நிறுவனர்:நிலாமகள். Powered by Blogger.

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

வகையினம் >


        சிற்றிதழ் உலகில் ஒரு துக்க நிகழ்வு செளந்தர சுகன்' இதழின் ஆசிரியப் பெருந்தகை சுந்தர சரவணனின் திடீர் மரணம். 'நோய்' எனும் எமதூதன் அவரின் உயிர்பறித்த தினம் ஜூன் 5, 2015. 

பிப்ரவரி மாதத்தில் சீர் கெட்ட  அவரின் உடல், மனைவி வதனாவின் பெரும் பிரயத்தனத்தை பயனற்றதாக்கி விட்டு அழிந்தது.  ஒரு நான்கு மாதங்களில் ஒரு மனிதனின் - ஒரு குடும்பத்தின் வாழ்வையே புரட்டிப் போட்டுவிட முடிகிறது ‘விதி' எனும் யாரும் கடக்கவியலாப் பாழினால்! 

தன் எழுத்தால் சிந்தனையால் சொல்லால் சமூகத்தின் சீர்கேடுகளை சக மனிதர்களுக்கு வெளிச்சமிட்டு எண்ணக்கண் திறந்தவர், தன் குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் ஆறாத் துயர் மிக அடைக்கலமாகி விட்டார் மரணமெனும் பெருவெளியில். 

எழுத்தாளனின் மனைவியாயிருப்பதன் கொடுந்துயரம்,  புதுமைப்பித்தன், பாரதி, சுஜாதா போன்றோரின் துணைவியரை நேரில் காணாத எனக்கு,  வதனாவின் உருவில் மிகப்  பெரிதாய் தெரிந்தது அன்று. ஈடில்லாப் பேரிழப்பு. 

20.3.2011 அன்று சுகனுக்கான எனது மின்னஞ்சல் இது...

அன்புச் சகோதரர் சுகன் அவர்களுக்கு,
வணக்கத்துடன் நிலாமகள்.
அண்ணியார், சுகலீலா, இதழாளன், பூஞ்சாலி ஆகியோருக்கும் எங்களது பரிவும் அன்பும் கலந்த மகிழ்வான வணக்கத்தைத் தெரிவிக்கவும்.

மார்ச் மாதமென்றாலே மறக்கவொன்னா நெகிழ்நினைவை அம்மா நிரப்புகிறார். இவ்வருட ‘அம்மா நினைவு நாள்' நிகழ்வுகளை தோழர் கிருஷ்ணப்ரியா தயவில் ஒளிப்படங்கள் வழிக் கண்ணுற்றோம்.

எவ்வளவு வளர்ந்தாலும் குழந்தைகள் பெற்றோர் கண்களுக்கு குழந்தைகளாகவே தெரிவது போலவே, விபரமறியும்  வயதில் நாம் பார்த்து ரசித்துக் கொண்டாடிய பெற்றோர் உருவமும் வயதும் எத்தனை மாறினாலும் முதல்பதிவில் மனம் லயித்த உருவமே கண்முன் நிற்கிறது. அம்மா இழப்புக்குப் பின்னான சுகன் இதழின் மேலுறையில் காட்சியளிக்கும் அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம்  எனக்குள் தோன்றுவது இது.

தனது மருமகள் உருவிலும், அன்புமகன் மனதிலும் இப்போதும் உயிர்த்தேயிருக்கிறார் அம்மா. மாற்றமில்லா தங்களின் நெகிழ்ந்த புன்னகையாலதை அறிகிறோம்.

தங்கள் சிறுகதைத் தொகுப்பான ‘ஆழத்திலிருந்து அனலொன்று' கைக்குக் கிடைத்ததிலிருந்து பலதடவை வாசித்தாயிற்று. அக்கதைகள் என்னுள் கிளர்த்திய எண்ணவோட்டங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ளப் பிரயத்தனப் பட்டதில் இன்றுதான் அதற்கான சாத்தியக் கூறுகள் எனக்கு வாய்த்திருக்கின்றன. தாமதம் உறுத்தலாயிருந்தாலும், செயலாக்கம் நிம்மதியைத் தருகிறது.

‘எரிந்த வீட்டில் பிடுங்கியது வரை இலாபம்' என்ற சொல்லாடல் இறப்பு வீட்டுக்குமானது. சக மனித இறப்பிலும், ‘கறக்கும்' இழிமனிதர்களின் கொடூரம் ‘ஆறறிவு அசிங்கங்க'ளாய் கண்முன் விரிகிறது. தாத்தா தயாபரியாய் இருந்தாரோ, அவர் தயவால் ரிக்ஷா வாங்கிப் பிழைக்கும் கிழவன் ஆபத்பாந்தவனாய் வந்து சேர்ந்தாரோ... பிழைத்தான் சுந்தரன். பலர் கதைகளில் வியர்வை அரும்பியதையும் பூத்ததையும் கண்டிருந்தும், ‘வெடித்திருந்தது' என்ற வார்த்தை கதையோட்டத்துக்கு சற்று வீரியம் சேர்ப்பதாகவே உணர்ந்தேன்.

 ‘வெள்ளைக் கோலம் வெளிச்ச யவ்வனமாய்...'
 ‘முகத்தில் கோப ஹோலி! கண்களில் ஒரு வெப்ப பானம் தயாரித்து...'
 ‘வைரமுத்துவை மின்மினி வசியக் குரலில் தெளித்து...'
 ‘மெட்டைக் களவாடிய தென்றலின் சூழ்நிலை வரிகள்...'
 ‘உரக்கப் பாடி நுரைத்த சோகம்...'
 ‘வரும் முகூர்த்தமெல்லாம் அவள் முகூர்த்தமாகாமலேயே...'
 ‘வானொலியின் மூச்சை முடக்கிவிட்டு...'
 ‘எல்லாமும் அஸ்த்தமித்து தொண்டைக்குள் சகாரா...'
அம்மாடி! கவிமனசோடு எழுதப்பட்ட ‘கோலம் புதிது'!! தங்களது தொடர்ந்த ஐந்து கவிதைத் தொகுப்புகளுக்கு வியக்க வேண்டியதேயில்லை....! ‘வரட்டா அக்கா?' என்ற இடத்தில் கதை முடிந்து போயிற்று எனக்கு.

