறக்காத பக்கங்களை திறக்க அவர் தயவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்த பெண்கள் கூட்டம் செய்யும் முயற்சிகள், அவர்களின் துப்பறிதல்கள் ‘திறக்காத பக்கங்கள்' கதையை மெருகூட்டுவதாய் இருக்கின்றன. தன் சோகங்களை மறைத்து பிறரின் சுகங்களை பிரதானப்படுத்தி வாழும் ராஜம் அத்தைகள் இன்றும் காணக் கிடைக்கின்றனர். அவர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்கள் மறைக்கப்பட்டு அவற்றில் நாடிவந்த மற்றவர்களின் வாழ்வு சோபிக்க ஒளி கூட்டப்படுகின்றன. நீர் தேடும் வேருக்காக நிலத்தைத் தோண்டித் துருவுவதில் பயனிருக்கலாம். துளிர்ப்பற்ற பாலையில் தோண்டுவதும் வீண் வேலைதானே.
மனிதன் சாதாரண நிலையில் மட்டும் மனிதனாயிருக்கிறான். சித்தாந்தம், தத்துவம், வேதம், மற்றும் நீதி நியதிகளில் அடித்தளம் சிறிது அசைந்தாலும் முதலில் அவன் பலிபோடுவது பெண்ணைத்தான். அவளின் பெண்மை, மனது மற்றும் அவளின் வாழ்க்கை. அர்ஸ்நான பட்டரின் முகச்சாயம் வெளுக்கச் செய்யும் ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கதை உணர்த்துவதும் இதைத்தான்.
லட்சுமியம்மா நாட்டுப் பிரிவினையின் வகுப்புவாதக் கலவரத்தில் போராட்டக்காரர்களால் தூக்கிச் செல்லப்பட்டவள். சிலகாலம் அவர்களின் பிடியிலிருந்தவள் மீட்கப்படுகிறாள். ஆனால், பட்டரோ அவளை ஏற்க மயங்கி அவள் இறந்து விட்டதாக ஊரில் சொல்லி வேறு திருமணமும் செய்து கொள்கிறார்.
தன் ஆராய்ச்சிப் படிப்புக்காக விசாகாபென் எனும் சுதந்திரப் போராட்ட தியாகியை பார்த்த அருந்ததி, அவர் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியம்மாவைப் பார்த்து அவரைப் பற்றி விசாரிக்க, விசாகாபென் சொன்ன தகவல்கள் தான் பட்டரின் முகத்திரையைக் கிழிப்பதாய் இருக்கிறது. தன் நீண்ட நாள் வலியை விழுங்கித் தண்ணீர் குடித்தது போல் வாழப் பழகிய லட்சுமியம்மா போல் தான் இத்தொகுப்பின் முதல் கதையின் நாயகி, பேருந்தில் தேவையில்லாமல் கடூரமாக நடந்து கொள்ளும் நடத்துநரை எதிர்கொள்கிறாள். ஆம்பிளை எனும் ஆணவத்தில் அவன் அடாவடி பேசுவதாக சக பயணிகள் நினைக்க, ‘ஆம்பிளைன்னா நல்ல வார்த்தை. இவன் ஒரு ஆளு' என்ற ஒரு பெண் பயணியின் சவுக்கடி சொடுக்கல் மூலம், பெண்கள் தங்கள் சகல துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி சக மனிதன் மேல் நம்பிக்கையோடிருப்பதை நூலாசிரியர் புலப்படுத்துகிறார்.
தொகுப்பின் கதைகளின் போக்கும் நோக்கும் பெண்களின் நுட்பமான சில வலிகளைப் பற்றி பேசுவதாகவே இருக்கின்றன. தமிழில் மொழிபெயர்த்த ஜெயந்தி சாகித்ய அகாதெமியின் தென் மண்டல அலுவலகத்தில் பணி புரிபவர். சங்கரி எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுபவர். மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கும் பல மொழியாக்கங்களைத் தந்திருப்பவர் என்றறியும் போது, பல்மொழிப் புலமை பெற்ற அவரின் கூர்மதி பாராட்டும்படி உள்ளது.
நூல் பெயர்: கிரவுஞ்சப் பட்சிகள்
கன்னட மூலம்: வைதேகி
தமிழில்: ஜெயந்தி
வெளியீடு: சாகித்ய அகாதெமி
பக்கங்கள்: 136
விலை: ரூ.110/-
('திசை எட்டும்' இதழில் வெளியானது)
('திசை எட்டும்' இதழில் வெளியானது)
அழகான நூலறிமுகம்.. அற்புதமான பாத்திர அறிமுகங்கள்.. வாசிக்கும் ஆவலைத் தூண்டும் விமர்சனம். நன்றி நிலாமகள்.
ReplyDeleteநூல் அறிமுகம் மிகச்சிறப்பாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக அருமையானதும் மிக அவசியமானதும் மிகத் தேவையானதுமான கருத்துக்களை இலாவகத் தமிழில் எளிமையாகவும் சிறப்பாகவும் தந்திருக்கிறீர்கள் நிலா.
ReplyDeleteநல்ல கதைக் கருக்கள். பெண்களின் படைப்பாற்றல் வியக்க வைக்கிறது. எங்களோடும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நிலா.
கச்சிதமான பகிர்வு!
நல்லதொரு நூல் அறிமுகம்... நன்றி...
ReplyDeleteஅன்புள்ள சகோதரி நிலாமகள் அவர்களுக்கு வணக்கம்! தமிழ்மணத்தில் வரும் உங்களது வலைத்தள ஆக்கங்களை அவ்வப்போது படிப்பவன் நான்.
ReplyDeleteநமது மூத்த வலைப்பதிவர் அய்யா திரு வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்கள், தனது வலைத்தளத்தில் ”நினைவில் நிற்கும் பதிவர்களும், பதிவுகளும்” என்ற தலைப்பினில் வலைப்பதிவர்களை அறிமுகப்படுத்தும் தொடர் ஒன்றினை தொடங்கி எழுதி வருகிறார்.
தங்களின் வலைத்தளத்தினை இன்று (24.06.2015) அறிமுகம் செய்து தங்கள் எழுத்துக்களை சிறப்பித்து எழுதியுள்ளார், என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது ஒரு தகவலுக்காக மட்டுமே. தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.
அவரது வலைத்தளத்தின் இணைப்பு இதோ:
நினைவில் நிற்போர் - 24ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/24.html