காலங்களில் ‘அவர்' என் வசந்தம்


கவிஞர்.மீராவின் மனைவி இரா.சுசீலாவிடம் ஒரு நேர்காணல்...


     தமிழ்மொழி, பொதுவுடமை, சமுதாய சீர்திருத்தம், தொழிலாளர் முன்னேற்றம் இவற்றில் பாரதி, பாரதிதாசனையொத்த எழுச்சிக் கவிஞர் தமிழுலகில் ‘மீரா' என்றறியப்படும் மீ. ராசேந்திரன்! பாவேந்தர் பாரதிதாசன் ... என் குரு! மகாகவி பாரதி... என் தெய்வம்! என்று தன் ‘மீரா கவிதைகள்' நூல் முன்னுரையில் குறிப்பிடும் இவர், கவிஞர், கல்லூரி முதல்வர், தொழிற்சங்கவாதி; மொழிப்பற்றாளர்; பதிப்பாசிரியர்; வானம்பாடி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர்! ‘கவி'என்கிற கவிதை இதழ், ‘அன்னம்', ‘அன்னம் விடு தூது'என்ற இதழ்களின் ஆசிரியர்; பல பதிப்புகள் கண்ட ‘கனவுகள்+ கற்பனைகள்=காகிதங்கள்' ,'மூன்றும் ஆறும்', ‘ஊசிகள்' போன்ற நூல்களின் படைப்பாளி; மனிதாபிமானம் மிக்க ஒரு பகுத்தறிவுவாதி... எனப் பல்வேறு ஆளுமைத் திறமைகளைக் கொண்டவர். சிவகங்கைக்காரர்.

     கவிக்கோ அப்துல் ரஹ்மான், டி.எம். அப்துல் காதர், கவிஞர்கள் சிற்பி, இன்குலாப், நா.காமராசன், மேத்தா, வைரமுத்து,பாலா, தமிழன்பன்,
 பி.சிதம்பரநாதன், முருகு சுந்தரம், அபி தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச் செல்வன், இந்திரன், காசி ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.சேஷாசலம், க.வை.பழனிச்சாமி, நாஞ்சில் ஆரிது, வைகை வாணன், இக்பால், பஞ்சு, ரவிசுப்ரமணியன், வசந்தகுமார்-இவர்கள் என் அங்கங்களைப் போன்ற சகோதரக் கவிஞர்கள். இவர்கள் என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, நான் நானல்ல; நான் மட்டுமல்ல. எல்லாரும் கலந்த ஒரு அவதாரம். ஆமாம்... நான் செத்தாலும் வாழ்வேன்!( மீரா கவிதைகள் நூல் முன்னுரையில் மீரா).

     மீரா பலரை உருவாக்கியவர்; அம்முயற்சியில் தன்னை ‘உரு'வாக்கிக் கொள்ள மறந்தவர். மீராவின் பாடல்களில் கவித்துவ ஒளிக்கீற்றுகள் பலப்பல உள்ளன. ஆனால், அவரோ மற்றவர்களின் ஒளிச்சேர்க்கையில், தனது நிறத்தை இணைத்துக் கொண்டவர். தன்னை இழக்கத் துணிந்தவர்.(அறிஞர். தமிழண்ணல்)

     உடல்நலக் குறைவால் தமது 63வது வயதிலேயே மரணம்(01.09.2002) தழுவிய அவருக்குக் கடந்த செப்டம்பரில் (23.09.2010) நெய்வேலியில் ஒரு நினைவுக் கூட்டம் நடந்தது.

     அதில் கலந்து கொண்ட மீராவின் துணைவியார் சுசீலா அம்மையாரிடமும், மகள் கண்மணி பாண்டியனிடமும் அவசரமாய் ஓரிரு வார்த்தைகள் பகிர வாய்ப்புக் கிடைத்தது.

     மறுநாள் மாலை, கண்மணி பாண்டியன் இல்லம் சென்று, ஆற அமர கவிஞர் பற்றிய நினைவுகளை, அவரது துணைவியாரிடம் பேச விழைந்தோம்.

     அம்மையாரின் எளிமையான தோற்றமும், மாறாத புன்னகையும் வசீகரித்தது எங்களை.

     கவிஞர் மீராவின் உன்னதங்களை, அவரது இலக்கிய நண்பர்கள் வாயிலாகவே வெகுவாக அறிகிறோம். பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, அ. நல்லக்கண்ணு போன்ற அரசியலாரின் புகழ் மொழிகளையும் குறிப்பிடலாம்.

      சாகாத வானம் நாம்/ வாழ்வைப் பாடும்/ சங்கீதப் பறவை நாம்/ பெருமை வற்றிப் போகாத/ நெடுங்கடல் நாம்/ நிமிர்ந்து நிற்கும்/ பொதியம் நாம்; இமையம் நாம்/ காலத்தீயில் வேகாத பொசுங்காத/ தத்துவம் நாம்... பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்கள் அரசியல் தலைவர்கள் அடிக்கடி மேடையில் எடுத்தாண்ட மீராவின் கவிதையொன்றின் சில வரிகள் இவை.

     அவருடனான 38 ஆண்டுகால (10.09.1964)-(01.09.2002) வாழ்தலில் ஒரு துணைவியாக கவிஞரைப் பற்றிய அனுபவங்களை கேட்டறியும் ஆவலை வெளியிட்டோம்.

தென்றலாக வருடும் மென்குரலில் துவங்குகிறார்...

(நாளைய பதிவில் நிறைவடையும்)
2 கருத்துரைகள்
  1. தங்கள் பதிவு மீராவை ஞாபகப் படுத்தியது.
    ஒரு காலத்தில் அவரின் கனவுகள்+கற்பனைகள்=
    கவிதைகள் தொகுப்பு இளைஞர்களின் பைபிள்.
    அன்னம் விடு தூதுவையும்,அன்னம் நவ கவிதை
    தொகுப்பையும் மறக்க முடியாது.
    கல்யாண்ஜி,மீனாட்சி,நா.விச்வநாதன்,விஜயலக்‌ஷ்மி
    நீலமணி(?) மற்றவர்கள் பெயர் உடன் ஞாபகத்திற்கு
    வரவில்லை.
    நன்றி நிலா.

    ReplyDelete
  2. மீரா அவர்களை நினைவு கூர்ந்ததற்கு நன்றி நிலாமகள்.

    ReplyDelete