 ‘முளைக்காயம்' சுரேஷையும், வெங்குவையும் வாசகர் கண்முன் நிறுத்தி விட்டீர்கள். அவர்களிருவராகவும் நாங்களே மாறி, பிரம்மாண்டமாகக் காட்சி தரும் லீலா டீச்சரை பவ்யமாய் பரிவாய் வணங்கி நிற்கிறோம். அதுவும், அந்த எரியும் லாந்தர் கண்ணாடி மேல் தெளித்த நீரோசையாய் வெங்கடேசின் கேவல்... மறுபடி மறுபடி ஒலிக்கிறது மனத்திரையில்...  ஒப்புமையில் தான் எவ்வளவு பொருத்தம்...!

 மாதாவும் குருவும் சிலபோது குருவாவதுண்டு. ஆசிரியையும் அம்மா அப்பா போலாகுமிடம் அற்புதம்தானே...!

உங்க பயம் கிட்டதட்ட உண்மையாகிட்டு வருது சகோ... ‘காலத்தின் அசுர மாறுதல்கள்' அன்பின் வெளிப்பாடுகளுக்கான மெனக்கிடல்களை முடக்கி வருகின்றன. தம்பி சொல்வது போல் எல்லாவற்றையும் பணம் ஒன்றால் நிரவிவிடத் தயாராகின்றனர் பெரும்பான்மை மனிதர்கள் (க்ரோசியா).

‘வீட்ல பாட்டி வெள்ளெரும ராமசாமியத் தூக்கிட்டு வர்ற மாதிரி பக்கத்து வீட்டு ஒலக்கையை இரவல் வாங்கிட்டு வரும்போது' பீறிட்ட சிரிப்பை அடக்கியபடி தொடர்ந்தேன் வாசிப்பை. நொண்டி பழனி அம்புலிமாமா புத்தகத்து வேதாளமா தோணிய போதும் அப்படித்தான்.(‘அடைக்கலம்')

அடைக்கலம் கிட்ட கதை கேட்டுக் கிறங்கி நின்ன அந்த மத்தியானங்களின் அற்புதத்துக்குச் சற்றும் சளைத்ததில்லை, அவன் தன் அப்பாவுடன் டி.சி. வாங்க நின்ற அவலம். தன் வக்கற்ற தன்மையை குடியால் மறக்கும் தந்தைகளின் இயலாமையில் எத்தனை அடைக்கலங்கள்...?!
 தாத்தா, அப்பா, சித்தப்பா, மாமா யார் புகைத்தாலும் பதறாத சிறுவன் மனம், சங்கீதா அம்மாவும் மல்லிகாவும் பிடிக்கும் சுருட்டு கண்டு திகைக்கிறது.... ரசிக்கிறது.(இப்போதைய சிறுவர்களுக்கு குடிக்கும் பெண்கள் வியப்பேற்படுத்துவரோ...?!) கதையிறுதியில் அவரவர் இறந்துபோன தத்தம் கணவன்மார் நினைவில் சுருட்டுப் பிடித்ததாக அறியவந்தது மாறுபட்ட கோணம் தான். (‘சுருட்டுப் புடிக்கிற பொம்பளைகள்')

 தாலியறுத்தால் பார்க்கச் சகிக்காமல் ஆக்கிடும் இழந்த பூவும் பொட்டும்... இது ஒரு தினுசு. புருசன் செத்ததும் புது அழகோடும் ஆம்பிளைத்தனமான ஆளுமையோடும் கூடுதல் பலம் பெறுவது மற்றொரு தினுசு.

இதிலொரு நுட்பமான அரசியல் ஒளிந்திருக்கு சகோ... வாழும்காலத்துல அந்தப் பெண்ணை அவ புருஷன் படுத்திய பாடும், அடக்குமுறையும், தளர்ந்து போற விடுதலையுணர்வோ அது...?!

கள்ளச் சாராயம் குடிச்சு செத்தவனுக்கு அதுவே படைக்கணும்கறது நல்ல வேடிக்கை. வாங்கி வந்த ஒறமொறக்காரன் தனக்கான பிராண்டை வாங்கிட்டான் போல... படையல் முடிஞ்சதும் துக்கப்பட்ட மனசை ஆத்திக்க...! பூசாரிகள் தத்தம் பிராண்டை முனி, வீரனுக்குப் படைக்கிறது போல.
 ‘செத்தபின்னும் பொம்பளைக்கு ஒரு ஞாயம் ஆம்பளைக்கு ஒரு ஞாயம் தாண்டா இந்த எழவெடுத்த பூமியில!' பின்ன...  சரிசமமாவது வெங்காயமாவது!

 ‘அப்பா சில பாடல்கள்' கதையில் பக்கம் 56-ல் ‘சரவணாவில...' எனத் தொடங்கும் ரெண்டாம் பத்தியிலும், பக்கம் 59-ல் ‘உறவினர்கள்...' எனத்தொடங்கும் ரெண்டாம் பத்தியிலும் கனலும் ஆவேசமும் உருக்கமும் முகத்திலறைந்தாற் போலொரு வேகம்!

 உள் அலமாரியில் பதுங்கிய கேசட்டில் மட்டுமா... கேட்டு நெகிழ்ந்தவர்களின் (புஷ்பம் உள்பட) மனக் கிடங்குகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் பொக்கிஷமல்லவா அவரது குரல்வளம்...! நடமாடும் பொக்கிஷ அலமாரியாய் நாமெல்லாம் நேசத்துக்கும் பாசத்துக்கும் உரியவர்களை முற்ற முழுசாக சுமந்துதானே திரிகிறோம்!

கழிப்பறையின் நாற்றம் மழுங்கியது போல்தான் சமயங்களில் வாழ்தலின் பாடுகள் கொள்கை-கோட்பாடுகளை நம்மில் மழுங்கச் செய்து விடுகின்றன... அதையும் தாண்டிய உறுதியுடன் ‘மழுங்கல்' கதை நாயகன் சங்கர் போலும் ஒருசிலர் இன்னுமிருக்கவே செய்கின்றனர்.

நிதர்சனச் சூடுநிறை கதைகளில் அழகியல் தன்னிச்சையாக மட்டுப்பட்டு விடுகிறது. அந்நேரத்தில் வாசகர்க்கும் அது வேண்டியிருக்கவில்லை. இருப்பினும்,  

 ‘குளிரை தணிக்கை செய்தபடி கிடந்த போர்வை...'
 ‘புஸ்ஸென்று கிளம்பிய நெருப்புக்குச்சியைத் தின்று பிரகாசமாக...'
என்ற இடங்கள் கண்ணில் படத் தவறவில்லை.

மனிதத் தொழுவம் மாதிரியான வீட்டில் வசிக்கும் மாலாஸ்ரீ, முழிமுழிச்சான்(நல்ல தம்பி) பாத்திரங்களின் படைப்பு வெகு நேர்த்தி. இந்தச் சின்னப் பிள்ளைகள் வாத்தியாரிடம் காட்டும் பவ்யமும், வாக்கியத்துக்கு வாக்கியம் விளிக்கும் மரியாதைச் சொற்களான சார்... டீச்சர் வகையறாக்களும் குழந்தைமை தளும்பும் அலாதியழகைப் பொருத்திக்கொள்வதாய் இருக்கின்றன. ‘கூரைக்குள் ஒரு கணக்கு நோட்டு' ஜோரான கதை முடிப்பு.

 ‘டக்கென்று நெஞ்சுக்குக் குறுக்கே கட்டிய கையுடன், ஒரு காலை நொடித்துக் கொண்டு தந்தத்தால் செய்த மொச்சைக் கொட்டைப் பற்கள் தெரிய, உதடுகள் பிளந்த கள்ளழகு சிரிப்போடு மாலாஸ்ரீ எழுந்தபோது' நாங்களும் அசந்தே போனோம்... என்னத்தைச் சொல்ல...
 தனக்குள் புதைத்துக் கொண்ட தனிமை முளைக்கும் சந்தர்ப்பங்களில் ஒடுங்கிய பிரம்மாண்டம்... மலர்களுக்கு மத்தியில் ஆன்மாவை சலவை செய்வது மாதிரியான வீடும் நாலு தலைமுறை தாண்டி, கலாரசனை நீர்த்துப் போய், மலர் குலுங்கிய நந்தவனத்தை வணிக வளாகமாக மாற்றியதை அதிர்வோடுதான் கடக்க வேண்டியிருக்கிறது.

சாறின் சுவை விரும்பும் வத்சலா, கிளாசின் தூய்மையைப் பொருட்படுத்துவது இல்லை. கிளாசின் அசுத்தம் பற்றிய கற்பனை சுந்தரனை சாற்றை அருந்த விடுகிறதில்லை. அப்படியும் இப்படியுமான மனிதர்களை நிறைத்து நகர்கிறது இவ்வுலக வாழ்க்கை. ‘சிலதுளிகளேனும் அலாதியாய்...' சில மனிதர்களேனும் தனித்துவமாய்...

 ‘படிப்பு' ஒரு சிறந்த நடைச்சித்திரம். தொட்டும் துடைத்துமிருக்கும் சராசரிக்குக் கீழ் வருமானமுடையவர்கள், மானமுடன் வாழ்வது அரிதான ஒன்றாயிருக்கிறது. காலைச் சுற்றும் தரித்திரமும், உடம்பைக் குறிவைத்துப் பாயும் சமூகம் போதிக்கும் தந்திரமுமாக தணலுக்குப் பயந்து எண்ணெய் சட்டியில் விழுந்த வாழ்வுடைய இப்படியானவர்களுக்குப் பிழைப்பே பூதாகரமான கேள்வியாகும் போது படிப்பாவது ஒன்றாவது...! கிராமத்துப் பள்ளிகளின் மனிதம் நிறை ஆசிரியர்களின் மன நெருக்கடிதான் இவர்களின் பெருஞ்சோகதையும் விஞ்சியதாகிறது.

‘ஓமத்தண்ணி' தேக்குவின் அசுரத்தனம் படிக்கும்போதே மிரட்டுகிறது. தாயின் உன்னதமறியாத, தாயன்பு புரியாத ஒரு பிள்ளையை அந்தப் படைத்தவன் தான் பார்க்கணும்...!

 ‘உலகம்தான் எவ்வளவு தினுசானது... விதவிதமான அயோக்கியத் தனங்கள்... இதெல்லாம் முன்மாதிரி பார்த்தா? ஜனிக்கும் போதே ஊறியதா?'
 
அவனது வியாபாரத் தந்திரம் வியப்பளித்தது. இதுவும் பிறவிசாரமாகத் தான் இருக்க வேண்டும். விவரிக்க முடியாத அலுப்போடு அவன் சொன்ன ‘படிப்பேன் சார்' மனதில் அப்பட்டமான காட்சியாக விரிந்தது. ‘எவ்வளவு விஷமத்தனமாக வாழ்க்கை இயங்கிக் கொண்டிருக்கிறது' என்பதைக் கதை உணர்த்தும் தருணம் எங்களுக்குள்ளும் கடுமையான பீதிதான்... இறுதியளவும் அவனுள் குறையாமலிருக்கும் வியாபாரத் தனத்தினால் எப்படியோ பிழைத்துக் கொள்வான்... அவனது தாய் போன்ற அப்பிராணிகளை மிதித்தேறி!

அடுத்தது, ‘அது நடந்தது ... கவித்துவமான நேரமாயிருக்கலாம்'
 ‘யாரையுமே தனக்கு ஒரு படி கீழே பார்க்கும் தஞ்சாவூர் ஜம்பம்' ஒரு தஞ்சைக்காரரே நேர்மையாக சொல்வதை புன்னகையுடன் ரசிக்கிறேன்.

 ‘நெற்றி நிறைய பட்டையுடன், சாயத்தையும் மீறி முழித்த நரைத் தலையுடன், ஜீன்ஸ் பேண்ட்டுடன்...' எத்தருணத்திலும் உடன் தொடரும் தங்கள் நகைச்சுவையுணர்வும் கலகலப்பேற்படுத்துகிறது.

 ‘இது வல்லரசுகளின் சதியாகவோ; உள்ளூர் வெளியூர் வில்லன்களின் கூட்டுழைப்பாகவோ; அரசியல் நோக்கத்தோடு செய்ததாகவோ...' குறும்பின் (குசும்பின்) உச்சகட்டமல்லவா இது...

 ‘அழிவின் துயரம்...'. ‘எரியாத கான்க்ரீட் தீவட்டிகளாய்...' இப்படியாக தங்கள் மொழியாளுமையின் இலாவகம் ஆங்காங்கே பளிச் பளிச்...

அம்மாவின் காருண்யம் வெளிப்படுமிடங்கள் அழகு. அதையும் மீறி சிறுபிள்ளைத் தனமான ஆர்வ மேலீட்டில் குருவி பிடித்துக் கூண்டிலிட்டு வளர்க்க ஆசைப்பட்டு அது உயிர்போக்கியதெல்லாம் தத்ரூபமான விவரிப்பு.

 ‘கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேனம்மா' என்ற வரி படிப்பவர், தம் பால்யகாலத்துக்கு ஜிவ்வென செல்லவைக்கும் குழந்தைமைச் சொற்கள். வசீகரிக்கப் பட்டேன் அவ்விடத்திலென்பதை சொல்லவும் வேண்டுமா...!

அம்மாவின் இறப்பு ஏற்படுத்திய சோர்வு... 35 வருடங்களுக்கு முந்தைய சம்பவத்தின் அடிமனத் தாக்கத்தை மேலெழும்பச் செய்த கொந்தளிப்பு... தவறுக்குப் பிராயச்சித்தமாய் அக்குருவியே உயிர்த்தெழுந்து விஸ்வரூபமெடுத்து தன்னைத் தின்று தொலைத்தாலாவது உறுத்திக் கொண்டிருக்கும் குற்றவுணர்வின் பிடியிலிருந்து மீள்வோமாவென்ற பரிதவிப்பின் உச்சபட்ச கற்பனை அல்லது கனவு...

தலைப்பைக் கையிலெடுத்து இவ்விடத்தில் பொருத்திப் பார்க்கிறேன்... கனவாகட்டும்... கற்பனையேயாகட்டும்... இப்போது மனம் இலேசாகி விட்டிருக்கும். மனக்கடலில் அவ்வப்போது புரண்டெழுந்து இம்சித்த அறியாமைத் தவறின் உறுத்தல் ஒழிந்திருக்கும். அம்மா இல்லாத சூனியம் பெருக்கிய சுயபச்சாதாபம் மட்டுப்பட்டிருக்கும். தெய்வம் தொழுது நமக்குப் பாதுகாப்பு வளையமிட்ட அம்மா நமக்கெல்லாம் தெய்வமாய் துணையிருக்க, கலக்கமில்லையினி... இல்லையா...?!

அடுத்து, 'ஆழத்திலிருந்து அனலொன்று'... தலைப்புக் கதை...

 அன்பு, இரக்கம், சகிப்புத் தன்மை எல்லாமே எக்காலத்திலும் பெண்ணுக்கான அடையாளங்களாய்...

 ஆதிக்க அதிகாரமும் சூழலின் நெருக்கடியும் மிகுந்திருந்தும், தன்னுள் மாறா அன்பும், ஊற்றெடுக்கும் காருண்யமுமாக தன் விழிகளில் துளிர்த்த இரு துளிகளை அம்பாக்கி அவ்வுள்ளம் கவர் கருப்பனை மீட்டெடுத்தாளே உங்கள் நவீன சீதை... இவளேதான் ‘வேதம் படித்து வீங்கிய மண்டையர்கள்' ஆண்-பெண் அனைவரிடத்தும் தம் ஆதிக்கம் மேலோங்க, இட்டுக் கட்டிய இதிகாச ராமகதையிலும், கொண்டவன் கருணை கிஞ்சித்தும் பெறாது வாழ்நடைபிணமாய் வாழ்தலைவிட மேலெனத் துணிந்து பூமித்தாயின் மடிபுகுந்தவள்! அதே சூழல்... அதே காட்சி... பால்மாறுபாட்டில் மனப்பாங்கு மாறிய தொன்மச் சிறப்பு!!

தோழர் சக்தி அருளானந்தத்தின் மேலட்டை ஓவியம் வெகு பொருத்தம். பின்னணியில் நிற்கும் ராமனின் மனக்கலக்கம் முகத்தில் கவிந்திருக்க, முன்னிற்கும் சீதையின் கண்களில் பிரதிபளிக்கிறது பின்னெழும்பித் தகிக்கும் அனலின் பிரகாசம்!

இசங்கள் பற்றிய அக்கறையற்று இக்கதைகளை எழுதியதாய் தாங்கள் முன்னுரைத்திருப்பினும், ஒவ்வொன்றையும் ஏதோவொரு இசத்தில் அடக்கிப் பார்க்கும் வாசகர் மனசு.

 “கதையின் கருதான் முக்கியம். அதை வாசகனுக்கு இதமாகச் சொல்லத் தெரிவதுதான் உத்தி. மற்றபடி இசங்களோ, உயர்தர தொழில்நுட்பங்களோ எந்தக் கதையையும் தூக்கிப் பிடித்துவிடாது.” ஆணித்தரமான கருத்து!

 ஒருவரிக் கடிதமெழுதுவதையும் அலுப்பாக்கிவிட்ட அலைபேசிகளின் ஆக்கிரமிப்புகள் இன்று.... 12, 13 வயசிலொரு நாவலெழுதுமளவு எழுத்துவன்மையும் அனுபவ அறிதலுமிருந்து, அதை வீட்டு நடுக்கூடத்தில் அம்மச்சி தலைமையில் வெளியிட்டு....

தாத்தா, அம்மச்சி, அம்மா ஆகியோர் உரமிட்டு, உணர்வூட்டி வளர்க்கப் பட்ட தங்கள் செழிப்பு போற்றுதற்குரியது. தங்கள் வாரிசுகளின் பிற்கால பிரம்மாண்டம் கற்பனித்து இப்போதே வியந்து மகிழ்கிறேன். வழிவழியாக மனிதர்களை சம்பாதித்திருக்கிறீர்கள்... அவர்களின் மனப்பூர்வ வாழ்த்துகள் நலமும் வளமும் நிலைபெறக் கவசமாயிருக்கும்!
 நன்றி !
        மகிழ்வுடன்,
        நிலாமகள்,
        நெய்வேலி.
--------------------------------------------------------------

21.3.2011ல் சுகனிடமிருந்து  எனக்கு வந்த பதில் மின்னஞ்சல்...

அன்பு வணக்கம். கண்களில் நீர் குதித்தாட தங்கள் மின்னஞ்சலை வாசித்து முடித்த உடனேயே என் விரல்கள் இதோ வென் திரையில் என் எண்ணத்தை வீசிக் கொண்டிருக்கிறது. எனக்கு வந்த மின்னஞ்சல்களிலேயே மிக நீளமான மின்னஞ்சல் இதுதான். மிகுந்த மகிழ்ச்சி. 

பாரதிக்குமார், குழந்தைகளுக்கு என் அன்பைச் சொல்லுங்கள். 

என் கதைகளுக்குள் உங்கள் இரசனை உட்புகுந்து அன்பு கொண்டு சிலாகித்திருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சி. ஒரு படைப்பாளிக்கு இதை விட வேறென்ன வெகுமதி வேண்டும். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை. எப்போதும் என்விரல்கள் விசைப்பலகையில் வேகமாகவே இயங்கும். என்னுடைய முனைவர் பட்ட ஆய்வு முழுவதையும் நான் நேரடியாகவே கணினித்திரையில் எழுதியவன். ஒரு வரிகூட காகிதத்தில் மையால் எழுதவில்லை. இன்று அந்த விரல்கள் உங்கள் கடிதத்தத்திற்கு பதிலாக எதை எழுதுவது என்று தடுமாறுகிறது. 

பாசம் கொப்பளிக்கும் உங்கள் கடித வரிகளுக்கு என் வணக்கங்கள். 
                                                         - சுகன்.
-------------------------------------------
21.3.2011  ல்   பதிலுக்கு ஒரு பதில்...

அன்பு சகோ...
வணக்கம். படித்ததில் பிடித்ததை நானறிந்த வகையில் சொல்ல முயன்றேன். தாமதப் பட்ட நாட்களின் குற்ற உணர்வு மறைந்ததெனக்கு இப்போது.
ரத்த சம்பந்த உறவுகளைக் காட்டிலும் நட்பு சம்பந்த உறவுகளுக்கு பிணைப்பும் பரிவும் மிகுதியாகவே இருந்து விடுகின்றன... சமயங்களில்.
அம்மா நினைவு நாளில் உங்களையெல்லாம் சந்தித்த போதெனக்கு உண்டான வியப்பும் பெருமிதமும் அளப்பரிது. அவரவர்க்கு அவரவர் தாய் உன்னதம். ஆனாலும் இப்படியோர் தாய்க்கு மகவாகப் பிறந்தோமா என்றெண்ணி பலரையும் ஏங்க வைக்குமொரு தாயல்லவா தங்களுக்கு வாய்த்தவர்!!
எனது ரத்த உறவுகள் சிலர் கொடுங்காலனுக்கு இரையாயினர். பதில்கொடையாய் சூழ உள்ள நல்லோர் பலரை அணுக்க உறவாய் ஆக்கித் தந்துள்ளது வாழ்தலறம்.
அண்ணியாருக்கும், சுகலீலா, இதழாளன், பூஞ்சாலி ஆகியோர்க்கு எங்கள் அன்பு.
நெகிழ்வுடன்,
நிலாமகள்,
நெய்வேலி.
------------------------------------

அவரது இறுதி யாத்திரையில் கலந்து கொண்டு திரும்பிய பின்னும்  நினைவுப் பெட்டகத்தில் உயிர்ப்புடன் உலவுகிறார் என்பதை சான்றாக்குகின்றன இம்மூன்று மின்னஞ்சல்களும் எனக்கு.
Share on:
           மொழி எதுவாயினும் எச்சமூகமாயினும் பெண் ஆனவள் சந்திப்பவைகளும் சாதிப்பவைகளும் ஒருபோலவே தான் இருக்கின்றன. 2009-ல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கன்னட சிறுகதைத் தொகுப்பில் அடங்கியுள்ள கதைகளும் பேரளவு பேசிச் செல்பவை பெண்ணியம் நிறைந்த பெண்ணே உணரத்தக்க ஆகச் சிறந்த நுட்பமான மனவெழுச்சிகளின் தழுவல்களே.

             மூல ஆசிரியர் வைதேகி(ஜானகி சீனிவாசமூர்த்தி 1945)  கன்னடத்தில் பிரபல எழுத்தாளராக அறியப்படுபவர். தென் கன்னட மாவட்டக் குந்தாபுரத்தில் பிறந்த இவர், கதை, கவிதை, நாவல், கட்டுரை, குழந்தைகள் நாடகம், மொழிபெயர்ப்பு என எழுத்தின் சகல பாகங்களிலும் கால் பதித்து, மத்திய சாகித்ய அகாதெமி விருது, கதா மற்றும் கர்நாடக சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட 14 விருதுகள் பெற்றிருப்பவர்.

           திரை மற்றும் நாடகத் துறையில் மட்டும் இருப்பவர்களல்ல நடிப்புக்காரர்கள். இயல்பு வாழ்விலும் நம்மில் அநேகர் ஏதேனுமோர் தருணத்தில் அல்லது அனைத்து சமயங்களிலும் நடிக்க வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதை அநாயசமாக பிறவிக் கலைஞர்கள் போல் செயலாக்குபவர்களும் உள்ளனர். ‘நடிகை' கதையின் நாயகி ரத்னாவும் அப்படியான ஒரு பாத்திரமே. தன் வாழ்வின் நாலாவித துயரங்களையும் மறைத்து, சக மனிதர்களும் அதை மறக்கும்படியும் உறவினர் வீட்டு விசேடங்களில்   கூடியிருப்போரை மகிழச் செய்ய, பிறரைப்போல் பேச்சும் பாவனைகளும் செய்து சிரிப்பூட்டுகிறாள்.   அவள் வாழ்வின் அடுக்கடுக்கான சோகங்களை கதை முடியும் போது அறியும் நமக்கும் இனம்புரியாத அனுதாபம் எழும்படிச் செய்கிறார் ஆசிரியர். 

         வேலை வாய்ப்புக்காக பட்டிணம் வந்த உறவுக்காரியிடம் அனாவசியமாக பக்கத்து வீட்டு அக்கப்போர்களையும் அவர்களை சதா வேவு பார்த்து தானே கற்பிதமாக்கிக் கொண்டவற்றை பேசித் தூற்றுவதையும் வழக்கமாக்கிக் கொண்ட சபீதாவும் ரத்னாவின் இன்னொரு பரிமாணமே. (‘சபீதா')ஆனால் தனக்கு கிடைக்காதது பிறருக்கு கிடைத்த ஆற்றாமையை பொறாமை மிக விமர்சனம் செய்யும் குரூரம் சபீதாவை நாம் அருவருக்கும்படி செய்கிறது. 

மனம் கவர்ந்தவன் ஒருவனாகவும், மணம் புரிந்தவன் வேறொருவனாகவும் அமைந்த பெண்ணின் இறுதி மூச்சு அடங்கிய தருணம் அவளைக் காண வந்த மனம் கவர்ந்தவனின் தவிப்பும் தடுமாற்றமும் இறந்தவளின் ஆன்மா சாந்தியடையும் படி இருந்தாலும், உயிரோடிருக்கும் அவள் கணவன் மற்றும் உறவினர், ஊரார் மன ஓட்டங்கள் நன்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் கதை ‘பேச்சற்ற கணம்'. 

வாய்க்கால், வரப்பு, குட்டை, தோட்டம் தாண்டிப் போய்க் கொண்டிருந்த வீட்டுக்கு பாதை செப்பனிடப்பட்டு விட்டது. நெடுநாட்கள் கழிந்து அங்கே சுலபமாகப் போய்விடும் பெண்ணொருத்திக்கு பாதையற்ற நாட்களின் சிரமங்களை விட பாதை எளிதான பின் வந்த சிக்கல்கள் புரிகின்றன. வாசலில் கிளைபரப்பி நின்ற பலா மரத்தின் இழப்பு தாங்கவொன்னாததாக இருக்கிறது. பாதையற்ற தோட்டமாக இருந்தபோது அங்கிருந்த மனிதர்களிடமிருந்த நெறியோடான வாழ்வு முறை சீர்கெடவும் காரணமாகிவிட்டது அந்தப் பாதை. (வீடு வரை பாதை) பாரம்பர்யத்தின் பலவும் நாகரீகத்தின் பெயரால் சீர்குலைந்து நிற்கும் போதெல்லாம் நமது முன்னேற்றம் குறித்த ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

        அடுத்த கதையான ‘கேள்வி'யும் சந்திப்பது இத்தகைய சிக்கலே. நாகரீக யுவதிகள் இருவர் சொற்பொழிவு ஆற்றுபவரிடம் வரம்பு மீறியதொரு கேள்வியை வைத்து அதை எதிர்கொள்கையில் ‘வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைத்தவர்' விந்தை மனிதரா அல்லது நாகரீகம் என்ற பெயரால் தறிகெட்டோடும் இன்றைய இளைய சமூகம் விந்தையானதா என்ற வேதனை எழுகிறது. அசட்டுத் துணிவும், அடாவடியும், சமத்துவ மாயையும் பெண்களை எந்தளவுக்கு புத்தி பேதலிக்கச் செய்திருக்கின்றன...!

           ‘புதிர்' கதையின் சுபா ஆண்ட்டி அன்று முழுக்க எங்குதான் சென்றாள் என்பது நமக்கும் புதிராகவே உள்ளது. கதையின் சுவாரஸ்யம் அதுதான். வாசிப்பவர் கற்பனைக்கு விட்ட ஆசிரியரின் சாமர்த்தியம் மெச்சத் தக்கது. எனினும் ஒரு பெண் தனக்குத் தோன்றியதை, தன் நீண்ட நாள் அவாவை நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் கைவரப் பெறுவதற்குள் அவளின் பாதி ஆயுளைக் கழித்து விடும்படி ஆகிவிடுகிறது என்பது உள்ளோடியிருக்கும் சோகம். 

          ராஜம் அத்தையின் வாழ்வில் திறக்காத பக்கங்களை திறக்க அவர் தயவில் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்த பெண்கள் கூட்டம் செய்யும் முயற்சிகள், அவர்களின் துப்பறிதல்கள் ‘திறக்காத பக்கங்கள்' கதையை மெருகூட்டுவதாய் இருக்கின்றன. தன் சோகங்களை மறைத்து பிறரின் சுகங்களை பிரதானப்படுத்தி வாழும் ராஜம் அத்தைகள் இன்றும் காணக் கிடைக்கின்றனர். அவர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்கள் மறைக்கப்பட்டு அவற்றில் நாடிவந்த மற்றவர்களின் வாழ்வு சோபிக்க ஒளி கூட்டப்படுகின்றன. நீர் தேடும் வேருக்காக நிலத்தைத் தோண்டித் துருவுவதில் பயனிருக்கலாம். துளிர்ப்பற்ற பாலையில் தோண்டுவதும் வீண் வேலைதானே.

          மனிதன் சாதாரண நிலையில் மட்டும் மனிதனாயிருக்கிறான். சித்தாந்தம், தத்துவம், வேதம், மற்றும் நீதி நியதிகளில் அடித்தளம் சிறிது அசைந்தாலும் முதலில் அவன் பலிபோடுவது பெண்ணைத்தான். அவளின் பெண்மை, மனது மற்றும் அவளின் வாழ்க்கை. அர்ஸ்நான பட்டரின் முகச்சாயம் வெளுக்கச் செய்யும் ‘கிரவுஞ்சப் பட்சிகள்' கதை உணர்த்துவதும் இதைத்தான்.
லட்சுமியம்மா நாட்டுப் பிரிவினையின் வகுப்புவாதக் கலவரத்தில் போராட்டக்காரர்களால் தூக்கிச் செல்லப்பட்டவள். சிலகாலம் அவர்களின் பிடியிலிருந்தவள் மீட்கப்படுகிறாள். ஆனால், பட்டரோ அவளை ஏற்க மயங்கி அவள் இறந்து விட்டதாக ஊரில் சொல்லி வேறு திருமணமும் செய்து கொள்கிறார். 

         தன் ஆராய்ச்சிப் படிப்புக்காக விசாகாபென் எனும் சுதந்திரப் போராட்ட தியாகியை பார்த்த அருந்ததி, அவர் வீட்டில் வேலை செய்யும் லட்சுமியம்மாவைப் பார்த்து அவரைப் பற்றி விசாரிக்க, விசாகாபென் சொன்ன தகவல்கள் தான் பட்டரின் முகத்திரையைக் கிழிப்பதாய் இருக்கிறது. தன் நீண்ட நாள் வலியை விழுங்கித் தண்ணீர் குடித்தது போல் வாழப் பழகிய லட்சுமியம்மா போல் தான் இத்தொகுப்பின் முதல் கதையின் நாயகி, பேருந்தில் தேவையில்லாமல் கடூரமாக நடந்து கொள்ளும் நடத்துநரை எதிர்கொள்கிறாள். ஆம்பிளை எனும் ஆணவத்தில் அவன் அடாவடி பேசுவதாக சக பயணிகள் நினைக்க, ‘ஆம்பிளைன்னா நல்ல வார்த்தை. இவன் ஒரு ஆளு' என்ற ஒரு பெண் பயணியின் சவுக்கடி சொடுக்கல் மூலம், பெண்கள் தங்கள் சகல துன்பங்களையும் துயரங்களையும் தாண்டி சக மனிதன் மேல் நம்பிக்கையோடிருப்பதை நூலாசிரியர் புலப்படுத்துகிறார்.

         தொகுப்பின் கதைகளின் போக்கும் நோக்கும் பெண்களின் நுட்பமான சில வலிகளைப் பற்றி பேசுவதாகவே இருக்கின்றன. தமிழில் மொழிபெயர்த்த ஜெயந்தி சாகித்ய அகாதெமியின் தென் மண்டல அலுவலகத்தில் பணி புரிபவர். சங்கரி எனும் பெயரில் சிறுகதைகள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் எழுதுபவர். மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழுக்கும் பல மொழியாக்கங்களைத் தந்திருப்பவர் என்றறியும் போது, பல்மொழிப் புலமை பெற்ற அவரின் கூர்மதி பாராட்டும்படி உள்ளது.

நூல் பெயர்:       கிரவுஞ்சப் பட்சிகள்
கன்னட மூலம்:  வைதேகி
தமிழில்:            ஜெயந்தி 
வெளியீடு:         சாகித்ய அகாதெமி
பக்கங்கள்:         136
விலை:             ரூ.110/-

('திசை எட்டும்' இதழில் வெளியானது)


Share on:
  • ← Previous post
  • Next Post →

  • கால்களை சிறகுகளாக்கும் எத்தனங்கள்.
  • உதிரும் சிறகுகளை சேகரிக்கும் குழந்தைமை.
நிலாமகள்

நிலாமகள்

View My Complete Profile
Facebook Gplus RSS

Followers


Labels
  • அசை (16)
  • அறிந்தும் / அறியாமலும் (10)
  • கவிதை (61)
  • சிறுகதை (9)
  • சுவையான குறிப்புகள் (1)
  • செல்லத்தின் செல்லம் (6)
  • தாய் மடி (2)
  • திருக்குறள் நினைவாற்றல் வழிகாட்டி (4)
  • தொடர் பதிவு (1)
  • நூல் மதிப்புரை (1)
  • நேர்காணல் (3)
  • பகிர்தல் (51)
  • படித்ததில் பிடித்தது (63)
  • மரம் வளர்த்த மனிதனின் கதை... (4)
  • மருத்துவம் (12)
  • வாழ்த்து (14)

Popular Posts

  • வில்வம் ...மருத்துவ குணங்கள்:(பகுதி - 3)
             வில்வம் பற்றிய அறிமுகம்:(அறியாதவர்கள் அடையாளம் காண)         இலையுதிர் மரவகையைச் சார்ந்த வில்வம் எல்லா இடங்களிலும் வளரும் ...
  • பல் வலியா ?
    நம் உடம்பில் ஒன்றுக்கு இரண்டாக கண், காது, கை, கால், சிறுநீரகம், சினைப்பை அல்லது விதைப்பை போன்றவை இருக்க பல்லை மட்டும் 32 ஆக படைத்ததன் ...
  • மலை வேம்பு -சில தகவல்கள்
    மலைவேம்பு (melia dubia)        மலைவேம்பு மிக வேகமாக வளரும் விலை மதிப்பு மிக்க பன்முகப் பலன் தரும் அரிய மரவகைகளில் ஒன்று. ப்ளைவுட்,ரெடிமேட்...
  • அம்மை... சில தகவல்கள்
              பேரச்சம் விளைவித்த அம்மை நோய்க்கு எதிரான ஒரு தடுப்பு நடவடிக்கையாக அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடித்து உலகெங்கும் பரப்பிய ஆங்கி...
  • சாகசங்கள் மீதான பேராவல்
                 குழந்தைகளை தூங்கச் செய்வது என்பது எந்த நாட்டிலும் பெரும்பான்மையும் அம்மாக்களின் பிரதான கடமையாகவே இருக்கும். பிறந்து சில ம...
  • மரம் வளர்த்த மனிதனின் கதை ... இறுதிப் பகுதி
    தொடக்கம்:  http://nilaamagal.blogspot.in/2013/10/blog-post_29.html பகுதி-1:  http://nilaamagal.blogspot.in/2013/10/1.html பகுதி-2:  htt...
  • பொடுகு எவ்விதம் உருவாகிறது?
           நம் மண்டையில் அன்றாடம் இறக்கும் செல்கள் தோலின் மேற்புறத்தில் உள்ள எபிடெர்மிஸின் (Epidermis) ஆழ் அடுக்கிலிருந்து இடைவிடாது வெளித்தள்ள...
  • ஞிமிறென இன்புறு
           'அந்த காலமெல்லாம்...' என்று பெருமூச்சு விடத்தொடங்கினாலே வயசானவங்க லிஸ்ட்ல சேர்த்துடறாங்க இன்றைய இளைஞர்கள். தன்  குழந்...
  • மரங்களின் மக(ரு)த்துவம்-2 (வேப்பமரம்)
    வேம்பு:  சிவன் கோயில் வில்வ மரம் போல் அம்மன் கோயில்களில் அவசியமிருக்கும் மரம் வேப்பமரம். இயற்கையின் வரப்பிரசாதமான இம்மரத்தின் வேர், பட்டை,...

