நல்ல தாய்தந்தையராக இருப்பது எப்படி-4

குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது...
அதனைத் துடைப்போம்.
குழந்தையின் சிந்தனை குழப்பமானது...
அதனைத் தெளிவுபடுத்துவோம்.
குழந்தையின் துயரம் ஆபத்தானது...
அதற்கு ஆறுதல் அளிப்போம்.
குழந்தையின் இருதயம் மென்மையானது...
அதனைக் கடினமாக்காமல் இருப்போம்.
நல்லதை விதையுங்கள்:

      பண்பு என்பது ஒழுக்கம், நம்பிக்கை, குணநலன் மூன்றும் இணைந்தது. இது நமது நடத்தையிலும், செயல்களிலும் வெளிப்படுகிறது.
      நேர்மையான மனமார்ந்த பாராட்டினை வழங்குங்கள்; அதை உடனடியாக செய்யுங்கள்.
       தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்பது நல்ல செயல்.
      தெளிவாக ஆனால், மற்றவர் மனம் நோகாமல், நமது கருத்துக்களை வலியுறுத்தப் பழக வேண்டும்.
       நேர்மை, நாணயம், உண்மை, பணிவுடன் நாம் இருக்க வேண்டும்.                   மற்றவர்களுக்கு நாம் காட்டும் மரியாதை நிச்சயம் திரும்பக் கிடைக்கும். இது,      
        ஒரு புன்னகை, நன்றி, நான் வருந்துகிறேன், தயவு செய்து போன்ற சொற்களால் இருக்கலாம்.
       ஐந்து வயதிற்குள் மனதில் பதியும் எண்ணங்கள், பழக்கவழக்கங்கள் ஆழமானவை. நல்ல சிந்தனை, ஒத்துப் போகும் குணம், தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளுதல், வெளியிடங்களில் அனுசரித்துச் செல்லுதல் முதலியன சிறந்த பழக்கங்கள்.
         நல்ல பழக்கங்களை உடைய குழந்தைகள் சகிப்புத் தன்மை, பொறுமை, அடுத்தவரைப் புரிந்துகொள்ளும் மனப்பாங்கு ஆகியன உடையவராகக் காணப்படுவர்.

முன்மாதிரியாக இருங்கள்:

      குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து கற்கின்றார்கள். உங்கள் மேல் அவர்கள் கவனம் பதிந்திருக்கிறது. நீங்கள் எதைச் செய்ய வேண்டுமென்று சொல்கிறீர்களோ, அதன் மேலல்ல... நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதன் மேல்!
       நாம் மற்றவர்களை மரியாதையுடன் நடத்துவதைப் பார்க்கும் குழந்தைகளும் அவ்விதமே இருப்பார்கள்.
       மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து திருப்தி இல்லாத வாழ்க்கையை நாம் வாழ்ந்தோம் என்றால், நம் குழந்தைகளும் அவ்வாறே வளர்வார்கள்.
       நாம் எப்படி நடந்து கொள்கிறோமோ அது போலவே அவர்களும் நடந்து கொள்கிறார்கள். நம் தவறான செய்கைகளைச் சரிசெய்யாமல், குழந்தைகளைத் திருத்த நினைப்பது வீணான செயல்.(பிள்ளை மேல் புகாருடன் கவுன்சிலிங் செய்யப் போனால் பெற்றோருக்கு புத்திமதி சொல்லியனுப்புவது ஏனெனப் புரிகிறாதா...?!)
       குழந்தைகள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க நம் நடத்தை நல்ல உதாரணமாக அமைய வேண்டும். பொய் சொல்வது தவறு என்றும் தண்டிக்கவும் செய்யும் நாம், கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக உடல் நலமில்லை எனக் கூறி விடுப்பெடுத்தால் நம்மைப் பற்றிய அவர்களது பிம்பம் என்னவாயிருக்கும்? நம் வார்த்தைகளுக்குத் தான் அவர்களின் மதிப்பு எப்படியிருக்கும்?
       விட்டுக் கொடுத்தல், ஒத்துழைத்தல், பகிர்ந்து கொள்ளுதல் முதலான பண்புகளையுடைய வீட்டில் வளரும் குழந்தைகள் பிறருக்கு உதவி செய்வதையும், அதனால் ஏற்படும் சந்தோஷத்தையும் அனுபவிக்கின்றனர்.
       அப்பாவும் அம்மாவும் ஒருவரையொருவர் நேசிப்பது; அன்புடன் நடந்து கொள்வது, குழந்தைகளின் சந்தோஷமான திருமண வாழ்விற்கு அஸ்திவாரமாக அமைகிறது.

நாம் என்ன செய்திகளைக் கொடுக்கிறோம்?

