நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

எனது சிறகசைப்பில் அலைப்புறும் காற்றில் இளைப்பாற வருக...

பதம்

Thursday, 19 October 2017 1 கருத்துரைகள்


       இந்த தடவை அதிரசத்துக்கு பாகு வைக்கும் போது  உடனிருந்த மகளிடம் பிசுக்கு பதம், கம்பி பதம், ரெண்டு கம்பி பதம்  எல்லாம் காட்டி, எது எதற்கு எப்படி பாகு வைக்க வேண்டுமென்று விளக்கம் சொன்னேன்.
     தோழி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கடையில் வாங்கிய அதிரச மாவு கெட்டியாக இருப்பதாகவும் எளிதாக தட்ட என்ன செய்யலாமென்றார்.             கொஞ்சம்  பால் தெளித்து பிசைந்து தட்டிப்  பாருங்க சரியா வரலைன்னா தோசை மாவு பதத்துக்கு கரைச்சு குழி பணியார சட்டியில் ஊற்றி அப்பம் போல் எடுத்திடலாம் என யோசனை சொன்னேன்.
      மறுநாள் பேசிய போது சொன்னார்...
     அதிரசமாவே தட்டிட்டேன்.
     ஆனா ... பதம் புரிபடும் போது மாவு தீர்ந்துடுச்சு.
அவ்வளவு தான் என்றார்.
      அதிரசம் செய்யப் பழக  இன்னொரு பாக்கெட் மாவு கிடைக்கும். நம் அந்திமத்தில் புரிபடும் வாழ்வை நீட்டிக்க ....?!


கசியும் விழிகள்

Tuesday, 10 October 2017 2 கருத்துரைகள்வீட்டினர் அனைவரிடமும்
சமத்துவம் கொண்டாடும்  புஜ்ஜிக்கு
கட்சியுமில்லை கூட்டணியுமில்லை
வெறுப்பவரையும் சலிப்பவரையும்
தன் பளபளக்கும் கண்களால்
அண்ணாந்து  பார்த்து கருணை சம்பாதித்துவிடும்.
எல்லோர்  மனசிலும்
தனக்கான கனிவை சுரக்கச் செய்யும்
வலிமை பெற்ற ஈர விழிகள்!

திட்டினாலும் விரட்டினாலும்
உடனுக்குடன் மறந்து
குழையவும் இழையவும் முடிகிறது புஜ்ஜியால்
அவமதிப்போ சுடுசொல்லோ
வைத்து மறுக மனமற்றது.

எதிரியைக் கடித்துக் குதறவும்
அன்பை அறிவிக்க நம்மைக் கவ்வவுமாக
பற்களையும் நகங்களையும்
கையாளும் சாதுர்யம் 
படைப்பின் விந்தை !


பெயர் பிறந்த கதை

Friday, 6 October 2017 0 கருத்துரைகள்

எங்கள் குடும்ப அட்டையில்
பெயர் சேர்க்கப்படாமல்
ஆதார் அடையாளம் தேவையற்று
குட்டிப்பூனை
வந்த மறுநாள் பெயர் சூட்டு வைபவம்

கூப்பிட வசதியா பெயரொன்னு சொல்லும்மா
என்றான் சிபி.
‘ஜுஜு'என்றேன் குத்துமதிப்பாக
அரை மனசாய் ஏற்றான்

மறுநாள் இவரிடம்
‘பெயரொன்னு சொல்லுங்க இதுக்கு' என்றேன்
‘புஸ்ஸி' என்றிருக்கட்டுமா? என்றார்.

கும்பகோணத்தை ‘கும்மோணம்' என்றும்
விருத்தாசலத்தை ‘விருத்தாலம்' என்றும்
சிதம்பரத்தை ‘சேம்பரம்' என்றும்
புவனகிரியை ‘போனேரி' என்றும்
வாய் வசதிக்கு மாற்றியதுபோல்
செல்ல விளிப்பில் அதை புஜ்ஜி ஆக்கினேன்.

ஏகமனதாய் எல்லோரும் ஏற்க
பாட்டி மட்டும் ‘குட்டி' என்பார்.
புஜ்ஜி என்றழைத்தால் ‘ம்ம்ம்...' எனவும்
புஜ்ஜி... புஜ்ஜி... என்று கூவினால்
எங்கிருந்தாலும் வந்து நிற்கவும்
புரிந்தது அதற்கு.

வீட்டுக்கு விருந்தினருடன் வந்த சிறுபையன்
பூனைக்குட்டியின் பெயர் புஜ்ஜி என்றறிந்ததும்
‘டோரா புஜ்ஜி!' என்றான்.

மனிதப் பெயர்களோடு
செல்லப் பிராணிகள் திரியும் காலத்தில்
ஒரு குரங்குக் கதாபாத்திரத்தின் பெயர்
எங்க பூனைக்குட்டிக்கு இருக்கட்டுமே...!
உங்கள் மின்னஞ்சல் முகவரி...

Popular Posts

எங்க ஏரியா.. உள்ள வாங்க!!!

 
பறத்தல்- பறத்தல் நிமித்தம் © 2011 - Designed by Sibhi Kumar