Blog Archive

  • ►  2020 (1)
    • ►  March (1)
  • ►  2019 (1)
    • ►  August (1)
  • ►  2018 (9)
    • ►  June (2)
    • ►  May (1)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (3)
  • ►  2017 (18)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (2)
    • ►  August (2)
    • ►  July (1)
    • ►  March (1)
    • ►  February (6)
  • ►  2016 (9)
    • ►  December (1)
    • ►  November (2)
    • ►  July (3)
    • ►  April (3)
  • ▼  2015 (21)
    • ►  October (1)
    • ►  September (2)
    • ►  August (4)
    • ►  July (1)
    • ▼  June (2)
      • 'செளந்தர சுகன்'
      • விடுதலையா? விடுகதையா?
    • ►  May (2)
    • ►  April (4)
    • ►  March (2)
    • ►  February (1)
    • ►  January (2)
  • ►  2014 (24)
    • ►  December (3)
    • ►  November (5)
    • ►  October (1)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  May (1)
    • ►  April (2)
    • ►  March (3)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2013 (36)
    • ►  December (3)
    • ►  November (2)
    • ►  October (4)
    • ►  September (3)
    • ►  August (2)
    • ►  July (7)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (4)
    • ►  March (1)
    • ►  February (2)
    • ►  January (2)
  • ►  2012 (35)
    • ►  December (3)
    • ►  November (1)
    • ►  October (3)
    • ►  September (3)
    • ►  August (5)
    • ►  July (2)
    • ►  June (3)
    • ►  May (3)
    • ►  April (2)
    • ►  March (2)
    • ►  February (4)
    • ►  January (4)
  • ►  2011 (49)
    • ►  December (4)
    • ►  November (3)
    • ►  October (4)
    • ►  September (1)
    • ►  August (3)
    • ►  July (8)
    • ►  June (6)
    • ►  May (5)
    • ►  April (5)
    • ►  March (5)
    • ►  February (3)
    • ►  January (2)
  • ►  2010 (37)
    • ►  December (7)
    • ►  November (6)
    • ►  October (6)
    • ►  September (6)
    • ►  August (4)
    • ►  July (5)
    • ►  June (3)

வலைப்பூ உலகில் எங்க குடும்பம்

  • பாரதிக்குமார்
  • மதுமிதா
  • சிபிக்குமார்

போக...வர...

  • சிவகுமாரன் கவிதைகள்
    கபீரும் நானும் 55
    1 month ago
  • கீதமஞ்சரி
    தித்திக்குதே (3) இலுப்பை
    1 month ago
  • அக்ஷ்ய பாத்ரம்
    இலையுதிர்காலத்து வண்ணங்கள்
    1 month ago
  • திண்டுக்கல் தனபாலன்
    அதிகார எழுத்துக்கள் அனைத்தும் குறில் / நெடில் - பகுதி 2
    4 months ago
  • முத்துச்சிதறல்
    குளோபல் வில்லேஜ்-2023-2024!!!
    7 months ago
  • ஹரணி பக்கங்கள்.......
    1 year ago
  • சமவெளி
    டில்லி தமிழ்ச் சங்கம் - 23-02-2017
    5 years ago
  • VAI. GOPALAKRISHNAN
    நினைக்கத் தெரிந்த மனமே ... உனக்கு மறக்கத் தெரியாதா?
    5 years ago
  • CrUcifiXioN
    பூச்சிக்கடி -ஹோமியோபதியில் 100% தீர்வு ! Worm trouble
    5 years ago
  • Thanjai Kavithai
    7 years ago
  • வண்ணதாசன்
    இயல்பிலே இருக்கிறேன்
    7 years ago
  • அழியாச் சுடர்கள்
    மௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்
    7 years ago
  • வானவில் மனிதன்
    கவிக்கோ அப்துல் ரகுமான்- ஒரு அஞ்சலி
    8 years ago
  • ஊமைக்கனவுகள்
    அட! இப்படியும் எழுதலாமா?
    8 years ago
  • கோவை2தில்லி
    வண்ணங்களின் சங்கமம்!
    8 years ago
  • செம்மை வனம் | 'காட்டுக்குள் மான் தேடிப் போனால், மான் தெரியும். மான் மட்டுமே தெரியும்’ -பழங்குடிப் பழமொழி
    சிறுவர்களின் காய்ச்சல் மற்றும் தோல்நோய் குறித்து!
    8 years ago
  • ரிஷபன்
    பிச்சி
    9 years ago
  • அடர் கருப்பு
    யார் இந்த அயோத்திதாசர் ? 1845-1914
    9 years ago
  • சைக்கிள்
    இருள் வெளிச்சம்
    9 years ago
  • வட்டங்களில் சுழலுது வாழ்க்கை
    இந்திய வாகனப் பதிவெண் இரகசியம்
    9 years ago
  • ∞கைகள் அள்ளிய நீர்∞
    முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
    11 years ago
  • கலர் சட்டை நாத்திகன்
    கலர் சட்டை: 1
    12 years ago
  • நசிகேத வெண்பா
    நூற்பயன், நன்றி
    13 years ago
  • இன்னுமொரு கோணம்
    எதுக்கு இவ்வளவு Build Up?
    14 years ago
  • வந்தேமாதரம்
தீதும் நன்றும் பிறர்தர வாரா!
புறநானூறு-192

கணியன் பூங்குன்றனார்

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்
குறள்:314 | அறத்துப்பால் | இன்னா செய்யாமை

திருவள்ளுவர்

அண்டத்தி னுள்ளே அளப்பரி தானவள்
பிண்டத்தி னுள்ளே பெருவெளி கண்டவள்
குண்டத்தி னுள்ளே குணம்பல காணினும்
கண்டத்தி னுள்ளே கலப்பறி யார்களே
திருமந்திரப்பாடல்

திருமூலர்

Facebook Gplus

பறத்தல் - பறத்தல் நிமித்தம்

Created By SoraTemplates | Customized By Sibhi Kumar | Distributed By Gooyaabi Templates