       கொடுக்க நினைக்காத செய்திகளை நாம் குழந்தைகளுக்குக் கொடுத்து விடுகிறோம். நாம் உபயோகப் படுத்தும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு இன்னொரு குழந்தையைப் பாராட்டுகிறோம்... நன்றாகப் படிக்கிறாய் என்று! முதல் குழந்தை நாம் சொல்லாத விஷயத்தைப் புரிந்து கொள்கிறது.(தான் சுமாராகப் படிக்கிறோம். பாராட்டப்படவில்லை என்று)
       நாம் எதிர்மறையாய் சொல்லும் விஷயங்களைக் குழந்தைகள் நம்புகிறார்கள். அந்த எண்ணங்களுடன் வளர்கிறார்கள். உதவாக்கரை என்று அவர்களைத் திட்டுகிறோம். பெரியவர்களாகிய நாம் உண்மையைச் சொல்கிறோமென்று அவர்கள் நினைக்கிறார்கள். அதுபோலவே மாறவும் ஆரம்பித்து விடுகிறார்கள். குடும்பம் பாதுகாப்பு தரும் இடம். இங்கு எதிர்மறையான எண்ணங்களுக்குப், பேச்சுக்களுக்கு இடமில்லை.
       அளவுக்கு அதிகமாகக் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு அளித்தால்... பொறுப்பேற்கும் தன்மை குறைகிறது; எதிர்காலத்திற்குத் திட்டமிடுதல் இல்லாமல் போகிறது; தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தெரிவதில்லை.
       18 மாதக் குழந்தைக்கு ஊட்ட வேண்டாம். அவள் தன் கைகளை உபயோகப் படுத்தட்டும். தன்னுடைய விருப்பத்தைச் செயல்படுத்த மூன்று வயதுக் குழந்தையை அனுமதியுங்கள். 5 வயதுக் குழந்தை செய்யும் காரியத்தை முழுவதுமாக முடிக்க  வாய்ப்பு அளியுங்கள். அது உயர்ந்த மனப்பாங்கை வளர்க்கிறது.
       நமக்குத் தேவையானது
ஒரு குவளை அளவிற்குப் புரிதல்;
ஒரு பீப்பாய் அளவிற்கு அன்பு
மேலும் ஒரு கடல் அளவிற்குப் பொறுமை.

நன்றி: கடலூர் மாவட்ட இந்திய குழந்தைகள் நல மருத்துவக் குழுமம்
-சொல்ல இன்னுமிருக்கிறது...
8 கருத்துரைகள்
  1. வ‌ண‌க்க‌ம் ந‌ண்ப‌ர்க‌ளே...
    ப‌ழுதான‌ க‌ணினி வ‌லை வ‌ர‌வுக்கு த‌டா போட்டுவிட்ட‌து.
    இன்றைய‌ இடுகையின் தொழில்நுட்ப‌க் கோளாறை திருவாள‌ர்க‌ள் வெங்க‌ட் நாக‌ராஜ், ச‌ம்ப‌த் குமார், ரிஷ‌ப‌ன் ஆகியோர் சுட்டிக்காட்ட‌வும் ச‌ரிசெய்ய‌ ஏதுவான‌து. சொல்லாம‌ல் கொள்ளாம‌ல் நான் த‌லைம‌றைவானாலும், வ‌லைப்பூவின் இடுகை மாறிய‌தும் உட‌னே வ‌ந்து சென்ற‌ அவ‌ர்க‌ள‌து அன்பு நெகிழ்வும் ம‌கிழ்வும் த‌ந்த‌து. இன்னுமிரு இடுகைக‌ளோடு 'ந‌ல்ல‌ தாய்த‌ந்தைய‌ராக‌ இருப்ப‌து எப்ப‌டி?' ப‌திவு முடிவுக்கு வ‌ர‌ இருக்கிற‌து.

    ReplyDelete
  2. நல்லதொரு பயனுள்ள பதிவு.
    அனைவரும் அவசியம் பின்பற்ற வேண்டியதும் ஆகும். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  3. //குழந்தைகளின் கண்ணீர் வேதனையானது...
    அதனைத் துடைப்போம்.
    குழந்தையின் சிந்தனை குழப்பமானது...
    அதனைத் தெளிவுபடுத்துவோம்.
    குழந்தையின் துயரம் ஆபத்தானது...
    அதற்கு ஆறுதல் அளிப்போம்.
    குழந்தையின் இருதயம் மென்மையானது...
    அதனைக் கடினமாக்காமல் இருப்போம்.//

    அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    நல்லதோர் பகிவிற்க்கு நன்றி..

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  4. இன்றைய காலகட்டத்திற்கு மட்டும் அல்ல என்றைக்கும் இது பொருந்தும் ..
    உண்மையான வரிகளுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. மிக நல்ல கருத்துகள்.... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ... நம் நெய்வேலி எப்படி இருக்கிறது?

    ReplyDelete
  6. அருமையான பதிவு.
    அருமையான கருத்துக்கள்.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. //நமக்குத் தேவையானது

    ஒரு குவளை அளவிற்குப் புரிதல்;
    ஒரு பீப்பாய் அளவிற்கு அன்பு
    மேலும் ஒரு கடல் அளவிற்குப் பொறுமை.//

    மிகச்சரியான கருத்து. பகிர்வுக்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete